Wednesday 22 July 2020

அறவியல் நோக்கில் பழந்தமிழர் காதல்


பாமினியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றப்பட்டது.

அறவியல் நோக்கில் பழந்தமிழர் காதல்
முனைவர் இரா. பசுபதி
இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை
மாநிலக்கல்லூரி சென்னை
                அறுூஅம்-அறம். அறு-அறுத்தல். எல்லைகளை வரையறுத்தல். எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்து நிலைகளிலும் தமக்கோ, பிறர்க்கோ, இப்பொழுதோ, பின்னரோ, எக்காலத்துமோ தீங்கு விளைவிக்கா வண்ணம் வாழ்வதை அறம் சார்ந்த வாழ்வியல் எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் அறவியல் சார்ந்து வாழும் வாழ்க்கையை பழந்தமிழர் மேற்கொண்டனர். பழந்தமிழர் வாழ்க்கையை அறிந்து கொள்ள தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான நூல்கள் துணைபுரியக்கூடியன. பழந்தமிழர் வாழ்க்கையை பாடுபொருளாகக் கொண்டு தோன்றியவையே தொல்காப்பிய, சங்க இலக்கியங்கள். வாழ்க்கையைப் பாடுபொருளாக்கும் போது அகப்பொருள், புறப்பொருள் என இருபிரிவாக அமைத்துக் கொண்டனர். தம்முள் மனமொத்த காதலர்களின் இன்ப வாழ்வைப் பாடுவன அக இலக்கியங்கள். அகத்தே நிகழும் இன்ப வாழ்வைத் தவிர, புறத்தே நிகழும் சமூக நிகழ்வுகள் அனைத்தையும் பாடுவது புற இலக்கியங்கள். பழந்தமிழர் வாழ்க்கையின் அடிப்படைப் பாடுபொருள்களாகக் காதலும் வீரமும் திகழ்ந்தன. காதல் வாழ்வாயினும் வீர வெளிப்பாடாயினும் அறவியல் நோக்கிலேயே நிகழ்ந்தன.
                அறவியல் நோக்கில் அமைந்த பழந்தமிழர் காதல் நிலையைத் தொல்காப்பிய இலக்கண, சங்க இலக்கியங்களின் வாயிலாகச் சான்று காட்டி நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்……(தொல். 999)
என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி பழந்தமிழர் அகவாழ்வின்; காதல் படிநிலைகளை நாடகப் பாங்கின்வழி ஒவ்வொரு கூறுகளாக விளக்குவதே இக்கட்டுரை. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கூறும் புலனை-அறிவை அறநெறிப்படுத்தும் வழக்கினைக் கொண்டுள்ளதை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.

அறம்;-விளக்கமும் வரையறையும்
                பழந்தமிழரின் அறம் என்னும் சொல்லாட்சியின் பொருளை சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் மிக விரிவான வகையில் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளது. அதன் சுருக்கமான வரையறையை இங்குக் காணலாம்.
1.             மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு
2.             அறக்கடவுள்
3.             அறநூல்
4.             கற்பு
இவற்றின் அடிப்படையில் பழந்தமிழர் அறம் எனும் கருத்தியலைக் கொள்கை நலமாக, உணர்வாக, உயிரியாக, கடவுளாக, உருவகப்படுத்தி வழங்கினர். இவ்வழக்காறுகளை அகத்துறைச் சான்றுகளின் வழி விளக்குவோம்.
திணை-ஒழுக்கம்-அறம்
                அகவாழ்வாயினும் புறவாழ்வாயினும் அவற்றின் ஒழுக்கலாறுகளை வழங்குவதற்குத் திணை என்ற கலைச்சொல்லைப் பழந்தமிழர் கையாண்டு வந்தனர். திணை-ஒழுக்கம் என்று பொதுவாக விளக்கம் கூறினாலும் அதற்கும் மேலும் பரந்துபட்ட பொருளை உடையது. தொல்காப்பியத்தை முதன்முதலில் மொழிபெயர்த்து வழங்கிய சி. இலக்குவனார் (வுhழடமயிpலையஅ in நுபெடiளா றiவா ஊசவைiஉயட ளுவரனநைள) திணை என்ற சொல்லுக்கு இணையான வேறு சொல்லை ஆங்கிலத்தில் வழங்க இயலாமல் வுஐNயுஐஎன்று ஒலிபெயர்த்து விளக்கக் குறிப்பினை வழங்கிவிட்டு பொருளதிகாரம் முழுவதும் வுஐNயுஐஎன்றே கையாளுகின்றார். திணை என்பது அகத்திணை புறத்திணை என இருகூறாக அமைந்து பழந்தமிழர் அகவாழ்வையும் புறவாழ்வையும் சுட்டுவதாய் உள்ளது. திணை என்பதற்கு முதற்பொருள், கருப்பொருள், உரி;ப்பொருள் என அமைந்த அனைத்தின் கூட்டுச் செயல்பாடு என்ற வரையறையைச் செய்யலாம். இவ்வரையறை அகம், புறம் என்ற இரண்டிற்கும் பொருந்தும். இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் அவ்வாறு பொருத்திக் காட்டுவதை அவர்களின் உரைவழி அறியலாம்.
கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.
                என்று தொல்காப்பியம் அகத்திணையை ஏழாகக் கூறியது. அதேபோன்று அங்கை விரல் ஐந்து ஆனாற்போல புறங்கை விரலும் ஐந்தேயாம் என்ற உவமையை எடுத்துக் காட்டி புறத்திணையையும் ஏழே என்னும் தொல்காப்பியக் கருத்தை விளக்குகிறார் இளம்பூரணர்.  இவற்றுள்ளும் நடுவண் ஐந்திணை எனப்படும் அன்பொடு புணர்ந்த ஐந்திணையை மிகவும் விரிவாகத் தொல்காப்பியம் விளக்குவதோடன்றி, சங்கப் பாடல்களிலும் மிகச் சில தவிர பலவும் அன்பின் ஐந்திணைப் பாடல்களாகவே அமைந்துள்ளன. அகன் ஐந்திணைக் காதலை மிகவும் சிறப்பித்துச் சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. புணர்தல் முதலான ஒழுக்கங்களை உரிப்பொருளாகக் கொண்டமைந்த பாடல்கள் இன்பம் பயப்பன. குறிஞ்சி முதலான அகத்திணை ஒழுகலாறுகளும் வெட்சி முதலான புறத்திணை ஒழுகலாறுகளும் வாழ்க்கைக்குரிய பொருட்பயன் விளைவிப்பன. இங்கு பொருள் என்னும் போது பொருள்பொதிந்த வாழ்க்கையையே முதன்மையாகக் கொள்ள வேண்டும். செல்வப்பொருளை அடுத்த நிலையில் வைத்து எண்ண வேண்டும். பழந்தமிழ் மக்களின் அகப்புறத் திணைநிலை வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளும் அறனிலைப்பட்டதாகவே அமைந்தன. இதனை,
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
என்னும் தொல்காப்பிய களவியல் தொடக்க அடிகளால் அறியலாம். பழந்தமிழர் இன்னாதவற்றுள்ளும் இனியன காணும் இயல்பை உடையவர். வாழ்வில் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வை உடையவர். வாழ்வை அதனாலேயே மிகவும் நேசிப்பவர். எனவேதான் இன்பத்தையும் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளையும் இவ்விரண்டும் அறவழிப்பட்டதாகவே அமைய வேண்டும் என்பதாக அறத்தையும் அடுக்கிக் கூறினார் தொல்காப்பியர். எனவே, அறம் முதன்மையானது. அறநெறிப்படியே இன்பமும் பொருளும் நிகழ்ந்தன.   
இயற்கைப் புணர்ச்சி
                பண்டைய மக்கள் அறத்தின் செயல்பாட்டை இயற்கை, பால், ஊழ், தெய்வம், விதி என்னும் சொற்களாலும் வழங்கினர். அதிலும் பால் என்பதை ஒன்றுபடுத்துகின்ற பால், வேறுபடுத்துகின்ற பால் என இருவகையாகக் கொண்டனர். இதனை ஒட்டியே தொல்காப்பியர்,
ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை இன்றே. (தொல்…1039)            
                தம்முள் மனமொத்த தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்த உயர்ந்த பாலானது கூட்டுவிக்கும். அது கூட்டுவிக்கும்படி தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் தம்முள் எதிர்பட்டுக் காண்பர். அக்காட்சியே அவர்களின் காதலுக்குத் தொடக்கமாகிறது.  அவர்களைக் கூட்டுவித்த அறம் எந்த உருவமுமின்றித் தன் செயல்பாட்டை இயற்கையாக நிகழ்த்தியது. ஊரறியத் திருமணம் செய்து கற்பில் புகும் முன்னரே தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் கலந்து கற்புக் கடம் பூண்டவர் ஆகிறார்கள். அந்த அறமே அவர்களைக் கற்பிலும் ஈடுபடச் செய்கிறது. அகவை, கல்வி, செல்வம் முதலியவற்றால் இருவரும் ஒத்திருத்தல் வேண்டும். தலைவன் சிறிது மிக்கோனாயினும் ஏற்றுக் கொள்ளப்படுவான்.                                 
களிறு மற்றும் புனல்தரு புணர்ச்சி
                தலைவன் தலைவியை இயற்கையாகச் சேர்த்து வைத்த அறம் களிறு மூலமாகவும் புனல் மூலமாகவும் இருவரையும் தழுவ வைத்து காதல் கொள்ளச் செய்வதும் உண்டு.
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யெனத்
திருந்துகோல் எல்வளைத் தெளிர்ப்ப நாண்மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்தி
சூருறு மஞ்ஞையின் நடுங்க   (குறிஞ்….165-169)
தலைவியும் தோழியும் கானகச் சோலையில் மலர் கொய்யும் வேளையில் மடங்கலை ஒத்த யானை பிளிறிக்கொண்டு எதிர்வர, அஞ்சிய தலைவி முன்கை வளை தெளிர்ப்ப விதிர்விதிர்ப்புற்று தம்முன் எதிர்ப்பட்ட தலைவனின் மார்பில் முகம் புதைத்துக் கொள்கிறாள். அவளைத் தழுவி அஞ்சேல் என்று ஆற்றுவி;த்து களிறின் மத்தகத்தில் கைவேலால் தாக்கி விரட்டிய தலைவனின் வீரத்தைக் கண்டு காதல் கொள்கிறாள். இத்தகைய களிறுதரு புணர்ச்சியில் அமைந்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. 
                  காமர் கடும்புனல் கலந்தெம்மோடு ஆடுவாள்
                  தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான்
                  நீள்நாக நறுந்தண்தார் தயங்கப் பாய்ந்து அருளினால்
                  பூணாகம் உறத்தழீஇப் போதந்தான்… (கலி…39)
தலைவியும் தோழியும் அருவி நீரிலும் ஆற்று வெள்ளத்திலும் மகிழ்ந்து நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் திடுமென பெருகிய வெள்ளத்தில் அடித்துச் சென்ற தலைவியைத் தலைவன் பாய்ந்து தழுவி கரைக்குக் கொண்டு வருவதை புனல்தரு புணர்ச்சியாக அகப்பாடல்கள் கூறுகின்றன.
இத்தகைய நிகழ்வுகள் யாவும் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையினாலேயே நிகழ்வதாகப் பழந்தமிழர் கருதினர். எனவேதான் இருவரும் ஒன்றிணைந்தது தெய்வத்தின் செயல் என்று கருதி இருதிறத்துப் பெற்றோரும் ஏற்றுக்கொண்டு மணம் முடித்து வைப்பர். அது அறமாகக் கருதப்பட்டது. ஒருவேளை பெற்றேர் உடன்படாத சூழலில் தோழியின் உறுதுணையோடு தலைவியைத் தலைவன் உடன்போக்கில் அழைத்துச் சென்று தம் பெற்றோர், உற்றார் முன் சான்றோர் சூழ மணம் செய்து கொண்டு கற்பு வாழ்வில் ஈடுபடுவான். கொண்ட தலைவியை பல எதிர்ப்புகள் வந்தபோதும் கைவிடாத மனஉறுதியும் இங்கு அறமாகவே கருதப்பட்டது.
பூ, தழையாடை கையுறையாகத் தருதல்
                பெரிதும் மதிப்பிற்குரியோரைச் சந்திக்க செல்லும்போது பூ, பழம் முதலியவற்றைக் கையுறையாக எடுத்துச் செல்வது இன்றும் உள்ள வழக்காறு. தலைவி மேல் காதல் கொண்ட தலைவனின் உள்ளத்தில் தலைவி பெறற்கரியவளாகப் பெருமதிப்பிற்குரியவளாக விளங்குகிறாள். தலைவியைப் பெருந்தகை என குறிஞ்சிப்பாட்டு முதலான சங்கப் பாடல்கள் விளிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அத்தகைய பெறற்கரிய தலைவியைச் சந்திக்கும்போது தலைவன் பூந்துணரைக் கையுறையாகத் தருகிறான். தழையாடையையும் கையுறையாகத் தருவதுண்டு. இவ்வாறு தலைவன் பூ, தழை முதலியவற்றைக் கையுறையாகத் தருவது தன்னுடைய காதலை உறுதிப்படுத்தும் அடையாளமாகக் காணலாம். தலைவனளிக்கும் மலரினைத் தலைவி சூடிக்கொள்வாள். திருமணத்திற்கு முன் பெண்கள் தலையில் பூச்சூடுதல் பழந்தமிழர் வழக்கில் இல்லையாகையால், தலைவியின் கூந்தலைச் சரிசெய்ய முனைந்த செவிலிக்கு தலைவியின் கூந்தலில் மறைந்திருந்த முல்லைப்பூ தலைவியின் களவை வெளிப்படுத்துகிறது. முல்லைப்பூ கற்பின் அடையாளமாக இங்கு குறிப்பிடப்படுகிறது. தம்முள் பழகிய நெருக்கத்தின் காரணமாக திருமணத்திற்கு முன்னரே ஒருவரோடொருவர் கற்புக் கடம் பூண்டதாக முல்லை சூடினர்.
                பன்னுதல் என்றால் இன்றைய வழக்கில் பின்னுதல் ஆகும். பன்னிப்பன்னிப் பேசாதே என்பது நெல்லை வழக்கு. இலை, தழைகளைப் பன்னம் (தி.736, பிங்.280, நா.தீ.நி.5:90-366, சூ.நி.மரப்.) என்று பல நிகண்டுகள் பதிவு செய்கின்றன. இலை தழை முதலியவற்றைத் தலைவன் அழகுறத் தொடுத்து தலைவிக்குத் தருவான். தழையைப் பன்னி முறையாக நிரல்பட அடுக்கிப் பின்னி உடுத்திய காரணமாகத் தழையாடையே பன்னம் எனவும் அழைக்கப்பட்டது. (முனைவர் கு. அரசேந்திரன், தமிழறிழவோம் தொகுதி-2, ப.105)  இதனடிப்படையில் தழையாடையை அணிந்த தலைவிக்குப் பன்னிஎன்னும் பெயரை நிகண்டுகள் வழங்குகின்றன. இந்தச் சொல்லே வடமொழிகளில் பத்னி என்று ஒலித்தது. பின்னர் பத்னி என்பது கண்ணகி, சீதை முதலான காப்பிய மாந்தர்களைக் குறிப்பிட பத்தினி என்றானது. இதனை உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்என்னும் அடிகளால் அறியலாம். ஆனால் கம்பர் பன்னி;’ என்னும் பழைய சொல் வடிவத்தையே கையாளுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.
குறியிடத்தில் சந்தித்தல்
                 பொருட்செல்வத்தைக் கவருவது ஐம்பெரும் குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தண்டனைக்கரியது. ஆனால் தலைவனும் ஒருவர் உள்ளத்தை ஒருவர் கவர்ந்து கொள்கின்றனர். இவ்வுள்ளக்களவு எவ்வகையானும் குற்றமாகாது. ஊழாகிய அறத்தின் தெய்வத்தின் செயலாகவே எண்ண வேண்டும். முதன்முதலில் தலைவனும் தலைவியும் இயற்கையால் கூட்டுவிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் சந்தித்துக் கூடுவது காதல் அறமாகவே போற்றப்படுகிறது. பின்னர் குறியிடம் அமைத்துப் பகற்குறியினும் இரவுக்குறியினும் சந்திப்பது களவுக்காதல் ஒழுக்கமாகும். பகற்குறியைக் காட்டிலும் இரவுக்குறியில் சந்தித்தல் அரிதின் முயன்றமைவதாகும். தலைவியைப் பெறற்கரியவளாகக் கருதும் தலைவனுக்கு எத்தகைய அரிய முயற்சியும் கூட தலைவி மேல் கொண்ட காதலால் எளிமையாவதைக் காணமுடிகிறது.
                 பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
                 நீர்பரந்து ஒழுகலின் நிலம்கா ணலையே
                 எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
                 பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
                 யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
                 வேங்கை கமழும்எம் சிறுகுடி
                 யாங்கறிந் தனையோ நோகோ யானே. (குறுந்…355)
தலைவன் இத்தகைய இடர்பாடுகள் பலவற்றையும் தாண்டி வந்ததைத் தோழி வியந்தாலும் களவில் சந்திப்பது நீண்டு கொண்டே போவதால் தலைவியை விரைந்து மணம் செய்து கொள்ளல் வேண்டும் எனத் தோழி வரைவு கடாவியதையும் காணமுடிகிறது. தலைவன் வரும்வழி குறித்து தலைவி கவல்வதும் கூறி வரைவு கடாவுதலும் உண்டாம்.
அறத்தொடு நிற்றல்
                களவில் கூடிய காதல் கற்பி;ல் முடிவதே அறம். ஆத்தகைய அறத்தை நிலைநிறுத்தம் வகையில் தலைவியின் காதலை செவிலியிடத்துக் குறிப்பாக உணர்த்தி அறத்தொடு நிற்பாள் ;தோழி. பின்னர் செவிலி நற்றாயிடமும் நற்றாய் தன் ஐயரிடமும் அறத்தொடு நிற்பர். ஐயரும் முதலில் சினந்தலும் தலைவியைத் தலைவனோடு சேர்த்து வைப்பதே அறம் என்று முதலில் சினந்தலும் பின்னர் ஒப்புக்கொள்வதைக் சங்கப் பாடலில் காணமுடிகிறது.
               அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
               ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து ஆறி
               இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று
                 தெருமந்து சாய்த்தார் தலை. (கலி…39)
தலைவியின் வீட்டார் காதலை ஏற்றுக்கொண்ட பிறகு இருவருக்கும் வேங்கைப் பூக்கும் காலத்தில் மணம் செய்து வைப்பர். பண்டை தமிழரின் கற்பொடு புணர்ந்த கரணம் பற்றித் தொல்காப்பியர்  கற்பியலின் முதல் நான்கு நூற்பாக்களில் விளக்குகிறார். அகநானூற்றுப் பாடல்களும் (பா.86,136) அக்காலத் திருமணச் சடங்கு முறைகள் பற்றி விளக்குகின்றன. நீலமணி போன்ற அழகிய கூந்தலையும் பொன்னிற மேனியையும் மதி போலும் முகத்தையும் உடைய அறங்கோள் மகளிர்-கற்புக்கடம் பூண்ட மகளிர் மதுரை வீதிகளில் நடந்து சென்றதை மதுரைக்காஞ்சி பதிவு செய்துள்ளது.
இல்லற வாழ்வில் ஈடுபட்ட பின்னரும் தலைவியைக் காதலி என்றே விளிக்கும் பாங்கினை
மாதர் உண்கண் மகன்விளை யாடக்
காதலித் தழீஇ இனிதிருந் தனனே (ஐங்…406)
என்று ஐங்குநூறு பதிவு செய்துள்ளது.
தொன்றுபடு கிளவி
                 மணமான ஓரிரு ஆண்டுகளிலேயே தலைவன் தலைவியைப் பிரிதல் இல்லை. தன்னுடைய மகன் கைக்குழந்தையாகவோ, விளையாடும் பருவத்தினனாகவோ இருக்கும் நிலையில் மனைவி குழந்தை இருவரையும் விட்டுப் பிரிதல் அறமல்லாத செயலாகக் கருதப்படுகிறது. அவ்வாறு பிரிதல் அறத்தாறு அன்று
           இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
           அன்றுஎன மொழிந்த தொன்றுபடு கிளவி (அகம்…5)
என மொழிந்த தலைவியின் கூற்றை எண்ணிப் பார்க்கும் தலைவன் நெஞ்சக்கிளவி வழி புலனாகிறது. இதுபோன்ற பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
காதலி மகனொடு பொலிந்த தந்தை
                இளமனைவி, மழலை மொழி பேசும் குழந்தையை விட்டுப் பொருள் தேடலோ வினைமேற் செல்லலோ அறமன்று என்பதை உணர்ந்த தலைவன் தன் காதலியோடும் புதல்வனோடும் தம்மனையில் மகிழ்ந்தினிது விளையாடிக் குளிர்ந்த காட்சிகளை ஐங்குநூறு 401-410 வரையான பாடல்கள் சித்திரிக்கின்றன.
             பாணர் முல்லை பாடச் சுடரிழை
             வாணுதல் அரிவை முல்லை மலைய
             இனிதிருந் தனனே நெடுந்தகை
             துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. (ஐங்…408)
இவ்வகையான சித்திரிப்பே காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படும் சோமாசுகந்தமூர்த்தி ஓவியம், சிற்பத்திற்கு அடிப்படையாக அமைந்தன. கவின்கலை வளர்ச்சிக்கு சங்க இலக்கியப் பாடல்கள் துணைநின்றுள்ளன. இக்கருத்தினை பேரா.சா. பாலுசாமி போன்ற கவின்கலை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். இக்கருத்தைத் தமிழர் கலைக் கோட்பாடு வித்தும் வளர்ச்சியும் (ப.46) எனும் நூலில் இராம. பசுபதி விளக்கியுள்ளார்.
                உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப பழந்தமிழர் காதல் வாழ்க்கையிலும் அறத்தொடு உயர்ந்த எண்ணத்தையே கொண்டிருந்தனர். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன், தொட்ட பெண்ணை விட்டதில்லை போன்ற விழுமியக் கொள்கைகளைச் சங்கப் பாடல்கள் வலியுறுத்தி புலனை-அறிவை அறநெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழச் செய்தன.

No comments:

Post a Comment