Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Friday, 19 May 2017

சக்திவேலும் பக்ருதீனும் - நூல் அறிமுகம்

(அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தில்  (18/12/2016) அறிமுகப்படுத்தப்பட்டது)

ஆசிரியர் குறிப்பு
இது சினிமாவிற்காக எழுதப்பட்ட கதையாகும்; உலகப்படங்களின் தோரணையில் இந்தக்கதையில் காட்சி நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த செலவில் இதை ஒரு தரமானத் திரைப்படமாக உருவாக்கிவிடலாம்.
ஆர்வமுள்ளவர்கள்
சிவசேகர்,
நாவலாசிரியர்,
9962416606

முகநூலிலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு:
தன் கண்களில் வெளிச்சம் இல்லாத பல பேரை உறுப்பினராகக் கொண்ட அந்தகக்கவி பேரவை இலக்கிய அமைப்பு என் மீது வெளிச்சத்தைப் பரப்பி என்னையும், என் படைப்பையும் அறிமுகப்படுத்தியதற்காக தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.


நூல் அறிமுகம்:
இந்தியா, பாகிஸ்தான் எல்லைச் சண்டையில், குண்டுக்காயம் அடைந்த மேஜரை கேம்பில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு, இராணுவ வீரன் சக்திவேல் தலையில் விடிகிறது.

சக்திவேல் மேஜரை தோளில் சுமந்து கொண்டு கேம்பை நோக்கி வேகநடை போடுகிறான். பயணம் நீள்கிறது. பாதை மாறுகிறது. பகைவர்களின் குண்டுகள் வேறு துரத்துகிறது.

களைப்படைகிறான் சக்திவேல். மேஜரை தனியேவிட்டு தான்மட்டும் தப்பிச் செல்ல எண்ணுகிறான். பிறகு அதுவும் தவறென்று நினைத்து, அவரை சுட்டுக் கொன்றுவிட தீர்மானிக்கிறான்.

அதை உணர்ந்துகொண்ட மேஜர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார்.

சக்திவேல் மேஜரின் முடிவால், அதிக வேதனை அடைகிறான். பின் மனதைத் தேற்றிக்கொண்டு கேம்பை நோக்கி நடக்கும்போது, வழியில் புதைந்திருந்த கண்ணி வெடியை மிதித்துவிட்டு, காலை எடுக்க முடியாமல் பயந்து நிற்கிறான்.

வெகுநேரம் வெடியின் மீது நின்று தாக்குப்பிடிக்கிறான். பின் இதில் எந்த பலனும் இல்லை என்று உணர்ந்து வெடியிலிருந்து காலை எடுத்து சாக முனைகிறான்.

அந்தக்கணம் பாகிஸ்தான் சிப்பாய் பக்ரூதீன் Hands-up என்று கூவி சக்திவேலை விட தன் துப்பாக்கியால் குறிவைக்கிறான்.

அப்போது சக்திவேல் பக்ரூதீனிடம் தான் கண்ணிவெடிமீது நிற்பதை கூறுகிறான். சக்தியின் நிலையைப் பார்த்து பக்ரூவிற்கு இரக்கம் பிறக்கிறது.

பக்ரூ தனது சாமர்த்தியத்தால் சக்திவேலை கண்ணிவெடியிலிருந்து காப்பாற்றுகிறான். அதனால் இருவரும் நண்பர்களாகின்றனர். காடுகளில் சுற்றி வருகின்றனர். அப்போது தனது இராணுவக்குழுவால் சக்திவேலும், பக்ரூதினும் கைது செய்யப்படுகின்றனர்.

எல்லைப்போர் முடிவுக்கு வருகிறது. அப்போது சக்திவேலின் இராணுவக்குழுவின் தலைவன் சர்மா சக்திவேலின் கையால் பக்ரூதீன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று ஆர்டர் போடுகிறான்.

சக்திவேல் சுடமறுக்கவே, பக்ரூதீனை சர்மா சுட்டுக்கொல்கிறான். பின் சக்திவேலையும் கொல்ல முயல்கிறான்.

அப்போது இடைப்புகுந்து தடுத்த அதிகாரியான இல்தாரை, சர்மாவை நிராயுதபாணியாக்குகிறான்.

சக்திவேல் அவன் முன் ஆயுதத்தை நீட்டி, பக்ரூவை கொலை செய்ததற்காக பயங்கரமாகத் திட்டுகிறான். சக்திவேல் சர்மாவை சுட்டுக்கொல்லட்டும் என்று அந்தக்குழு நினைக்கிறது.


ஆனால் சக்திவேல், தனக்கு உயிர்க்கொடுத்த பக்ரூ இல்லாத உலகத்தில், அவன் கொடுத்த உயிரோடு தான் வாழ மாட்டேன் என்று, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறான்.

முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும் - நூல் அறிமுகம்

(அந்தகக்கவிப் பேரவையின் நான்காம் கூட்டத்தில்  (27/11/2016) திருமதி. சரோஜா சகாதேவன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது)

நூல் அறிமுகம்:
அனைவருக்கும் வணக்கம்

அந்தகக்கவி பேரவையின் நோக்கம் இதன் செயல்பாடு ஆகியவற்றுக்காக முதலில் என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய புத்தக மதிப்புரையில் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போவது “முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும்” என்னும் வரலாற்று நாவல். இது குழந்தைகள் இலக்கியத்துக்கானது. இந்நூல் இரண்டு மையக்கருத்துகளைக் கொண்டது.

ஐந்து வயதில் தாயை இழந்து எட்டு வயதில் ஊருக்குள் ஏற்பட்ட தீ  விபத்தால் தன்னுடைய வீட்டையும் இழந்து உறவினர்களின் உதாசீனமும், வறுமையும் துரத்த தன் குடும்பத்தாரோடு ஊரைவிட்டு வெளியேறுகிறான். அடுத்த இருப்பிடம் தேடிப்புறப்படும் நேரத்தில் மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் சிறுவனின் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றுகிறது.

“இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. அப்படி வர நேர்ந்தால் நான் ஓரு இன்ஜீனியர் துரையாக  கோட்டும் சூட்டும் அணிந்து தலையில் தொப்பி காலில் ஷீவுடன் ஜீப்பில்தான் ஊருக்குள் நுழைவேன்” என்று உறுதி கொள்கிறான். பல்வேறு இடர்பாடுகளைக் களைந்து அந்த சிறுவனின் வைராக்கியம் நிறைவேறுகிறது.

அடுத்து, அச்சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அவனது ஆசிரியர் ‘முட்டையை செக்குத்தாக வைத்து யானையே மிதித்தாலும் உடையாது’ என்று கூறினார்.

ஆசிரியர் கூறியச் செய்தி  சிறுவனின் மூளையை முடுக்கி விடுகிறது. முட்டையின் பலத்துக்கான காரணம் எதுவாக இருக்க முடியும்?

தீவிரமாக யோசிக்கிறான். முட்டையின் ஓடா? இல்லை. காற்றறையா? இல்லை. உள் இருக்கும் திரவத்தின்  சக்தியா? அதுவும் இருக்காது.  அப்படியானால் முட்டையின் பலத்துக்கான காரணம் என்ன? தீவிரமாக நீண்ட நாட்கள் யோசித்துக்கொண்டே இருந்தான்.

தினம்  தினம் வீட்டில் உள்ள முட்டைகளை ஆசிரியர் கூறிய படி உள்ளங்கையில் செக்குத்தாக நிறுத்தி, உடைத்து உடைத்துப் பார்க்கிறான். கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான்.
முட்டையின் பலத்துக்கான காரணம் அதனுடைய வடிவ அமைப்புதான் என்று முடிவு செய்கிறான்.

முட்டையின் வடிவத்தைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காததால் முட்டையின் வடிவத்தை அதன்  வளைக்கோட்டைத்தானே கண்டுபிடிக்கிறான்.

பல  வருட உழைப்பின் பயனாக முட்டையின் வளைகோட்டைக் கணித ரீதியில் கண்டறிந்து அதற்கு எக்லிப்ஸ் (Egglipse) என்று பெயரிடுகிறான். மேலும் மேலும் ஆராய்ச்சி தொடர்ந்து முட்டையின் வளைகோடு குறித்த அவனது கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டைப் பெறுகிறது.

இவ்விரண்டு மையக்கருத்துகளையும் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் சிறுவன் ஊரைவிட்டு மாட்டு வண்டியில் வெளியேறுவதில் தொடங்கி அவனது வைராக்கியம் நிறைவேறும் விதமாக ஒரு இன்ஜீனியராக ஜீப்பில் அந்த ஊருக்குள் நுழைவதாக முடிகிறது.

                இந்நூல் சிறுவர்களுக்குத் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத உத்வேகத்தையும், உழைப்பின் மேன்மையையும் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் விதத்தையும் புதிய கண்டுபிடிப்புக்கானத் தேடலையும் உருவாக்கும் என்பதையும்  சந்தேகம் இல்லை.


                பெரியவர்கள்  இந்நூலை வாங்கிப் படிப்பதுடன் சிறுவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன்.