Sunday, 1 September 2024

மௌனம்..

மௌனம்..

முனைவர். இரா. பெரியதுரை.

 சங்கரன் பிள்ளையின் டீக்கடையில் தொடங்கும் அந்த கிராமத்தின் செம்மண் சாலை; எல்லா தெருக்களையும் சுற்றி வளைத்து இறுதியில் அந்த சுடலை கோயில் ஆலமர பந்தலில் தான் முடியும். அந்தக் கிராமத்து சாமானியர்களுக்கு சங்கரன் பிள்ளையின் டீக்கடை தான் முதல் சூரிய உதயம். யார் யாரை வச்சி இருக்கா, யார் பொண்டாட்டி முழுகாம இருக்கா, இன்னும் என்னென்னவோ; அதையெல்லாம் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு. அவற்றுள் அரசியலும் அடங்கும். 10 மணிக்கு எல்லாம் அவனவன் பொழப்ப தேடிக்கிட்டு ஓடிவிடுவானோ. சாயங்கால பஞ்சாயத்து ஏழு மணிக்கு தொடங்கி தூக்கம் வரும் வரை அந்த சுடலை கோயில் ஆலமரம் தான் அந்த கிராமத்து ஆண்களுக்கு. இதற்கிடையில் சங்கரன் பிள்ளையை பற்றி சொல்ல மறந்துட்டேனே! 25 வருஷமா அவர் அங்கே தான் டீக்கடை வச்சிருக்கிறார். அவருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கமும் உண்டு. மூக்குப்பொடியை போட்டுட்டு மூக்க சீண்டி அவர் கட்டிருக்கிற வேட்டிக்கு பின்னாடியே தடவிக்குவார். அவர் போடுற பலகாரங்களும், டீ காப்பியும், அவ்வளவு ருசியா இருக்கும் எங்களுக்கு. தாயோலி மக்க, என்னோட 65 வருஷ சர்வீஸ்ல, அட எழவே; இந்த வார்த்தைகளை சொல்லாம அவரால் பேசவே முடியாது. ஊர்ல உள்ள எல்லாருக்குமே அவர் அண்ணன் தம்பி மாமா மச்சான் இப்படி சாதி மதம் பாராமல் உறவுக்காரராய் தான் இருந்திருக்கிறார். பெண்களுக்கு மட்டும் தான் அவசர செலவுக்கு கடன் கொடுத்து கைமாத்தா வாங்கிக்குவார்.

 ஒரு நாள் ராத்திரியில சங்கரப்பிள்ளைக்கு வயிறு கலக்கி இருக்கு. ஆம்பளைங்க எல்லாம் பனங்காட்டுக்கு வெளிக்கு போறது தான் வழக்கம். அந்த ராத்திரியில் அவர் இருந்துகிட்டு இருக்கும்போது, பனை மரத்தில் இருந்து ஒரு பனம்பழம் தொப்புன்னு கீழ விழுந்து இருக்கு. பேய் தான் உன்ன பயந்து, கட்டியிருந்த வேட்டியை கூட அவுத்து போட்டுட்டு, மூச்சு வாங்க ஊருக்குள்ள ஓடி வந்து இருக்கிறார். அந்த ஊர்க்காரி வெள்ளாவிக்கார மூக்கம்மா, கழுதையைக் கட்டி போட வெளிய வந்திருக்கிறாள். யாரோ அம்மணமா ஓடி வாராங்கன்னு சத்தம் போட்டு ஊரையே கூட்டிட்டா. இப்படி சங்கரன் பிள்ளையை பற்றி சொல்லிக் கொள்ள நிறையவே இருக்கிறது.

 

 இப்படியே ஆளுக்கு ஒரு கதையும் இருந்தது அந்த கிராமத்தில். அந்தக் கதைகளில் கண்ணீர் கலந்திருந்தது, வலி மிகுந்திருந்தது, சிலரின் கதை சிரிப்பை வரவழைத்து இருந்தது, சோகம் பகைமை இல்லாமல் இல்லை சிலரின் கதையில். இயற்கை எப்போதும் எல்லாருக்கும் வாழ்க்கையை சமமாக பங்கிட்டு கொடுத்து விடுவதில்லை. எனக்கும் ஒரு கதை அங்கே மிச்சம் இருக்கத்தான் செய்திருந்தது. என்னைப் பொறுத்தவரை அந்த கிராமத்தை என் இதயத்தில் இருந்து அழிக்க முடியாத காவியமாய் தான் பார்க்கிறேன். மகிழ்ச்சி கூத்தாடும் குருவிக்கூடு போல தான் எங்கள் குடும்பமும் இருந்தது அந்த சிற்றூரில்.. பக்கத்து ஊர்காரர்கள் எல்லோருக்கும்; எங்கள் குடும்பத்தை மொட்டை தேவர் குடும்பம் என்று சொன்னால்தான் தெரியும். அந்த மொட்டை தேவர் தான் என் தாத்தாவுக்கு அப்பா. எந்தக்

 

 குடும்பத்தில் பிரச்சனை வந்தாலும் வழக்கு பேசுவதற்காக அந்த மொட்டை தேவரை தான் கூப்பிடுவார்களாம். வழி வழியாக கிடைத்து இருந்த அதே மரியாதை என் அப்பாவுக்கும் கிடைத்து வந்தது. எங்கள் வீட்டு வேலைக்காரர்கள் ஓடும், என் அப்பாவால்; திண்ணையில் சமமாக அமர்ந்து பேச முடிந்தது.. என் அம்மாவுக்கோ யாரிடமும் அதிர்ந்து கூட பேச தெரியாது. எல்லா வீடுகளின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் என் அம்மாவின் பங்கு தான் முதலில் இருந்தது. எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் தங்கையும் இருந்தார்கள். எங்களுக்கு தாமிரபரணி ஆத்து ஓரமா ஒரு பெரிய தென்னந்தோப்பு இருந்தது. பக்கத்திலேயே தான் எங்களுடைய வயற்க்காடும் இருந்தது. தோப்பில் இருந்த ஒவ்வொரு தென்னை மரமும் எங்களுக்கு தேவதைகளாகவே தெரிந்தன. நான் அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கூடம் அடுத்த கிராமத்தில் தான் இருந்தது.. ஆண் பிள்ளைகள் நாங்கள் மூவருமே மாடு பூட்டிய கூண்டு வண்டியில் தான் பள்ளிக்கு வழக்கமாக போவோம்.

 

 ஆட்டோக்களின் வருகைக்குப் பிறகு இந்த மாதிரியான மாட்டு வண்டிகளின் புழக்கம் படிப்படியாக குறைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். அன்று மாலையும் பள்ளி முடிந்த பிறகு அதை மாட்டு வண்டியில் நாங்கள் வந்து கொண்டிருந்தோம். வழக்கமாக எங்கள் தோப்பு வழியாகத்தான் அந்த மாட்டு வண்டி எங்கள் வீட்டுக்கு வரும். வழக்கத்துக்கு மாறாக என்னவோ நாங்கள் மாற்றுப் பாதையில் எங்கள் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டோம். வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது சின்னதாய் எங்கள் தோப்பில் அரளிக் கிழங்கை அரைத்து குடித்துவிட்டு செத்துப் போனால் என்று. சின்னத்தாய் எங்களுக்கு தூரத்து உறவுக்கார பெண், நிச்சயமாக அவள் 18 வயதை தாண்டி இருப்பாள், அந்த வயதிலும் எனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. அவள் மேல். பாவம் திருமணம் ஆகாமலே அவள் செத்துப் போனால். அவள் ஏன் இறந்து போனால்? என்ற கேள்விக்கு மட்டும் எங்களுக்கு யாரும் விடை சொல்லவில்லை அந்த நாட்களில். எல்லோரின் பதில்களுமே எங்களுக்கு மௌனமாகவே கிடைத்தன அன்றிலிருந்து பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் தோப்புக்கு போக அனுமதிக்கப்படவில்லை. எங்கள் அம்மாவும் சில நாட்கள் தோப்புக்கு போவதை நிறுத்திக் கொண்டிருந்தாள். தேவதைகளாக பார்த்து ரசித்து இருந்த எங்கள் தென்னை மரங்களை, பேய் பிசாசுகளாக பார்க்கத் தொடங்கி விட்டோம். அந்த நாட்களில் எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிப் போய்விடும் யாரும் வெளியே வர மாட்டார்கள். எங்கள் தோப்பில் அழுகை சத்தம் கேட்பதாகவும், தெருக்களில் இரவில் கொலுசு சத்தம் கேட்பதாகவும் பல பேய் கதைகள் அவரவர் வயதிற்கு ஏற்றவாறு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. நாங்களும் நிறையவே பயந்து போயிருந்தோம். காலத்தால் எவ்வளவு நாட்கள் தான் எங்களை கண்ணீரிலும் பயத்திலும் வைத்திருக்க முடியும்? சின்னத்தாயின் மரணம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் இருந்தது அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அப்போது பன்னிரண்டாம் வகுப்பை

 

 முடித்திருந்தேன்.. ஒரு நாள் மாலையில் எங்கள் தோப்புக்கு நான் போயிருந்தேன். அந்தத் தென்னை மரத்தை பிடித்துக் கொண்டு சுப்பு அத்தை அழுது கொண்டிருந்தாள். அவள் தான் சின்னத்தாயின் அம்மா. என்னை பார்த்ததும் அழுகையை நிறுத்தியவளாய் அவள் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள். அந்த இடத்தில்தான் சின்னத்தாய் செத்துக்கிடந்தாளாம்.. நான் சுப்பு அத்தையிடம்; சின்னத்தாய் மதினி ஏன் தற்கொலை செய்து கொண்டால் என்று கேட்டேன்.

 

 அதற்கு அத்தையின் பதில் எனக்கு வருத்தத்தை தந்திருந்தாலும் கண்ணீரை வரவழைத்து இருக்கவில்லை. அது நெல்லையில் சாதிக் கலவரம் பற்றி எரிந்து கொண்டிருந்த காலம். பேருந்துகள் எரிப்பு பழிக்குப் பழி கொலை குடிசைகளுக்கு தீ வைப்பு இப்படி என்னென்னவோ அரங்கேறிக் கொண்டிருந்தது அந்த நாட்களில். எங்களது பக்கத்து கிராமமும் அந்த காட்டுமிராண்டி செயலுக்கு இலக்கானது. அந்தப் பக்கத்து கிராமத்தில்தான் சுப்பு அத்தையின் அண்ணன் மகன் சந்திரன் இருந்தான். அந்தக் கிராமத்தில் வைத்தே அவன் கொலை செய்யப்பட்டான் சாதி வெறியர்களால். சின்ன தாய்க்கும் சந்திரனுக்கும் ஆழமான காதல் இருந்திருக்கிறது. இந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சின்னத்தாய் தற்கொலை செய்து இருக்கிறாள். இதை சின்னத் தாயின் முட்டாள்தனமான செயல் என்று நான் கருதி இருந்ததால் எனக்கு கண்ணீர் வரவில்லை. அவள் எங்கள் தோப்பில் செத்துப் போனதுதான் துரதிஷ்டம் நானும் என் அண்ணனும் மேற்கொண்டு படிப்பை தொடரவில்லை. விவசாயத்தையும் தோப்பையும் நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு முழுமையாக 20 வயது முடிந்திருந்தது. ஒரு நாள் சாயங்காலப் பொழுது என் வேலையை முடித்துவிட்டு அந்த தென்னை மரத்தடியில் இளைப்பாரிக் கொண்டிருந்தேன். ஒரு வண்டு பறந்து வந்து என் கண்ணில் அடித்தது.

 வயல்வெளிகளிலும் தோப்புகளிலும் இது மாதிரியான வண்டுகள் முகத்தில் அடிப்பது வழக்கம்தான். கொஞ்ச நேரம் வலி இருக்கும் பிறகு கண்களை தண்ணீரில் கழுவினால் சரியாகிவிடும். அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த மாலைப் பொழுது தான் நான் கடைசியாக பார்க்கும் சாய்ங்காலப் பொழுது என்று நான் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. வலியோ குறைந்தபாடில்லை தற்கொலை செய்து விடலாம் போல எனக்கு இருந்தது இரவு முழுவதும் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன்.. எங்கள் குடும்பமே பதறிப் போனது. மறுநாளின் விடியலுக்கு என் முகத்தை பார்ப்பதற்கு விருப்பமில்லை போலும். என்னை இருளிலேயே நிறுத்தி வைத்திருந்தது.. எங்கள் ஊரில் முத்தையா பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர்தான் வாடகை கார் வைத்திருந்தார் அந்த காரில் நானும் என் அப்பாவும், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு போயிருந்தோம். முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என் கண்ணில் வண்டின் கொடுக்கு ஆழமாக பதிந்திருந்ததை கண்டுபிடித்தனர். எனக்கு அந்த ஒரு கண்ணில் முழுமையாக பார்வை திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை; தனியே என் அப்பாவை அழைத்து சொல்லி இருந்தது எனக்குத் தெரியாது. ஒரு

 

 கண்ணால் என்னால் பார்க்க முடிந்தாலும்; அந்தக் கண்ணை விழித்துப் பார்க்கும்போது அடுத்த கண்ணில் கடுமையான வலி இருந்ததால்; இரண்டு கண்களையும் நான் மூடியே தான் இருந்தேன். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து மருத்துவத்தை செய்து கொண்டே இருந்தார்கள் என் பெற்றோர்கள்.

 

 என்னுடைய நோய்க்கும் பார்த்தார்கள் அதே வேளையில் பேய்க்கும் பார்த்தார்கள். அப்போதுதான் சின்னத்தாயின் மரணத்துக்கான ரகசிய முடிச்சை அதில் தெரிந்தால் எங்கள் பாட்டி கல்யாணி கிழவி. சந்திரனால் சின்ன தாய் கருவுற்று இருந்ததால்; அவமானத்துக்கு பயந்து சின்னத்தாய் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் எனக்கு புரிந்தது.. வயிற்றில் கருவை சுமந்து இறந்தவர்களுக்கு சுமைதாங்கி கல் வைப்பது வழக்கம். கருவுற்று இறந்தவள் அதில் இளைப்பார்வார் என்பது நம்பிக்கை. சுமைதாங்கி கல் என்பது மரத்து நிழலில் போடப்படும் ஒரு நீளமான இருக்கை அதில் ஐந்தாறு பேர் உட்கார்ந்து இளைப்பாறலாம்.. அந்த சுமைதாங்கி கல்லை அமைத்து தருபவர்களை இறந்து போனவள் தொந்தரவு செய்ய மாட்டார் என்பதும் நம்பிக்கை. அந்த சுமைதாங்கி கல்லையும் சின்ன தாயுக்காக எங்களின் சொந்தச் செலவில் எங்கள் அப்பா அமைத்துக் கொடுத்தார். பணம்தான் கரைந்தது. மகிழ்ச்சியும் எங்கள் குடும்பம் என்னும் குருவிக்கூட்டை விட்டு பறந்தது. அதே வேளையில் சின்னத்தாய் தான் என்னை பிடித்து அளக்கடைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு செய்தியும் கிராமம் எங்கும் பரவியது. எல்லோருக்கும் வேலை இருந்தது எல்லோருக்கும் வாழ்க்கை இருந்தது. எத்தனை நாள் தான் என்னை கட்டிக் கிடந்து அழ முடியும்? கலகலப்பாக இருந்த என் அம்மாவும் அப்பாவும் வெளியில் வருவதை நிறுத்திக் கொண்டார்கள் கொஞ்சம் கொஞ்சமாக.

 மனித வாழ்க்கையில் ஒரு சம்பவம், ஒரு அவமானம் ஒரு துயரம், மனிதர்களை மொழி அற்றவர்கள் ஆக்கி மௌனத்தால் மூடி மறைத்து விடுகிறது? அடுத்த கண்ணிலும் நோய் தொற்று ஏற்பட்டு படிப்படியாக நான் என்னுடைய அந்தக் கண்ணிலும் முழுமையாக பார்வையை இழந்து போனேன்.

 

 எத்தனை பேரோ ஆறுதல் சொன்னார்கள் எனக்கு. நானோ மீளா துயரத்தை என் இதயத்தில் போர்த்தியிருந்தேன். எங்கள் குடும்பத்தை தாண்டி எனக்காக கண்ணீர் சிந்த இன்னொரு ஜீவனும் இருந்தது. அவள் தான் எங்கள் வீட்டில் வேலை செய்யும் நீலியின் மகள் பொன்னி. நான் பிறந்திருந்த அதே காலகட்டத்தில் நீலியும் பொன்னியைப் பெற்றிருந்தால். பொன்னிக்கும் எனக்கும் ஒரே வயது என்று நீலி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள். நீலியை என் குழந்தை பருவத்தில் இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீலியை நான் ஒரு நாளும் வேலைக்காரியாக நினைத்து பார்த்ததே கிடையாது.. பொன்னிக்கும் எனக்கும் இடையே; ஒரு செயற்கையான இடைவெளியை நீலி போட்டு வைத்திருந்தாள். ஆனால் இதயத்தால் நானும் பொன்னியும் எங்களை அறியாமலே மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் பெரிய பிள்ளைகளான பிறகு அதிகமாக பேசி கொண்டதில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம். எங்களின் மௌன பரிமாற்றத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. நான் மிகுந்த மன அழுத்தத்திலும் துயரத்திலும் இருந்த காலகட்டத்தில் பொன்னி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தாள்.

 பொன்னி என்னிடத்தில் நிறைய பேசினால் ஆறுதலும் சொல்லிக் கொண்டே இருந்தால். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியாய் இருந்த அந்த தென்னந்தோப்பு, சபிக்கப்பட்ட பூமியாகவே தெரிந்தது எனக்கு. அந்த தோப்புக்கும் அவள் என்னை அடிக்கடி அழைத்து சென்று கொண்டே தான் இருந்தாள். நிறைய புத்தகங்களை அவள் எனக்கு படித்துக் காட்டினால். அவள் நிறைய தத்துவங்களை பேசிக்கொண்டே இருந்தால். ஏழ்மையிலும் கண்ணீரிலும் தான் தத்துவங்கள் பிறக்கின்றனவோ? செல்வத்தில் பொன்னி எளியவளாக இருந்தால். ஆனால்! அறிவிலும் பாசத்திலும் அவள் என்னை விட உயர்ந்தவர்கள் ஆகவே தெரிந்தால். பொன்னியை தவறாக பேசுவதற்கு அந்த கிராமத்தில் யாருக்கும் எந்த முகாந்திரமும் இருந்திருக்க நியாயம் இல்லை. காரணம் பொன்னியும் அவள் அம்மாவும் எங்களின் குடும்பத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையையும், அன்பையும் பெற்றிருந்தார்கள். எத்தனை நாள் தான் என்னால் அழுது கொண்டு தனிமையில் இருக்க முடியும்? அருகில் இருந்த பார்வையற்றோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்வதில் நான் ஆர்வமாக இருந்தேன். ஒரு நாள் எங்கள் ஊர் ஜான் வாத்தியாரும் என் அப்பாவும் அந்த பார்வையற்றோர் இல்லத்தை, பார்த்து வந்தார்கள். ஜான் வாத்தியாரும் என் அப்பாவும் என் அம்மாவுக்கு நிறைய நம்பிக்கை வார்த்தைகளை சொன்னார்கள் அங்கே சேர்ப்பதற்கு. அந்த நேரத்திலும் என் அம்மா மௌனமாகவே தான் இருந்தாள். அதை அம்மாவின் சம்மதமாக எடுத்துக் கொண்டு நானும் அங்கே சேர்க்கப்பட்டேன்... ஆரம்பத்தில் என்னை அடிக்கடி பார்க்க வந்த என் குடும்பத்தினர், காலப்போக்கில் மாதத்தில் ஒரு முறையும் பார்க்க வந்தனர். பொன்னி மட்டும் வாரம் ஒரு முறை தவறாமல் என்னை பார்க்க வந்து கொண்டே இருந்தால். அந்த இல்லத்தில் பொன்னி எனக்கு தங்கையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தால்.. பொன்னியின் வருகை மட்டும் எனக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது.. அவள் வரும் அந்த ஞாயிற்றுக்கிழமைகளுக்காக நான் தவம் கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்...

 

 பொன்னியின் செல்லமான வருடல்களிலும், அவள் எனக்கு உணவையும் தின்பண்டங்களையும் ஊட்டி விடும் பாசத்திலும், அவளின் தூய்மையான அன்பு அதில் கலந்து இருந்தது. என்னைப் போன்ற பார்வை இழந்த ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் நிறையவே அங்கே இருந்தார்கள். எல்லோருமே என்னை தேடி வந்து அன்பாய் பேசினார்கள். என் அறையில் இருந்த என் நண்பர்கள் என்னை முழுமையாக தொட்டு உணர்ந்து கொண்டார்கள். என் போன்ற பார்வை இழந்த நண்பர்கள் என் மேல் முட்டியும் மோதியும் கொண்டு இருந்தார்கள். அது எனக்கு உடலளவில் வலியையும் மனதளவில் எரிச்சலையும் தந்தது. கண்ணன் என்ற ஒரு பார்வையற்ற பையன் தான் எனக்கு வழிகாட்ட நியமிக்கப்பட்டிருந்தான். தனியே நடக்கும்போது ஏதாவது ஒரு ஒளியை எழுப்பிக் கொண்டே நடக்க வேண்டும் என்ற சூட்சமத்தை அவன் தான் எனக்கு கற்றுக் கொடுத்தான். நானும் ஒலி

 

 எழுப்பிக் கொண்டே நடக்க பழகினேன் யாரும் என் மேல் மோதவும் இல்லை முட்டவும் இல்லை. பார்வையை இழந்திருந்தாலும் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஏராளமான வழிமுறைகள் பார்வையற்றோருக்கு இருக்கின்றது, என்ற தெளிவை நான் அங்கிருந்து தான் பெற்றுக் கொண்டேன்.. எனக்குள் ஏற்பட்டிருந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும், பொன்னிக்கு வியப்பையும் நம்பிக்கையையும் தந்திருந்தது. அன்று என்னை பார்க்க வந்திருந்த அவள், அந்தப் பூங்காவில் நிறைய முத்தங்களை கொடுத்துக் கொண்டே இருந்தால். அவள் பிடியிலிருந்து எனக்கு நழுவ விருப்பமில்லை ஆனாலும் நழுவுவதைப் போல நடித்து அந்தப் பேரின்பத்தை பெற்றுக் கொண்டே இருந்தேன். கஸ்தூரி மஞ்சளின் வாசனையும், மல்லிகைப் பூவின் நறுமணமும், அவள் உடலின் குழுமையும் நான் அடைந்திருந்த துன்பங்களுக்கு எல்லாம்; வாழ்வளிக்கும் மருந்தாகவே இருந்தது. நான் எதிர்வினை ஆற்ற முயன்ற போது அவள் வெட்கத்தால் விலகிக் கொண்டாள்.

 

 இதற்கிடையில் என் உடன் பிறந்தவர்களுக்கெல்லாம் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஆரம்பத்தில் எனது அண்ணியும் என் தம்பியின் மனைவியும் என்னிடத்தில் பாசமாகத்தான் நடந்து கொண்டார்கள். என் தங்கையும் கூட எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டே இருந்தால்.. அந்த விடுதி வாழ்க்கையும் எனக்குப் பிடித்துப் போயிருந்ததால்; நான் நடிக்கடி வீட்டுக்கு வர விரும்பவில்லை. நாங்கள் இழந்திருந்த மகிழ்ச்சி மறுபடியும் எங்களுக்கு கிடைத்ததாகவே என் பெற்றோர் உணர்ந்திருந்தார்கள். கிடைத்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை எங்களுக்கு. யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் என் அப்பாவும் இறந்து போனார். சில நாட்களில் நானும் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக சென்னை சென்று விட்டேன்.. ஆனால் பொன்னி மட்டும் வாரத்தில் ஒருமுறை தொலைபேசியில் பேசிக் கொண்டே இருந்தால். பயிற்சியை முடித்த சில மாதங்களிலேயே எனக்கு ஒரு அரசு வேலையும் கிடைத்து விட்டது. ஒரு நாள் அவசரமாக என்னை ஊருக்கு வரச் சொல்லி என் அண்ணன் தொலைபேசி செய்திருந்தான். வந்ததும் தான் எனக்குத் தெரிந்தது அது பாகப்பிரிவினை செய்வதற்காக என்று. என் அம்மாவின் அண்ணன் எனக்குத் தாய் மாமா அவரின் தலைமையில் தான் அந்தப் பாகப்பிரிவினை கூட்டம் கூடியது. அவரின் மகளை தான் என் அண்ணன் திருமணம் செய்து இருக்கிறான்.. அந்தப் பெரிய தோப்பையும், வயல் காடுகளையும், என் அண்ணனும் தம்பியும் பிரித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் குடியிருக்கும் அந்தப் பெரிய பண்ணை வீட்டை நாங்கள் மூன்று பேரும் பிரித்துக் கொள்ள வேண்டும். தறிசாய் கிடந்த அந்த பெரிய காலி மனை மட்டும் எனக்கு. எனக்கு விவசாயம் செய்ய முடியாது என்பதால் தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாம். இருவருமே ஒத்துக் கொண்டார்கள் நான் மட்டும் மௌனமாக இருந்தேன். பொன்னியின் அம்மா நீலியும் அந்தக் கூட்டத்தில் இருந்தால்..

 

 அவள் தான் எழுந்து எல்லோருக்கும் வணக்கம் வைத்துவிட்டு, இந்தப் பிரிவினை இல்லை கொஞ்சம் கூட நியாயம் இல்லையே ஐயா. செல்வம் கொழிக்கும் பூமியை எல்லாம் நீங்க வச்சுக்கிட்டீங்க. தரிசு நிலத்தை வைத்துக்கொண்டு அந்த புள்ள என்னய்யா செய்யும் கண்ணு தெரியாம? ஊருக்கே வழக்கு பேசும் மொட்டை தேவர் குடும்பத்தில, தப்பான நியாயத்தை சொன்ன பழி இந்த குடும்பத்துக்கு வந்து சேந்திரம் ஐயா. இந்த வீட்டு உப்ப தின்னவையா நான் தப்பா சொல்லி இருந்தா என்ன மன்னிச்சுக்கோங்க. நீலியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நானே அதிர்ந்து தான் போனேன். அந்த நேரத்தில் நீலி என் தாயை விட ஒரு படி மேலே போய் எனக்கு சாமியாகவே தெரிந்தால். நீலி சொல்லி முடிக்கவே இல்லை என் அண்ணனின் மனைவி அண்ணி எழுந்து நீலியை பார்த்து, வெளியே போடி வேலைக்காரன் நாயே; உன் பொண்ண அவனுக்கு கட்டி கொடுத்து எல்லாத்தையும் நீ அமுக்க பாக்குறியா? பேச்சை நிறுத்துடி என்று என் அம்மா முதன்முறையாக அதிர்ந்து வெடித்தால். நீலியின் தியாகங்களை என் அம்மா மூச்சு விடாமல் சொல்லி முடித்தால்.. மொட்டை தேவரின் குடும்பம் சின்னா பின்னமாய் சிதறிக்கிடந்தது. ஏழைகள் என்றைக்கும் உயிரை விட, மானத்தை உயர்வாகக் கருதக் கூடியவர்கள். என் அண்ணன் என் அண்ணி பேசுவதை எந்த சூழ்நிலையிலும் தடுக்கவே இல்லை அதுதான் எனக்கு வேதனையை தந்தது. வீட்டை விட்டு நிரந்தரமாய் வெளியேறிய நீலியும் அவள் மகள் பொன்னியும் அந்த வீட்டுக்கு வரவே இல்லை.

 நானும் அந்த இடத்தை விட்டு மௌனமாய் வெளியேறினேன். அவர்கள் செய்த பாவத்திற்காக பிராயச் சித்தம் தேட பொன்னியின் வீட்டுக்கு நான் போனேன். நீலியின் காலில் விழுந்து அழ வேண்டும் போல் இருந்தது நீலி தான் சொல்வாள் நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் சாமி அது போதும் எங்களுக்கு எங்களை விட்டுடு. இப்போ மானம் மட்டும்தான் என்கிட்ட மிச்சம் இருக்கு.. பொன்னியோ எதுவும் சொல்லாமல் மௌனமாய் அழுது கொண்டே இருந்தால். பொன்னி இல்லாமல் என்னால் என்ன செய்துவிட முடியும் நான் வாழும் இந்த வாழ்க்கை பொன்னி எனக்கு போட்ட பிச்சை. பொன்னியும் நான் இல்லாமல் என்ன செய்து விடுவாளோ? என்னுடைய சமமான பாகத்தை அவர்களிடம் இருந்து பெற்று விடுவதே நீலிக்கும் பொன்னிக்கும் நான் செய்யும் பிராயச்சித்தமாய் இருக்க கூடும். என்பதை மட்டும் தீர்மானித்தவனாய் நானும் அந்த கிராமத்தை விட்டு மௌனமாய் வெளியேறினேன்

 

 வருடங்கள் வேகமாய் உருண்டோடியது. நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பையும் நான் பெற்றிருந்தேன். பொன்னியும் அவளின் திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி இருந்தால். அன்புள்ள சரவணன், காலம் தான் நம்மை இணைத்தது. அதே காலம் தான் நம்மை பிரிக்கவும் செய்தது. ஆனால் அந்தக் காலத்தால் நாம் பழகிக் கழித்த அந்த பசுமையான நாட்களை, ஒரு நாளும் அழித்து விட முடியாது நம்மிடம் தோற்றுப் போன அந்தக் காலத்துக்கு நன்றி. இப்படி எழுதி ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்திருந்தால். நானும் என்னை போலவே ஒரு பார்வை இழந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.. என் அம்மாவையும் காலம் அழைத்துக் கொண்டது. நான் வாழ்ந்த அதே கிராமத்தில் என் அம்மாவின் நினைவாக ஒரு பெரிய வீட்டையும் கட்டி முடித்தேன். எனக்கு ஒரு பெண் பிள்ளையும் பிறந்திருந்தால் அவளுக்கு பொன் அரசி என்று பெயர்  வைத்திருந்தேன். அதே வேளையில் பொன்னியின் கணவன் ஒரு விபத்தில் இறந்து போனான் என்ற செய்தியும் எனக்கு கிடைத்திருந்தது. எங்கள் கிராமத்து கொடை விழாவுக்கு ஒரு வருடம் நான் போயிருந்தேன். பொன்னியும் அந்த கிராமத்திலேயே தான் இருந்தாள். அங்கே என் குழந்தையை பார்த்த பொன்னி குழந்தையை தூக்கி வாரி அனைத்துக் கொண்டு, உன் பெயர் என்ன என்று கேட்டால். என் பேரு பொன்னரசி; அப்பா என்ன பொன்னி என்று தான் கூப்பிடுவாங்க. என்று சொல்லவும் பொன்னி கண்கலங்கி இருக்கிறாள். அங்கே நடந்ததை என் குழந்தை என்னிடத்தில் சொன்னால். ஒரு அத்தை அழகாய் இருந்தாங்க அவங்க பொட்டு வைக்கல, நான் என் பெயரை பொன்னி என்று சொல்லவும், அந்த அத்தை அழுதாங்கப்பா எதுக்கு அவங்க அழுதாங்க??? நான் மௌனத்தை தான் குழந்தைக்கு பதிலாக சொன்னேன். நாங்கள் கட்டிய வீட்டையும், எனது பங்காக கிடைத்த தோப்பின் ஒரு பகுதியையும், பொன்னியின் பொறுப்பில் விட்டுவிட்டு, நாங்கள் ஊர் திரும்பினோம்.

முற்றும்

 தொடர்புக்கு,

9442715777


  

No comments:

Post a Comment