Saturday 3 December 2016

கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் இறைநம்பிக்கை



கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் இறைநம்பிக்கை

25.09.2016

முன்னுரை :

உலகில் தோன்றிய எல்லாவற்றையும் ஏதோ ஒரு சக்தி ஆண்டுகொண்டிருக்கிறது. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு இயங்குகிறது. அதனையே ‘கடவுள்’ என்றும் ‘இறைவன்’ என்றும் ‘ஆண்டவன்’ என்றும் கூறுகிறோம்.

      ஆறுமுக நாவலர் “கடவுள் என்று சொல் ‘கட’ எனும் பகுதியையும் ‘உள்’ என்னும் தொழிற்பெயர் விகுதியையும் கொண்டது என்பர். கடவுள் என்பதற்கு எல்லாவற்றையும் கடந்தவர் எனப் பொருள் கூறலாம். எவற்றினுள்ளும் கடந்து நிற்பவர் எனவும், எல்லா அண்டங்களையும் அவற்றிலுள்ள எல்லா உயிர்களையும் கடவுகிறவர் அல்லது இயக்குகின்றவர் எனவும் பொருள் கூறுவர்” என்று கடவுள் என்பதற்கு விளக்கம் தருகின்றார். இதனால் இறைவன் உலகை இயக்கும் ஓர் அருவப்பொருள் என்பது புலப்படுகிறது.

கண்ணதாசனின் இறையுணர்வுப் பாடல்கள் :

கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் இறை சிந்தனைகளைத் தந்துள்ளார். இறை சிந்தனைகள் மனிதனின் மனத்தைச் செம்மைப்படுத்துவதையும், இறை சிந்தனையால் உலகின் அறங்கள் தழைப்பதனையும் பாடல்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். கண்ணதாசனிடம் குடிகொண்டிருந்த இறை நம்பிக்கையின் ஊற்றை அவர் படைத்த ‘கடைசிப் பக்கம்’ படைப்பின் மூலமாக அறிய முடிகிறது.

‘இறைவன் வருவான்
அவன் என்றும் நலவழித் தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெறும் கருணை’

வேண்டுபவர்க்கு அருளையும், வணங்கி நிற்பவர்க்கு அன்பையும் எல்லா உயிரினத்திலும் கருணையையும் அளித்துக் காப்பவன் இறைவன் ஆவான்.

‘காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே – இறைவன்
இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்’

உயிரினத்தில் மட்டுமின்றி பஞ்ச பூதங்களிலும் இறைவன் உறைகிறான் என்பதை கவிஞர் தன் பாடலில் இறைநம்பிக்கையை உணர்த்தியுள்ளார். ஆடை அணிகலன்களையும் ஆடம்பரங்களையும் விரும்பாத இறைவன் மக்களின் அன்பை மட்டுமே விரும்புகிறான். அவனுக்கு எந்தவித பேதமுமில்லை.

‘ஆடை அணிகளை ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை
இசையில் கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் இறைவன் என்பதையறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு’

எனவே ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தன்மையாய் இறைவன் உள்ளான் என்பதை இப்பாடலின் மூலம் அறியலாம்.

இறைவனும் மனிதனும் :

மனிதர்களுள் இறை நம்பிக்கை உடையவர்களை ஆத்திகவாதி என்றும், நம்பிக்கையற்றவர்களை நாத்திகவாதி என்றும் குறிப்பிடுகிறோம். நாத்திகர்களுக்கு, கல்லிலும் கடவுள் உள்ளான் என்பதை கண்ணதாசன் சுவைபட விளக்குகிறான்.

‘வாசல் படியும் கல்தானே
நாம் வணங்கும் சிலையும் கல்தான
கல்லினில் பேதம் இல்லையடா – அது
கண்களில் மாறும் காட்சியடா’

இறைவன் இருக்கின்றான் என்பதை கல்லினில் வழியாகவும், சிலையினில் உருவமாகவும், மலரினில் நாற்றமாகவும், பழத்தினில் சுவையாகவும், பாலினில் வெண்மைத்தன்மையாகவும் அறியலாம். இதனையே பரிபாடல்

‘தீயினுள் ஒளி நீ பூவினில் நாற்றம் நீ
அறத்தினில் அன்பு நீ வேதத்தின் உட்பொருள் நீ’

எனக் குறிப்பிடுகிறது.

துன்பத்தைக் கொடுப்பவனும் கடவுள்தான். அத்தகைய துன்பத்திலிருந்து காப்பவனும் அவனே. இறைவன் நேரில் வந்து உதவுவதில்லை. மற்றொரு மனிதன் மூலமாகவே மற்றொரு மனிதனுக்கு உதவுகிறார். இதனையே பின்னாளில் ‘மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசன் தொண்டு’ என்றார் பேரறிஞர் அண்ணா தனது ‘உரை வளம்’ எனும் நூலில்.

அத்தகைய கருத்தை அமைத்து,

‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் பொது வள்ளலாகலாம்’

எனக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
இறைவன் என்ற பரம்பொருள் ஒன்று தான். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் வழிபடுகிறார்கள்.

‘ராமன் என்பது கங்கை நதி
ஏசு என்பது பொன்னி நதி
அல்லா என்பது சிந்து நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்’
கடவுளை நாம் வெவ்வேறு வழியில் வழிபட்டாலும், இறைவன் பேரைச் சொல்லி வன்முறையிலோ, சமயப் பூசலிலோ ஈடுபடலாகாது என அறிவுறுத்துகிறார் கவிஞர் கண்ணதாசன்.

‘கறுப்பில்லை சிவப்புமில்லை
கனவுக்கு உருவமில்லை
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை’
எனச் சூளுரைக்கிறார். அனைவருக்குள்ளும் இறைவன் இருக்கிறார் என்பதை திருமூலர், ‘ஒன்றே குளம் ஒருவனே தேவன்’ எனத் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘கல்லினுள் தேரைக் கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக் கெல்லாம்
துணையிருக்கும் தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை
நெஞ்சுக்குள்ளே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையா
தம்பி? நமக்கு இல்லையா’
என இறை நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டுகிறார் கண்ணதாசன்.

முடிவுரை :

இறைவன் உள்ளான் என்பதை இலக்கியம் நமக்கு உணர்த்துகிறது. திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம், சிவபுராணம், பரிபாடல், இராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கிய நூல்கள் இறைவனைப் பற்றியே முழுமையாக பேசுகின்றன.

‘கள்ளமற்ற வெள்ளை மொழி, தேவன் தந்த தெய்வ மொழி’ எனத் தமிழ் மொழியை குறிப்பிடுகிறார். கல்லை கடவுளாக நம்புபவர்க்கு கல் கடவுளாகக் காட்சியளிக்கிறது. கல் கடவுளல்ல என நினைப்பவர்க்கு அது வெறும் கல்லாகவே தெரிகிறது.

தெய்வமென்றால் அது தெய்வம்
வெறும் சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்பார்க்கு அது உண்டு
இல்லையென்பார்க்கு அது இல்லை.

-----------

மு.பானுகோபன்,
தமிழ் விரிவுரையாளர்,
அரசுக் கலைக்கல்லுரி, உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்



No comments:

Post a Comment