Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, 14 September 2024

கண் தெரியாதவனும், கடவுளின் மனைவியும்.

கண் தெரியாதவனும், கடவுளின் மனைவியும்.

முனைவர். இரா. பெரியதுரை.

வற்றாத உயிர் நதி என்று சொல்லக்கூடிய தாமிரபரணி நதி, வயல் வளர்த்து வயிறு நிரப்பி உயிர்ப்பிக்கும் வேலையோடு தன் முலைப் பாலை நிறுத்திக் கொள்ளாமல், ஆன்மாவை வளப்படுத்தும் ஆலயங்கள் பல கொண்டு நோய் நீக்கும் மூலிகைகள் பல தந்து, திருநெல்வேலி சீமையை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வைத்திருப்பதை அறியாதவர் யார் இருக்க முடியும்? அந்த நதிக்கரையில் தான் கிராமமும் இல்லாமல், நகரமும் இல்லாமல், ரெண்டும் கெட்டான் நிலையில் அமைந்தது தான் எங்கள் ஊர் சேரன்மகாதேவி. இங்கே இயற்கையின் எழில் கொலுவிருக்கும் அமைதியும் உண்டு, செயற்கையின் ஆர்ப்பாட்டம் தடாதடக்கும் இரைச்சலும் உண்டு. அந்த ஊரின் ஆற்றங்கரையில் சாந்தமே உருவான பூங்குழலி அம்மன் கோவில் ஒன்று உண்டு. எந்த காலத்தில் யார் கட்டினார்களோ? தெரியாது. மார்த்தாண்ட வர்மன் கட்டியதாகவும்? சிவனும் உமையாளும் தீர்த்தமாடி இளைப்பாறியதாகவும், அக்ரஹாரத்து ஐயன்மார்களும், எங்கள் ஊர் பெருசுகளும் சொல்கிறார்கள். அம்பாள் இருக்கிறார்களோ இல்லையோ அது எனக்கு தெரியாது. ஆனால் அந்தக் கோயிலில் எப்போதும் அமைதி இருந்தது. அந்த இடம் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாய் எப்போதும் இருந்திருக்கிறது. ஆற்றை நோக்கியபடி வலது புறமும் இடது புறமும் இரண்டு பெரிய கல் மண்டபங்கள், மிதமான வேகத்தில் ஒருவர் ஆலயத்தை சுற்றி ஒரு வளையம் வருவது என்றால்; குறைந்தது அரை மணி நேரம் தேவைப்படும்.. கோயிலின் வெளிப்பிரகாரம் எவ்வளவு சுற்றளவு இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.. மருத மரங்கள் நிறைந்த சோலை, நூற்றுக்கணக்கிலான தென்னை மரங்களைக் கொண்ட தோப்பு, இப்போது அந்த அளவிலான தென்னை மரங்கள் அங்கே இல்லை. காற்றில் நறுமணத்தை உலாவ விடும் தாழை மலர் பண்ணைகள், தாளை அடிப்பண்ணை பக்கத்தில் பாம்புகள் அதிகம் இருப்பதாக என் ஆச்சி அடிக்கடி சொல்லி என்னை அச்சுறுத்துக் கொண்டே இருப்பாள். ஆனாலும் நான் அங்கே போவதை நிறுத்திக் கொள்ளவில்லை. அர்ச்சனை பூக்களுக்காக பல மலர் செடிகளை கொண்ட ஒரு நந்தவனமும் அங்கே இருந்தது. கோயிலின் நிர்வாக செலவுக்காக நிறைய கனவான்கள் தங்கள் வயல் காடுகளையும் கோயிலுக்காக எழுதி வைத்திருந்தார்கள்.. அந்த அம்பாளுக்கு மூன்று கால பூஜை பாப்பா ஐயர் வாரிசுகளால் இன்று வரை எந்த சிக்கல்களும் இல்லாமல் நடந்து வருகின்றன. என் வீட்டில் இருந்து 20 நிமிடம் நடக்கும் தூரத்தில் தான் அந்தக் கோயில் இருக்கிறது... அந்தக் கோயிலுக்கு செல்லும் செம்மண் சாலை இரண்டடி அகலம் தான் இருக்கும். சாலையின் இருபுறமும் இருக்கும் வயல்வெளிகள் கோயிலுக்கு போகும்போதும் வரும்போதும், உடலில் குளுமையை பூசி தான் வழி அனுப்பி வைக்கும்.

மதுரையில் என் கல்லூரி படிப்பை முடித்த நான் வேலையில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த காலம் அது. முதுகலை பட்டதாரி என்ற கௌரவம் மற்ற பார்வை இழந்தவர்களைப் போல ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை முடமாக்கி போட்டு இருந்தது. கடினமான வேலைகளை செய்து பிழைக்கும் மனிதர்களின் துயரமான பொழுதுகளை விட, வேலை எதுவும் கிடைக்காமல் கடந்து செல்லும் திங்கட்கிழமைகள் எவ்வளவு கொடுமையானவை? என்பது அனுபவித்து பார்த்த என் போன்ற பார்வையற்ற இளைஞர்களுக்கு தான் தெரியும். என்ன படித்து என்ன புண்ணியம்? கண்ணோட, காலோட இருக்கிற எங்களுக்கே வேல இல்ல. உனக்கெல்லாம் என்ன வேலை கிடைக்கும்? உங்கள மாதிரி பட்டவங்களுக்கு தான் கவர்மெண்ட் சலுகை கொடுத்து இருக்காங்களே வேலை உனக்கு சீக்கிரம் கிடைச்சிடும்.. இப்படியே அவர் அவர் மன ஓட்டத்திற்கு ஏற்றபடி பேசிக் கழிக்கும் என் ஊர் காரர்கள், ஒருபுறம். இல்லாமை இயலாமை தனிமை மற்றொருபுறம் என்னை தவணை முறையில் கொன்று தின்று கொண்டு தான் இருந்தன. இருந்த போதிலும்; நான் ஏதாவது ஒரு வேலையை பெற்று விட வேண்டும் என்ற என் முயற்சியை கைவிடவே இல்லை. சாப்பாட்டுக்கு எந்த சிக்கலும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஆனால் என் வயதுக்கு ஏற்ற தேவைகள் மட்டும் எனக்கு இருக்கத்தான் செய்தன. இத்தகைய கடினமான தருணங்களில் அமைதியை நான் அதிகமாகவே விரும்பினேன். காலை உணவை முடித்த நான் எனது மதிய உணவு நேரம் வரும் வரையிலும், மாலை தேநீரை முடித்த நான் இருள் கவியும் வரையிலும், அந்தப் பூங்குழலி அம்மன் கோவில் மண்டபத்தில் தான் என் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்தேன்.. அந்த இயற்கையின் அரவணைப்பிலிருந்த என்னால் எனது கற்பனை குதிரையில் ஏறி நீங்கள் யாரும் இதுவரை சென்றிருக்காது எல்லா உலகங்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது.. என்ன துரை ஆபீஸ்க்கு கிளம்பியாச்சா? என்று போகிற போக்கில் சிலர் என்னை கிண்டல் செய்வதும் உண்டு.. சில நேரங்களில் ஆடு மாடு மேய்க்கும் ஆண் பெண் இருபாலருமே என்னிடம் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. அவர்கள் எல்லாம் சொல்வதைப் போல அந்தக் கோயில் மண்டபம் தான் என்னுடைய அலுவலகமாய் மாறிப் போயிருந்தது. இதற்கிடையில், நாசமாய் போன காதல் ஒன்றும் அந்த ஸ்ரீ தேவியோடு எனக்கு ஏற்பட்டிருந்தது.. அவளுக்கும் கண்ணு தெரியாது. மதுரையில் உள்ள பார்வையற்றோருக்கான ஒரு வாசிப்பு மையத்தில்தான் அவள் குரலைக் கேட்டு அதில் நான் மயங்கி விழுந்து இருந்தேன்.. அது மட்டுமா? தம்மடிக்கவும் எங்க ஊரு மிலிட்டரி மாமா எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். மொத்தத்தில் கணிசமான அளவில் நான் கெட்டு குட்டி சுவரா தான் போயிருந்தேன் அந்த காலகட்டத்தில். வெள்ளி செவ்வாய்க்கிழமைகளிலும், மற்ற சிறப்பு நாட்களிலும், பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் அந்த கோவிலுக்கு வருவார்கள் காலையும் மாலையும்.

எனது இல்லாமையை உணர்ந்த எனது அக்காவும் எனது அம்மாவும் சில நேரங்களில் செலவுக்கு பணம் கொடுக்க தான் செய்திருந்தார்கள். பணத்தை வாங்குவதில் எனக்கு கூச்சமாகத்தான் இருந்தது அதே வேளையில், எனது கை பணத்தைப் பெறுவதில் முந்திக் கொள்ளும். எங்கள் கிராமத்தில் உள்ள பலரின் கையில் அலைபேசிகள் இருந்தன. அந்த நாட்களில் என்னுடைய பார்வை இழந்த நண்பர்கள் பலரும் அலைபேசிகளை வைத்திருந்தனர். வேலை வெட்டி இல்லாத நான் அலைபேசியை விரும்புவது பேராசையாகவே பலருக்கு தெரிந்திருக்கலாம். அது சமூகத் தொடர்புக்கு மிகவும் முக்கியம் என்பதை அந்த நாட்களில் என் பெற்றோருக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. நியாயமான எனது அந்த ஆசையையும், வேறு வழி இல்லாமல் பழக்கமில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டு, அவசரமாக உணரும் இயற்கை உவாதைகளை அடக்கிக் கொள்ளும் பார்வையற்றவனாய், அந்த அலைபேசி ஆசையை அடக்கி வைத்துக் கொண்டேன் எனக்குள்.. ஆனால் எனது இந்த விருப்பத்தை நியாயமானது என்று அரசு உணர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.. அரசின் பார்வையற்றோருக்கு அலைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு வழியாக போராடி ஒரு அலைபேசியும் நான் பெற்றுக் கொண்டேன். எனது தனிமையை விரட்டுவதில் அந்த அலைபேசி எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அந்த அலைபேசியை இயக்குவதில் பல சவால்களையும் நான் சந்திக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் பேசும் செயலி செயல்படாமல் நின்று விடும். மற்ற செயலிகளை எப்படி இயக்குவது என்று பார்வை உள்ளவர்களால் எனக்கு கற்றுக் கொடுக்க தெரியவில்லை. பார்வை உள்ளவர்களை விட என் போன்ற பார்வையற்றோரே சிறந்த ஆசான்களா இருந்து அதை இயக்க எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார்கள்..

அது ஒரு தசரா பூசை காலம். 10 நாட்களும் அந்தக் கோயில் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து விழா கோலம் கொண்டிருக்கும். பத்து நாட்களும் அந்த பூங்குழலி அம்பாள் ஒவ்வொரு வெவ்வேறு அவதாரத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருவாள். பலவித நறுமணங்களிலும், பெண்கள் பாடும் பக்தி பாடல்களிலும், அந்தக் கொழுமண்டபம் தெய்வீக உணர்வை பெற்றிருக்கும். அன்றைய நாட்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் சுவை இருக்கின்றனவே அப்பப்பா நினைத்தாலே நாக்கில் நீர் சொட்டும். தினமும் இரவு 12 மணி வரை நடக்கும் மக்களின் ஆர்ப்பரிப்பில் அந்த தாமிரபரணி நதி கூட பாய்ந்து ஓட முடியாமல் திணறித்தான் போகும். அப்படியான ஒரு நாள் மாலை நேரத்தில் தான் பார்வதி எனக்கு அறிமுகம் ஆனால். அவளுக்கு நல்ல வீணை வாசிக்க தெரிந்திருந்தது. நல்ல சரீரத்தோடு பாடும் அவளின் குரல் எனக்கு மிகவும் இனிமையாய் இருந்தது. பூசை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தால். என் மூலமாக அவளுக்கு வேறு சில தேவைகளும் இருந்திருக்கின்றன. அந்த அம்பாள் தான் என்னை அவளுக்கு காட்டியதாகவும் சொல்லியிருந்தால்.. பகல் பொழுதுகளிலும் பார்வதி என்னுடன் பேசுவதற்காக அந்த கோயிலுக்கு வந்து கொண்டே இருந்தாள்.. அவள் அந்தக் கோயிலில் பூசை செய்யும் குருக்களின் உறவுக்கார பெண் என்றும் என்னிடம் அறிமுகம் செய்திருந்தால். டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவள், தசரா விடுமுறைக்காக அவள் இங்கே வந்திருக்கிறாள். அவள் பார்வையற்றோர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாகவும், பார்வையற்றோர் பற்றிய பல தகவல்கள் அவளுக்கு தேவைப்படுவதாகவும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருந்தால். ஆ ஊ என்றால் எல்லோரும் பார்வையற்றோர் பற்றிய ஆய்வு செய்ய கிளம்பி விடுவீர்களா? நீங்கள் பார்வையற்றோரைப் பற்றி ஆய்வு செய்வதால் பார்வையற்றோருக்கு என்ன நடந்து விடப் போகிறது என்றும் நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவளிடம் எந்தப் பதிலும் இருந்திருக்கவில்லை. கடைசியில் பார்வையற்றோரின் பிரச்சினைகள் சமூகத்துக்கு தெரிய வருவது நல்லது தானே என்று நானும் ஒத்துக் கொண்டேன்..

நிச்சயமாக அவள் அழகாகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய புரிதல். ஒருவேளை மற்றவர்களின் பார்வையில் அவள் அழகில்லாதவளாய் இருந்திருக்கலாம் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எப்போதும் அவள் நறுமண மலர்களை அவளின் கூந்தலில் சூடி இருந்தால். கஸ்தூரி மஞ்சளின் வாசனையும், நெற்றியில் அணிந்திருந்த குங்குமத்தின் நறுமணமும், அவளை நான் எனக்குள் சுகமாய் சுவிகரித்துக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவளின் கைகளை மட்டுமே என்னால் தொற்றுணற முடிந்திருந்தது. உடலின் உரசல்களை அவள் தவிர்த்தே வந்து கொண்டிருந்தாள்.. நான் அறிந்த மொழிகளிலே அவள் பேசிய மொழியை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. அது அந்நிய பாசை போலவே இருந்தது. அவள் செயற்கைக்கோல் அலைபேசியையும் வைத்திருந்தால். நான் என்னுடைய அலைபேசியில் அவள் பெயரை பாரு என்று சேமித்து வைத்திருந்தேன். அவள் என்னிடத்தில் அலைபேசியில் பேசும் போது அந்த குரலில் நான் கிறங்கித் தான் போயிருந்தேன். பல நேரங்களில் அவள் ஒரு பெரிய ஞானி போல ஆன்மீகமும் பேசினாள். இந்த பொது சமூகத்தோடு நெருங்கி பழக முடியாமல் அன்னியப்பட்டு தனித்து இருப்பதாகவே அவளை நான் உணர்ந்தேன். பார்வையற்றோர் இருக்கும் பல இடங்களுக்கு நான் அவளை அழைத்துச் சென்றேன். பார்வையற்றோரின் பிரச்சினை குறித்து பல கேள்விகளை பார்வையற்றவர்களிடம் அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பார்வையற்றோரின் பிரச்சினைகளைக் கேட்டு அவள் இறக்கப்படும்போது அவளின் தாய்மையை என்னால் உணர முடிந்தது..

பார்வையற்றோர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும் சிக்கல்கள் நிறைந்தவையாகவே இருந்திருக்கின்றன என்பதை நேரில் காட்டியும் வார்த்தைகளால் விவரித்தும் அவளிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் மதிய வேளை அவள் என்னை ஒரு பெரிய உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று இருந்தால்.. உணவுப் பட்டியல் அடங்கிய ஒரு அட்டை என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அதை என் கையில் வைத்துக் கொண்டு என்னால் என்ன செய்ய முடியும்? இதனை கவனித்த பார்வதி, உங்களுக்கான எழுத்து மொழியில் ஏன் இல்லை என்று அவள் என்னிடத்தில் கேட்டால். நானும் அவளும் ஒரு நாள் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். பெண்கள் இருக்கும் ஒரு இருக்கையில் அவள் அமர்ந்து கொண்டாள். நானும் நின்று கொண்டே வந்தேன். எனக்கு முன்னால் உள்ள ஒரு இறுக்கை காலியாகவே இருந்திருக்கிறது அது எனக்கு எப்படி தெரியும்? அங்கே ஒரு சீட்டு இருக்கிறது என்பதை மட்டும் எல்லோருமே சொல்லிக் கொண்டிருந்தார்கள் யாரும் எனக்கு அதை காட்டவில்லை. எத்தனை முறை பேருந்தின் எண்களை படித்து சொல்ல ஆளில்லாமல் பேருந்துகளை தவற விட்டிருக்கிறேன் என்பதை நான் அவளிடம் சொல்லி இருந்தேன்.

என்னுடைய பள்ளி நண்பன் சொரிமுத்துவும் பார்வதி இடம் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டான். ' அதாவது மேடம், கதையை நல்ல கேளுங்க. நானும் என் மனைவியும் ஒரு நாள் ஜவுளி கடைக்கு போயிருந்தோம். கடையில் இருந்த விற்பனையாளர் அழகான சேலைகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். என் மனைவிக்கோ, எல்லாமே புடிச்சிருந்தது. எதை எடுப்பது என்று அவளும் குழம்பித்தான் போயிருந்தாள். எனக்கோ ரொம்பவும் கடுப்பாகவே இருந்தது அவள் செய்த செயலை பார்த்து. அவளின் கையைப் பிடித்து அழுத்தி எதையாவது ஒன்றை எடுத்து தொலை நேரமாகிறது என்று சொன்னேன். என் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் பிடித்தது என்னுடைய மனைவியின் கையை இல்லை என்று. என் மனைவி கொஞ்சம் விலகி அடுத்த வரிசையில் இருக்கும் சேலையை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள்.. அந்த சைக்கிள் கேப்ல வேறொருவரின் மனைவி என் மனைவி நின்றிருந்த இடத்தில் நின்றிருக்கிறாள்.. நான் என்ன செய்யட்டும்? என் மனைவியால் எனக்கு கொடுக்க முடியாததை வேறொருவரின் மனைவி கொடுத்து விட்டால் " இதைக் கேட்ட பார்வதி விழுந்து விழுந்து சிரித்தாள்.

பார்வை இழந்த தம்பதியர் குழந்தை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டனர். நாங்கள் பெற்ற குழந்தையின் முகத்தைக் கூட எங்களால் பார்க்க முடியாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? மலஜலங்களை எங்கேயாவது கழித்து விடுவார்கள் அதை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது. அதை மூக்கால் மோப்பம் பிடித்துக் கொண்டே, தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டுக்குள் பூச்சி வண்டுகள் வந்துவிடும். அந்தத் தொல்லைகளில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். உங்களைவிட வாழ்ந்து முடிக்க பல மடங்கு சவால்களை நாங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும்.. புதிய புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கின்றன இல்லையா? என்று பார்வதி என்னிடத்தில் கேட்டால். பழைய நிலைமையிலிருந்து எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை என்று நான் அவளிடம் சொன்னேன். என்னுடைய நண்பர்கள் சிலர் பணத்தைக் கையாளுவதில் எழும் சிக்கல்களைப் பற்றியும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை சமாளிப்பதில் சில செயலிகள் இருப்பதையும் அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்.. ஆனால் அவசரக் கதியில் அதை செயல்படுத்த முடியாது என்று நான் அவளிடம் சொன்னேன்.. ஒரு நாள் நானும் பார்வதியும் பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தோம்.. எதிர்பாராத நேரத்தில் திடீரென பெரிய பெரிய மழைத்துளிகள் விழத் தொடங்கியது எல்லோருமே மழையில் இருந்து தப்பிக்க ஆளுக்கு ஒரு திசையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள்.. அங்கே ஊதுபத்தி விற்கக்கூடிய ஒரு இளைஞர் மழையில் நனைந்து கொண்டே நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்தார். ஓடி ஒதுங்க அவர் உடலில் ஆற்றல் இருந்த போதிலும், அவர் அப்படி செய்யவில்லை. பார்வதி அவரை கூர்மையாய் கவனித்து விட்டு அவருக்கு கண் தெரியாது என்பதை எல்லோரிடத்திலும் சொன்னாள். மழையில் நனைய வேண்டும் என்பது அவரின் விருப்பமில்லை. பாவம் அது அவரின் இயலாமை என்று எல்லோருமே அவர்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டனர்.

பொதுவாக தொடர் மழை காலங்கள் பார்வையற்றோரின் இயக்கத்தை முடக்கித்தான் போட்டு விடும். நடக்கும் பாதைகளில் சேரும் சகதியும், குண்டும் குழிகளுமாய் கிடக்கும். இந்த தடைகளை எப்படி எங்களால் கடந்து செல்ல முடியும்? என்று நான் அவளிடம் கேட்டேன். இது இப்படி இருக்க, கிராமங்களில் வசிக்கும் பார்வையற்றோரின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கும். செல்லும் பாதைகளில் நாய்களும் கால்நடைகளும் படுத்து கிடக்கும். அவைகளை தெரியாமல் மிதிக்கும் போது என்ன நடக்கும்? என்பதை யோசித்துப் பார் என்று நான் அவளிடம் சொன்னேன். நான் சொன்னது கொஞ்சம் இன்னும் நிறையவே இருக்கின்றன பிரச்சனைகள். பார்வதி நீ கோடிக்கணக்கான பார்வையற்றோர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டுப் பார். நான் சொல்லாத கோடி பிரச்சனைகளை அவர்கள் உன்னிடம் சொல்வார்கள். படிப்பதில் பிரச்சனை, வேலை கிடைப்பதில் பிரச்சனை, கிடைத்த வேலையை பாதுகாப்பதில் பிரச்சனை, போக்குவரத்தில் பிரச்சனை, பொருளாதாரத்தில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, ஏன்? பார்வையற்றோருக்கு திருமணம் ஆவதில் கூட பிரச்சினை இருக்கிறது. இது மாதிரியான பிரச்சனைகள் எல்லோருக்கும் தானே இருக்கின்றன? பார்வதியின் இடத்தில் திருப்பி கேட்டால். அவளின் கேள்விக்கு நான் ஆழமாக யோசித்து விட்டு, அவளுக்கு செயல்முறை தேர்வின் வழியாகத்தான் புரிய வைக்க முடியும் என்று முடிவு செய்தேன். ஒரு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு என் கையைப் பிடிக்காமல், என்னோடு அவள் நடக்க வேண்டும் இதுதான் அந்த செயல்முறை தேர்வு. அவளும் அதற்கு ஒத்துக்கொண்டால். அவளும் என் கையைப் பிடிக்காமல் நடக்கத்தான் செய்தாள்.. எட்டு மாத குழந்தை ஒன்று எட்டு எடுத்து வைத்து நடப்பது போல.

 

தாழக்கட்டுக்குள் தாளம் தப்பாமல் நடந்த அவளின் கொலுசொலி, தப்பு தாளம் போட்டு தடுமாறத் தொடங்கியது. பத்து நிமிடம் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த ஆற்று மணல் மேடு தட்டி இடறி விழப்போன அவள், என்னை கட்டிப்பிடித்தவளாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டால். அப்போதுதான் நான் முதன் முறையாக அவளின் தளிர் மேனியின் குழு மயையும், அவள் உடலின் நறுமணத்தையும் என் உடலின் நான்கு புலன்களாலும், சுதந்திரமாய் அங்கீகரித்து மயங்கிப் போயிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அவளின் கண்களைக் கட்டி இருந்த திரையை அகற்றிவிட்டு என்னை திரும்பிப் பார்த்தால். நான் அந்த செயல்முறை தேர்வை அவளின் சம்மதத்தோடு தானே நடத்தினேன்? அதனால் அவளால் என்னை ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் என்னிடத்தில் கேட்டால் உங்களின் உரிமையை நிலை நிறுத்திக் கொள்ள சட்டங்கள் இருக்கின்றனவா இல்லையா? நான் அவளுக்கு சொன்னேன், இருக்கின்றன. ஆனால் இல்லை. என்று. என்னை அவள் குழப்பாமல் சொல்லச் சொன்னால். ஏட்டளவில் சட்டங்கள் இருக்கின்றன. செயல் அளவில் சட்டங்கள் இல்லை. குழப்பம் தீர்ந்ததா? என்று அவளிடம் நான் கேட்டேன். அவள் அந்த மயக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை போலும். அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள். கடவுளைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்? என்று அவள் என்னிடத்தில் கேட்டால். கடவுளின் படைப்பே குழப்பம் தானே? ஒருவன் நான் முற்பிறவியில் செய்த பாவம் என்கிறான். ஒரு மதம் சொல்கிறது அவன் செய்த பாவமோ அவன் பெற்றோர் செய்த பாவமோ கிடையாது என்று.

கடவுளிடம் நீ என்ன கேட்க விரும்புகிறாய் என்று அவள் என்னிடத்தில் கேட்டால். ஆமாம் நான் கேட்டதை உடனே அவரு கொடுத்து கிழிச்சிடுவாரு. இருந்தாலும் நீ கேட்கிற நான் சொல்றேன். எல்லா பொறுப்புகளையும் என் கையில கொடுத்துட்டு கடவுள் கொஞ்ச நாளைக்கு கம்முன்னு இருக்கணும். எங்கள மாதிரி கண்ணு தெரியாத ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து பார்க்கணும். உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ணு எப்பவும் என் கூடவே இருக்கணும். இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் அதிர்ந்து தான் போனால். என்னது நானா உன்கூடவா? அது மட்டும் முடியவே முடியாது. ஏன் முடியாது? என்று நான் கேட்டேன். நான் விடல எனக்கு நல்ல கோபம் அவள் மேல. கண்ணு தெரியாதவங்க என்ன உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு ரொம்ப இளக்காரமா தெரியுதா? இவ்வளவு தடைகள் எங்களுக்கு எதிராக இருந்தும் அவற்றைத் தாண்டி நாங்கள் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்? மரியாதையா என்ன கல்யாணம் பண்ற வழிய பாரு. நான் சொன்னதைக் கேட்டு பார்வதியும் கடுப்பாகித்தான் போயிருந்தாள். நிறுத்துடா! நான் யார் தெரியுமா? நீ கோரிக்கை வச்சியே இவ்வளவு நேரம் அந்தக் கடவுளோட பொண்டாட்டிடா நான்..

 என்னது? நீ கடவுளோட பொண்டாட்டியா?

 அந்த நேரத்தில் என்னுடைய அலைபேசி அதிர்வதைக் கேட்டு நான் விழித்துக் கொண்டேன். ஸ்ரீதேவி தான் அழைத்திருக்கிறாள்.. என்னது? நான் கண்டது கனவா? ஸ்ரீதேவி என்னிடத்தில் கேட்டால் என்ன கனவு டா கண்ட?

தொடர்புக்கு,

9442715777

 


  

Friday, 13 September 2024

பனம்பழம்..

பனம்பழம்..

முனைவர். இரா. பெரியதுரை

 நீண்ட பகல் பொழுதையும் குறுகிய இராத்திரியையும் கொண்ட அந்தக் கோடை காலம் தான் எல்லா காலங்களையும் விட எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குளிர்காலத்தின் காலைப் பொழுதுகளும், கோடை காலத்தின் பொன்னந்தி மாலைப்பொழுதுகளும் மனதை ஏதேதோ செய்யும். அதிலும் கிராமத்துக் கோடை காலம் என்பது மகிழ்ச்சிக்கு மட்டுமே இயற்கையால் அருளப்பட்டது என்று தான் நான் சொல்வேன். ஏழைத்தாயைப் போல கையில் எதுவும் இல்லாமல் இலைகளை உதிர்த்து நிற்கும் மரங்கள், கன்னி கழிந்த மணப்பெண்ணை போல; பசுமையை இழந்து துளிர்க்க காத்திருக்கும் புல்வெளிகள், கோடை வெப்பம் தணிக்க இயற்கையின் கொடைகளான பழங்களும் நுங்கு பதினேரும், கால்நடைகளை குளிப்பாட்ட சின்ன ஊரணி, மனிதர்கள் குளிக்க பெரிய ஊரணி, இவைதான் எங்கள் முந்தைய தலைமுறை பெருசுகள் எங்கள் தலைமுறைக்கு விட்டு வைத்த ஆஸ்தி பெட்டகங்கள். இவ்வளவு செய்த என் பாட்டன்மார்கள் குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன? எங்கள் கிராமத்து மேற்கு எல்லையில் தேங்காய் தண்ணீர் கிணறு ஒன்றும் தோண்டி வைத்திருந்தார்கள்.. பெயருக்கு ஏற்றது போல அது தேங்காய் தண்ணீரை போல சுவையான நீர். கோடைகால பூக்களை போல சுப்புத்தாய், வள்ளியம்மா, மாறிச்செல்வி, பொன்னுத்தாயி, சொறி சிரங்கு இசக்கியம்மாள், தொட்டா சிணுங்கி செல்லத்தாயி போன்ற வயசுப் பிள்ளைகளை அந்த சாயங்காலப் நேரத்தில் தான் அந்த கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வரும்போது பார்க்க முடியும். எல்லாப் பருவத்தினருக்கும் தேவையான தேடல்களும், எதிர்பார்ப்புகளும், மகிழ்ச்சியும் அந்தக் கோடை காலத்தில் புதைந்து கிடந்தன.. பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை, அறுவடை முடிந்த விவசாயிகளுக்கு நீண்ட இரண்டு மாத ஓய்வு, கோடைகால கோயில் கொடை விழாக்களுக்கு வந்திருக்கும் உறவுகள், விளையாட்டு, அரட்டை, கடந்த கால சம்பவங்கள்,, முடிந்து போன காதல், துளிர்க்கத் துடிக்கும் காதல், சின்ன சின்ன சண்டைகள் இப்படிப்பட்ட எல்லா நிகழ்வுகளுமே; எங்கள் இழந்த குளம் கிராமத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.

 திருநெல்வேலி நகரத்திலிருந்து 15 மயில் தொலைவில் தான் அந்த கிராமம் அமைந்திருக்கிறது. கிராமத்துக்கான சில அடையாளங்களை இழந்தாலும்; இன்னும் பல அடையாளங்களை இழக்க மறுத்து எங்கள் கிராமம் அமைதிப் போராட்டம் செய்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு 36 ஹெச் அரசு பேருந்து தினமும் நான்கு நேரம் எங்கள் கிராமத்துக்கு வர ஒத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பேருந்தில் தினமும் வரும் ஓட்டுனர் நடத்துனர் யாரா இருந்தாலும் சரி; உறவுக்காரர்களைப் போல மாறிவிடுவார்கள் எங்களுக்கு. எங்கள் ஊர் அம்மா பொண்ணு அக்காவின் அலப்பறையை கூட அந்த அரசு பேருந்தின் ஓட்டுநர்களும் நடத்தினர்களும் ரசிக்க தான் செய்தார்கள். வேகவேகமாய் வயல் வேலைக்கு போய் வரும் அம்மா பொண்ணு அக்கா வேறு சேலை மாற்றி வரும் வரை சண்டை போட்டு அந்தப் பேருந்தை நிறுத்தி வைத்து விடுவாள்.. அம்மா பொண்ண அக்கா குணத்துல தங்கம் என்று தான் சொல்ல வேண்டும். வயல் வேலை இல்லாத நேரத்தில் பீடி சுற்றுவது தான் அந்த கிராமத்தின் பெண்களின் தொழில். அம்மா பொண்ணு அக்கா போன்றவர்கள் அந்த அரசு பேருந்தில் தான் அருகில் இருக்கும் முக்கூடல் கிராம பிடிக் கடையில் பீடியை கொடுத்துவிட்டு, மறுமுறை அதே பேருந்தில் திரும்பியும் வந்து விடுவார்கள் தினமும்.

 அம்மா பொண்ணு அக்கா உயரமாகவும் குண்டாகவும் கொஞ்சம் அழகாகவும் தான் இருப்பாள். பாளையங்கோட்டை நகரத்தில் இருந்த அவளது அத்தை மகனை தான் காதலித்து அவள் திருமணம் செய்து கொண்டிருந்தால்.. கிராமத்து கருவக்காட்டுக்குள்ள வெளிக்கு போய் பழகியிருந்த அம்மா பொண்ணு அக்காவுக்கு அந்தக் கழிவறை அனுபவம் புதியதாக இருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக அடக்கியே வைத்திருந்திருக்கிறாள். கிராமத்துக்கு வந்திருந்த அம்மா பொண்ணாக்கா கணவனோடு போக மாட்டேன் என்று அழுது கொண்டிருந்தாளாம். காரணம் கேட்டதற்கு வெளிக்கிப்போன விவகாரத்தை சொன்னாளாம். நான் சிறுவனாய் இருந்தபோது சில நேரங்களில் என்னையும் கருவ காட்டுக்கு வெளிக்கு போக துணையாக அழைத்துச் சென்றிருக்கிறாள். எனக்கு கண் தெரியாது என்பதை தெரிந்து தான் என்னை? ஒருவேளை அழைத்து போயிருப்பாளோ? நானும் என் கிராமத்திலும் பள்ளியிலும் என்னால் எவ்வளவு முடியுமோ! அந்த அளவிற்கு குறும்புகளை பண்ணத்தான் செய்திருக்கிறேன்.. நான் கொஞ்சம் பெரிய பையனாய் வளர்ந்த பிறகு ஒரு நாள் அம்மா பொண்ணு அக்காவிடம்; அக்கா இப்ப எல்லாம் என்னை வெளிக்கு போக துணைக்கு ஏன் கூப்பிடுவதில்லை என்று கேட்டே விட்டேன். அதற்கு உன்னை எல்லாம் இப்போ நம்ப முடியாத அப்பா என்று அவள் சொல்லிவிட்டால். சில நேரங்களில் நான் பண்ணுகிற சேட்டைகளை பார்த்துவிட்டு, குதிரையை அறிந்து தான் கடவுள் கொம்பை கொடுக்கவில்லை என்றெல்லாம் என் கிராமத்துக்காரர்கள் சொன்னதும் உண்டு. நாச்சியார் மகனுக்கு வால் ஒன்னு தான் முளைக்கவில்லை என்று சிலர் சொல்லியும் இருக்கிறார்கள். என் அம்மா பெயர் நாச்சியார் என் அம்மாவுக்கு அவ்வளவு மரியாதையும் உண்டு எங்கள் கிராமத்தில்.

 செருப்புகள் எதுவும் அணியாமல் வெற்றுக் கால்களோடு ஒரு வவ்வாலை போல அந்த கிராமத்து மண்ணில் நான் வட்டமடித்த நாட்களை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. கால்நடை கழிவுகளும், மனிதக் கழிவுகளும் என் பாதங்களில் வண்ணம் பூசிய நாட்களை நான் கடந்து போக தான் நினைக்கிறேன் ஆனாலும் அந்த நாற்றம் பிடித்த நாட்கள் இன்னும் என் நினைவில் வந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றன. கருவேல முட்கள் என் பிஞ்சு பாதங்களில் காவியம் வரைந்த நாட்களை எப்படி மறக்க முடியும் என்னால்? நான் ஒரு கோடை விடுமுறையில் அந்த கிராமத்துக்கு வந்திருக்கும் போது தான் அந்த துக்ககரமான சம்பவம் நடந்திருந்தது.. அம்மா பொண்ணு அக்காவின் இளம் கணவன் ஒரு மின்சார விபத்தில் இறந்து போயிருந்தார். மழைக்காலங்களில் மின் விளக்குகளை சுற்றி வரும் தும்பிகளை போல சிறகடித்து பறந்து கொண்டிருந்த அம்மா பொன் அக்கா நடைப்பினமாய் முடங்கிப் போனால். எங்கள் கிராமத்துக் காற்றில் கலந்திருந்த அம்மா பொண்ணு அக்காவின் நிறை முத்துக்கள் கோர்த்த கொலுசொலியும், கொஞ்சிப் பேசும் கண்ணாடி வளையல்களின் ஒளியும் மௌனித்துப் போயிருந்தன. ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை முதன்முறையாக எனது பதின் பருவ வயதில் பொன்னுதாய் அக்காவின் மடியிலும், மென்மையான மார்பிலும் விவரம் தெரிந்தும், விவரம் தெரியாமலும், நான் எத்தனை முறை களமாடியிருப்பேன்?

 எனக்கு கண் தெரியாது என்பதால் அத்தகைய தீண்டல்களுக்கு அவள் என்னை அனுமதித்து இருப்பாளா? அல்லது அத்தகைய தீண்டல்கள் அந்த வயதில் அவளுக்கு தேவைப்பட்டிருக்குமா? ஒருவேளை அவள் என்னை சிறுவன் என்று நினைத்து போனால் போகட்டும் என்று விட்டு இருப்பாளோ! அது எனக்குத் தெரியாது. ஆனால் அவளின் திருமணம் வரை என்னோடு மிகவும் நெருக்கமாக தான் இருந்தாள்.. நான் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது எல்லாம் எல்லோருமே அவளிடம் என்னைத்தான் போய் பேச சொன்னார்கள் ஆனால் அவள் யாரிடமும் பேசுவதில் விருப்பம் இல்லாமலேயே இருந்தால். இளவயதில் ஏற்பட்ட அவளது காதல் கணவனின் அகால மரணம் அவளை உருக்கொலைய வைத்திருந்தது. சிலரின் வாழ்க்கையில் விதி எப்படி எல்லாம் போக்கு காட்டி விடுகிறது? காலத்தால் மட்டும் தானே காயங்களுக்கு மருந்து போட முடியும்? அம்மா பொண்ணு அக்கா பெயரில் ஒரு தென்னந்தோப்பு இருந்தது. அதை விற்கும் முயற்சியில் அவளின் பெற்றோர் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் அந்த தோப்பை விற்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பதை அவள் பெற்றோரிடம் தெரிவித்து இருந்தால். அந்த தென்னந்தோப்பு தான் பொன்னுத்தாய் அக்காவின் வாழ்வாதாரமாய் இறுதிவரை இருந்தது... பொண்ணு தயக்க என்னை விட பத்து வயதுக்கு பெரியவள்.. எப்போதுமே எனது கோடை விடுமுறையை அந்த கிராமத்தில் கழிப்பதில் தான் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். கோடை விடுமுறையில் வந்திருந்த நான் ஒரு அந்தப் பெரிய ஊர் அணியில் குளித்துக் கொண்டிருந்தேன் எனது கால் சட்டையை கழற்றி கரையில் இருந்த ஒரு கல்லில் வைத்து விட்டு.

 கோடை வெயிலுக்கு அந்த பெரிய ஊரினியில் குளிப்பது சுகமாகத்தான் இருந்தது எனக்கு. கோடை வெயிலில் ஊரணி நீரின் மேல் பகுதி கதகதப்பாக இருக்கும். ஆழத்திலிருந்து கொப்பளிக்கும் நீர் சில்லென்று உடலின் எல்லா பகுதியையும் குளிர்விக்கும் சுகம் இருக்கிறதே; குளித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அந்த சுகம் புரியும். ஒரு வழியாக ஆனந்த குளியல் போட்டு முடித்த நான் எனது உடலின் பாதிப்பகுதி நீரில் மூழ்கி இருக்க கரையில் கழற்றி வைத்திருந்த கால் சட்டையை துலாவி பார்த்தேன். அது அந்த இடத்தில் இல்லாததால் திடுக்கிட்டுப் போனேன். பிறந்த மேனியோடு வெளியேயும் வர முடியாது. மேல கரையில் குளித்துக் கொண்டிருந்த இசக்கியம்மாளை கூப்பிட்டு எனது கால் சட்டையைத் தேடித் தரச் சொன்னேன். எங்கு தேடியும் எனது கால் சட்டை கிடைக்கவில்லை. கடைசியில் அவளின் பாவாடை தான் என் மானத்தை காப்பாற்றியது. நிர்வாணமாய் ஊருக்குள் வருவதை விட பாவாடையில் வருவது எனக்கு உசத்தியாகவே தெரிந்தது..

 அந்தக் காட்சியை பார்த்தவர்களும் பார்க்காதவர்களும், என்னை பார்க்கும் போதெல்லாம் கொஞ்ச காலம் சிரித்துக் கொண்டே தான் இருந்தார்கள். ரொம்ப காலத்துக்கு பிறகு அம்மா பொண்ணு அக்கா எனக்கு நடந்த சம்பவத்தை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு மகிழ்ச்சியை தந்திருந்தது. பின்னர் தான் தெரிந்தது என்னுடைய நண்பர்கள் தான் என்னுடைய கால் சட்டையை கபளீகரம் செய்தது.

 நான் படித்துக் கொண்டிருந்த பார்வையற்றோர் பள்ளியிலும் எனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்தார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நாலு மணிக்கு எல்லாம் விடுதி அறைகளில் உள்ள ஒலிபெருக்கிகளில் கிறித்துவ பாடல்களை சத்தமாக ஒலிக்கச் செய்து எழுப்பி விட்டு விடுவார்கள். விடுதிக்காப்பாளரின் இந்த செயல் என் போன்றவர்களுக்கு எரிச்சலையே தந்திருந்தது. நான் ஒரு நாள் விடுதிக்காப்பாளர் இல்லாத நேரத்தில் அவள் அறைக்குச் சென்று டேப் ரிக்கார்டரில் இருந்த கிறிஸ்தவ பாடல் கேசட்டை வெளியே எடுத்து விட்டு; திரைப்படப் பாடல் கேசட்டை கச்சிதமாய் பொருத்திவிட்டேன். மறுநாள் அதிகாலை 4 மணி சுவாரசியத்துக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது என்ற பாடல் விடுதி வளாகத்தில் இருந்த ஒலிபெருக்கிகளில் அலறி ஒலித்தது. அந்த அழகான அதிகாலைப் பொழுது ஆக்ரோஷமாய் மாறி இருந்தது. எவன் இந்த வேலையை செய்திருப்பான் என்ற விசாரணையும் தொடங்கியது. குறை பார்வை கொண்ட சாமிக்கண்ணு என்ற பையன் என்னை காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலையை மிகவும் கச்சிதமாய் செய்து முடித்து இருந்தான் நான் சிலுவையில் அறையப்படும் இயேசுவைப் போல முதல்வரின் நரைக்கு கொண்டு. செல்லப்பட்டேன்.. எனக்கு அடிசூட்டும் விழாவும் மிக விமர்சியாக அங்கு நடத்தப்பட்டது. அதிலும் ஒரு நல்ல காரியம் எனக்கு நடக்கத்தான் செய்திருந்தது எனது அந்த துயரமான நேரத்தில் எனது வகுப்புத் தோழி ஜெபமலர் எனக்கு ஆறுதலும் அறிவுரையும் சொல்ல கிடைத்திருந்தால்.

 அவளின் பரிசுத்தமான அன்பு என்னை வசீகரித்து காதலில் கொண்டு போய் நிறுத்தி இருந்தது. எனது குறும்புகளை எல்லாம் நான் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தேன். அவளின் பெற்றோர் பனை விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். ஜெபமலரை பார்க்க வரும்போது எல்லாம் அவளின் பெற்றோர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை தின்பண்டமாக கொண்டு வருவார்கள். கருப்பட்டி பதநீர் நுங்கு பனங்கிழங்கு பனம்பழம் எல்லாமே எங்களுக்கும் கிடைக்கும். எனக்கு பணம் பழம் தான் மிகவும் பிடிக்கும். அதிலும் நெருப்பில் சுட்ட பனம்பழத்தில் இருந்து வரும் வாசனையும், சுவையையும் இப்போது நினைத்தாலும் என் நாக்கில் எச்சில் ஊறுகிறது.. ஒரு பனைமரம் எவ்வளவு சுவையான பொருட்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.? ஜெபமலரின் ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு செயலையும், அவளின் ஒவ்வொரு அசைவையும் நான் அணு அணுவாய் ரசிக்க தொடங்கி இருந்தேன். நானும் ஜெபமலரும் பள்ளியில் படிக்கும் வரை எந்த சர்ச்சைகளிலும் சிக்கியதே கிடையாது. அவள் ஒரு நாளும் என் பெயரை சுந்தரம் என்று சொல்லி அழைத்ததே கிடையாது. எப்போதும் அவள் என்னை வானம் பார்த்தான் என்று தான் கூப்பிடுவாள்.. நான் எப்போதும் பேசும்போது மேலே பார்த்தபடி தான் பேசுவேன் அதனால்தான் எனக்கு அந்தப் பெயர். அவள் ஒவ்வொரு செயலை செய்யும் போதும் இயேசுவே இரட்சியும் தும்மினாலும் கூட அப்படித்தான் சொல்வாள்..

 மரக்கிளைகளில் குதூகளிக்கும் பறவை கூட்டங்களை நோக்கி வேடன் குறி பார்த்து கல்லை எரிவதைப் போல மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவும் வந்திருந்தது எங்களைத் தேடி. போதி மரத்தில் ஞானம் பெற்ற பறவைகள் பறந்தன பல திசைகளைத் தேடிக் கொண்டு. சிலர் சொந்த முயற்சியில் கல்லூரியில் சேர்ந்து கொண்டனர்.. சிலர் மறுவாழ்வு இல்லங்களில் அடைக்கலம் புகுந்தனர். சிலர் நன்கொடையாளர்களின் உதவியால் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் சிலர் வீடுகளுக்குள்ளேயே தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொண்டனர். பள்ளியில் என்னோடு படித்த பல பார்வையற்ற நண்பர்கள் என்ன ஆனார்கள் என்றே எனக்கு இதுவரை தெரியவில்லை. நான் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத் துறையில் சேர்ந்திருந்தேன். ஜெபமலர் பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை நடத்தக்கூடிய ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்திருந்தால்.. புத்தகம் என்ற பெயரில் பிரெயிலில் காதல் கடிதங்களை கட்டு கட்டாக ஜெபமலருக்கு நான் அனுப்பினேன். அவளும் எனக்கு அனுப்பி கொண்டே இருந்தால். அவள் விடுதியில் உள்ள தொலைபேசி எண்ணையும் எனக்கு கொடுத்திருந்தால். பெற்றோரைத் தவிர ஆண்கள் யாரும் தொலைபேசியில் பேசக்கூடாது என்பதையும் அவள் எனக்கு சொல்லி இருந்தாள். நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது தான் ஜெபமலரோடு தொலைபேசியில் பேச முடிந்தது.. அம்மா பொண்ணு அக்கா தான் ஜெபமலரின் அக்காவாக மாறி இருந்தால்.. அம்மா பொண்ணு அக்காவை தவிர என் காதல் விவகாரம் எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது.

 என் வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த போதிலும் நான் எதுவும் இல்லாதவனாகவே நடத்தப்பட்டேன். பொறுப்பில்லாத அப்பா, பங்காளிகளாக மாறி இருந்த என் சகோதர சகோதரிகள்,. பெரிய அளவில் என்னை கண்டு கொள்வது கிடையாது. ஆனால் என் அம்மாவின் கை மட்டும் எப்போதும் எனக்கு தாராளம் காட்டியிருந்தது. அதே சமயத்தில் நான் விடுமுறையை முடித்து கல்லூரிக்கு செல்லும் வரை அம்மா பொண்ணு அக்கா மட்டும் எனக்கு பணம் கொடுக்காமல் ஒருபோதும் அனுப்பியதே கிடையாது. என் அம்மா நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் அம்மா பொண்ணு அக்கா தான் எனக்காக என் அம்மாவை அக்கறையோடு கவனித்துக் கொண்டிருந்தாள். எனக்கு இருந்த ஒரே உறவு என் அம்மா அவளும் ஒரு நாள் இறந்து போனால்.. நான் அழுது அழுது ஒரு கட்டத்தில் சுயநினைவை இழந்தவனாய் மயங்கி விழுந்து விட்டேன். அம்மா பொண்ணு அக்கா தான் என்னை அள்ளி அணைத்துக் கொண்டு என் தங்கமே உனக்கு நான் இருக்கிறேன் டா என்று சொன்ன ஆறுதல் மொழிகள் அவள் இருக்கும் திசையை நோக்கி இன்றும் என்னை வணங்கச் சொல்கிறது. நான் அம்மா பொண்ணாக்காவுக்காகஇதுவரை எதுவுமே செய்திருக்கவில்லை. கல்லூரி படிப்பை முடித்த நான் வேலைக்கான போட்டித் தேர்வு எழுதுவதில் என்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன்.. காலம் தன் கணக்கை முடிக்கும் கட்டாயத்திலிருந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஜெபமலர் வீட்டிலும் அடுக்கடுக்கான பிரச்சனைகள் தலை காட்டத் தொடங்கியிருந்தன.. பனை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே. போய்க்கொண்டிருந்தது. வாழ்வாதாரமாய் இருந்த பனி மரங்களை வெட்டி விரகு களுக்காக செங்கல் சூளைகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள் எல்லோரும். ஜெபமலர் வீட்டு பணம் காடும் அதற்கு தப்பவில்லை.

 ஜெபமலரின் அப்பாவும் இறந்து போயிருந்தார். அவளின் அண்ணன் தம்பிகளெல்லாம் அவர்களுக்கான பாகங்களை பங்கு வைத்துக் கொண்டனர். ஜெபமலர் மட்டும் தான் அந்த குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை. கண் தெரியாத ஜெபமலருக்கும் அவளின் அம்மாவுக்கும் சொத்தில் கொஞ்சம் அதிகமாகவே பிரித்து கொடுத்திருந்தார்கள். ஜெபமலரை பார்ப்பதற்காக நானும் அம்மா பொண்ணு அக்காவும் ஒரு நாள் அவள் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஜெபமலரும் அவள் அம்மாவும் தான் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தார்கள். செல்வக்கனி நாடார் குடும்பம் சின்னாபின்னமா சிதறிப்போச்சு தம்பி என்ற ஜெபமலரின் அம்மாவின் வார்த்தைகளில் சோகம் மிஞ்சி இருந்தது. உனக்கு கொடுக்கிறதுக்கு பணம் பழம் இல்லையே சுந்தரம் என்ற ஜெபமலரின் அங்கலாய்ப்பை என்னால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் நின்றிருந்தேன். பாவம் அவள் ஒரு வெகுளி கிறித்தவம் அவளை எல்லோருக்கும் நல்ல பிள்ளையாகவே வளர்த்தெடுத்திருக்கிறது. ஜெபமலரின் அம்மாவும் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதாகவும் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. நான் அவளின் நிலையைக் கண்டு அழுவதை அறிந்த ஜெபமலர் கர்த்தரின் சித்தம் என்னவோ அது நடக்கட்டும் சுந்தரம் நீ. அழக்கூடாது என்று அவள் எனக்கு ஆறுதல் சொன்னால்.

 ஜெபமலரின் குடும்பம் நெல்லையிலிருந்து பிழைப்புக்காக கோவைக்கு இடம் பெயர்ந்தது. ஜெப மலரும் அங்கேயே ஒரு கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தால்.. எனக்கும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் போட்டி தேர்வின் மூலம் ஒருவேளை கிடைத்திருந்தது. எது எப்படி இருந்தாலும் கோடை விடுமுறைக்கு நான் எங்கள் கிராமத்துக்கு வருவதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் எனக்காக அம்மா பொண்ணு என்ற ஒரு ஜீவன் இருக்கிறது. கண் தெரியாத சேட்டைக்காரனாய் அடையாளப்படுத்தப்பட்ட, நான்; இப்போது அந்த கிராமத்துக்கே வழிகாட்டி. நான் பாதுகாப்புத் துறையில் இளநிலை உதவியாளர் என்பதால் அங்கே உள்ள அங்காடியில் மது பாட்டில்கள் எனக்கு சலுகை விலையில் கிடைக்கும். நான் அங்கே வரும்போது எல்லாம் எங்கள் ஊர் குடி மகன்களுக்கு எல்லாம் மது பாட்டல்களைக் கொண்டுவர தவறியதே இல்லை. எனக்கும் ஜெபமலருக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அவள் எங்கு இருக்கிறாள் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.. ஜெப மலரை கண்டுபிடிக்கும் முயற்சியில்

 அம்மா பொண்ணு அக்கா மிகவும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். எங்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்து பார்ப்பதில், அம்மா பொண்ணு அக்கா மிகவும் ஆர்வமாய் இருந்தால்.

 ஜெபமலரைத் தேடும் படலம் ஒரு வருடத்தை தின்று ஜீரணித்து இருந்தது. எந்த தகவலும் கிடைத்த பாடில்லை,. நானே களத்தில் நேரடியாக இறங்கி இருந்தேன். என் போன்ற பார்வை இழந்த மக்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நேரில் சந்திக்காமலே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து வைத்திருப்போம். எப்படி என்றால்? தமிழகத்தில் பார்வையற்றோர் சேர்ந்து படிக்கும் கல்லூரி விடுதிகளும், மறுவாழ்வு இல்லங்களும் பயிற்சி மையங்களும் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும் அதிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு தான் அவர்கள் வந்து ஆக வேண்டும். பார்வையற்றோர் பள்ளிகள் இருக்கும் ஊரில் ஒருவரை தெரிந்து வைத்திருந்தால் போதும் பிரச்சனை எளிதில் முடிந்து விடும்.. மேலும் சமூக ஊடகங்கள் அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்து வைத்திருந்தது.. கோவையில் ஜெபமலர் படித்திருந்த குறிப்பிட்ட கல்லூரியின் பெயரைச் சொல்லி ஒரு நண்பரை தேடச் சொன்னேன். அவர் ஜெபமலரின் அலைபேசி என்னோடு ஒரு அதிர்ச்சியான செய்தியையும் என்னிடத்தில் கொண்டு வந்து சேர்த்து இருந்தார்.. ஜெபமலருக்கு அரசு உதவி பெறும் ஒரு கிறித்துவ பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்திருந்தது. அது மட்டுமல்லாமல், ஜெபமலரின் அண்ணன் மனைவியின் தம்பியோடு அவளுக்கு கட்டாய திருமணமும் நடந்து முடிந்திருந்தது. காலம் யாரை யாரோடு முடிச்சு போடும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு பள்ளி வேலை நாளில் அந்த அலைபேசி எண்ணை நான் அழைத்தேன். அதே குரல்! நிச்சயமாக அவளே தான்! என்னோட ஜெப மலரே தான்! மன்னிக்க வேண்டும்.. உடலால்; வேர் ஒருவரின் ஜெபமலர்.. அம்மா பொண்ணு அக்காவும் ஏற்கனவே இந்த செய்தியை தெரிந்து வைத்திருந்தால். அதை அவள் என்னிடத்தில் சொல்ல திராணி அற்றவளாய் இருந்திருக்கிறாள்.. நானும் அவளிடம் அதைக் கேட்க விரும்பவில்லை முடிந்தது முடிந்ததாய் இருக்கட்டும். எனக்குத் தெரிந்ததும் அவளுக்குத் தெரியாமல் போகட்டும்.

 நான் ஒரு மாத விடுமுறையில் எங்கள் கிராமத்துக்கு. வந்திருந்தேன். அந்த சாயங்காலப் பொழுதில் நானும் அம்மா பொண்ண அக்காவும் அந்த கிழக்குக்கரை வாய்க்கால் திண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பேய் ஆட்டிப் பனை மரத்திலிருந்து ஒரு பனம்பழம் பொத்தென கீழே விழுந்தது. கீழே விழுந்த பனம்பழத்தை அவள் எடுக்க முயற்சித்த போது, அது உருண்டோடி அருகில் இருந்த வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்டது. அக்கா வேண்டாம் அந்தப் பணம் படம் இனிக்காது. போனால் போகட்டும் விட்டு விடுங்கள். என்று நான் சொல்லி முடிக்கவும்; ஏன் ஜெபமலர் கொடுத்தால் தான் இனிக்குமோ? என்று அம்மா பொண்ணு அக்கா என்னிடத்தில் கேட்டால்..

 அக்கா வேஷத்தைக் கலைத்துக் கொள்ளலாம் எனக்கும் எல்லாம் தெரியும்.. கோடிமுறை இயேசுவே இரட்சியும் இயேசுவே இரட்சியும் என்று சொன்ன அவளை, படிக்காத பாமரனோடு இயேசுவே; அவளை சிலுவையில் அறைந்து விட்டார்.

 இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காமல் இருக்கட்டும்.

முற்றும்..

தொடர்புக்கு;

9442715777 

உரிமை யுத்தம்.

உரிமை யுத்தம்.

முனைவர். இரா. பெரியதுரை.

 தமிழர்களின் தலைவிதியை, நீட்டியும், மாற்றியும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல் திருத்தியும், எழுதக்கூடிய வானளாவிய அதிகாரம் படைத்த சென்னை பெருநகரம்; அன்றைய அதிகாலைப் பொழுதில் மாசுகள் நிறைந்த சுப தினத்தில் கண்விழிக்க தொடங்கியிருந்தது.

 வார விடுமுறையை முடித்த நானும், ஓரளவே மாசுகளை கொண்டிருக்கும் நெல்லையிலிருந்து அந்த பொதிகை விரைவு ரயிலை விட்டு இறங்கியவனாய், என் முகத்தை துடைத்துக் கொண்டு அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி இருந்தேன்.

 காட்சி தொடர்பியலில் முதுகலை பட்டப் படிப்பை முடித்த எனக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நல்ல வேலையும் கிடைத்திருந்தது. மூத்த செய்தியாளர்களில் நானும் ஒருவனாக அறியப்பட்டு இருந்தேன்.. கடந்த 12 ஆண்டுகளில் சென்னையின் கடினமான தருணங்களையும் பேரிடர் காலங்களையும், அரசியல் மாற்றங்களையும் துயரம் நிறைந்த பிரபலங்களின் மரணங்களையும், பல சுவாரசியங்களையும் நேரில் பார்க்கும் அனுபவங்களையும் பெற்று இருக்கிறேன். அதே ரயிலில் இருந்து ஒரு பத்து பதினைந்து பார்வை இழந்தவர்களும், இறங்கி இருந்தார்கள் அனேகமாக அவர்கள் எல்லோருமே அந்த வழியில் இருந்த வெவ்வேறு ரயில் நிலையங்களில் ஏறி இருக்க கூடும் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அழைத்து அவர்களின் வருகையை உறுதி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தோளிலும், முதுகிலும், ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்துக் கொண்டு பேசியபடியே; மடக்கி வைத்திருந்த வெள்ளை நிற கம்பை பயன்படுத்தி, தடைகளை தட்டி உணர்ந்தபடி ஒருவர் வழிகாட்ட ஒருவர் ஒருவரை தொட்டுக் கொண்டே என்னை தாண்டி ரயில் நிலையத்துக்கு வெளியே சென்று கொண்டிருந்தார்கள்.

 ரயில் நிலையத்தை விட்டு அவர்கள் வெளியே வரவுமே; காவல்துறையை சார்ந்த இருவர் தங்கள் வாக்கிடாக்கியை அணைத்துவிட்டு அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டே அவர்களை பின்தொடர்வதை நான் பார்த்தேன். பார்வையற்றோர் என்ன சமூகவிரோதிகளா? அவர்களைப் பின் தொடர்வதன் காரணம் எனக்கு புரியவில்லை. நான் அங்கு நடப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தபோது, அந்தக் காவல்துறையினர் இருவரும் என்னை பார்த்து விட்டனர். நிச்சயமாக நான் ஒரு ஊடகவியலாளன் என்பதை அவர்கள் தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் இருவருமே எனக்கு வணக்கம் வைப்பதை வைத்து நான் அதை புரிந்து கொண்டேன். மேலும் சில காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து ஒரு வாகனத்தில் ஏற்றினர். உடனே நான் எனது சக செய்தியாளர்களுக்கு தகவலை கொடுத்துவிட்டு செய்திகளை சேகரிக்குமாறு கூறினேன். நான் வீட்டுக்கு சென்று என் வேலையை முடித்துவிட்டு அலுவலகம் திரும்பி இருந்தபோது. பார்வையற்றோர் பத்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில நாட்களாக போராட்டம் நடத்தி வருவதை நான் அறிந்தேன்.

 அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது நியாயமானவைகளாகவே எனக்குப் பட்டன ஒரு மனசாட்சி உள்ள மனிதனாக. முன்னணி ஊடகங்கள் எல்லாம்

 நினைத்திருந்தால் இவர்களின் செய்திகளை இன்னும் வீரியம் உள்ளதாக மக்கள் முன் கொண்டு சென்றிருக்க முடியும். என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்? இருந்த போதிலும்; நான் இவர்களின் பிரச்சனைகளை ஒரு பெரும் செய்தி தொகுப்பாக மக்கள் முன் கொண்டு செல்ல விரும்பினேன்.. எனது செய்தி குழுவோடு இணைந்து அவர்களின் பிரச்சனைகளைப் பற்றிய தரவுகளை சேகரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் பார்வையற்றோர் வாழ்வியல் குறித்த பல சிக்கல்களை எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.. எவ்வளவு பிரச்சனைகளை எதிர் கொண்டு மகிழ்ச்சியுள்ள மனிதர்களாய் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? குடும்பத்தினரின் புறக்கணிப்பு, கல்வியை பெறுவதில் உள்ள சிக்கல்கள், அவற்றையெல்லாம் முறியடித்து வெளியே வந்தாலும் பணி வாய்ப்பினை பெறுவதில் உள்ள சவால்கள், இவற்றை விட பெரிய கொடுமை என்னவென்றால்? இவர்களை அரவணைக்க வேண்டிய அரசாங்கமே; அவர்களைத் தந்திரமாக ஏமாற்றி, அலை கழிப்பது தான்..

 போராட்டக் களத்தில் அவர்கள் களமாடிய விதம் ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் அதே வேளையில் வேதனை தருவதாகவும் இருந்தது. ஏராளமான கல்லூரி மாணவ மாணவியரும், வேலையில்லா பட்டதாரிகளும் அங்கே இருந்தார்கள். சிலரோ சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டு இருந்தார்கள். எம் ஏ பி எட், பி எச் டி; விக்கிறதோ! ஊதுபத்தி. இந்த வரி என்னவோ கவித்துவமாக இருந்தாலும்; இது அவர்களின் துயரம் தந்த உச்சம் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த இடத்தில் சில காதல் ஜோடிகளும் இருந்தார்கள். நான் ஒரு ஜோடியிடம் பேசிய போது அவர்கள் சொன்னார்கள், தாங்கள் 10 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவருமே கல்லூரி பேராசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், ' எங்கள் இருவரில் ஒருவருக்கு வேலை கிடைத்தால் கூட போதும், நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று " ' இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம். தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது, மயங்குது எதிர்காலம். " இனிமையான குரலில் பாடினார்கள் ஒரு அக்கா. அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிந்தார்கள். அவர்கள் சேலை கட்டி இருந்த விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்த சூழலுக்கு ஏற்ப உடனே அவர்களால் பாடலை எப்படி பாட முடிந்தது? சில இடங்களில் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டிருந்தார்கள்.. அவர்களை அப்புறப்படுத்துவதில் காவல்துறைக்கு மிகுந்த சிரமமும் ஏற்பட்டிருந்தது. சில பார்வையற்ற நண்பர்கள் சன்னமான குரலில் பெண் காவலர்களை கலாய்த்துக் கொண்டும் இருந்தார்கள் அவர்களுக்குள்ளேயே.. நான் ஒரு பார்வையற்ற இளைஞரிடம் பேசியபோது; அவர் சொன்னார் நாங்கள் படித்த படிப்பு எங்களை பிச்சை எடுக்கவும் அனுமதிப்பதில்லை தன்மானம் எங்களுக்கு மட்டும் இல்லையா என்ன? அரசு எங்களை கருணை கொலை செய்து விடட்டும் என்று அழுதே விட்டார். அவரின் கண்ணீர் நான் அவரிடம் நீட்டி இருந்த மைக்கை நனைத்ததோடு மட்டுமல்லாமல் என் இதயத்தையும் நனைத்து இருந்தது.

 ஐயா நீங்கள் சாலையை மரிப்பதால்; பொதுமக்களுக்கு நிறைய இடையூறுகள் ஏற்படுகிறது. நீங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து போகவில்லை என்றால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். என்று காவல்துறை கண்காணிப்பாளர் பேசியது போலவே; அதுவும் அவர் குரலிலேயே; அந்தப் போராட்ட களத்தில் இருந்த ஒரு பார்வையற்ற நண்பர் பேசியதை கேட்டு அவர்களே ஏமாந்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு எதிராக பார்வையற்றோரே எதிர்வினையும் ஆற்றத் தொடங்கிவிட்டனர். அதைக் கேட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஐயா நான் அப்படி சொல்லல உங்க ஆளு ஒருத்தர் தான் என்ன மாதிரியே பேசினார் என்று சொன்னார். அதிலும் ஒரு காவல்துறை உயர் அதிகாரி எங்களிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது சொன்ன விஷயம் தான் எங்களை ஆச்சரியப்படுத்தியது.. பார்வை இழந்த இவர்களால் எப்படி போராட்டத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் சாலையை மறித்து விடுகிறார்கள். நாங்களும் எவ்வளவோ இவர்களை கண்காணித்து இருந்த போதிலும்., எங்கள் கண்களிலேயே மண்ணைத் தூவி விடுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இதைக் கேட்டு நாங்களே அதிர்ந்து போனோம் காவல்துறையினர் செய்த சில அடக்குமுறைகளையும் பார்வேற்ற நண்பர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ள தான் செய்தார்கள். பார்வையற்றோரை நள்ளிரவில் சுடுகாட்டில் கொண்டு இறக்கி விடுவது, வீட்டு சொந்தக்காரர்களை வைத்து வாடகை வீட்டில் இருப்பவர்களை காலி செய்ய சொல்வது. பார்வையற்ற கல்லூரி மாணவர்களை அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளிலேயே போய் நள்ளிரவில் கைது செய்வது, பார்வையற்ற பெண்களை ஆண் காவலர்களே கையாளுவது, விளக்கை அணைத்துவிட்டு கூட பார்வையற்றோரை தாக்கியதாக கூட சொல்கிறார்கள். இவை எல்லாமே அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இல்லையா?. 15 நாட்கள் 5 6 பார்வை இழந்தவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு இருந்தது தான் எங்களை அச்சப்பட செய்திருந்தது. இவர்களுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் உள்ள பார்வை இழந்தவர்களும் சங்கு ஊதி போராடியது உட்பட பல நூதனமான போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர். சமூக ஊடகங்களில் அவர்கள் ஆற்றிய எதிர்வினை இருக்கிறதே அரசுக்கு எதிராக அப்பப்பா. கவிதைகள், ஆய்வு கட்டுரைகள், மீம்ஸ்கள் இன்னும் அவை அனைத்தும் போராட்டங்களின் கதைகளை சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன.

 அவர்கள் கைது செய்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபங்களிலும் கூட அவர்களின் போராட்ட உணர்வு சற்றும் குறைந்து இருக்க வில்லை. அதே நேரத்தில் அந்த இடத்தை ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு கொண்டு சென்றிருந்தார்கள். கொள்கை பாடல்கள் திரைப்படம் எட்டில் கல் மனதையும் கரைத்து விடும் வகையில் இருந்தன., அவர்களின் நகைச்சுவை அரட்டைகள் இருக்கிறதே திரைப்படங்களையும் மிஞ்சிவிடும். தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் அவர்கள் போராட்டம் குறித்து; சக அமைச்சர்களோடு அலட்சியமாக பேசுவதைப் போல; அவர்களில் ஒருவர் பேசியதை கேட்கும் போது வெளியில் நாகரீகமாகவும், நியாயமாகவும், பேசும்  அமைச்சர்கள் தங்களுக்குள் இப்படித்தானே பேசிக் கொள்வார்கள்? என்றுதான் நமக்கும் என்ன தோன்றியது.. அவர்கள் எங்களைப் போன்ற ஊடகங்களையும் கலாய்க்கத் தவறியதில்லை.. நேரலையில் கள நிலவரத்தை செய்தியாளர் ஒருவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரிடம் விவரிப்பதைப் போலவே; ஒருவர் விவரித்தார். அதிலும் என் குரலிலேயே ' நிச்சயமாக காளியம்மாள் நாம் இப்பொழுது போராட்ட களத்தில் தான் இருக்கிறோம். சாப்பிட்டீங்களா காளியம்மா? உங்க குரல் மற்ற நாளை விட இன்னைக்கு நல்லாவே இருக்கு ஆனால் உங்க மேக்கப் தான் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு. நாம மற்றதை தனியா பேசிக்கலாம் காளியம்மாள்.

 கண்டிப்பா இதை நான் சொல்லித்தான் ஆகணும் போராட்டம் பற்றி. 15 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் பார்வையற்றவர்களின் கோரிக்கை என்பவை மிக கவனிக்கத்தக்கவை. தமிழ்நாடு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் இவற்றில் பார்வையற்றோர் மட்டுமே; ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்கள் ஆகவும், பணி அமர்த்தப்பட வேண்டும். அப்படி பார்வையற்றவங்க யாரும் அரசு கிட்ட கேட்கல. அவர்களுக்கான ஒரு விழுக்காடு அரசு ஆணையத்தால் முறைப்படி செயல்படுத்த சொல்றாங்க. அரசு அலுவலகங்களில் பார்வையற்றோர் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் அப்படியும் அவங்க கேட்கல. பார்வையற்றோருக்கான அரசு ஆணை என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர்கள் செயல்படுத்த சொல்றாங்க. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், முழு பார்வை இழந்தவர்களை மட்டுமே துணை வேந்தர்களாகவும் முதல்வர்களாகவும், நியமிக்கணும் அப்படியும் சத்தியமா அவங்க கேட்கல. தமிழக அரசு என்ன சொல்லுச்சோ அதைத்தான் செயல்படுத்த சொல்றாங்க. தேர்வு எழுதுவதில் இருந்து பார்வையற்ற மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டுமென்று அவர்கள் கேட்கல. அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய உதவித்தொகை போன்ற சலுகைகளை தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். காளியம்மாள் ஒன்னே ஒன்னு நாம இங்க கவனிக்கணும். வேலையில்லாத பார்வையற்றோருக்கு குளிர்சாதனத்தோடு கூடிய பெரிய பங்களா வேணும், மாதாந்திர உதவித் தொகையாக 2 லட்ச ரூபாய் கண்டிப்பா தமிழக அரசு கொடுத்து தான் ஆகணும். இதுதான் பார்வையற்றோர் வைத்திருக்க கோரிக்கைகளிலேயே மிகவும் முக்கியமானது காளியம்மாள்.. அப்படித்தான் அரசு நெனச்சி அவங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்த முன் வரல. அரசின் ஊதுகுழல் தொலைக்காட்சிக்காக,; போராட்டக் களத்தில் இருந்து நான் தமிழரசன். என்னோடு நமது ஒளிப்பதிவாளர் இருளாகி.

 இப்படியே கண்ணீரிலும் பட்டினியிலும், அவர்கள் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.. இவர்களின் இந்த நியாயமான போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக; பார்வையற்றோருக்கு உள்ளேயும் சில யூதாசுகளும் இருந்ததாக ஒரு பார்வையற்ற நண்பர் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

 இவர்களுக்காக அரசால் போடப்பட்ட அரசு ஆணைகளையே; இவை எல்லாம் தப்பான அரசு ஆணைகள் என்று சொன்ன அதிகாரிகளின் அறியாமையை நாம் என்ன சொல்வது? பார்வையற்றோரில் சட்டம் தெரிந்தவர்களும் இருந்தார்கள், சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களும்

 இருந்தார்கள். நாம் அங்கே சந்தித்த பார்வையற்றோர் எல்லோருமே; அரசு பணியை பெறுவதற்கு தகுதியானவர்களாகவே எனக்கு தெரிந்தார்கள். படித்தவர்களுக்காக மட்டுமே பார்வையற்றோர் போராடவில்லை. வேலை செய்ய முடியாத பார்வையற்றோருக்காகவும் அவர்கள் போராடத்தான் செய்தார்கள். அரசு ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை கொடுப்பதை நாங்களும் அறிந்திருக்க தான் செய்தோம். எங்களுக்கு போராட்டம் பற்றி பேட்டி கொடுத்த அமைச்சரின் அறியாமையையும் நாங்கள் அறியத்தான் செய்திருந்தோம். எங்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்? முன்னணி ஊடகங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள், இப்போது ஆளும் கட்சிக் கூட்டணியில் இருப்பதால்; அவர்களின் அறிக்கைகளும், ஆதரவுகளும், வெறும் சம்பிரதாயங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் இதே நிலைதான் தொடர்கின்றன. ஆனால் பார்வையற்றோரின் கோரிக்கைகள் மட்டும் மைதானத்தில் உதைப்படும் கால்பந்துகளாகவே; அங்கும் இங்கும் உதைப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஒரு நாள் அந்த பந்துகள் பலமாக உதைக்கப்படும். அப்போது கோரிக்கை பந்துகள் எல்லைக்கோட்டை தாண்டி நிச்சயமாக வெளியேறும்.

 முற்றும்.

 உரிமையுத்தம் நிச்சயமாக தொடரும்

தொடர்புக்கு,

9442715777