Sunday, 1 September 2024

நிழல் படம்.

நிழல் படம்.

முனைவர். இரா. பெரியதுரை.

 

 இப்ப நடந்தது மாதிரி இருக்கு,. காலம் தான் எவ்வளவு சம்பவங்களை, எத்தனை மனிதர்களை, காட்டிக்கிட்டே போகுது. என தனக்குள் சொன்னபடியே, தன் கையில் இருந்த கல்லூரி கால நிழல் பட ஆல்பத்தில் இருந்த அந்த ஒரே ஒரு நிழல் படத்தை மட்டும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தால், ப்ளோரன்ஸ். அவள் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியை. 35 வருடத்திற்கு முன்னாள் நடந்த சம்பவத்திற்கு அந்த நிழல் படம் அவளை அழைத்துச் சென்றது..

 அப்ப நான் எம் ஐ சமூகவியல் படிச்சிட்டு இருந்தேன். நான் படிச்சது பெண்கள் மட்டுமே படிக்கக்கூடிய காலேஜ். பெண்களா படிச்சாலும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம். என்னுடைய கல்லூரி நாட்களை நினைக்கும் போதெல்லாம் அந்த கிராமம் என் இதயத்தில் பூசணி கொடியாய் படர்ந்து ஆன்மாவை குளிர்விக்க தான் செய்யும்.. தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமம் அது, அந்த ஊருக்கு, தாளை அடி இன்னு பேரு.

 தாழம்பூ பண்ண பண்ணையா பூத்து நிக்கும் அந்த கிராமத்து காத்துல தாழம்பு வாசனை எப்பவும் கலந்தே இருக்கும். வெள்ளந்தியான கிராம மக்கள். அப்படி இப்படி சில மனுஷங்களும் அங்கே இருக்கத்தான் செஞ்சாங்க. நான் அந்த கிராமத்துக்கு அன்னியமானவள் தான். நான் இருந்தது பாளையங்கோட்டை சிட்டிக்குள்ள. அந்த கிராம உனக்கு எப்படி தெரியும்? அப்படின்னு நீங்க கேட்கிறது என் காதில் விழுது. சொல்லத்தானே போறேன்.- எங்க காலேஜ்ல இருந்து என் எஸ் எஸ் முகாம் அந்த கிராமத்தில் தான் போட்டு இருந்தாங்க. 15 நாள், அந்த கிராமத்தில் தான் தங்கி வேலை செஞ்சோம். அந்த கிராமத்துல எல்லாருமே எங்களுக்கு, அம்மா அப்பாவா, அக்கா தங்கச்சியா, அண்ணன் தம்பியா,, ஆட்சி தாத்தா வா,. மாறித்தான் போனாங்க..

 

 அந்த 15 நாட்களும் எல்லோருமே மகிழ்ச்சியா தான் இருந்தோம். நாங்க எல்லோருமே குழுக்களா பிரிஞ்சி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வேலையை செஞ்சு கிட்டு இருந்தோம். மண்டி கிடந்த புதர்களை சுத்தம் பண்றது, அந்த சின்ன பள்ளிக்கூடத்தை ஒட்டடை அடிக்கிறது, சாயங்கால வேளையிலே பள்ளி பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது, இரவு நேரங்களில் அந்த கிராமத்து மக்களோட மக்களா அரட்டை அடிக்கிறது, அந்த மக்கள் கொடுக்கிற சாப்பாடு வாங்கி சாப்பிடுவது, இப்படி ஒரே கூத்தும், கும்மாளமும் மகிழ்ச்சி மாதா இருந்துச்சு அந்த நாட்களில். இடையில ஒரு நாள் அந்த கிராமத்து பாட்டிகள எங்களுக்கு கதை சொல்லச் சொன்னோம். வள்ளிநாயகத்தை கதை சொல்ல சொல்லுங்க, வள்ளிநாயகம் மாமாவ கூட்டிட்டு வாங்க பிள்ளைங்களா! அப்படின்னு அங்க கூடியிருந்தவங்க எல்லாரும் ஒட்டுமொத்தமா சொன்னாங்க.. புள்ளைங்க எல்லாரும் ஓடிப்போய், வள்ளிநாயகத்தோட ரெண்டு கைய புடிச்சு தொங்கிக்கிட்டு,, அவன தள்ளி கிட்டுமா வந்தாங்க. நாங்க எல்லாருமே ஆச்சரியமா கண்கொட்டாம வள்ளிநாயகத்தை பார்த்துக்கிட்டே இருந்தோம். என்னை எதுக்கு இந்த புள்ளைங்க தள்ளிக்கிட்டு வருதுங்க? அங்கே இருந்தவங்கள பாத்து வள்ளிநாயகம் கேட்க, ராசாத்தி ஆச்சி தான் சொன்னாங்க, காலேஜ் பிள்ளைங்க நம்ம ஊருக்கு வந்திருக்காங்களா. அந்தப் பிள்ளைங்களிலே எந்த புள்ள உனக்கு புடிச்சி இருக்குன்னு சொல்லு, ஒருத்தியை புடிச்சு வர சித்திரை மாசத்துல உனக்கு தாலி கட்டி வச்சிருவோம். நாங்க எல்லாருமே விழுந்து விழுந்து சிரிச்சிட்டோம். என் தோழி செல்வராணி அவ ரொம்ப வாயாடி. அவ என்ன பாத்து சத்தமா சொன்னா, ஏய் ப்ளோரன்ஸ் உன் மாப்பிள்ளைய பாருடி, இதையெல்லாம் கேட்ட வள்ளி நாயகத்தோட முகம் வெக்கத்தால சிவந்து போச்சு. ஏய் பேசாம இருக்க மாட்டீங்க தூரத்து கயிற்று கட்டிலில் இருந்த வேல் தேவர் சத்தம் போட, அப்பவும் எல்லாரும் வாய மூடிக்கிட்டு சிரித்துக்கொண்டே தான் இருந்தோம். வேல் தேவர் தான் அந்த ஊருக்கு காரியக்காரர். அதற்கேற்ற மாதிரியே அவருடைய தோற்றமும் இருந்தது. அவர்தான் வள்ளிநாயகத்தை கைய புடிச்சு கூட்டத்துக்கு நடுவுல கூட்டிட்டு வந்து விட்டுட்டு, ஏல வள்ளிநாயகம் நம்ம ஊருக்கு வேலை செய்ய சொல்லி இந்த பிள்ளைகளை கவர்மெண்ட் அனுப்பி இருக்கிறாங்க, அவளுகளுக்கு நல்ல தங்கா கதை சொல்லல, வள்ளிநாயகத்தை தோளில் கை போட்டுக்கிட்டே சொன்னாரு. வேல் தேவர் பொண்டாட்டி வயலுக்கு கொண்டு போற பெட்ரோல் ஸ்மார்ட் லைட்டை கொண்டுவந்து கூட்டத்துக்கு நடுவுல வச்சாங்க..

 

 அந்த வெளிச்சத்தில் தான் வள்ளி நாயகத்தின் முகத்தை நான் தெளிவாக பார்த்தேன்.. அவன் கண்களில் ஒளி மட்டும் இருந்திருந்தால்; அவன் இன்னும் ஒரு இயேசுவாகவே எனக்குத் தெரிந்திருப்பான். அவன் முகத்தில் சாந்தம் குடிகொண்டிருந்தது. ஒரு வாலிபனுக்குரிய எல்லா அம்சங்களையும் அவன் பெற்றிருந்தான்.. அவனுக்கு வசீகரமான குரலோடு கூடிய சாரீரமும் இருந்தது. தோளில் போட்டிருந்த துண்டை விரித்து அவன் தரையில் அமர்ந்த போது, நாயகம் எனக்கு ஒரு நாயகனாகவே தெரிந்தான். தொண்டையை சரி செய்து கொண்டு அவன் நல்ல தங்காள் கதையை சொல்ல தொடங்கிய போது, நாங்கள் எல்லோருமே அவன் வசம் ஆகி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

 நல்லதங்காள் கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் யாரும் சொல்லி கேட்டதில்லை இதுவரை. அவன் கதையை சொல்லி முடித்த போது நாங்கள் எல்லாம் அழுது சோர்ந்து போயிருந்தோம். அவன் சொன்னதில் அப்படி ஒரு உறுக்கம் இருந்தது. கதையின் ஒவ்வொரு பாத்திரமாகவே அவன் மாறி இருந்தான். இந்த உலகத்தில் உள்ள எந்த எழுத்தாளனாலும் நல்லதங்காள் கதையைப் போல, ஒரு கண்ணீர் காவியத்தை எழுதி இருக்க முடியாது என்று தான் நான் சொல்வேன். கதையை சொல்லி முடித்த வள்ளிநாயகம், என்னப்பா எல்லாரும் தூங்கிட்டீங்களா? எங்களைப் பார்த்து கேட்க, அதிலிருந்த ஒரு பையன் போங்க மாமா ஒரே அழுகாட்சியா இருந்துச்சு. என அவனுக்கு பதில் சொல்ல, கொள் என்ற சிரிப்பால், அந்தக் கூட்டத்தை கவி இருந்த சோகம் மெல்ல விலகத் தொடங்கியது. உருண்டு புரண்டு படுத்தும் அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. வள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும், தரையைப் பறந்தும் நாயைப் போல, என் இதயத்தை பரண்டிக் கொண்டே இருந்தது.

 

 மறுநாள் விடியலை எதிர்பார்த்துக் கிட்டிருந்த நான், வேகவேகமா எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிச்சு கிட்டு, ராசாத்தி ஆச்ச தேடிப் போனேன் அவங்க வீட்டுக்கு. ஆட்சி வீட்டுல இல்ல. வயக்காட்டுக்கு போய் இருக்கிறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க. ஊர் பூரா நீ பேசுறதுல ராசாத்தி ஆச்சு அடிச்சுக்க யாரும் கிடையாது அந்த கிராமத்துல. அதை நான் நல்லதே தெரிஞ்சு வெச்சிருந்தேன். ஒரு வழியா ராசாத்தி ஆச்சு வயல்ல கண்டுபிடிச்சிட்டேன்,. என்ன பார்த்த ராசாத்தி ஆச்சு வாயில வச்சிருந்த வெத்தலையை துப்பிட்டு, வா தாயி என்ன வயக்காட்ட பார்க்க வந்திருக்கியா? என்ன பார்த்து கேட்டுச்சு நானும் ஆமாம்ன்னு சொல்லிட்டு அவங்க பக்கத்துல அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தேன். என்ன தாயி ஊரெல்லாம் புடிச்சிருக்கா? ஊர் கரங்களை பத்தி ஒவ்வொன்னா சொல்ல ஆரம்பிச்சாங்க.. அவங்க சொன்னதை வேண்டா வெறுப்பா ஊம கொட்டினேன். ஆட்சி நேத்து ராத்திரியில வள்ளிநாயகம் அண்ணன் சொன்ன கதை அவ்வளவு நல்லா இருந்துச்சு எனக்கு. யார் ஆட்சி அந்த வள்ளி நாயகனே? அவங்க என்ன செய்றாங்க? அவங்கள பத்தி சொல்லுங்க நான் கேட்டேன்.

 ஆச்சி வள்ளியை பற்றி நிறையவே தான் சொன்னாங்க. அதற்குள் வயலில் பாய்ச்சிய தண்ணீர் வயல் நிரம்பி மறுகால் போகத் தொடங்கியிருந்தது. ராசாத்தி ஆட்சி தண்ணியை நிறுத்தப் போகவும், வள்ளியை என் இதயத்தில் நிரப்பியவளாய் அங்கிருந்து திரும்பினேன்.. அவனைப் பற்றி ராசாத்தி ஆச்சியிடம் நான் கேட்டு தெரிந்ததும், நான் அவனிடம் பேசி பெற்றுக் கொண்டவைகளும், வெறும் தரவுகளாய் கருதி புறம் தள்ளி விட முடியாது தான். படிக்காத பார்வையற்ற பாமரனாய், அவனை, அவனைப் போன்றவர்களை, நானும் இந்த சமூகமும் வேறு இதயத்தை வைத்து தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவனை மிகைப்படுத்தி சொல்வதால், வள்ளிக்கு என்ன நன்மை நடந்து விடப்போகிறது? அவன் என்னிடம் பேசியதில் தத்துவம் இருந்தது, அவன் நசைவில் நடையில் நிதானம் இருந்தது.

 அவனைத் தேடி அவன் வீட்டுக்கே போய் விட்டேன் என் கொலுசு சத்தத்தை கூர்மையாய், கவனித்த வள்ளி நிதானமாய் யார் அது? அவன் கேட்கமுமே; என் பேரு பிளாரன்ஸ். அவன் என்னரன்ஸ்? என்று அவன் கேட்கவுமே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்னை நான் அவனுக்கு அறிமுகம் செய்து கொண்டேன்.

 

 என்னைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டு முடித்த அவன், சாக்கில் நிரப்பப்பட்ட நெல்மணிகள் அழுத்தம் தாங்காமல், சாக்கு கிழிந்து நிலத்தில் கொட்டியது போல, அவன் மனதில் இருப்பதை அவ்வளவு எளிதில் கொட்டி விடவில்லை, என்னிடத்தில். தயங்கி தயங்கி தான் என்னிடம் பேசினான். அதை வேளையில் என்னுடைய உடல் அசைவுகளையும் நிதானமாய் அவதானித்துக் கொண்டுதான் இருந்தான். நானும், அவன் வீட்டையும் அவன் புலங்கும் பொருட்களையும் கவனித்துக் கொண்டே இருந்தேன். அவனுக்கென்று ஒரு உளவியலை அவன் வைத்திருப்பான் போலும். பிறகு மெல்ல மெல்ல என்னை உள்வாங்கியவனாய் மெல்ல பேசத் தொடங்கினான். ஒன்றை நான் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும். அவன் வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு, தரையெல்லாம் சாணம் மிழுகப்பட்டு மிகவும் சுத்தமாக இருந்தது முன்முற்றத்தில் அழகாக கோலம் கூட வரையப்பட்டிருந்தது. அவன் ஆடைகளும், பயன்படுத்தும் பொருட்களும் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கோலம் போட்டது யார் என்று கேட்டேன்? எனக்கு என்ன பொண்டாட்டியா இருக்கா என அவன் சொல்லி சிரித்தான். அவன் முதல் சிரிப்பை அப்போதுதான் நான் தரிசித்தேன். அவனது இந்த வார்த்தைகளில் அவனுக்கு ஒரு துணை இல்லை என்ற ஏக்கம் வெளிப்பட்டது.

 

 அவன் என் நெஞ்சுக்கு நெருக்கமானவனாய் மாறிப்போனான். அவனுக்கும் நான் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். நான் அந்த கிராமத்தில் தங்கி இருந்த எஞ்சிய நாட்கள் எல்லாம் அவன் கூடவே என் பொழுதுகளை செலவிட்டிருந்தேன். என் கையைப் பிடித்து நடப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. ஊரில் உள்ளவர்களின் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவனைப் பின்னால் அமர வைத்து, ஊரின் எல்லை வரை பலமுறை ஓட்டிச் சென்று இருக்கிறேன். என்னோடு சைக்கிளில் நெருங்கி உட்கார அவன் கூச்சப்படுகிறவனாய் நடிப்பதை நான் உணர்ந்திருந்தேன்.. ஆனாலும் நான் அவனோடு நெருங்கியே இருந்தேன். வள்ளிக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்தது. அதை அவனுக்கு பாம்பு கடித்து இறந்து போன அவனது நெருங்கிய நண்பன், மாயாண்டி பழக்கி விட்டதாய் என்னிடம் சொன்னான். மாயாண்டி பற்றி சொல்லும்போது அவன் கண்கள் பணி பணித்துப் போனதை நான் பார்த்தேன். பிடியை இழுத்து அவன் ஊதும் போது, பெரிய சிந்தனையாளன் கூட தோற்றுப் போவான். அதையும் நான் தூரத்தில் இருந்து ரசித்திருக்கிறேன். வள்ளியை எனக்குப் பிடித்துப் போயிருந்ததால்; அந்தப் பிடி வாசனையையும் நான் நேசிக்க கற்றுக் கொண்டேன். பீடியை குடிப்பது பாவக்காரியமாக என் கிறிஸ்தவ மதம்,; எனக்கு போதித்திருந்ததால்; அந்தப் பழக்கத்தை அவனை விடச் சொன்னேன். எனக்காக அதையும் அவன் விடத்தான் செய்தான். ஆனால் அவன் தனிமையில் துன்பப்படுவதைப் போல நான் உணர்ந்தேன்.. மறுபடியும் அவனை பீடி குடிக்க சொன்னேன். என்னை அவன் புரிந்து கொள்வதில் சற்றே குழம்பி தான் போனான்.

 

 எனது கிறித்துவ மதம் எளிமையானவர்களிடம் நெருக்கமாக இருப்பதை, எனக்கு கற்றுக் கொடுத்திருந்ததால்; மற்றவர்களின் பார்வையை குறித்து நான் எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை. அந்த கிராமத்துக்கு வந்த எனது கல்லூரி தோழியர் யாரும் என்னை போல் இல்லை,. அவர்கள் எல்லோரும் பட்டும் படாமல் அந்த கிராமத்து மக்களை அணுகியிருந்தனர். எல்லா மதங்களும் நிச்சயமாக நல்லதைத்தான் நமக்கு கற்றுத் தருகிறது. என்பதையும் நான் நன்கு அறிவேன். வள்ளிக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அவன் கண்களை இழந்து இருந்தாலும் காலத்தை நன்றாக கணிக்க கற்றுக் கொண்டிருந்தான். கையளவு வரப்பில் தடுமாறாமல் அவன் நடந்தான். மரம் ஏறத் தெரியும் அவனுக்கு, நீச்சல் தெரிந்திருந்தது, எல்லாருக்கும் முடிந்தவரை உதவியாகவே இருந்தான். சிலர் அவனைக் காலம் காட்டும் கருவியாக நேரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டனர், இயற்கையை நன்றாக கணிக்க தெரிந்திருந்தது அவனுக்கு. சிலர் அவனை கேலிப்பாத்திரமாக பயன்படுத்த தவறியதும் இல்லை. மொத்தத்தில் வள்ளி

 

 எல்லாருக்கும் எல்லாம் ஆகவே அந்த கிராமத்து மண்ணை சுற்றி வந்தான் என்று தான் நான் சொல்வேன்.. திருநெல்வேலி, வானொலி நிலையத்தை, பல்கலைக்கழகமாகவே பயன்படுத்தி பட்டம் பெற்ற ஒரு முதுகலை பட்டதாரி வள்ளி.. வாய்மொழிக் கதைகளையும், பழமொழிகளையும், தேவார திருவாசகப் பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும், வானொலி ஒலிக்காத நேரங்களில் தனது மென்மையான குரலால் பாடிப் பாடி, அந்த கிராமத்தை மகிழ்வித்து கொண்டே தான் இருந்தான்.

 

 வள்ளிக்கும் காதல், காமம், எல்லா ஆசா பாசங்களும் இருக்கத்தான் செய்திருந்தது. அவனும் சராசரி மனிதன் தானே வள்ளியையும், வள்ளியைப் போன்றவர்களையும், அங்கீகரிக்க தவறும் எவரையுமே, சராசரிக்கும் சற்று கீழே தான் நான் கருதுவேன். நாங்கள் முகாம் முடித்து நாளை கிளம்புவதாக வள்ளியிடம் நான் சொன்னேன் அதைக் கேட்ட வள்ளி, ஏதோ ஒன்று அவன் கையை விட்டு நழுவி போவதாகவே உணர்வதை அவன் முகம், எனக்கு காட்டிக் கொடுத்தது. வள்ளியின் மீது எனக்கு இருப்பது காதலா? கருணையா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. இந்தக் காலத்தைப் போல் நான் வாழ்ந்த காலம், எனக்கு சுதந்திரமாய் முடிவெடுக்கும் உரிமையை தந்ததில்லை. ஒருவேளை தந்திருந்தால்?? அதையும் எனக்கு சொல்லத் தெரியவில்லை.. மறுநாள் அதிகாலை, நான் விடைபெறப் போவதை, வல்லியிடம் சொல்லப் போனேன். அவன் வீட்டில் இல்லை. அவன் வீட்டு வாசலில் ஒரு பெண் கோலம் போட்டுக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். ராசம்மாள் தான் அந்த பெண். ராசம்மாள் ஒரு வெகுளியான பெண். அவள் மனநிலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அவள் கணவன் அவளை வீட்டுக்கே அனுப்பி விட்டான்.. அவளுக்கு பெற்றோரும் கிடையாது. எல்லோருக்குமே மாட்டை போல வேலை செய்பவள், கூலி கேட்க மாட்டாள் சாப்பாடு கொடுத்தால் போதும் அவளுக்கு. வள்ளியைப் பார்த்து அப்படிப்போ இப்படிப்போ, அதை செய் இதை செய்யாதே, என ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். வலிக்கும் அவள் மேல் எரிச்சலாய் இருக்கும்.. ஆனாலும் வள்ளிக்கு அவளை பிடிக்கும். அவளுக்கு கிடைக்கும் காசை கொண்டு வள்ளிக்கு சில நேரங்களில் பீடி கூட வாங்கி கொடுப்பாள். அது வெறும் அன்பு மட்டும் தான் என்பது அந்த கிராமத்தில் எல்லோருக்குமே தெரியும். கடைசியில் வள்ளி அந்த சிவன் கோயிலில் உருக்கமாக யாருக்காகவோ வேண்டிக் கொண்டிருந்தான். வேண்டுதலை முடித்து வெளியே வந்த வள்ளியின் கையை நான் பிடித்துக் கொண்டு, நான் விடை பெறுவதை சொன்னேன். முகத்தில் எந்த சலனமும் இல்லாத வழி, என் கையில் திருநீற்றைக் கொடுத்தான். மதத்தைக் கடந்து அந்த திருநீற்றில் வள்ளியின் அன்பு இருந்தது. நான் நெற்றியில் பூசிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

 

 நான் அந்த நிழல் படத்தை பார்த்தபடியே என் கடந்த கால நினைவுகளுக்குள் சென்றிருந்தேன். எனக்கு காபி கொடுக்க வந்த என் வீட்டு வேலைக்கார பெண் அந்த நிழல் படத்தைப் பார்த்து, இது உங்க சின்ன வயசு போட்டோவ மா? சின்ன வயசுல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா, நீங்க தோள்ல கை போட்டு இருக்கீங்களா அந்த ஆளுக்கு கண்ணு தெரியாதாம்மா? யாருமா அவரு? நான் அவளிடம் எதையும் மறைத்ததில்லை.. காரணம் பல நேரங்களில் அவள் எனக்கு ஆறுதலாய் இருந்திருக்கிறாள். என் கணவர் இறந்த பிறகு, நானும் அவளும் தான் இந்த வீட்டில் இருக்கிறோம். என் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டார்கள் தங்கள் குடும்பத்தோடு. சென்னையில் எனக்கு எங்கும் போகத் தெரியாது எனக்கும் அவளுக்கும் இந்த வீடு தான் கதி.. என் அருகில் உட்கார்ந்த அவளிடம் நான் சொல்லத் தொடங்கினேன்.. அவன் பெயர் வள்ளிநாயகம். கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு பஞ்சம் பிழைப்பதற்காக வந்தவர்கள் இவனோட அம்மாவும் அப்பாவும். பத்து வருடத்திற்கு பிறகு அவங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவன் ஒரே புள்ளையா பொறந்தான் ஒரு வயசுக்கு அப்புறம்தான் வள்ளி நாயகத்துக்கு கண்ணு தெரியாது, என்கிற உண்மை அவன் பெற்றோருக்கே தெரிந்தது. வள்ளியோட அம்மா நோய் வாய் பட்டு அவனுக்கு பத்து வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க.. அவனுக்கு 15 வயசு இருக்கும் போது அவங்க அப்பாவும் இறந்து போயிட்டார். வள்ளியோட அப்பா கடைசி காரியத்துக்கு வந்தவங்கள, பார்த்து வள்ளிநாயகத்தை ஒப்படைக்க முயற்சி செஞ்சார் அந்த ஊர் பெரியவர் முக்கையா தேவர். எந்த சொத்து பத்தும் இல்லாத, வள்ளி நாயகத்தை தங்களோடு அழைச்சிட்டு போக யாரும் முன் வரல. அதற்குப் பிறகு எல்லாமே அந்த கிராமம்தான் வள்ளி நாயகத்துக்கு. என நான் சொல்லி முடித்தேன் அவளுக்கு..

 

 அவள் கண்களில் இருந்து சில துளி கண்ணீர் கசிவதை நான் பார்த்தேன். பாவம் அதன் பிறகு என்ன ஆச்சும்மா அவருக்கு? போன வருஷத்துல கிறிஸ்மஸ் லீவுல அவன பாக்குறதுக்கு அந்த கிராமத்துக்கு நான் போய் இருந்தேன். நம்ம ஐயா இறந்த அதே மாசத்துல தான் அவரும் இறந்திருந்தார்.,. ஊர் பெரியவர் மூக்கையா தேவருக்கு பிறகு, அடுத்த தலைமுறை பிள்ளைங்க அவர சரியா கவனிச்சுக்கல. அந்தக் கிராமத்தை அவ்வளவு நேசிச்ச வள்ளிநாயகம் தனியா செத்து கிடந்தாராம். ஒரு அப்பாவி பொண்ணு ராசம்மா மட்டும்தான் அவனுக்காக அழுது இருக்கு. நான் இப்படி சொல்லி முடிக்கவோமே, நான் அழுவதை பார்த்து அந்த வேலைக்கார பெண்ணும், என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு, ஓ என அலறி அழுதால். பாவம் அந்த வேலைக்கார பெண்ணின் கண்ணீர் துளிகளில், மனிதநேயம் கலந்திருந்ததை நான் உணர்ந்தேன்.

முற்றும்

 தொடர்புக்கு,

9442715777

 


  

No comments:

Post a Comment