Thursday 23 March 2017

ஏறுதழுவுதல் அன்றும் இன்றும்



ஏறுதழுவுதல் அன்றும் இன்றும்
(அந்தகக்கவிப் பேரவையின் ஆறாவது கூட்டத்தில்  (28/02/2017) படிக்கப்பட்டது)
முன்னுரை :
மனிதன் தோன்றின போதே உருவான மொழிதான் நம் தாய் மொழியாகிய தமிழ்.  இம்மொழியில் பல இலக்கிய இலக்கணங்கள் தோன்றினவற்றுள்  சில மறைந்தன, பல கிடைத்தன.  அவற்றுள்  தமிழனுக்கே  உரிய பண்பாட்டை எடுத்துரைக்கும் நூல்கள் எண்ணற்றவை.பிறப்பு முதல் இறப்பு   வரை நிகழும் பண்பாட்டுக் கலாச்சாரங்களுள் ஒன்றான ஏறுதழுவுதல்என்ற வீரச் செயலை நமக்குக் கிடைத்த பழம் பாடலின் மூலம்   எவ்வாறு   நடைபெற    வேண்டும்,  நடைபெறும்    பொழுது   என்னென்ன   செய்ய   வேண்டும்    என்பதையும், காலப்போக்கில் இவ்வேறுதழுவுதல் எப்படி மாற்றம் அடைந்தது என்பதனையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


வரலாறு :
நியூயார்க் நகரத்தில் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தின் கிரேக்கப் பிரிவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலத்திய ஒரு மீட்டர் உயுரமுள்ள ஒயின் ஜாடிகளின் மேற்புறத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டிருந்தன.  கிரீசுக்கு அருகிலுள்ள கிரீட், மைசீன் தீவுகளில் அகழ்வாராய்ச்சியில் வெளிகொணரப்பட்ட  சுவரோவியம் ஒன்றிலும் ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. மணிமேகலை போன்ற நூல்களிலும் , கிரேக்க பயணி தாலமி குறிப்புகளிலும் தமிழ்நாட்டிற்கும் கிரேக்க, ரோமானிய நாடுகளுக்கும் இருந்த வாணிப உறவு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.  முதலாம் நூற்றாண்டில்
                                               
வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஸ்ட்ரோபோ தமிழகத்திலிருந்து ஒரு குழு சக்கரவர்த்தி அகஸ்டஸ் தர்பாருக்கு வந்திருந்ததை பதிவு செய்திருக்கின்றன.  ஜல்லிக்கட்டு நடத்தும் பழக்கம் இங்கிருந்து அங்கு சென்றது என்று பல்வேறு அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.  சிந்து சமவெளி நாகரிக இடமான மொகஞ்சதாரோவில் கிடைத்த ஒரு முத்திரையில் ஜல்லிக்கட்டு காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று டில்லி அருங்காட்சியகத்திலிருக்கும் இந்தக் கல்லாலான முத்திரை   2000 கி.மு. காலத்தைச் சார்ந்தது. பண்டைய தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் இந்த நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.  கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல்என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.  ஆயர்கள், யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

ஏறுதழுவுதலுக்கு முன் இயற்கை :
பழந்தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகை, ஏறுதழுவுதலின் போது  என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் உணரும் வகையில் எடுத்துரைக்கிறது.  எவ்வித செயல்களையும் முன்னெடுக்கப்படுவதுற்கு முன் இறை  வழிபாடு செய்வது தமிழர் பண்பாடு.  அவ்வகையில் ஏறுதழுவுவது என்ற வீரச்   செயலை  இயற்கையை வணங்கித் துவங்கினர்.  இதனையே பின்வரும் கருத்து  உறுதி செய்கிறது. 

                           அவ்வழி முழக்கென, இடியென, முன்சமத்து ஆர்ப்ப-
            வழக்குமாறு கொண்டு, வருபுவருபு ஈண்டி
            நறையொடு துகளெழ நல்லவர் அணிநிற்பத்,
            துறையும், ஆலமும் , தொல்வலி மரா அமும்,
            முறையுளி  பரா அய்ப், பாய்ந்தனர், தொழு உ,,
                                               

             மேற்பாட்டு உலண்டின் நிறன்ஒக்கும் புன்குருக்கண்
             நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்,
             கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம்காண்-
             அம்சீர் அசைஇயல் கூந்தற்கை நீட்டியான்
             நெஞ்சம் பிளந்திட்டு, நேரார் நடுவண், தன்       பாடல்  101


      ஆயர்களைத் தொகுதியாகச் சேர்த்து , சீறுதற்கரிய வலியுடையோனான இறைவனின் கணிச்சிபோலக்  கொம்புகள் சீவப்பட்ட ஏறுகள் நிற்கின்ற தொழுவினுள், தம்மைப் பகைத்து வரும் ஏறுகளைத் தழுவித் தம் ஆற்றலைச் சேர நிறுத்துவதற்காக, ஒருங்கே சென்று புகுதலிட்டனர்.  ஆயர்கள், அவ்விடத்திலே முழக்கென இடியெனத் தம் முன்னே ஆரவாரம் எழ, ஏறுகள் முக்காரமிட்டு நின்றன. ஏறு தழுவியவர்க்கே  மகளைத் தருவோம் என்ற ஆயர்குல வழக்கப்படி, ஏறு தழுவ முன் வந்தார் அனைவரும் வந்து சேர்ந்தனர்.  ஆரவாரத்தோடு எங்கும் புழுதியும் எழுந்தது.  நல்ல மகளிர், திரண்டு ஒருசார் நின்றனர்.  நீர்த்துறைகளிலும் ஆலமரத்தடிகளிலும் , பழைய வலியுடைய மராமரத்தின்    கீழும்   உறையும் தெய்வங்களுக்கு     முறையாக     வழிபாடுகள்    செய்த பின் ,    இளைஞரும்
தொழுவினுள்ளே சீறிப் பாய்ந்தனர்.

ஆயர்குலப் பெண்களின் மன்றல் முறை :
பொதுவாக இவ்வினத்தைச் சார்ந்தவர்கள் பெண்ணை மணமுடித்துக் கொடுப்பதற்கு முன் ஒரு இளைஞனுக்கு வீரம் உள்ளதா என ஆராய்ந்து அப்பெண்ணை மணமுடித்துக் கொடுத்துள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

                       கண்ணகன் இருவிசும்பில் கதழ்பெயல் கலந்துஏற்ற
          தண்நறும்  பிடவமும், தவழ்கொடித் தவளமும்,
          வண்ணவன் தோன்றியும் , வயங்கிளர்க் கொன்றையும்,
          அன்னவை பிறவும் , பன்மலர் துதையத்,
                                               
          தழையும் கோதையும் இழையும் என்றிவை
          தைஇனர் , மகிழ்ந்து திளைஇ விளையாடும்
       
          மடமொழி ஆய்த்தவருள்  இவள்யார் உடம்போடு
          என்உயிர் புக்கவள், இன்று?
          ஓஓ!இவள் , பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,

          திருமா மெய் தீண்டலர் என்று , கருமமா
          எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
          சொல்லால் தரப்பட்  டவள்.
          சொல்லுக ! பாணியேம் என்றார், அறைக என்றார், பாரித்தார்
          மாணிழை ஆறாகச் சாறு.

          சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து, நோக்கு வாயெல்லாம்
          மிடைபெறின், ஏராத் தகைத்து
          தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்து, உடன்
          எதிர்எதிர்  சென்றார் பலர்.
          கொலைமலி சிலைசெறி செயிர்அயா சினம்சிறந்து,
         
          உருத்துஎழுந்து ஓடின்று மேல்,
          எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு,
          கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்:
                               
          அவருள், மலர்மலி புகல்எழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள், பிணைஇ
          எருத்தோடு இமிலிடைத் தோன்றினான் தோன்றி,
          வருத்தினான் மன்ற, அவ் வேறு,
          எரெவ்வம் காணா எழுந்தார்- எவன்கொலோ-
          ஏறுடை  நல்லார்; பகை?

          மடவரே , நல்லாயர் மக்கள் நெருநல்
          அடலேற்று எருத்து இறுத்தார்க் கண்டு மற்று இன்றும்,
          உடலேறு கோள்சாற்று வார்!    ஆங்கினித்
          தண்ணுமைப் பாணி தளராது எழூஉக-

          பண்ணமை இன்சீர்க் குரவையுள் , தென்கண்ணித்
          திண்தோள், திறல்ஒளி , மாயப்போர், மாமேனி,
          அம்துவர் ஆடைப் பொதுவனோடு , ஆய்ந்த
          முறுவலாள் மென்தோள் பாராட்டிச் , சிறுகுடி
          மன்றம் பரந்தது, உரை!                                            102

                                                               

      இந்தப் பாடலில் ஆயர்மகள், ஏறுதழுவுபவர் அல்லாது வேறொருவர் உடலைத் தீண்டாள் என்று ஆயர்குடியைச் சேர்ந்த எல்லோரும் கேட்குமாறு பலமுறை பறையடித்து அறிவித்த நிகழ்ச்சி பற்றிய பதிவு இடம்பெற்றுள்ளது.  ஆயர் இனப் பெண்களின் மணம், ஏறுதழுவும் வீரப்போட்டியால் நிச்சயிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  தொழுவில் மைதானத்தைச் சுற்றிப் பரண்கள் போடப்பட்டுப் பெண்கள் அவற்றில் ஏறி நின்றார்கள்.  ஆயர்குல இளைஞர்கள் காளைகளை எதிர்கொண்டு நிற்க, அவை பேரொலியோடு கடுஞ்சினம் உருத்து பாய்ந்து வந்தன.  துகள் எழுந்தன; ஆயர்கள் காளைகளைத் தம் மார்புகளால் ஏற்றார்கள்,  காளைகள் கவிழ்ந்து கொம்புகளால் குத்தின.  காளையின் கழுத்தைத் தன் தோள்களால் தழுவிய ஆயன், அதன் முதுகில் ஆடிய திமில் இடைதோன்றினான்.  காளையை அடக்கினான்.  தங்கள் காளைகளின் துன்பம் கண்டு காளைகட்குரியவர்கள் பகைத்தெழுந்தார்கள். காளையைத் தழுவியதற்கு மகிழ்வதன்றிப் பகைத்து எழுவதால் என்ன பயன் என்று புலவர் வழக்கத்தை எடுத்துக் கூறுகிறார்.
                                                                               
     ஏறுதழுவி முடிந்தபின், பண் அமைத்த குரவைக் கூத்தில் துவராடை அணிந்த பொதுவனோடு ஆயமகளைப் பாராட்டிச் சிறுகுடி மன்றத்தில், இருவருக்கும் மணச் செய்தியை அறிவித்தார்கள்.

    ஏறுதழுவுதல் என்னும் போட்டிப்பந்தயம் ஒரு வீரவிளையாட்டு.
 இதனைப் பெண் வீட்டார் சிறுகுடியில் முறையாக அறிவித்தார்கள்.  போட்டியில் பங்கேற்ற காளைகள் பெண் வீட்டாருடையவை.
   காளையை அடக்கிய ஆயனுக்கு, அக்காளைக்குரிய பெண் வீட்டார் குரவைக் கூத்தாடிய பின்னர் ஊருக்கு அறிவித்தார்கள்.
  ஏறுதழுவுதல் என்ற வீரப்பந்தய விளையாட்டு தெய்வத்தின் பொருட்டாக எடுக்கப்பட்ட சமய விழாவாக இல்லை.  அது ஆயர் (மதுரை) சமூகத்தின் மணம்சார்ந்த போட்டிப் பந்தயமாக இருந்தது.



வீரச்செயலின் இறுதியில்  :
      கறவைப் பசுவைக் கறக்க அதன் கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் சீவி, மாலை போலக் கட்டி மாட்டுகின்ற கழியாகிய சுடுபடையும், சூட்டுக்கோலும்கட்டிய தோல்பையைக் கறவைக் கலங்களைக் கொண்ட உறியோடு  சேர்த்துத் தூக்கி, கொன்றைக் குழலில் இசையெழுப்பும் வழுச்சொல்  (கொச்சை மொழி) கோவலர்தத்தம் ஆதிரையைப் பொழுதோடு வந்த கார்காலத்தில் நனைந்த சமவெளியில் பரப்பினார்.

அப்போது அசையும் திமில்களையுடைய காளைகள் பல, புழுதி மண்ணைக் கிளற, சில நிலத்தைக் குத்திச் சாட ஒன்றோடொன்று மண்டிப்பாய , அந்த மேய்ச்சல் வெளி ஒரு போர்க்களமாக ஆகியது.
                                                                               
      அதனைத் தடுக்க வந்த ஆயர்கள் அவற்றை இரண்டு கூறுகளாகப் பிரிப்பதற்காக நடுவில் சில காளைகளைச் செலுத்திய பின்னர், பசுக்கூட்டதொடு மேயும் புலத்தில் அவற்றை ஏற்றித் தத்தம் இனங்களைப் பிரித்தார்கள். காளைகளின் போர் ஓயவில்லை,  தம்முள் மோதிக் குத்தின.  அவற்றின் உடலெங்கும் குருதி வடிந்தது.  தங்களைப் பிரிக்க வந்த ஆயர்கள் ஓடுமாறு அந்தக் காளைகள் மிதித்துச் சாடி உழலைகோர்த்த மறக்கழிகளைக் குத்துவது போலக்
குத்தித் துளைத்தன.

       ஆயர்தம் காயங்களிலிருந்து வடியும் குருதியால் கைகள் வழுக்கியதால் மணலை அள்ளிப் பிசைந்து , எதிர்வந்த காளைகள் மீது ஊர்ந்தனர்.

       பின்னர் ஆய்ச்சியர் தம் காதலர் கைகோர்த்துக் குரவையாடினர், பாடினர்.

                    முயங்கிப்பொதிவேம் முயங்கிப்பொதிவவேம்
         முலைவேதின  ஒற்றி முயங்கிப் பொதிவேம்
         கொலைஏறு சாடிய புண்ணை- எம்கேளே” (தோழி)
                                                               

         பல்ஊழதயிர் கடையத் தாஅய (தெறித்த) புள்ளிமேல்
         கொல் எறுகொண்டான் குருதிமயக்குறப்
         புல்லல் எம் தோளிற்கு அணியோஎம்கேளே “ (தோழி)
         ஆங்குப் போர் ஏற்று அருந்தலை அஞ்சலும், ஆய்ச்சியர்
         காரிகைதோள் காமுறுதலும் இவ்விரண்டும்
         ஓராங்குச் சேரல் இலவோ எம்கேளே” (தோழி)
         கொல்ஏறு கொண்டான் இவள்கேள்வன் , என்று ஊரார்
         சொல்லும் சொல்கேளா (கேட்டு) அளைமாறி (மோர்விற்று) யாம்வரும்
         செல்வம் எங்கேள்வன் தருமோ எங்கேளே” (தோழி)
                                                                                 106ம் பாட்டு முல்லைக்கலி
         
சங்க இலக்கியத்தில் மட்டுமின்றிப் பல்லவ காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத்திலும் ஏறு தழுவுதலின் சிறப்பு பொதிந்து உள்ளதை நம்மால் உணர முடிகிறது.  அதிலும் குறிப்பாக பெருமாளுக்கே உரிய நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் திருவாய்மொழியில் வதுவை, பெருமாளை (கிருஷ்ணன்) நோக்கி ஏழு காளைகளைஅடக்கி வந்தால் தான் உன்னை மணப்பேண் என்று பெருமாளுக்கு வீரமொழி விடுவதை நம்மால் உணர முடிகிறது.

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்   --- திருவாய்மொழி  (3217)
அன்று உருஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!
                          என்னும் திருவாய்மொழி  ( 3356)


சல்லிக்கட்டின் பெயர்க் காரணம் :
      சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  அதோடு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக் காசு என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.  மாட்டை அணையும் வீரருக்கு பணமுடிப்பு சொந்தமாகும்.  இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது.  பேச்சுவழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு ஆனது என்றும் கூறப்படுகிறது.             
           
வகைகள்
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

வேலி ஜல்லிக்கட்டு
வேலி ஜல்லிக்கட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.  அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
    
வாடிவாசல் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வடம் ஜல்லிக்கட்டு
வாடா தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டுஎன்ற பெயரில்  20 அடி நீளக் கையிற்றால் காளையைக் கட்டி இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

ஆய்ச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவதலும் :
ஏறு தழுவதலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது.  குரவைக் கூத்து ஏறு தழுவதலுக்குரிய  நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது , ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது, ஊர் பொதுமன்றத்தில் நிகழும் முதல் நாளின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுக்களையும், ஏறு தழுவிய நாளையின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுக்களையும் ஆயர் மகளிர் பாடுவர். 
                                   
ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையுடதாய் அமைந்த்திருந்தது.  காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு.  இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறு தழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.

ஏறு தழுவதுலும் ஜல்லிக்கட்டும் :

ஏறு தழுவதுலுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன.  முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது.  தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக  உள்ளது. சல்லிக்கட்டு தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது.  ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை.  ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது.  அம்மை, வைசூரி, போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும் மழையில்லா வறட்சிக் காலங்கலிலும் , பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும் .  முற்காலத்தில் இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பது வேண்டுகோளாய் அமைந்தது .

மற்ற நாடுகளில் காளைப் போர் :

      ஸ்பெயின் , போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது.  காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே  இக்காளைப் போரின் நோக்கம்.  இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் ஏறு தழுவுதலின் நிலை :

இவ்வாறு தொடங்கிய வீரச் செயலானது காலப் போக்கில் ஆண்டிற்கு ஒருமுறை வீர விளையாட்டாக மாறி விட்டது.  தமிழனால் கொண்டு வரப்பட்ட இச்செயலை   பிற்காலத்தில்   உருவாக்கப்பட்ட   அரசாங்கத்தால்    தடை செய்யப்பட்டது.  மனித சமூகம் உருவான போதே அஃறினை உயிரினங்களும் புல் பூண்டு வகைகளும் வளரத் தொடங்கின.  பல்வேறு நிலையில் மனிதனின் வளர்ச்சியை நாம் உற்று நோக்கும் பொழுது அஃறிணையையும் உயர்திணையையும் பிரித்துப்  பார்க்க இயலாது  என்பதுதான்  மறுக்க முடியாத உண்மை.  வேத இதிகாசங்களிலும் கூட உயிரினங்களை யாகத்தில் சுட்டுத் தின்ற பதிவுகள் இருக்கின்றன.  அவ்வாறு இருக்க கார்ப்போரட் மயமாக்கப்பட்ட இன்றைய நிலையில்  2011  ல் காட்சி படுத்தப்பட்ட  விலங்குகளின் பட்டியலில் காளையும் சேர்க்கப்பட்டது.  அமெரிக்காவின் நிறுவனமான பீட்டா’ ( PEOPLE FOR ETHICAL TREATMENT   OF ANIMALS),    இந்திய அரசின் ஆதரவோடு காளையை அப்பட்டியலில் சேர்த்தது.  அதே அமைப்புதான் கடந்த  முப்பது ஆண்டுகளில் ஐம்பதாயிரம் உயிரினங்களை கொன்றுள்ளது என்ற புள்ளி விவரம் நமக்குத் தெரிய வருகிறது. ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டுக் கலாச்சாரத்தை அறியாமல் பொது நிலையிலிருந்து முடிவெடுத்தல் கூடாது. 

தமிழகத்தின் தென் பகுதியில் மட்டும் பொங்கல் விழா அன்று ஒரு சாராரால் சல்லிக்கட்டுஎன்ற பெயரால் காளையை அடக்குதல் (ஏறு தழுவுதல்) நடைபெற்றுவருகிறது.  இதை   2014   ல் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து , கடந்த மூன்று ஆண்டுகளாக தடை செய்யப் பட்டுள்ளது.  இதனை  எதிர்த்து  மக்கள் போராடினர். மக்கள் பிரதிநிதிகளாக  உள்ளவர்கள்  மக்களின்  உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்காமல் ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை மழுங்கடித்தனர்.

போராடுவதே தவறோ?

காலந்தோறும் எந்தத் தடையும் இல்லாமல் தரணி முழுவதும் ஆண்டின் முதல் மாதம் பொங்கல் விழா அன்று அலங்காநல்லூரை பார்த்தே இருக்கும்.  தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி மக்கள் பொங்கல் விழா அன்றே விழாவைப் புறக்கணித்து போராடத் துவங்கினர். அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் ஓரிரு நாட்கள் தொடரவே அது தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டமாக வடிவெடுத்தது.  புரிந்தோ புரியாமலோ ஆரவாரத்துடன் ஒன்று சேர்ந்த இளைஞர்கள் , மாணவர்கள், பொது மக்கள் , தமிழன் என்ற ஒற்றைப் புள்ளியில் தன்னார்வுக் குழுக்களின் பின்னணியான ஒன்றிணைப்பில் போராட்டத்தை தலைமை தாங்கவோ, ஒருங்கிணைத்து கொண்டு செல்லவோ யாரும் முன் வராமல் போனது பெரும் அவலம்தான்.  அரசு தரப்பிலிருந்து,  போராடிய மாணவர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுக்க வில்லை. அவசர சட்டம் இயற்றிய பின் சட்ட வல்லுனர்களைக் கொண்டு போராடினவர்களுக்கு விளக்கமளிக்காதது பின் வந்த விளைவுக்குக் காரணமாகும்.  ஏழு நாட்கள் பொறுமை காத்த காவல் துறை, அரசின் அனுமதியோடு 23.01.2017 அன்று வெறி நாய்கள் போல பாய்ந்து குதறியது.  காவல் துறையினரே சட்ட ஒழுங்கைக் காப்பதாக சொல்லி அத்துமீறலில் ஈடுபட்டு அப்பாவி மக்களை பலியாக்கினார்கள். இன்றைக்கல்ல, என்றைக்கும் தமிழ் நாட்டில் நீர்நிலைகளையும் தாதுப் பொருட்களையும் இந்த அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறது.  தட்டிக் கேட்கும் தமிழர்களை சிந்திக்க விடாமல் அடக்குமுறையை ஏவுகிறது.  இனி வருகின்ற இலக்கியப் படைப்புகள் எல்லாம் இது போன்ற சமூக நிகழ்வுகளை போருன்மைகளாகக் கொண்டு  படைக்க வேண்டும்.  உதாரணமாக, காந்தியின் கொள்கையை பரப்புவதற்கு நாமக்கல்
கவிஞர், பெரியாரின் கொள்கையை பரப்புவதற்கு பாவேந்தன், இந்தியா விடுதலை அடையுமுன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற  பாரதி, இந்தப் பட்டியலை இன்னும் நாம் கடக்க வில்லை.  படைப்போம் தடைகளை உடைப்போம்.

முடிவுரை :

சங்கத் தமிழர்கள் மதிப்பும் மானமும் மிக்க மறத் தமிழர்களாக வாழ்ந்தனர்.  நாகரிகத்தின்  உச்ச நிலை சமூக மாற்றத்தில் மேலை நாடு கலாச்சாரங்கள் கலப்பால் தமிழ் பண்பாட்டுக் கலாச்சாரங்கள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வருகிறது.  இச்சூழலில் ஏறுதழுவல் என்பது தமிழர்களிடையே காளைகளை அடக்கி ஆண்டுக்கொருமுறை காளையை உற்சாகப்படுத்தி மகிழ்கின்றனர்.  இயற்கையோடு வாழ்ந்து வந்த மக்கள் நீருக்கும் நிலத்துக்கும், விளையும் பயிருக்கும் உரிமையற்றவர்களாக ஆகினர்.  மண்ணையும் மக்களையும் ஆதிக்க சக்திகள் பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். அதனை எதிர்த்து மீண்டும் இயற்கையைப் பண்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு இன்றைய கால மனிதர்கள் , இயற்கையோடு வாழ்வதா , இயந்திரத்தோடு வாழ்வதா என்று   போராடி வருகின்றனர்.

ஏறு தழுவுதல் , ஏறுகோள், மாடுபிடித்தல் , ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவதல் அழைக்கப்படுகிறது. 
                       
இவ்விளையாட்டு முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையாதாகப் பண்டைக் காலத்தில் இருந்தது.  முல்லை நில மக்களின் வீர விளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.  பண்பாட்டுத் திருவிழாவாகவும் மக்களின் சமயம் சார்ந்த திருவிழாகவாகவும் , இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் ஏறுதழுவுதல் நடைபெறுகிறது.  அது இன்று ஜல்லிக்கட்டாக மாறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டில் அடிப்படையான ஒரு நியதி, மனிதர் ரத்தம் சிந்தினாலும் காளையின் ரத்தம் ஒரு துளிகூட சிந்தப்படக்கூடாது . ஏனென்றால் அது கால்நடையைப் போற்றும் பண்டிகை.
     

-----------
சி. வத்சலா லக்ஷ்மிநாராயணன்,
முனைவர் பட்டஆய்வாளர்,
ராணி மேரி கல்லுரி,                                                                   
சென்னை - 600004