Saturday 3 July 2021

சங்கப் பாடல்களில் முருகன் வழிபாடு: ஓர் அறிமுகம்

சங்கப் பாடல்களில் முருகன் வழிபாடு: ஓர் அறிமுகம்

ப. பிரதீபா

முனைவர் பட்ட ஆய்வாளர்

ஆங்கில துறை மாநில கல்லூரி சென்னை.

 

முருகன் வழிபாடு தமிழ்நாட்டின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்றாகும். இவ்வழிபாட்டின் தொடக்கத்தை ஆராய சங்கப்பாடல்கள் நமக்கு உதவுகின்றன. முற்சங்கக் காலத்தில் இருந்த முருகன் வழிபாடுகளைப் புரிந்துகொள்வதும் அவ்வழிபாடு எவ்வாறு மாற்றம் கண்டது என்பதை ஆராய்வதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் உள்ள பல தொகுப்புகளில் முருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் எட்டுத்தொகை நூலான பரிபாடலிலும் பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையிலும் உள்ள முருகன் வழிபாடு பற்றிய குறிப்புகளைப் பிற மேற்கணக்கு நூல்களிலுள்ள முருகன் வழிபாட்டுக் குறிப்புகளோடு ஒப்பிடும்போது சில மாற்றங்களைக் காணலாம். பதினெண்மேற்கணக்கு நூல்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன என்பது அறிஞர்களின் கருத்தாகும். திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் தரவுகளை ஆராய்ந்தால், பண்பாட்டுக் கலப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள் அவற்றில் பொதிந்துள்ளதைக் காணவியலும். எனவே அவை கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கட்டுரையில் திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல் தவிர இதர நூல்கள் முற்சங்க நூல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

 

முற்சங்கப்பாடல்களில் முருகன் வழிபாடு

தொல்காப்பியம் ஐந்திணைக்குரிய கடவுள்களைப் பட்டியலிடும்பொழுது குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகச் சேயோனைச் சுட்டிக்காட்டுகிறது. முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் என்பதைத் தொல்காப்பியம் “சேயோன் மேயமைவரை உலகு” என்ற வரிகளில் குறித்து, “சேயோன் ஆள்கிற, மேகங்களைத் தொடும் மலைக்குன்றுகள்” எனும் பொருள்பட விவரிக்கிறது. சேயோனுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம்பெறவில்லை. இந்த இரு தெய்வங்களும் சிவப்பு நிறத்துடன் தொடர்புடையவை என்பதால் முருகனும் சேயோனும் ஒரே தெய்வத்தை குறிக்கின்றன எனலாம். சேயோன் என்னும் பெயரில் பல்வேறு பொருள்கள் பொதிந்துள்ளன. சிவப்பு நிறம் பொருந்தியவன் என்றும், செங்கதிரைப் போல ஒளி வீசுபவன் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

முருகனைக் குறிக்கும் மற்றொரு பெயர் ‘முருகு’[1]. ‘முருகு’ எனும் சொல் அழகு, இளமை மற்றும் நறுமணத்தைக் குறிக்கும். இக்கடவுளைக் குறிக்கும் மற்றொரு சொல் நெடுவேள்[2] என்பதாகும். உயரமான தோற்றம் உடையவர் மற்றும் பகைவரை அழிக்கும் வீரம் மிகுந்தவரே இனக்குழுவின் தலைவராகக் கருதப்பட்டார். அத்தகைய சிறப்புமிக்கவரை மக்கள் நெடுவேள் என்று அழைத்தனர். குறிஞ்சிக்கடவுளான முருகன் அந்நிலத்தைக் காத்ததால், அவனுக்கும் அப்பெயர் சூட்டப்பட்டது. இப்பெயர் முருகனின் வீரத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

தற்காலத்தில் வேலன் என்ற பெயர் முருகனைக் குறிக்கிறது. ஆனால் சங்கப்பாடல்களில் வேலன் எனும் சொல் முருகனைக் குறிக்காமல் முருகன் வழிபாட்டை நடத்தும் பூசாரி அல்லது சாமியாடியைக் குறித்துள்ளது. வேலை ஏந்தியவன் வேலன் என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான பாடல்களில் வேலனைப் பற்றிய தரவுகள் இடம்பெற்றுள்ளன. வேலன், வெறியாட்டம் எனும் சடங்கில் முக்கியப் பங்கு வகித்தான்[3]. வெறியாட்டம் நிகழ்வு குறிஞ்சி நிலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தன் காதலனைக் காணாமல் தவிக்கும் தலைவி சுணக்கம் ஏற்பட்டு பசலையால் அவதியுறுகிறாள். அவளை அணங்கு தாக்கியது என்று எண்ணி அவளது பெற்றோர் அவளை வேலனிடம் குறிகேட்க அழைத்துச் செல்கின்றனர். வெறியாட்டம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். மக்கள் கூட ஏதுவான இடத்தை சுத்தம் செய்து இள ஆட்டைப் பலி கொடுக்கின்றனர். ஆட்டின் ரத்தத்தை திணையரிசியுடன் கலந்து முருகனுக்குப் படையலிடுவது வழக்கமாகும். வேலன் கையில் வேலை ஏந்திய வண்ணம் ஆடுவதைக் கண்டு அவன் மீது முருகன் இறங்கிக் குறிசொல்வதாய்க் கருதி அவனை வழிபடுகின்றனர்[4].

வெறியாட்டச் சடங்கின் முக்கியப் பணி அணங்கு என்ற தீயசக்தியை அழிப்பதாகும். அணங்கு என்பது நோய் அச்சத்தை மிகுதிப்படுத்தும் ஒரு சக்தி எனலாம். இது பெண்களை  அவதியுற  செய்கிறது . அணங்கைத் தவிர ‘சூர்’ எனும் சக்தியும் அருவிகளில்[5], நீர்ச்சுனைகளில்[6],  மலைக்காடுகளில் ஒளிந்து [7] மலை ஆடுகளை அச்சமுறச் செய்கிறது. உருவமற்றதாக கருதப்பட்டாலும் சில சமயங்களில் பெண் வடிவம் கொள்ளும். சூர் மற்றும் அணங்கை அழிக்கும் வல்லமையை முருகன் கொண்டிருந்தான் என்பதையும் பாடல்கள் தெரிவிக்கின்றன[8].

முருகன் குறிஞ்சி நிலப்பரப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கடவுள் என்பதைக் குறிக்கும் விதமாய் இந்நிலப்பரப்பிற்குரிய கருப்பொருட்கள் பல முருகன் வழிபாட்டோடு தொடர்பு கொண்டிருந்தன. வேலன் கையில் இருக்கும் ஆயுதமான வேல் குறிஞ்சிநில மக்கள் வேட்டைக்குப் பயன்படுத்தும் ஆயுதமாகும். குறிஞ்சி நிலத்தின் பறவையான மயிலின் இறகுகள் அலங்காரத்துக்கு பயன்படுத்தபட்டது. ஆனால் முருகனின் வாகனமாக கருதப்படவில்லை.

இவற்றைத் தவிர்த்து முருகன் வள்ளியோடு[9] தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறான். குறிஞ்சி நிலத் தலைவனும் தலைவியும் முருகன் வள்ளியுடன் ஒப்பிடப்பட்டனர். வள்ளி என்பது ஒரு கொடி வகையாகும். காதலுற்ற பெண்கள் வள்ளிக்கொடியுடன் ஒப்பிடப்பட்டனர் என்று அறிஞர்கள் கூறுகிறர். இது தவிர முருகன் மற்றும் வள்ளியின் திருமணம் பற்றிய தரவுகள் முற்சங்க இலக்கியங்களில் இல்லை.

 பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் வழிபாடு 

முற்சங்கப்பாடல்களில் முருகன் வேறு எந்தக் கடவுளுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை. அவனது பிறப்பு பற்றிய தகவல்களும் இடம்பெறவில்லை. ஆனால் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகனைப் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே இவை இரண்டும் வடமொழி மரபுக் கலப்பினால் தோன்றின என்பதை வானமாமலை போன்ற ஆராய்ச்சியாளர்கள் நிறுவியிருக்கின்றனர்.

முருகனின் பிறப்பை பரிபாடல்[10] விரிவாக விவரிக்கின்றது. உமையுடன் சிவன் புணர்ந்தபோது வெளிவந்த விந்தினை இந்திரன் பெற்றுக்கொண்டான். வலிமைமிக்க வீரனை உருவாக்க எண்ணி சப்தரிஷிகளின் மனைவிமாரிடம் அவர்களே அறியாவண்ணம் விந்தினைத் தீயிலிட்டு உண்ணக் கொடுத்தான். அருந்ததி தவிர்த்து மற்ற அறுவரும் அதை உட்கொண்டு ஆறு குழந்தைகளை ஈன்றெடுத்தனர். அந்த ஆறு குழந்தைகளும் ஒரே உருவமாய் மாறி இந்திரனையே எதிர்கொண்டு போரில் வெற்றிபெறுகின்றனர். இது பரிபாடலில் பதியப்பட்ட கருத்தாகும். திருமுருகாற்றுப்படையில் “ஆல் தெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே”[11] எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல்களில்தான் சிவனும் பார்வதியும் முருகனது தாய் தந்தையாகத் தொடர்புபடுத்தப்பட்டனர். மேலும் திருமுருகாற்றுப்படையில் “கொற்றவைச் சிறுவன்”[12] என்ற வரியின் மூலம், போர் தெய்வமான கொற்றவை முருகனுக்குத் தாயாகிறாள். பிற்காலத்தில் கொற்றவையே பார்வதியுடன் இணைக்கப்படுகிறாள். இவை வடமொழிப் புராணங்கள், காப்பியங்களில் உள்ள ஸ்கந்த மரபுடன் தொடர்புடையவை ஆகும்.

பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகனது மனைவிகளாக வள்ளி மற்றும் தெய்வானை உள்ளனர். பரிபாடலில் குறமகளும் வேட்டுவதலைவனின்[13]  மகளான வள்ளியும், இந்திரனின் மகளும்[14] தேவகுலத்தை சேர்ந்த தெய்வானையும், முருகனின் மனைவிகள் என்ற குறிப்புள்ளது. “மறு இல் கற்பின் வாணுதற் கணவன்” என்று தெய்வானையை திருமுருகாற்றுப்படை குறிப்பதால் அவள் கற்புமணபிராட்டி என்றும் “மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே” என்று முருகன் வள்ளியோடு அருள் புரிந்ததால் அவள் களவுமணப் பிராட்டி என்றும் கருதப்பட்டனர்.  இது  முற்சங்கப் பாடல்களில் இருந்து வேறுபடுகிறது. அப்பாடல்களில்  முருகனுடைய துணையாக வள்ளி மட்டுமே கருதப்பட்டாள். ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் கற்பு மணம் முக்கியத்துவம் பெற்றதால் தெய்வானை முருகனுக்கு மனைவி ஆவதாய் அறிஞர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாது ஸ்கந்த கடவுளின் மனைவியாக இந்திரனின் பெண் இருந்ததால் அந்தக் கதை முருகனோடு சேர்க்கப்படும்போது தெய்வானை முக்கியத்துவம் பெறுகிறாள்.

முருகனின் உருவம் பற்றிய தரவுகளும் இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன. முருகனுக்கு ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் உள்ளன[15] என்று திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் வருணிக்கின்றன. முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி தருவதும் இப்பாடலில் உள்ளது. முற்சங்கப்பாடல்களில் இவ்வருணனைகளை நாம் காணவியலாது. சிவப்பு நிறமுடையவன், வீரம் மற்றும் கோபம் மிக்கவன்[16] என்ற வர்ணனைகள் மட்டுமே மிகுதியாய் உள்ளன. தற்காலத்திலுள்ள முருக உருவ வழிபாடு தோன்றியது ஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகுதான்.

முருகனின் வீர சாகசங்கள் திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் உள்ளன. சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்ய முனைகிறான் முருகன். அந்த அரக்கன் மலையாகவும் குருகாகவும் மாமரமாகவும் உருமாறிக்கொண்டேயிருக்கிறான்[17]. அவற்றை முருகன் அழிக்கிறான். முற்சங்கப் பாடல்களில் முருகன் வேலன் மீது ஏறி அணங்கை அழிப்பது, சூர் எனும் துர்சக்தியை எதிர்ப்பது போன்ற செயல்களைக் காணலாம். இதுவரை உருவமில்லாததாகக் கருதப்பட்ட சூர் திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடலில் ஓர் அசுரனாக  உருவம் கொள்கிறது. வடநாட்டு ஸ்கந்த மரபில் ஸ்கந்தன் அசுரர்களை வதம் செய்தல் ஒரு முக்கிய நிகழ்வாகும். அதன் தாக்கமே சூர் என்ற சக்தி சூரபத்மன் ஆனதன் காரணமாகும்.

சூரபத்மனை வதம் செய்யும் முன் அவன் உருமாறுவது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் சூரபத்மனின் உருவங்கள் அனைத்தும் குலக்குறிகளாக இருந்திருக்கலாம் என்றும், முருகனை தெய்வமாகக் கொண்ட குழுக்கள் அக்குலக்குறியைக் கொண்ட குலங்களைப் போரில் வீழ்த்தியதையே சூரபத்மனின் பல்வேறு உருவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் வானமாமலை மானுடவியல் நோக்கிலிருந்து எடுத்துரைக்கிறார். அதே சமயம் வடமொழிப் புராணங்களில் ஸ்கந்த கடவுளுடன் தொடர்புடைய மயில், ஆடு, சேவல்  ஆகியவற்றைத் தேவர்கள் முருகனுக்குப் பரிசளிப்பதாய் பரிபாடல்[18] குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் குலக்குறிகளாய்த் தோன்றி பின்னர் முருகன்-ஸ்கந்தன் இணைப்பைப் பலப்படுத்த முருகனோடு தொடர்புபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார் வானமாமலை.

வெறியாட்டம்[19] பற்றிய குறிப்புகள் இவ்விரு நூல்களிலும் உள்ளன. முற்சங்கப்பாடல்களில் அணங்கை விரட்டுவதே முருக வழிபாட்டின் முக்கிய நோக்காக இருந்தது. பரிபாடலில் இந்தப்போக்கு மாறியது எனலாம். இன்பம் நிலைத்திருக்கவும் செல்வம் பெறவேண்டியும், பிள்ளைப்பேறுக்காகவும்[20] வழிபட்டனர். அது தவிர, பரிபாடலில் திருப்பரங்குன்றம், திருசீர் அலைவாய், திருவாவின்குடி, திருவேரகம், திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் முருகன் எழுந்தருள்வதாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற சங்கப்பாடல்களில் இவ்வாறு இடங்கள் குறிப்பிடப்படவில்லை.

முருகனைப் பற்றிய சங்கப்பாடல்களில் அத்தெய்வ வழிபாடு பற்றிய தகவல்களோடு சமூகத்தில் கடவுள் பற்றிய கண்ணோட்டம், மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தமிழர் வாழ்வியலில் வடமொழி மரபுகள் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தின எனப் பல்வேறு கண்ணோட்டங்களையும் காணமுடிகிறது. இவ்வாறு தமிழர் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிக்கும் முருகன் வழிபாடு சங்ககாலத்திலிருந்து இன்றளவும் சிறப்புற்று விளங்குகிறது.

 

உசாத்துணை

நா . வானமாமலை, (2017), சென்னை, தமிழர் பண்பாடும் தத்துவமும், தடாகம் பதிப்பகம்.

 

 

A.K. Ramanujan and Norman Cutler, (1999), New Delhi, The Collected Essays of A. K. Ramanujan, Oxford UP.

 

Fred Clothey, (2005), New Delhi, The Many Faces of Murukaṉ: The History and Meaning of a South Indian God, Manoharlal Publications.

 

 

John Ralston Marr, (1985), Madras, The Eight Anthologies: A Study in Early Tamil Literature, Institute of Asian Studies.

 

Kamil Zvelebil, (1981), Madras,  Tiru Murugan, International Institute of Tamil Studies.

 



[1] அகநானூறு 22, 272, ஐங்குறுநூறு 245, குறுந்தொகை 362, நற்றிணை 34, 82

[2] அகநானூறு 22, 98, 272, நற்றிணை 173

[3] அகநானூறு 98, குறுந்தொகை 53, 111, 360, நற்றிணை 34

[4] அகநானூறு 22, 242, 292, நற்றிணை 47

[5] நற்றிணை 34

[6] நற்றிணை268

[7] குறுந்தொகை 52

[8] அகநானூறு 98

[9] நற்றிணை 82

[10] பரிபாடல் 5: 22-54

[11] திருமுருகாற்றுப்படை 256-257

[12] திருமுருகாற்றுப்படை 255

[13] பரிபாடல் 8:69

[14] பரிபாடல் 9:9

[15] திருமுருகாற்றுப்படை  83-103, பரிபாடல் 5:11

[16] அகநானூறு 59

[17] பரிபாடல் 5: 6-10

[18] பரிபாடல் 5: 58-65

[19] பரிபாடல் 5:15

[20] பரிபாடல் 8: 106-08 

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன நாடக மொழியாக்கம்

 

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன நாடக மொழியாக்கம்

 

மு. மகாலிங்கம்

 

தொடக்கம்

 

நாட்டின் அகத்துள் நிகழ்கின்ற நிகழ்வுகளைப் புனைவியல் பாங்கோடு பாத்திரங்களின் வழியாக ஏற்றிப் படைக்கும் நிகழ்த்துக்கலை நாடகம் .  நிகழ்வுகளின் தொகுப்பிற்கு ஐம்புலனோட்டம் ஊட்டி ஒழுங்குபட காட்டி பாத்திரங்களை நகர்த்தும் பண்பினது நாடகக்கலை. உணர்வுகளுக்கு எழுத்து , அசைவுகளின் வழி உயிரோட்டம் பெறச்செய்வது என்று பலவாறாகப் பேசப்பட்டும் சித்தரிக்கப்பட்டும் வருகின்றது . இருபது மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வகைமைகளில் நாடகம் அனைவராலும் விரும்பப்பட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது . தொடக்கத்தில் சபாக்கள் மூலம் நாடகங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன . ஆதிகாலத்தில் சயந்தம் , முறுவல் , செயற்றியம் , மதிவாணர் , நாடகத்தமிழ் , இந்திர காளியம் போன்ற இசை , நாடகத்தமிழ் இலக்கண நூல்கள் இருந்துள்ளன. நாடகக் கலைஞர்களான பரிதிமாற் கலைஞர் , பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் நாடக ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளனர் . இத்தகைய சிறப்புற்ற நாடகத்துறையனூடே மாற்றுத்திறனாளிகளுள் பார்வைக் குறைபாடுடையவர்களைப் புகுத்தி , அவர்களை நாடக இலக்கியங்களுள்ளும் , நாடக மொழியாக்கத் துறையினுள்ளும் பயணப்படவைப்பதற்கான அவசியத்தையும் , அதனால் ஏற்படும் சிக்கல்களையும் உணர்த்துவதாக இவ்வாய்வு அமைகிறது . பம்மல் சம்பந்த முதலியார் நடிகனுக்கான தகுதிகளை கூறுமிடத்து அங்ககீனம் உடையவர்கள் ஏற்புடையவர்கள் அல்ல என்கிறார் . இதுவே ஆய்வுச் சிக்கலின் தொடக்கப்புள்ளியாக அமைகின்றது . கட்டுக்கடங்காத ஆர்வம் இருக்கும் பொழுது புலன் ஒரு பொருட்டில்லை இதன்வழி ஆர்வமே முதன்மை என்பது புலப்படுகிறது . ஒரு நடிகன் உருவாக , குணாதிசியப்படை வசனநடை , உடல்மொழிநடை கைவர பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன .

 

 

நாடகம் என்பது வெறுமனே மேடை நடிப்பு சார்ந்ததாக மட்டும் பார்க்காமல் ஆளுமையின்

வெளிப்பாடு என மற்றொரு கோணத்தில் நோக்கும் பொழுது பார்வைத்திறன்

குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நடிப்பும் அது சார்ந்த பயிற்று முறைகளும்

தேவைப்படுகின்றது . நாடகம் இன்றைய சமூகத்தின் மாற்றம் சார்

கருவியாக விளங்குவதால் பார்வை குறைபாடுடையோர் நாடகத்தினூடே

பயிற்சிபெற்று பயணிப்பது அவசியம் . இத்தகைய பார்வைகுறைபாடுடையோர்களை

நாடகத்தினுள் பயணப்பட வைத்து ஆளுமையை வளர்த்தெடுப்பதே நோக்கமாக அமைகிறது .

இதுவரை நிலையாக இயங்கி வருகின்ற மொழிக்கட்டமைப்பினை பயிற்றுவிப்பது சவால்

நிறைந்த ஒன்று . இவர்களுக்கென தனித்துவம் வாய்ந்த மொழியாக்கம் தேவைப்படுகிறது .

 

கலையும் மாற்றுத்திறனாளிகளும்

இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது ஏதோ ஒரு

வடிவில் கலையானது அகத்துள் பொருந்தி இருக்கும் . அவர்களுள் சிலர் தன்னுள் இருக்கும்

கலையையும் கண்டறிந்து தேர்ச்சி பெற்று அதில் வளர்ச்சி அடைகின்றனர் . இன்னும் சிலர் அந்த கலையையே தன் வாழ்வாக எடுத்துக் கொண்டு பயணிக்கின்றனர் . எல்லோருக்கும் எல்லா கலைகளும் வாய்க்கப் பெறுவதில்லை . ஒரு நபர் பிறக்கும் சூழல் , வாழ்வியல் பின்புலம் , வளர்ப்பு முறை ஆகியவற்றை பொருத்தே தேர்ச்சி என்பது முடிவாகிறது . பரவலாக நாம் பார்த்தோமானால் பல பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு

இசைக்கலை கைவந்த ஒன்றாக இருக்கிறது . இதற்கு காரணம் அனேக மாற்றுத்திறனாளிகள்

படித்த பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் இந்த சூழல் இருந்ததே . சில பார்வை குறைபாடுடைய

மாற்றுத்திறனாளிகள் நாம் பார்த்த வரையில் பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுள் பார்வை

குறைபாடுடையோர் . பார்வையற்றோர் என்று இருவகையினர் உள்ளனர் . இவர்களுக்குள்ளும்

தனித்தனி வேறுபட்ட நாடக மொழியாக்கம் தேவைப்படுகிறது . முகர்தல் , கேட்டல் , தொடுவுணர்வு ஆகிய தொழிற்ப் பண்புகளின் வழியாகவே பயிற்றுவிக்க முடியும் என்பதால் அதற்கேற்ப மேடைகளும் சூழல்களும் அமைக்கப்படவேண்டும் . இக்காலத்துப் பார்வைக்

குறைபாடுடையோருக்கான கற்பித்தல் ஏனையோரைக் காட்டிலும் எளிமையானது .

ஆனால் பிறவிப் பார்வையற்றோருக்குப் பயிற்றுவிப்பது என்பதே சவால் மிகுந்தது .

 

 

எனவே அவர்களை மையமாக வைத்து இவ்வாய்வானது அமைகின்றது . நடிப்பிலும் அறிவுடையவர்களாக இருக்கின்றனர் . உதாரணமாக சென்னையில் சூளைமேடு " பகுதியில் இருக்கும் தமிழ் ஆசிரியரான முருகராஜன் என்பவர் இசையிலும் நடிப்பிலும் சிறந்து விளங்குகின்றார் . இவர் முழு பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி .

இவரைப் போலவே பல ஆர்வமுடைய , சரியான களம் அமையாத மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர் . பலர் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இருக்கின்றனர் . " குக்கூ " படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிகருக்கு நண்பனாக நடித்த மாற்றுத்திறனாளிக்கு பின்குரல் அளித்தவர்

ஒரு பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியே . மேலும் " முருகபூபதி அவர்களின் மணல் மகுடி எனும் நாடக அமைப்பிலும் ஒரு பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி கலைஞர் நடித்துக் கொண்டுள்ளார் .

நாடகம் மற்றும் நாடக இலக்கியங்களில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் .பொதுவாக தமிழ் இலக்கியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறித்த பதிவுகள் குறைவே அதிலும் குறிப்பாக பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்த பதிவுகளானது ஆங்காங்கே மிக சொற்பமாகத்தான் காணப்படுகின்றன . குறிப்பிட்டு , இலக்கியங்களில் காணப்படுகின்ற பார்வைகுறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட வேண்டுமென்றால் ,

இரட்டைப்புலவர்கள் - அந்தகக்கவி வீரராகவர் - தசரதனால் அம்பெய்திக் கொல்லப்பட்ட ஸ்ராவனனது பெற்றோர்கள் . * திருதராட்டிரன் ஆகியோர்களை சொல்லலாம் இவர்கள் தவிர சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியம் வரை ஆங்காங்கே பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்து உவமைகள் காணலாகின்றன .

இக்கால இலக்கிய காலகட்டத்தில் இருந்துதான் பெருவாரியாக பொதுவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் ஆனது வளர்ச்சி பெற தொடங்குகின்றது . லாசாராவின் பச்சை கனவுகள் , பசுவையாவின் விகாசம் , எஸ்.ராமகிருஷ்ணனின் கொஞ்சம் அதிக இனிப்பு ஆகிய சிறு கதைகள் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை தலைமை கதாமாந்தர்களாக காட்சிப்படுத்தியுள்ளது . சிறுகதைகள் இவை தவிர நாவல்கள் சிறுகதைகள் ஆகிய இலக்கிய வகைமைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே கதையோட்டத்தில் துணைப் பாத்திரங்களாக காட்சிப்படுத்துகிறது .

தமிழ் இலக்கியச்சூழலில் பொதுவகைமையில் இப்படி இருக்க நாடக இலக்கியம் சார்ந்த வகைமையில் நாம் பார்க்கும் பொழுது இதைவிடவும் மிகமிக சொற்பமான , பதிவிடங்களே காணப்படுகின்றன . முருகபூபதி அவர்களின் குற்றம் பற்றிய உடல் என்னும் நாடகமானது பார்வை மாற்றுத்திறனாளியின் வாழ்க்கைச் சூழலை எடுத்துரைப்பதாக கதையோட்டம் சமைந்துள்ளது . இப்படி நாம் விரல் விட்டு எண்ணிவிட முடிந்த அளவில்தான் இவர்களுக்கான பதிவுகள் இலக்கியங்களில் இருக்கின்றன . பார்வைமாற்றுத்திறனாளியின் இலக்கிய பதிவிடங்கள் இலக்கியச் சூழலில் இப்படி இருக்க நாடகம் , நாடக செயல்பாடுகளுள்

 

பார்வைமாற்றுத்திறனாளிகளின் இயக்கமானது குறைவு பட்டுத்தான் இருக்கின்றது .

இந்த நிலைக்குக் காரணம் பார்வை என்ற காட்சிசார் கூறானது அவர்களிடம் தொய்வாக இருப்பதே . காட்சிப்புலன் இல்லாமல் கூட நாடகம் நடிக்க முடியும் என்ற உண்மையை இன்னும் இங்கு அனேகர் விளங்கிக் கொள்ளவில்லை என்பது சற்றுபின்தங்கிய நிலையே . பார்வை மாற்றுத்திறனாளிகளும் நாடக செயல்பாட்டினுள் பயணிக்க வேண்டும் . இப்படி வலியுறுத்தப்படுவதன் நோக்கம் , கலை என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனால் மட்டுமல்ல நாடக கலைப்பயிற்சியின் மூலம் ஆளுமை வளரும் . நடிப்புக்கலை கைக்கூடும் என்பதே உண்மை மேலே சொன்னபடி நாடக இலக்கியங்களிலும் நாடக செயல்பாடுகளிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் நிகழ் இடமானது பின்தங்கி இருக்கின்ற இந்த சூழலில் , நாடக செயல்பாடுகளுக்குள்ளும் , நாடக இலக்கியங்களுக்குள்ளும் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் நடையெடுப்பானது அதிகப்படவேண்டும் . அதற்கு பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கென்று நடிப்பியல் சூழலானது கட்டமைக்கப்பட வேண்டும் .இனி , பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான நாடக செயல்பாடுகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட வேண்டிய நாடகக்கூறுகளின் கட்டமைப்புகள் முறைசார் நடிப்பு மற்றும் பதிலி உறுப்புகோட்பாடு பார்வைமாற்றுத்திறானாளிகளுக்குரிய பிரத்தியேகமான புராசீனிய நாடக மேடை கலை கட்டமைப்பாக்கம் தற்போதைய தமிழ்ச்சூழலில் நவீன நாடகத்தின் போக்கு நிலை குறித்து இனி காண்போம் .

 

பதிலிஉறுப்பு கதையாடல் கோட்பாடு

பதிலிஉறுப்பு கதையாடல் என்ற இந்தக் கோட்பாடானது இலக்கியங்களிலும் திரைப் படங்களிலும் மற்றும் நாடகங்களிலும் மேலும் இவைகள் சார்ந்த கூறுகளிலும் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரைக்கின்றது . இந்தக் கோட்பாடானது கட்டுகின்ற மிக முக்கியமான பிரச்சினை பண்பாடுகளை மையமிட்டது . ஒவ்வொரு பண்பாட்டிலும் வெவ்வேறு தன்மையுடைய மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர் . அவர்களை இயல்புநிலையில் வைப்பதில்லை . ஒட்டுமொத்த நிலையில் உச்சமாகவோ அல்லது ஒட்டுமொத்த நிலையில் கீழ்ப்படுத்தியோ விடுகின்றனர் என்ற பிரச்சனைகளை இக்கோட்பாடானது மையமிட்டு பேசுகிறது .

 

இதனால் வரலாற்று தொடக்க காலகட்டத்திலிருந்தே இவர்களை இயல்பான நிலையில் இருக்கவிடாமல் வேறு ஒரு கண்ணோட்டத்தில் வைத்திருப்பதை இக்கோட்பாடானது விவரிக்கின்றது . மாற்றுத்திறனாளிகளை விசேஷமான சிறப்பு அந்தஸ்து நிலையில் வைத்திருக்கும் சூழல் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களிலும் சமூக விழிப்புணர்வு சார்ந்த நட்டிவடிக்கைகளிலும் மட்டுமல்லாமல் இலக்கியங்களிலும் பல்லூடகங்களிலும் இத்தகைய சூழல் நிலவிவருவதை இந்தக் கோட்பாடானது பேசுகிறது .

மாற்றுத்திறனாளிகள் என்ற பதம் கேட்டவுடனே நம்மனதிற்குள் விரியும் வெண்கோள் தாங்கி தடுமாற்றத்தோடு நடக்கும் படிமக்காட்சியினை மாற்றி மாற்றி இலக்கியம் மற்றும் பல்ஊடகங்களின் வழியான செயல்பாடுகளை விரித்துரைப்பது உறுப்புபதலி கதையாடலாம் . விழிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வியல் சூழலைப் போல அதே விழிம்புநிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழல் அப்படியில்லை இலக்கியங்களும் ஊடகங்களும் எவ்வாறு அவர்களை காட்சிப்படுத்துகின்ற தோ அப்படியே எல்லோரிடத்திலும் மாற்றுத்தினாளிகள் குறித்த கருத்தியல் செயல்பாடுகளானது படிமங்களாக அனைவர் மனதிலும் பதிந்து விடுகிறது . இந்நிலை மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் .

இந்த மாற்றம்சார் செயல்பாட்டினை இலக்கியங்களும் சமூகத்தோடு நேரடித் தொடர்புடைய ஊடகங்களும் மேற்கொள்ள வேண்டும் . பிராஸ்த்திசிஸ் ( உறுப்புப்பதிலி ) என்பது செயற்கைகால் ( பிராஸ்தடிக் லெக் ) என்பதைக் குறிக்கும் சொல்லாகும் . இயற்கை காலுக்குப் பதிலாக செயற்கைக் கால் கொண்டு இயங்குதலை இது குறிக்கிறது . சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று என்னும் நிலையே இந்த பதிலிஉறுப்பு கதையாடல் என்ற கோட்பாட்டின் மையமாய் இருக்கிறது . நாடக செயல்பாடுகளில் முறைசார் நடிப்பு என்ற முறையோடு இந்த பதிலி உறுப்பு கதையாடல் கோட்பாட்டினை ஒப்பிடும் பொழுது வரும் பதில் நிலை ஒன்றுக்கு பதிலாக மற்றொன்று என்பதே . தியேட்டர் என்பது ஐம்புலன்களின் கூட்டு நடவடிக்கைதானேயொழிய ஒருபுலனின் முன்னுரிமை செயல்பாடில்லை .

பார்வை இல்லாத நிலையில் கேட்டலின் மூலம் , தொடுதலின் மூலம் , இயக்க நகர்வின் மூலம் தியேட்டர் செயல்பாடுகளை மேற்கொள்ளமுடியும் . சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பதிலி உறுப்பு கதையாடல் கோட்பாடானது கீழ்க்கண்ட செயல்பாடுகளை நிதர்சனமாக வலியுறுத்துவதைக் காணமுடியும் . கண்ணுக்குப் பதிலாக காது , கண்ணுக்குப் பதிலாக கை , கால்கள் , கண்களுக்குப் பதிலாக மூக்கு மற்றும் வாய் இந்த நிலையே முறைசார் நடிப்பும் பதில் உறுப்பு என்ற இந்தக் கோட்பாடும் ஒருங்கிணையும் பொழுது வெளிப்படும் பதிலி நிலையாகும் .

 

தமிழ் நவீன நாடகச் சூழல்

விளையாட்டுக்களின் அடிப்படையிலும் சடங்குகளின் அடிப்படையிலும் தோற்றம் கண்டு தொடக்கத்தில் வளர்ச்சியடைந்து வந்த நாடகக்கலையானது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பரிணாம வளர்ச்சியினை அடைந்து வந்துள்ளன . தமிழ் இலக்கியம் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆறுவகைப் பிரிவுகளில் , காப்பியக் காலகட்டத்திலும் ,பக்திக் காலக்கட்டத்திலும் , சிற்றிலக்கிய காலக்கட்டத்திலும் நாடகங்களின் வளர்ச்சி நிலைபடிப்படியாக வளர்ந்து வந்துள்ளன .19 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பின் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் நாடகக்கலையில் ஒருபெரும் மாற்றம் ஏற்படுகின்றது . இதற்குப்பின் தமிழகச் சூழலிலும் , இந்தியச் சூழலிலும் உலகளாவிய நாடக பாணிகள் பின்பற்றப்படுகின்றன . இன்றளவில் தமிழ் நவீன நாடக செயல்பாடுகளானது புரசீனிய பாணியை பின்பற்றி வருகின்றது என்பது நாடகக் கூறுகளின் படிநிலை வளர்ச்சி என்ற இயலின் வழி புலனாகின்றது . மேடை , திரை , சரங்கம் , நடிப்பு , நிகழ்த்துதல் போன்ற நாடகக்கூறுகள் காலச்சூழலுக்கேற்ப மாற்றம்

அடைந்துவிட்டன . தொழில்நுட்ப பெருக்கத்தின் விளைவாக அதிநவீன செயல்பாடுகள் பொருந்திய கருவிகள் இன்றளவு நிகழ்த்தப்பட்டு வருகின்ற நாடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன .

இத்தகைய வளர்ச்சியினை நாடகக்கலைச் சூழல் அடைந்தபோதிலும் பார்வை

குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான நடிப்பியல் சூழலானது குறைபட்டுத்தான்

இருக்கின்றது . இதற்குக் காரணம் நாடகக் கலை உலகில் பார்வை குறைபாடுடைய

மாற்றுத்திறனாளிகளுக்கான நடிப்புத்தளம் கட்டமைக்கப்படாததே . நவீன நாடக மொழியாக்கம் என்ற இயலில் சொல்லப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான

நடிப்புசார் கட்டமைப்புகளானது முறைப்படுத்தப்பட்டால் பார்வைகுறைபாடுடைய

மாற்றுத்திறனாளிகளாலும் எல்லோரைப் போலவும் நடிக்க முடியும் .

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றபடியான நாடக இயக்குநர்களும் நடிப்பியல் சூழலில்

இருந்தார்களானால் அவர்களுக்கு ஏற்படும் பெருவாரியான சிக்கல்களை தவிர்க்க முடியும் .

அரங்க நடவடிக்கைகளில் ஐம்புலன் முக்கியம் என்றாலும்கூட ஒருபுலன் குறைவுபட்டாலும்

நடிக்க முடியாதென்பதில்லை . எந்தபுலன் குறைவுபட்டிருக்கிறதோ அதற்கேற்றபடியான

கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டால் நடிப்புச் சிக்கல்களை தவிர்க்க முடியும் .

ஏற்கனவே உள்ள நாடகக் கூறுகளில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளால்

நடிக்க முடியும் என்றாலும் கூட சில நேரங்களில் அவர்களுக்கேற்ற சிறப்பு

கட்டமைப்புகள் முக்கியமானதாக இருக்கின்றது . எனவே பார்வைகுறைபாடுடைய

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றபடியான நடிப்பதற்கான சூழல் அமைந்தால் நடிப்புலகில்

அவர்களாலும் எல்லோரைப் போலவும் பயணப்படமுடியும் . 

குறிப்பு: திருத்தப்பட்ட பதிவு பின்னர் வெளியிடப்படும்.