Thursday 23 March 2017

குறிஞ்சிப்பாட்டில் சிக்மண்ட் ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சி



குறிஞ்சிப்பாட்டில் சிக்மண்ட் ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சி
(அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தில் (30/01/2017) படிக்கப்பட்டது)

முனைவர் கெ.இரவி,
தமிழ்த்துறை,
அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி,
நந்தனம், சென்னை – 600035.

தொலைபேசி எண் : 9444473553, 9444143686
மின்னஞ்சல் முகவரி : ravigphd@gmail.com

முன்னுரை
உலகத்தை தோற்றுவித்து, ஒழுக்கத்தையும் பல்வேறு நெறிகளையும் அறிவுறுத்தி, உலகத்தில் பிறமொழிகள் அழிந்தாலும் அழியாமல் தொன்றுதொட்டு நிலவி வரும் மொழி தமிழ்மொழி. அதன் உயிர்நாடிகளாக விளங்குபவை சங்க இலக்கியம். சங்க காலத்தில் அகத்தையும், புறத்தையும் இரு கண்களாகப் போற்றினர். சங்க இலக்கியம் பாட்டும், தொகையும் சேர்ந்த கலவையாகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். பத்துப்பாட்டில் பலரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் நூல் குறிச்சிப்பாட்டாகும். இந்தக் குறிஞ்சிப்பாட்டு, அக நூலாக அமைந்து பல்வேறு உளவியல் கருத்துக்களும், அதனுள் ஆளுமை வளர்ச்சியும் பொதிந்து காணப்படும் சிறப்புமிக்கது. இது எக்காலத்துக்கும் பொருந்தும் தன்மையும் மேன்மையும் உடையது. பழங்காலத்தில் படைக்கப்பட்ட குறிஞ்சிப்பாட்டில், இக்காலத்தில் தோன்றி வளர்ந்து வரும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சி ஒத்துக் காணப்படுவதனை வெளிக்காட்டும் பொருட்டு குறிச்சிப்பாட்டில் சிக்மண்ட் ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சி குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.

குறிஞ்சிப்பாட்டு
ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் பெருமையை அறிவுறுத்தக் கபிலர் பாடியது. இது 261 அடிகளை உடையது. ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. குறிஞ்சித்திணையில் நீண்ட அடிகளை உடையதனால், இதனைப் ‘பெருங்குறிஞ்சி’ என்றும் கூறுவர்.

“குறிஞ்சி – புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய ஒழுக்கம். இதன்கண் இயற்கைப் புணர்ச்சியும், பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறப்படுதலின் இஃது இப்பெயர் பெற்றது என்பார் நச்சினார்க்கினியர்.

குறிஞ்சித்திணையில்,

எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல்
கூறுதலுசா அதல், ஏதிடு, தலைப்பாடு
உண்மைசெப்புங் கிளவியொடு தொகைஇ
அவ்ஏழு வகைய என்மனார் புலவர்

எனும் தொல்காப்பியர் கூற்றுப்படி, கூறுதல் உசாதலொழிந்த ஆறும்  தோழி, செவிலிக்குக்கூறி அறத்தொடு நிற்பதும், குறிஞ்சி நில வளத்தையும், மலர்களையும், ஒழுக்கத்தையும் கூறும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு.

கபிலர்
பத்துப்பாட்டில் திணையின் பெயராலும், ‘பாட்டு’ எனும் பெயராலும் அமைந்த இரண்டாவது நூல் குறிஞ்சிப்பாட்டு. இதனை இயற்றிய கபிலர், காரி, பேகன், ஆரிய அரசன் பிரகதத்தன், வேள்பாரி, சேரமான் செல்வக்கடுங்கோ, விரிச்சிக்கோ, இருங்கோவேள் போன்ற அரசர்களைப் பாடுகிறார். பல அரசர்களின் ஊர்களிலும் மிகுதியாக வேள்பாரியின் ஊரிலும் தங்கியுள்ளார். இவருக்குச் சொந்த ஊர் இருந்ததாகச் சான்று இல்லை.

புலவர்கள் போற்றும் கபிலர்
சங்க காலப் புலவர்களில், கபிலர் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடியதாக 235 பாடல்கள் உள்ளன. கபிலரை அவருடை சம காலத்துப் புலவர்கள் போற்றுகின்ற அளவில் சிறப்புமிக்கவராகத் திகழ்ந்துள்ளார்.

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த வேள்வி விளங்கு புகழ்க் கபிலன்

என்று இளங்கீரனாரும்,

      புலனழுக் கற்ற அந்தணாளன்
      இரந்து செல் மாக்கட்கினியிடனின்றிப்
      பரந்திசை நிற்கப் பாடினான்
      பொய்யா நாவிற் கபிலன்

என மாறோக்கத்து நப்பசலையாரும்,

      உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
      வாய்மொழிக் கபிலன்

என்று மதுரை நக்கீரனாரும்,

      ... வயங்கு செந்நாவின்
      உவலை கூராக் கவலையில் நெஞ்சின்
      நனவிற் பாடிய நல்லிசைக்
      கபிலன்

எனப் பெருங்குன்றூர் கிழாரும் புகழ்கின்றார். பாரி வள்ளலின் அவைக்களப் புலவராகவும், அவனது அன்புத் தோழனாகவும் இருந்தவர் கபிலர். பாரியை மூவேந்தர்கள் போர் தொடுத்து வந்த போது, அவர்களை எதிர்த்துச் சாடினார். பாரியின் நாடு வறுமையில் இருந்தபோது கிளிக்கூட்டங்களைப் பழக்கி வெளியிலிருந்து நெற்கதிர்களைக் கொண்டு வந்து சேர்க்கவைத்துப் பஞ்சம் தீர்த்த பேராற்றல் உடையவர். பாரி இறந்ததும் அவனது மகளிருக்கு மணம் முடிக்க இருங்கோவேள் விரிச்சிக்கோவை வேண்டி நின்று, அவர்கள் மணம் முடிக்க மறுத்தபின் மன்னர்களை வெறுத்து வடக்கிருந்து உயிர்நீத்த உன்னதமானவர்.

      கபிலரைப்பற்றி மது.சி.விமலானந்தம், அறம்புரி நெஞ்சர்; உண்மை, வாய்மை, மெய்மை – மூன்றும் தூயர்; மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்; நட்பிற்கு இலக்கணம்; நன்றிக்கு அணிகலன்; உண்மை – வன்மைக்கு உரைகல்; நட்பின் எல்லைக்கு – அன்பின் திறத்துக்கு, கபிலர் – பாரி கலந்த கேண்மை; தலையாய – நிலையாய – உலையாத உயர் சான்றாகும். கண்ணகி பொருட்டுப் பேகனைக் கண்டு பாடிய கவிதை கருணையுள்ளம் காட்டும். இங்ஙனம் அன்பிலும் அறிவிலும் சிறந்த சங்கச் சான்றோர் என்று கூறுகிறார்


குறிஞ்சிப்பாட்டில் கபிலரின் படைப்பாளுமை
அன்னையை வாழ்த்தித் தோழியின் கூற்றாகத் தொடங்குகிறது குறிஞ்சிப்பாட்டு. தலைவியின் மேனியில் விளங்கும் வேறுபாட்டிற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து கொண்டு, அதற்கு இறைவன் முருகனே காரணம் என்று முடிவெடுத்துள்ளார். அதற்குக் காரணம் என்னவென்று நான் தலைவியிடம் கேட்டேன். தலைவி என்னிடம் கூறிய காரணங்களைச் சொல்கிறேன். கோபம் கொள்ளாமல் மெதுவாகக் கேளுங்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் அன்னையே! எங்களைத் தினைப்புனம் காக்க அனுப்பினீர் அல்லவா. நீங்கள் அனுப்பியதால்தான் நாங்கள் போனோம். அதனால் வந்த விளைவு இது.

தினைப்புனம் காக்க நாங்கள் பரண் மேலிருந்து கிளி முதலியவற்றை ஓட்டிக் கொண்டிருந்தோம். பின்னர் அருவியில் குளித்தோம். மலர்களைப் பிரித்துக் கூந்தலில் அணிந்தும், தழை ஆடைகளை உடுத்தியும், விரும்பிய பாடல்களைப் பாடிக்கொண்டு அசோக மரத்தின் நிழலில் இருந்தோம். அப்போது அந்த வழியாக வீரமிகு ஆணழகன் ஒருவன் எங்கள் எதிரில் வந்தான். அவனுக்கு முன்னாள் வந்த நாய்கள் எங்களைச் சூழ்ந்தன. அவன் அந்த நாய்களை விரட்டிவிட்டு எங்களைப் பார்த்துப் புகழ்ந்து விட்டு, வழியில் என்னுடைய யானை முதலிய சில விலங்குகளை எதிரில் கண்டீர்களா என்று வினவினான். நாங்கள் எதுவும் பேசவில்லை. அதற்கு அவன் என்னுடைய விலங்குகளைப் பற்றிக் கூறா விட்டாலும், என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசக்கூடாதா? என்று கேட்டுச் சென்று விட்டான்.

வழியில் வேடனால் துரத்தப்பட்ட யானை மரங்களை முறித்துக் கொண்டு எங்களைத் தாக்க முற்பட்டது. அப்போது அதனை அம்பினால் வீழ்த்தி எங்களைக் காத்தான் அந்த ஆணழகன். பின்னர் நாங்கள் கைகோத்து ஆற்றில் குதிக்கையில் கால் இடறியதால் வெள்ளத்தில் அடித்துச் செல்ல நேரிட்டது அங்கு  தலைவியை அவன் காப்பாற்றினான்,  அப்போது அவனிடம் காதல் கொண்டாள் தலைவி. மாலைவரை களவுஒழுக்கம் நீண்டது. பின்பு ஊரின் வெளியே விட்டுவிட்டு அனைவரின் விருப்பத்தோடு திருமணம் செய்துகொள்வோம் என்று சூளுரை செய்துவிட்டுச் சென்றான்.

இரவில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். தலைவியைக் காணவரும் வழியில் காவலாளி, விலங்குகள்,  நம்மால் தலைவனுக்கு ஏற்படும் தீங்குகளை எண்ணித் தலைவி உள்ளம் வருந்தும். இப்போது அவன் வராமையால் தலைவிக்கு உடலில் வேறுபாடு காண வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் தலைவன்தான். தலைவியின் நோயைப் போக்கிக் காக்க வேண்டும் என்று பக்குவமாகத் தோழி குறிப்பிடுவது போன்று கபிலர் அழகாகக் குறிஞ்சிப்பாட்டைப் படைத்துள்ளார்.

கபிலரின் தனித்துவம்
      தலைவனின் அழகை, எண்ணெயும் மயிர்ச் சாந்தும் பூசி விரலால் புலர்த்தி அகிற்புகை ஊட்டிய, வண்டுகள் மொய்க்கின்ற தலையில், பலவகை மலர்களை அணிந்திருந்தான். மார்பில் அணிந்திருந்த பூமாலை, ஆபரணத்தோடு விளங்கியது, கையில் அழகிய வில் ஒன்றை ஏந்தி அம்புகளைத் தெரிந்து பிடித்து, இடையில் நுண்ணிய வேலைப்பாடு உடைய கச்சைக் கட்டி, காலில் வீரக்கழலை அணிந்திருந்தான் என்று தோழியின் வாயிலாகப் புலவர் வருணித்துக் காட்டுகிறார்.

      சங்கப்பாடல்களில் தலைவன் (ஆண்), தலைவியை (பெண்) வருணிப்பது மிகுதி. ஆனால் தலைவனைத் (ஆண்), தோழி (பெண்) வருணிப்பது எண்ணத்தக்கது. கபிலர் ஆணைப் பெண் வாயிலாகப் புகழ்ந்துள்ளதன் மூலம் பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை அறியலாம். மேலும் பெண்ணினத்திற்கும் ஆளுமை உண்டு என்பதைப் புலப்படுத்துவதாகவும் தெரிகிறது.

      தமிழர்கள் இயற்கையோடு இயைந்தவர்கள் என்பதைக் கபிலர் இயற்கையான 99 மலர்களைப் பற்றி 35 (வரிகள்) அடிகளில் பாடியுள்ளார். ஐந்திணைகளிலும் மலரும் மலர்களை ஒரே திணையில் பாடியுள்ளதோடு, அதனைத் தோழியின் வாயிலாகக் குறிப்பிடுவதும், பெண்ணின் ஆளுமையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதாக விளங்குகின்றது.

      ஆரிய அரசனுக்குத் தமிழ்ப் பண்பாட்டை விளக்கப் பாடியமையால் வேற்று மொழியாளனுக்கும் தமிழின் சிறப்புப் புரிய வேண்டும் எனும் விருப்பம் கபிலருக்கு இருந்தமை வியப்புக்குரியது.
     
      முத்தும், மணியும், பொன்னும் அமைந்த அணிகலன் கெட்டால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால், மனிதனின் பண்பும், சால்பும் கெட்டுவிட்டால் மீண்டும் நிலைநிறுத்த முடியாது என்பதை,

      முத்தினும் மணியினும் பொன்னினு மத்துணை
      நேர்வருங்குரைய கலங்கெடிற் புணருஞ்
      சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
      மாசறக் கழீயி வயங்குபுகழ் நிறுத்த
      லாசறு காட்சியை யர்க்கு மந்நிலை
      யெளிய வென்னார் தொன் மருங் கறிஞர்

என்ற பாடலின் மூலம் மனிதர்கள் பண்போடும், சால்போடும் வாழ வேண்டிய இன்றியமையாமையைக் கபிலர் வலியுறுத்துவார்.

      பாரியின் நண்பனான கபிலர், பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தர்களிடமும் பாரியின் சார்பாக வாதிட்டுள்ளார். (9) பாரியின் சார்பாக எதிரிகளிடம் அவர் வாதிடும் போது ஏற்பட்ட அச்சத்தைக் குறிஞ்சிப்பாட்டில் தோழியின் வாயிலாகத் தலைவி – அன்னை இவர்களுக்கு நடுவில் ‘இருபேரச்சம்’ கொண்டு பேசுவதாகப் புலவர் படைத்துக் காட்டுகிறார். இதனை,

      இகல்மிக் கடவும் இருபெருவேந்தர்
      வினையிடை நின்ற சான்றோர் போல
      இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலென

எனும் அடிகளில் அறியலாம். கபிலர் குறிஞ்சிப்பாட்டை நெடிய பாடல்களைக் கொண்டு பாடியுள்ளமையால் நெடும்பாட்டு என்றும் பெருங்குறிஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இவர் குறிஞ்சித் திணையிலேயே அதிகமான பாடலைப் பாடியுள்ளதால் குறிஞ்சிக் கபிலர் என்றே அழைக்கப்படுகின்றார்.


ஆளுமை வளர்ச்சி சொற்பொருள் விளக்கம்
      ஆளுமை என்ற சொல்லானது ஆங்கிலத்திலுள்ள பர்சனாலிட்டி (Personality) என்னும் சொல்லிற்கு இணையானது. பர்சனாலிட்டி என்னும் சொல், இலத்தின் சொல்லான பர்சனா (Persona) என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். பர்சனா என்றால் அக்காலக் கட்டங்களில், நடித்தவர்கள் நாடக மேடைகளில் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு முகமூடி அணிந்து நடிப்பதைக் குறிக்கும். பர்சனாலிட்டி என்னும் சொல் தோன்றிய காலத்தில், ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம் என்பதாக இருந்தது. ஆனால் இன்று, ஆளுமை என்ற சொல் வழக்கில் பல பொருள்களில் எடுத்தாளப்படுகிறது. உளவியல் அகராதி, ஆளுமை என்றால் நன்றாகவும், அழகாகவும், திடமிக்கவராகவும், இயல்பு, நேர்மை, நட்புணர்வு, அன்பு, பொறாமை, ஊக்கம், அச்சம், இறக்கம், நன்றியுணர்வு, தந்திரம் போன்ற பண்புகளைக் கொண்ட இயல்பும், நடத்தையும் சேர்ந்த மொத்தக் கலவை என்று குறிப்பிடுகின்றது. தமிழில் ஆளுமை என்ற சொல்லுக்குப் பதிலாக ஆளுகை, ஆள்வினை எனும் சொற்கள் கையாளப்படுகின்றன.


சிக்மண்ட் ஃப்ராய்ட் (SIGMUND FREUD)
      உளப்பகுப்பாய்வில்  குறிப்பிடத்தக்கவரான சிக்மண்ட் ஃபிராய்ட், நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையையே அடியோடு மாற்றியமைத்தவர். உளப்பகுப்பாய்வு அதன் தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாடு என்ற அளவில் இருந்தது. அதனைப் பொது உளவியலாக்கினார். உளப்பகுப்பாய்வினை மூன்று வகையாகப் பிரித்தவர். ஆளுமை வளர்ச்சியை மூன்றாகப் பிரித்தார். அவை 1) ID (பண்படா உள்ளம்) 2) EGO (தன்முனைப்பு) 3) SUPER EGO (மேம்பட்ட தன்முனைப்பு) என்றார்.


குறிஞ்சிப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி
குறிஞ்சிப்பாட்டினில் தலைவி தன் தோழியோடு தினைப்புனம் காக்கச் செல்கிறாள். அவ்வாறு செல்லும் வழியில் தலைவன் ஒருவனை எதிரில் காண்கிறாள். தன்னுடைய உருவ அழகில் தலைவன் மயங்கி, தலைவியிடம் ஏதாவது பேச வேண்டுமென்றே பேச்சுக் கொடுக்கிறான். தலைவனைக் கண்டவுடன் உடனே தலைவிக்குக் காதல் வந்து விடுகிறது. எனினும் அருகில் தோழி இருக்கின்றாளே என்று மனத்தைத் திடப்படுத்திக் கொள்கிறாள். சிறிது தூரம் சென்றவுடன் எதிரில் யானையின் பிளிற்றினையும், அது தன்னைக் கொல்ல வருவதும் கண்டு அஞ்சுகிறாள். தலைவன் அந்த யானையை அம்பு எய்து கொல்கிறான். அப்போது தலைவன் மீது இன்னும் காதல் மிகுதியாகிறது. இப்போதும் தலைவியின் உள்ளத்தில் தோழியைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் ஐயுற்று மனத்தைத் தேற்றிக் கொள்கிறாள். பின்பு சிறிது நேரம் கழித்து அருவியில் குளித்துக் கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்படுகின்றாள். இங்கும் அதே தலைவன் அருவியில் குதித்துத் தலைவியைக் காப்பாற்றுகிறான். தலைவியைக் காப்பாற்றும் பொருட்டு தலைவியைத் தொடுகிறான். தலைவனை இருமுறை கண்டும் தமது காதலை வெளிப்படுத்த முடியாத தலைவி, இம்முறை அவன் காப்பாற்றித் தழுவியதிலிருந்து விடுபடாமல் அவனது அரவணைப்பில் மயங்குகின்றாள். தலைவிக்கும் தலைவனுக்கும் காதல் மிகுதியாகிறது.

தலைவன் தரும் உறுதிமொழியில் தன்னை மணந்து கொள்வான் என்று நம்புகிறாள். தலைவியின் இருப்பிடம் வந்து தலைவன் அடிக்கடி சந்திக்கிறான். சிறிது காலம் அவன் வராமையால் தலைவி ஏங்குகிறாள். பசலை வருகிறது. இப்போதும் தனது பெற்றோர்கள் என்ன சொல்லுவார்களோ? சமூகம் எப்படித் தூற்றுமோ என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறாள். அதற்காகத் தன்னை வருத்தும் பசலைக்கும் ஆளாகிறாள். தலைவியின் இந்த எல்லாச் செயல்களையும் நோக்கும்போது சிக்மண்ட் ஃபிராய்ட் குறிப்பிடும் ஆளுமை வளர்ச்சியான பண்படா உள்ளம் (ID), தன்முனைப்பு (Ego), மேம்பட்ட முனைப்பு (Super Ego) மூன்றும் தலைவிக்குப் பொருந்துகிறது. அவற்றைப் பின்வருமாறு கணிக்கலாம்.

1) தலைவனைக் கண்டவுடன் தலைவிக்குக் காதல் உந்துகிறது. ஆனால் அதை அவள் வெளிப்படுத்தாமல் காத்துள்ளது, மரபுவழி வந்த இயல்புகள், இயல்பூக்கம், முதனிலை உந்து ஆகிய இவற்றைக் கொண்டது. பண்படாஉள்ளம் (ID) என்று ஃபிராய்ட் குறிப்பிட்டது பொருந்துகிறது.

2) ஒருவனுக்குப் பசி ஏற்பட்ட உடன் உண்ணாமல் காலம், இடம், நேரம் இவற்றை ஒட்டியே உணவு உட்கொள்கிறான். அதனை அவனுக்கு உணர்த்தி, அவனுடைய பண்படா உள்ளத்து ஆசைகளை நிறைவேற்றுவது தன்முனைப்பு (Ego) என்கிறார் ஃபிராய்ட். தலைவியைத் தலைவன் யானையிடமிருந்து காப்பாற்றிய போதே, தலைவன் மீது தலைவிக்குக் காதல் உந்துகிறது. எனினும் காலம், இடம், நேரம் அறிந்து தேற்றிக் கொள்கிறாள். அருவியில் காப்பாற்றும் போதும் தலைவியின் காதல் வெளிப்படுகிறது. அதன்பின் தலைவியின் அரவணைப்பில் காதல் உள்ளம் பரிமாறப்படுகிறது. இங்கு ஃபிராய்ட் குறிப்பிடும் தன்முனைப்பு (Ego) பொருந்துகிறது.

3) பெற்றோர்களாலும், சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறநெறியும் பயன்மதிப்புகளும் மேம்பட்ட தன்முனைப்பு (Super Ego) என்கிறார் ஃபிராய்ட். தலைவி தலைவன் மீது காதல் கொண்டு நீண்ட நாட்கள் சந்தித்துக் கொண்டாலும், அதனைப் பெற்றோரிடமும், சமூகத்திடமிருந்தும் அவர்கள் கூறிய அறநெறிக்கு அஞ்சி மறைக்கிறாள். பின்பு தோழியின் மூலம் மணவாழ்க்கைக்கு வழி வகுக்கிறாள்.


No comments:

Post a Comment