Wednesday 15 March 2017

பெருமாள் முருகன் கவிதைகள் – சிறுபார்வை



பெருமாள் முருகன் கவிதைகள் – சிறுபார்வை


கவிதை என்பது ஒரு கயிறு அல்ல
அது ஒரு வலைப் பின்னல்
-    அடோனிஸ்
இதை இங்கு குறிப்பிடக் காரணம் உண்டு. நவீன கவிதைகள் புரியக்கூடாது என்பதற்காகவே எழுதப்பட்டவை – எழுதியவனுக்கே புரியாதவை – ஏதோ நான்கு சொற்களைக் கலைத்துப்போட்டு கவிதை என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்பது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

அப்படியல்ல. உண்மை என்னவென்றால், அவை வாசகனுக்கு அதிகம் வேலை வைக்கின்றன. முதல் வாசிப்பிலேயே முழுவதும் புரிந்து கொள்ளக் கூடியனவாக அவை இல்லை. தான் பேச வருகிற கருத்தை ஒளித்து வைத்து இருப்பதை இருக்கின்றன.

      பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
      சால மிகுத்துப் பெயின்.

இந்தக் கவிதையை முதல் வாசிப்பிலேயே எல்லாரும் புரிந்து கொள்ள முடியுமா என்ன?

நமது நாட்டுப்புறப் பாடல்களிலும், விடுகதைகளிலும் இருக்கும் நாசூக்கான தன்மையை நவீன கவிதைகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கவிதைகள் வலைப்பின்னல்களாக இருப்பதனால் தான் கட்டுரைகளிலிருந்து வேறுபடுகின்றன.

ஆனால் ஆரம்பநிலை வாசகர்களுக்கு இக்கவிதைகளின் புரியாமை சோர்வையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்கவே முடியாது. தொடர் வாசிப்பின் மூலமே இச்சிக்கல் விடுபடும் என்பது அனுபவ உண்மை. இவற்றை எல்லாம் இங்கு சொல்ல வருவதன் காரணம் நவீன கவிதைகளின் புரியாமை குறித்து நான் திணறிக் கொண்டிருந்த காலத்தில் கதவாக அமைந்தவை பெருமாள் முருகனின் கவிதைகளே.

பெருமாள் முருகனில் கவிதைகள் வாசகனுக்கு அதிகம் சோர்வைத் தராதனவாக இருக்கின்றன.

சங்கக்கவிகள் தொடங்கி தற்போதைய கவிதைகள் வரை பரவலான வாசிப்பையும், தெளிவான பார்வையையும் கொண்டிருப்பவர்களுள் பெருமாள் முருகனும் ஒருவர். இந்த வாசிப்பு தொடர்ந்து அவர் படைப்புலகில் இயங்குவதற்கு முக்கியமான ஒரு கூறாக இருக்கிறதென நான் கருதுகிறேன். இதன் பாதிப்பு அவரின் படைப்புகளிலும் இல்லாமல் இருப்பது இல்லை. நவீன கவிகள் ஏன் பழங்கவிகளை படிக்க வேண்டும் என்பதற்கான காரணம் பெருமாள் முருகன் போன்ற கவிஞர்களை வாசிக்கையில் புரியவரும்.

இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்பதை எக்காலத்திலும் யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. காலமும் மனித வாழ்வியலும் படைப்புகளின் வடிவங்களையும் இன்னபிற கூறுகளையும் முடிவு செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை, கவிஞன் சொல்ல வருகிற இடத்துக்கு நெருக்கமாக நிறுத்தி விட்டால் அது கவிதை, அவ்வளவே. யாப்பிலோ, சந்த நயத்திலோ இருந்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

என்னோடு உரையாடும் ஒருவர், சொல்ல வருகிற கருத்துக்கு மிக நெருக்கமாக ஓரிரு சொற்கள் கொண்டு நிறுத்துமாயின் அச்சொற்களும் என்னைப் பொறுத்தளவில் கவிதைகளே.

இப்படி பார்க்கும் பொழுது இசை, ஒவ்வியம் என எல்லா கலைகளுக்குள்ளும், கவித்தன்மை இருப்பதாக நான் கருதுகிறேன்.

கவிதைகள் மனத்தை பக்குவப்படுத்துகின்றன. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவனை ஆசுவாசப்படுத்துகின்றன. கவிதைகளின் பொதுத்தன்மையாக கருதுவது இதைத்தான்.

எல்லாப் படைப்பாளர்களுக்கும் கவிதையோடு ஒரு நெருங்கிய உறவிருப்பதை பார்க்க முடிகிறது. பெருமாள் முருகன் ஒரு கதை சொல்லியாக நன்கு அறியப்பட்டவர். அவரும் தன் படைப்புகளின் ஆதிவடிவம் கவிதை என்றுதான் குறிப்பிடுகிறார். கதைச் சொல்லியாக இருக்கும் ஒருவர் கவியுலகிலும் தொடர்ந்து இயங்குவது அவ்வளவு எளிதல்ல.

பெருமாள் முருகனின் கவிதைகளில் காட்சிப்படுத்துதல் வெகுநேர்த்தியாக அமைந்து விடுவதை பார்க்க முடிகிறது. அவை ஒரு உரையாடல் போலவும் அமைகின்றன.

      ‘கைய மடக்கி இறுக்கி
      ஒரு பையனக் குத்துனாம்பா’
      சொன்னான் அவன்

      ‘கோள்மூட்டி கோள்மூட்டி’
      மிரட்சியோடு என் முகத்தைப் பார்த்தான்

      குறுஞ்சிரிப்பால் உற்சாகமாகி
      சண்டைக் காட்சியை விவரிக்கத் தொடங்கினான்
      ‘பெரீய்ய இவன்னு நெனப்பு அவனுக்கு’
      ‘அவந்தாம்ப்பா மொதல்ல குத்துனான்
      வேணும்னா பூபதியக் கேட்டுப்பாரு’

      எதிரிக்குக் குணாம்சங்களைக் கொடுத்தல்
      தன் தரப்பை நியாயப்படுத்துதல்
      சாட்சிகளை உருவாக்குதல்
      என வெகுதேர்ச்சியுடன்
      அவன் விவரிப்பு தொடர்ந்தது

      வெறும் சண்டையை மட்டும்
      விவரித்திருக்கக் கூடும் அவன்
      கேட்பவன்
      அப்பனல்ல எனில்.

‘கேட்பவன்’ என்னும் இக்கவிதை கதைப் போன்ற காட்சிப்படுத்துதலில் இருக்கிறது.

தன் அனுபவங்களை கவிதையாக்குகிறேன் என்று பல எழுத்தாளர்களையும் போலப் பெருமாள் முருகன் குறிப்பிட்டாலும், அவருடைய கவிதைகள் கிராமப்புற வாழ்வு சார்ந்தும், நகர வாழ்வின் அவசரங்கள் குறித்து வருந்துவதாகவும், மரபுசார் இழப்புகள் குறித்து வருந்துவதாகவும் இருக்கின்றன.

‘வழிப்பறி’ என்னும் கவிதையில் மலையேறும் பேருந்து பயணிகளிடமிருந்து, யானைகள் தண்ணீர் பாட்டிலை பிடிங்கிச் செல்வது போன்ற காட்சியை வைத்திருப்பார்.

‘புகழ் சேர்க்கும் ஊர்’ என்னும் கவிதை கோழிப்பண்ணைகளை போல விற்பனை கூடங்களாகி விட்ட நாமக்கலின் பள்ளிக்கூடங்களை பகடி செய்வது போல இருக்கும்.

இது போன்ற கவிதைகள் மட்டுமல்லாது, அக உணர்வின் சொல்ல முடியாத பல பகுதிகளைக் கூட கவிதைகளில் கொண்டு வைப்பது பெருமாள் முருகனின் சிறப்பு.

      நான் தவறுகள் செய்கிறேன்
      தொடர்ந்து செய்கிறேன்
      .....................
      ஏன் இப்படித் தவறுகள் செய்கிறேன்
      எதனால்
      அத்தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்வதில்லை
      நிஜமாகவே
      எனக்குத் தெரியவில்லை
      ஆனால்
      என் தவறுகள்
      எல்லோருக்கும் தேவைப்படுகின்றன.

தன் அம்மா குறித்து அவர் பேசவரும் கவிதையில் கூட அவர்கள் காலத்து பெண்களின் உழைப்பை பிரதானப்படுத்துகிறார்.

      அம்மாவின் ரேகை
      சிற்றுருளை
      அகண்ட வரப்பு
      காம்பற்ற மண்வெட்டி
      வெட்டுப்பட்ட அடிமரம் .......
      எல்லாவற்றிலும் ஓர் ஒற்றுமை
      வரிகள் சிதைந்து
      தழும்புகள் நிறைந்த ரேகை

சாதி குறித்து அவர் பேசியிருக்கும் ஒரு கவிதை மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். (அவர் கதைகள் சாத்திய பிரச்சனைகளை மேலும் ஆழமாக பேசுபவை).

      சாதி
      என் தோலாக இருக்கிறது
      சிறு சிராய்ப்பும் வலிதான்
      வேலியின்மீது
      உரித்து உதறிய
      பாம்புச் சட்டை
      நைந்து உதிர்வதையே
      பார்த்துக் கொண்டிருக்கிறேன்

முன்னதாகவே எழுதிவிட்டாலும் அவர் சந்தித்த பிரச்சனையோடு இக்கவிதை பெரிதும் ஒத்துப்போகிறது. அதுமட்டுமின்றி, சாதியை உதற முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கும் மனிதர்களின் எதார்த்த உளவியலாகவும் இக்கவிதை இருக்கிறது.

இப்படியாக பெருமாள் முருகன் கவிதைகளின் பேசுபொருள்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. மேலும், அவை போலித்தன்மையற்று நேர்மையான உணர்விலிருந்து வெளிப்பட்டவையாகத் தெரிகின்றன.
     

-----------
சி.சரவணன்,
மாநிலக்கல்லூரி,
சென்னை – 600005.
26/02/2017
அந்தகக்கவிப் பேரவையில் படிக்கப்பட்டது

No comments:

Post a Comment