Sunday 4 December 2016

பேரவையின் நான்காம் நிகழ்வு



அன்புடையீர்
அந்தகக்கவிப் பேரவையின் நான்காவது கூட்டம் 27.11.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. பேரவை நடைபெற இடம் வழங்கிய பள்ளிக்கும், நிகழ்ச்சி நடைபெற அனைத்து வகையிலும் உதவியாக இருந்துவரும் ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் வாசிப்பகத்திற்கும், அனைத்து வாசிப்பாளர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. ஆய்வாளர் சிவக்குமார்  அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாணவர் கட்டுரைப் பகுதியில் “புத்த சமயம்” என்ற தலைப்பில், பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர் மணிகண்டன் அவர்கள் கட்டுரை வழங்கினார். நூல் அறிமுகம் பகுதியில் “முட்டையின் பலமும் போராளி சிறுவனும்” என்ற நூலினை அந்த நூலின் ஆசிரியர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கல் அறிமுகம் செய்து உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைப் பகுதியில் “தமிழ் இலக்கண இலக்கியங்களில் உயிரியல் பாகுபாடு” என்ற தலைப்பில், ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் க.சுதன் அவர்கள் ஆய்வுரை வழங்கினார். ஆய்வுரை மற்றும் அதன்மீதான விவாதப் பகுதியை சே. பாண்டியராஜ் அவர்கள் நெறிப்படுத்தினார். மாணவர் கட்டுரை வழங்கிய மணிகண்டன் அவர்களுக்கு வாசிப்பாளர் திருமதி. விஜயலட்சுமி பால்ராஜ் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். நூல் அறிமுகம் செய்த எழுத்தாளர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்களுக்கு திரு. செல்வமணி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். பேரவையின் அடுத்தக்கூட்டம் குறித்த விவரங்களை தலைவர் பிரதீப் அவர்கள் அறிவித்தார். ஆய்வாளர் லட்சுமிநாராயணன் அவர்கள் நன்றியுரை நவில்ந்தார். ஆய்வாளர் வத்சலா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில்  நாவலாசிரியர் திரு. சிவசேகரன் அவர்கள், புதிய மாணவன் பத்திரிக்கையாளர் ஆசாத் அவர்கள், ஆய்வாளர்கள் மற்றும்  தன்னார்வளர்கள் கலந்துக்கொண்டனர். பேரவையின் தொடக்கம் முதல் எல்லாவற்றிலும் உறுதுணையாக உள்ள திரு. ரவிக்குமார் அவர்களும் கலந்துக்கொண்டு தனது பங்களிப்பை வழங்கினார். பேரவையில் வழங்கப்படும் கட்டுரைகளையும் வழக்கம்போல் அவரே தட்டச்சு செய்து வழங்கியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

Saturday 3 December 2016

புத்த சமயம்

புத்த சமயம்

27.11.2016

முன்னுரை :

ஆறாம் நூற்றாண்டில் அயல் நாடுகளில் பல சமயங்கள் தோன்றின. அந்தச் சமயத்தில் நம் இந்திய நாட்டில் இந்து மதம் இருந்த காலகட்டம். அப்போது மக்களை வழிநடத்த தோன்றிய சமயங்களில் சிறந்த சமயமான புத்த சமயத்தைப் பற்றிப் பார்ப்போம்.
     

புத்த சமயம் தோன்றக் காரணம் :

ஆறாம் நூற்றாண்டில் வேதங்கள், மந்திரங்கள் பிராமணர்கள் மூலம் ஓதப்பட்டன. வேள்விகள் நடத்தப்பட்டன. அதற்காக பல உயிரினங்கள் பலி கொடுக்கப்பட்டன. ஆடுகள், மாடுகள் போன்றவை பலியிடப்பட்டன. பிராமணர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். எனவே அவர்களுக்கு வரிவிலக்கு, மரணதண்டனையிலிருந்து விடுப்பு போன்ற சலுகைகள் அளிக்கப்பட்டன. ஆகையால் மக்கள் நலம் கருதி சத்ரியர்களால் தொடங்கப்பட்டது இந்த புத்த சமயம். அந்தக் காலத்தில் சத்ரியர்கள், சூத்திரர்கள், வைசியர்கள், பிராமணர்களால் தாழ்வாக எண்ணப்பட்டனர். இது புத்த சமயம் தோன்ற காரணமாய் இருந்தது.
பெளத்த சூத்திரங்களில், கௌதம புதருக்கு முன்பு இந்தப் பூமியில் பல புத்தர்கள் அவதரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்தப் பூமியில் அவதரித்த 28 புத்தர்களின் பெயர்ப்பட்டியல்

எண்        பாலி மொழிப் பெயர்           எண்        பாலி மொழிப் பெயர்
1                  தனசங்கர                     15        சுசாத           
2                  மேதங்கர                     16        பியதசி
3                  சரணங்கர                    17        அத்தகசி
4                  தீபங்கர                       18         தம்மதசி
5                  கொண்டஞ்ஞ                 19         சித்தாத்த
6                  மங்கல                       20         திச
7                  சுமன                        21         புச
8                  ரேவத                       22        விபசி
9                  சோபித                      23        சிகி 
10                 அனோமதசி                   24         வேசபூ
11                 பதும                        25        கதசந்த
12                 நாரத                        26         கொனாகமன
13                 புதுழத்தர                     27        கசப
14                 சுமேத                       28         கோதம

புத்தரின் பிறப்பு :

   புத்த சமயத்தைப் பற்றி பேசும் பொழுது, அதை தோற்றுவித்த புத்தரைப்
பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

      புத்தர் நேப்பாள் நாட்டில் கபிலவஸ்துவில், சாக்கிய தல தலைவர் சுத்தோதணாவிற்கும், மாயாதேவிக்கும் கி.மு.563 ல் பிறந்தார். ஜடாக்காகளில் புத்தர் பிறப்பு பற்றி கூறியதாவது : பௌர்ணமியன்று கபிலவஸ்துவே விழாக்கோலம் போலிருந்தது. மாயாதேவி பௌர்ணமிக்கு 7 நாட்கள் முன்பே விரதம் இருந்தார். பௌர்ணமி அன்று காலையில் நீராடிய பின் உணவு உண்டு உறங்கினார். அவர் கனவில் போதிசத்துவர் வெள்ளை யானையாக மாறினார். அந்த ஒரு வெள்ளை யானை துதிக்கையில் ஒரு தாமரையை ஏந்தி, மாயாவதியை நோக்கி வந்து அவர் வயிற்றில் புகுந்தது. அவர் கண்ட கனவை அரசனிடம் கூறினார். அரசர் 64 பிராமணர்களை அழைத்து கனவுக்கு விளக்கம் கேட்டார். அவர்கள் “மகன் பிறப்பான். அவன் வீட்டில் இருந்தால் அரசன் ஆவான். வெளியே சென்றால் புத்தராக மாறி விடுவான்” எனக் கூறினார்கள்.
     
      பின்பு புத்தர் லும்பினி தோட்டத்தில் தன் தாய் மாயாதேவி அவள் வீட்டிற்கு செல்லும் வழியில் பிறந்தார்.
     

புத்தரின் சிறப்பு :

சாதரணமான மக்கள் கூட புத்தரின் அறிவுப்பூர்வமான அறிவுரைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. புத்தர் தன் சீடர்களுக்கும் கூட கடுமையான பயிற்சிகளை அளிக்கவில்லை. அவர் எளிமையான முறையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப அறிவுரைகளை வழங்கினார். எந்த ஒரு செயலையும் குழப்பத்துடன் செய்யக்கூடாது என்றும் அவசரம் காட்டாமல் சிறிது பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒரு முறை புத்தர் தன் சீடர்களில் ஒருவனை அழைத்து அருகிலுள்ள குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரக் கூறினார். அங்கு சற்று முன் அந்தக் குளத்தில், எருமை மாடுகள் கூட்டம் வந்து நீரைக் கலக்கிவிட்டு போயிருந்தன. நீர் கலங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அந்தச் சீடன் புத்த பெருமானிடம் சென்று, குளத்தில் உள்ள நீர் கலங்கியிருப்பதால் ஐந்து கல் தொலைவில் உள்ள இன்னொரு குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருவதாக கூறினார்.

அதற்கு புத்தர், “இதற்காக ஐந்து கல் தொலைவு சென்று வருவதைக் காட்டிலும் சிறிது நேரம் சென்ற பின் இந்தக் குளத்திலேயே தண்ணீர் கொண்டு வா” என்றார். சிறிது நேரம் கழித்து, சீடன் தண்ணீர் நன்றாகத் தெளிந்திருப்பதைப் பார்த்து பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து திரும்பினான்.

புத்தர் மற்ற சீடர்களைப் பார்த்து “எனதருமை சீடர்களே! தற்போது நடந்ததெல்லாம் பார்த்தீர்களா? நாம் எந்த வேலை செய்தாலும் அதில் அவசரமோ, பரபரப்போ காட்டக்கூடாது. உள்ளம் குழப்பம் அடைந்திருக்கும்போது சிறிது நேரம் பொறுமையைக் கடைபிடித்தால், சேற்று நீர் தெளிந்தது போல உள்ளமும் தெளிவாகி விடும்” என்று எளிய நடையில் அறிவுரைக் கூறினார்.

இவரின் சிறப்பினைக் கண்டு, அயல் நாட்டு அறிஞர் சர் எட்வின் அர்னால்டு என்பவர் “புத்தர் ஆசியாவின் ஜோதி” எனக் கூறினார். ஆனால் மற்றொரு அறிஞர் டேவிட் என்பவர், “புத்தர் உலகின் ஜோதி” எனக் கூறி சிறப்பித்துள்ளார்.

புத்தரின் போதனைகள் :


1. துன்பம் – வருத்தம், நோய், மூப்பு, சாவு முதலியவை நிறைந்து, மக்கள் வாழ்க்கை எளிதில் நீக்க முடியாத துன்பம் நிறைந்தது.

2. அதன் தோற்றம் – இந்தத் துன்பத்திற்கு காரணம் சிற்றின்ப ஆசையே.

3. அதை ஒழித்தது – ஆசை ஒழிக்கப்பட வேண்டும்

4. அட்டசிலம் – அட்டசிலம் என்ற எட்டு நன்னெறிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

எட்டுக் கருத்துகள் :


1.   நன் நம்பிக்கை
2.   நல் எண்ணம்
3.   நல் வாய்மை
4.   நற் செய்கை
5.   நல் வாழ்க்கை
6.   நன் முயற்சி
7.   நற் கவனம்
8.   நல் யோகம்

புத்த மதத்தின் கட்டளைகள் :

      அவைகள் ஆசையை வென்று அனைத்து நிலையடைய அடையாளம் என்று கூறுகிறார். அவை :
1.   உயிர்களைக் கொல்லாமை
2.   களவு செய்யாமை
3.   பிறர் மனை நோக்காமை
4.   பொய் சொல்லாமை
5.   புறங் கூறாமை
6.   குற்றம் கூறாமை
7.   மது அருந்தாமை
8.   முதியோரைப் போற்றுதல்
9.   பெற்றோருக்கு கீழ்ப்படிதல்
10.  தர்மம் செய்தல்
ஆகியவை ஆகும்.

புத்த துறவியின் விதிமுறைகள் :


புத்த துறவு மேற்கொள்பவர்கள், அளவாக உண்ண வேண்டும். மிருதுவான படுக்கையில் உறங்கக் கூடாது. பணம் வைத்திருக்கக் கூடாது. இன்னிசை கேட்கக் கூடாது. தலையை முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் ஆடை அணிந்து புத்தம், தர்மம், சங்கம் என்று வாழ வேண்டும்.

புத்த சமயத்தின் வளர்ச்சி :


புத்தரின் மாணவர் ஆனந்தர் ‘சுத்த பீடகம்’ எனும் நூலைத் தொகுத்தார். உபாலி என்ற மாணவர் ‘வினய பீடகம்’ என்ற நூலைத் தொகுத்தார். பீடகம் என்றால் சட்டப் பேழை என்று பொருள். புத்த பிட்சுகள் பின்பற்ற வேண்டிய சட்டத்திட்டங்களை விளக்குகிறது. மன்னர்கள் மூலமும் புத்த மதம் பரப்பப்பட்டன. முதல் புத்த சமய மாநாடு கிமு 483 ல் ராஜகிரகாவின் அருகில் மகாகாஷியம் தலைமையில் கூடியது. இரண்டாம் புத்த சமய மாநாடு கிமு 383 ல் வைசாலியில் சபாகாமி தலைமையில் கூடியது. கிமு 250 ல் மூன்றாம் மாநாடு பாடலிபுத்திரத்தில் அசோகர் உதவியுடன் கூடியது. மொஷலி புத்ததிஸ என்பவர் தலைமையில் நடந்தது. நான்காம் மாநாடு கிபி 72 ல் கூடியது. விஸ்வாமித்திரர், அஸ்வகோஷர் தலைமையில் நடைபெற்றது. ஹர்ஷர் காலத்தில் ‘ஆட்சி சமயமாக’ புத்த சமயமே இருந்தது. அயல் நாடுகளான இலங்கை, பர்மா, சியாம், லாகோஸ், கம்போடியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் புத்த மதம் பரவியது.

புத்த நூல்கள் :


திரிபீடங்கள் : சுத்த பீடகம், வினய பீடகம், அபிதம பீடகம் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
1. புத்த கோட்பாடுகளின் விளக்கமும், ஆரம்ப காலத்தில் மாணவர்களுக்கு கூறிய முக்கிய கருத்துகளும் உள்ளன.

2. பிட்சுக்களின் நன் நடத்தை அறிவுரைகள் போன்றவை கூறப்பட்டுள்ளன.

3. புத்த தர்மம் பற்றிய விளக்க நுணுக்கங்களும், உயர் கருத்துகளும் கூறப்பட்டுள்ளன. இதைத் தவிர

1.   தம்ம பாதங்கள் 2. திரகதா 3. தேரிகதா புஜாதக கதைகள் போன்றவைகளும் உள்ளன.
புத்தவம்சா என்ற நூல் நண்பரின் வாழ்க்கையை கூறுகிறது.

முடிவுரை :

புத்த சமயம் புத்தரின் இறப்பிற்கு பிறகு இரு பிரிவுகளாகப் பிரிந்தது. அவை, மஹாயானம் மற்றும் ஹீனயானம் எனப்படும். புத்த சமயம் தோன்றிய இந்தியாவில் அது மறைய தோன்றியது. அயல் நாடுகளில் வளர்ந்துள்ளது. எனவே, இவ்வளவு சிறப்பு கருத்துக்களையுடைய புத்த சமயத்தை பின்பற்றவில்லை என்றாலும் புத்தரின் உயர்ந்த போதனைகளை நாம் பின்பற்றி வாழ்வில் சிறப்படைவோம்.

-----------
M.மணிகண்டன்,
இளங்கலை வரலாறு – இரண்டாம் ஆண்டு,
பச்சையப்பர் கல்லூரி