Saturday 3 December 2016

வள்ளலார் உணர்த்திய வாழ்வியல் நெறி



வள்ளலார் உணர்த்திய வாழ்வியல் நெறி

23.10.2016
வையத்தில் தோன்றிய கபடு, சூது, பொய், களவு, வஞ்சனை, சினம், காமம், வெகுளி, பழிவாங்குதல், பொய்சாட்சிப் புகலுதல், பசிப்பிணி, பஞ்சம், போர் ஆகிய துர்க்குணங்களும் தீமைகளும் மறையவும், அன்பு, பண்பு, புகழ், அருள், நீதி நெறி, கொல்லாமை, சகோதரத்துவம் ஆகிய நன்னெறிகள் தழைத்து ஓங்கவும் வாழையடி வாழை என அருளாளர்கள் இந்தத் தமிழ் மண்ணிலே தோன்றிக் கொண்டே இருக்கின்றார்கள். அந்த மரபில் வந்தவர்தாம் வள்ளலார். அவர் நமக்கு ஊட்டிய, புகட்டிய, வழங்கிய நன்னெறிகள் மனித மனத்தில் அமைதியையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் உலகில் செம்மையையும் விளைவிக்கக் கூடியதாகும்.
     

நம்முடன் வாழும் வள்ளலார்

வள்ளலாரின் வாழ்க்கை வரலாறும், அவர்தம் பாக்களும் நம்முடைய வாழ்வியலுக்குக் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

மனிதன் இறந்தால் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும். பிறவாமைக்கு வழி இறவாமையே என்று வழி காட்டினார் வள்ளலார். அவர் அன்பர்கள் முன்னிலையில் மேட்டுக்குப்பம் கிராமத்திலே தான் இருந்த அந்த வீட்டிலேயே ஓர் அறைக்குள் நுழைந்து காணாமல் போய்விட்டார். இது அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. வள்ளலார் ஞான தேகத்துடன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், எப்படி எனில் ஒரு மனிதன் இறந்து போனால் அவனது தேகம் மண்ணில் சமாதி வைக்கப்படும் அல்லது நெருப்பினால் சுட்டு எரிக்கப்படும். அந்த நிலை வள்ளலாருக்கு இல்லை. அவர் ஞான தேகத்துடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வாழ வழி காட்டிய வள்ளல்


இன்றும் என்றும் நமக்குப் பாக்கள் மூலமாகவும், உரைநடை மூலமாகவும், ஆன்மிக அருளாளர்கள் மூலமாகவும் நாம் மனமகிழ்ந்து வாழ; சமயத்தின் நிலை, புலால் மறுத்தல், சிறுதெய்வ வழிபாட்டினை மறுத்தல், உயிர்ப்பலி ஒழித்தல், இறைவன் ஒருவனே எனும் உண்மை நெறி, மூடப் பழக்க எதிர்ப்பு அன்னதானம் , சமுதாயச் சீர்திருத்தம், திருக்குறள் வகுப்பு, ஒழுக்க நெறிகள் எனப் பல்வேறு வாழ்வியல் நெறிகளை உணர்த்திய வண்ணமே இருக்கிறார். அவர்தம் நெறிகளைப் பின்பற்றும் அருளாளர்கள், சன்மார்க்கிகள், அன்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் அவர் காட்டிய நெறியில் செம்மையாக வாழ்ந்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

சமயம்

சாதியும் சமயமும் பொய் என்கிறார் வள்ளலார். சமயக் குழி என்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திருவள்ளுவரின் வழியில் வள்ளலார் பேதமற்று எல்லோரும் ஒன்றெனும் சமுதாயம் படைக்க விரும்பினார். அவர் கொள்கைக்கு நாட்டில் நிலவும் சமயமும் ஒரு தடையாக விளங்கியது. மதம் சார்ந்த போரின் மூலமாக இன்றுவரி பலகோடி மக்கள் மாண்டுள்ளனர். எனவே சாதியையும் சமயத்தையும் அறவே ஒழிக்க வள்ளலார் எண்ணினார்.

புலால் மறுத்தல்


அவர் உணர்த்திய நெறிகளில் எந்நெறி உயர்ந்தது என நாம் ஒப்பிடவோ அளவிடவோ இயலாது. அத்தகைய வாழ்வியல் நெறிகளுள் புலால் மறுத்தலும் ஒன்றாகும். பிணி, பற்றாக்குறை, மன அழுத்தம், கடன் தொல்லை, திட்டமிடா வாழ்வு, புலனடக்கம் இன்மை, ஒழுக்கமின்மை ஆகியவற்றுக்குப் புலால் உண்ணுதல் ஒரு வாய்க்காலாக உள்ளது.

ஒரு சிலர் புரட்டாசி மாதம் மட்டும் புலால் உண்பதில்லை. மற்றபடி புலால் சாப்பிடுவது தடுக்கப்படவில்லை. ஏன் இந்த அவல நிலை? மக்கள் புலால் சாப்பிட்டு அழிந்து போனாலும் பரவாயில்லை  தங்கள் சமயம் அழியாமல் இருக்க வேண்டும் என்றே இதுவரை வந்தவர்கள் எண்ணினார்கள்.

வள்ளலாரும் புலால் மறுக்காமல் இருந்திருப்பாரானால் அவருடைய சன்மார்க்கம் எங்கோ கொடி கட்டிப் பறந்திருக்கும்.

வள்ளலார் மக்கள் வாழவேண்டும் என்று மட்டும் எண்ணினார். தமது சன்மார்க்க வளர்ச்சி பற்றியோ தமது புகழ் பற்றியோ ஒரு சிறிதும் அவர் கவலைப்படவில்லை. எனவே புலால் மறுத்தலை பெரிதும் வலியுறுத்தியுள்ளார்.

சிறு தெய்வ வழிபாடு


வள்ளலார் காலத்திற்கு முன்பும் பின்பும் இப்போதும் சிறு தெய்வங்களுக்கு உயிர்ப் பலி இடும் வழக்கம் உள்ளது. எருமை, ஆடு, கோழி முதலிய வீட்டு விலங்குகளும், பறவைகளுமே பலியாயின. இவை பலி இடுவோருக்கு அடங்கியவை மட்டும் அல்ல, அவர்கள் உணவாகக் கொள்ளுவதும் ஆகும்.

பிடாரி கோயில்களிலும், காளி கோயில்களிலும் கருப்பு கோயில்களிலும் நூற்றுக்கணக்கான எருமைகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள் முதலியவை பலியாகும். இந்தத் தெய்வங்களை நலி தரும் சிறு தெய்வங்கள் என்பார் வள்ளலார். இந்தக் கோயில்களைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் பயந்தார். அத்தகு மென்மையான உள்ளம் கொண்டவர் வள்ளலார்.

மெல்லியலார் சிவகாமி என்று அம்மையை விளிக்கிறார் வள்ளலார். அவ்வண்ணமே நாமும் அவரை மெல்லியலார் வள்ளலார் என அழைக்கலாமே! அத்தகைய மெல்லிய உள்ளம் கொண்ட வள்ளலார் சிறுதெய்வங்களை நலிதரு சிறு தெய்வங்கள் என்கிறார். அச்சிறு தெய்வ வழிபாடு நமக்குத் தேவையா?

உயிர்ப்பலி


உயிர்ப்பலியை வள்ளலார் வன்மையாகக் கண்டிக்கிறார்.

நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்
                                          (திரு.அ.பா. 275)

      கல்வி அறிவு மிகுந்து இருக்கும் இந்தக் காலத்தும் அநேகமாக எல்லா அம்மன் கோயில்களிலேயும் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள் முதலியவை பலியிடப்பட்டே வருகின்றன. மாமிசம் உண்போர் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களையும் விட்டு வைப்பதில்லை. அந்த நாள்களிலும் உயிர்ப்பலி ஏராளமாக நடைபெறுகிறது. குழந்தைகட்குக் காது குத்துதல் போன்ற வீட்டுச் சடங்குகளிலும் இந்தச் சிறு தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி இன்றும் தொடர்கிறது. இந்தக் கோயில்களில் வள்ளலார் வணங்கவில்லை. மாறாக பயந்தார். இந்தச் சிறு தெய்வங்கள் உண்மையில் இல்லை என்று நமக்கு மற்றவர்கள் கூறாத உண்மையை எடுத்துரைத்த ஈடு இணையற்ற அருளாளர் ஆவார்.

இறைவன் ஒருவனே


ஆண்டவனே இவர்கட்கு அறிவு விளக்கம் கொடு என்றார்.

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் பொதுவாக இறைவன் ஒருவன்தான் உள்ளான் என்று உணராது பலபலத் தெய்வங்களைச் சிந்தனை செய்வோரும், கைலாயம், வைகுண்டம், சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் போன்ற பதவிகள் உண்மையிலேயே உள்ளதாக எண்ணி அவற்றைச் சிந்தனை செய்வோரும், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற கற்பனையான கதைகளையே போற்றுவோரும் பொய்யான சமய மதங்களைப் போற்றி மெச்சுகின்றோரும் உண்மையான திருவருள் விளக்கம் இல்லாதவர்கள் என்றும் இறைவா அவர்கட்கெல்லாம் அறிவு அருள்வீராக! என்று வள்ளலார் பிரார்த்திக்கின்றார்.

ஞான சபை


      வள்ளலார் ஞான சபை நிறுவினார்.

      இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனை வணங்க ஆலயங்கள் அமைத்தார்கள். அதுவும் ஆகம விதிப்படி. ஆலயத்திலே சடங்குகள் பல ஏற்படுத்தினார்கள். நமது உடம்பைத்தான் ஆலயமாக அமைத்தார்கள் என்ற உண்மை ஆலயத்திற்குச் சென்று வழிபடும் கோடிக்கணக்கான மக்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

       உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
       வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
       தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
       கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே!

என்று திருமூலர் பாடியிருக்கின்றார்.

      ஆனால் எவ்வளவு பேர் திருமந்திரம் படித்து அதன் பொருளை உணர்ந்திருக்கின்றனர்? மனித உடம்பிலே நெற்றிப்பொட்டு அதாவது புருவ மத்தியே இறைவன் இருக்குமிடம் என்று விளக்கவே ஆலயங்கள் அமைக்கப்பட்டன. வள்ளலார் இறைவனை வழிபாடு செய்ய முந்தைய அருளாளர்களிடமிருந்து மாறுபட்டு ஓர் ஞானசபையை நிறுவுகிறார். வள்ளலார் நிறுவிய ஞானசபை ஓர் ஞான விளக்கமாகும்.

      அடிபட்டவன் தன் ஜாதிக்காரனாய் இல்லை என்றால் கண்டு கொள்ளாமல் போய்விடுகிறான். ஜீவகாருண்யம் செய்வதற்குக் கூட ஜாதி தடையாய் உள்ளது. அதனாலேயே வள்ளலார் ஜாதிப் பற்றை எதிர்த்தார். ஜாதி, மதம், சமயம் எல்லாம் பொய் பொய்யே என்று உறுதியாய்ச் சொன்னார். அவைகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.

பெண் கல்வி


குடும்பத்தில் ஆண் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் அளவு பெண் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில்லை. ஆண் பெண் என்ற பேதம் உடலில் இருக்கலாம் அனுபவத்தில் இல்லை. பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு தர வேண்டும் என்றார்.

பெண்களைப் பற்றி வள்ளலார்


“பெண்கட்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள் மேலும் ரூப பேதத்தால் ஆண் பெண் என்பது அறியாமை. அனுபவத்தால் பேதம் கொள்ளப்படாது. இந்தக் காலத்திலேயே புருஷன் இறந்தால் தாலி வாங்கக்கூடாது என்பது யாராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. வள்ளலார் காலத்தில் இதைச் சொன்னார் என்றால் எந்த அளவிற்கு அவர் பெண்களின் வேதனையை உணர்ந்திருந்தால் இந்தப் புரட்சிகரமான கருத்தை வெளியிட்டிருப்பார். இந்தத் தெளிவு, தைரியம் வேறு யாருக்கேனும் வந்ததா?

மூடப் பழக்கங்களை எதிர்த்தார்


யாராவது இறந்து போனால் செய்கின்ற தேவையற்ற ஈமச் சடங்குகளையும் எதிர்த்தார். மனைவி இறந்து போனால் கணவன் மறுமணம் செய்யக்கூடாது என்றவர், ஒருபடி மேலே போய் கணவன் இறந்தால் மனைவி தாலியை கழற்ற வேண்டாம் என்றார்.

ஜீவகாருண்யம்


இறைவனிடம் அருள்வேண்டுமா? ஜீவகாருண்யம் ஒன்றுதான் வழி. வேறு எந்த வழியிலும் இறைவனின் அருளைப் பெறமுடியாது என்று மக்களுக்கு உண்மை வழி காட்டினாரே. அது சமயப் புரட்சியா அல்லது சமுதாயப் புரட்சியா?

அன்னதானம்


ஜீவகாருண்யத்திலும் பசி தவிர்க்கும் அன்னதானமே சிறந்தது என்று கூறியதுடன் நில்லாது, அன்னதான தருமச் சாலையே கட்டினாரே! வேறு எந்த அருளாளராவது செய்தனரா? ஒவ்வொரு மனிதனும் மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும் என்று போதித்தவர்.

சமுதாயச் சீர்திருத்தம்


காலை தூக்கம் கலைந்து எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரி எப்படி வாழவேண்டும் என்று ஒரு பட்டியலே போட்டுத் தந்தவர். எனவே இவரைச் ‘சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த அருளாளர்’ என்றும் கூறலாம்.

ஒரு மனிதன் உறக்கத்திலிருந்து காலை எழுவது முதல் இரவு படுக்கும்வரை மூன்று விதிகளை வகுத்துத் தந்துள்ளார்.

1.   யாராக இருந்தாலும் காலை சூரிய உதயத்திற்கு முன், அதாவது காலை
4.30 மணிக்கு எழுந்துவிட வேண்டும். விடியற்காலை 4.30 மணி தொடங்கி 6.00 மணி வரை அமுதக் காற்று வியாபகமாய், அதாவது எங்கும் பரவி இருக்கின்றது. அந்த நேரத்தில் நாம் எழுந்து நன் முயற்சியில் ஈடுபட்டால் நமக்கு ஆயுள் வளரும்.

2.   எழுந்தவுடன் மல ஜலம் கழிக்க வேண்டும். மலம் சரியாகக்
கழியவில்லையானால் வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றை அழுத்திப் பிடிக்கவேண்டும். ஒரு பெரிய மகான், பக்திமான், அருளாளர் எந்த அளவிற்கு இறங்கிவந்து மலஜலம் கழிப்பது பற்றியும் சொல்கிறார் என்றால் அவரது இரக்கமான மனம், அவர் நம்மீது கொண்டுள்ள கருணைக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்?

3.   அடுத்தது தந்த சுத்தி செய்யவேண்டும். கரிசலை இலை தூளை தர்சனி
விரலில் எடுத்துக்கொண்டு அண்ணாக்கைத் தேய்த்தால் பித்த நீர், கப நீர் வெளியாகிக் கண்ணொளி விசேஷிக்கும் என்கிறார்.

      நமக்கு இந்த வழியை வேறு யாரும் இதுவரை காட்டாததனால், சிறுபிள்ளைகள் கூட கண் பார்வை சரியில்லாமல் போய்க் கண்ணாடி அணிந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். நாம் நோயற்று வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வள்ளலார் இறங்கிவந்து நமக்கு போதனை செய்கிறார். இவ்வாறு எந்த அருளாளரும் போதிக்கவில்லை என்று கூறலாம். வள்ளலாரின் நித்திய கர்ம விதி, பொதுவிதி, சிறப்பு விதி ஆகியவற்றை கண்டு கொள்க. மற்ற அருளாளர்களைவிட எந்த அளவிற்கு வள்ளலார் ஒப்பற்று விளங்கினார் என்று நன்கு புரிந்து கொள்ளலாம்.

      நாம் நமது தினசரி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டால் மரணத்தை வெல்ல முடியுமோ, அந்த வாழ்க்கை முறையை அழகாக வள்ளலார் வகுத்துத் தந்துள்ளார். அந்த வாழ்க்கை முறையை நித்திய கர்ம விதி, பொது விதி, சிறப்பு விதி என மூன்றாக வகுத்துத் தந்துள்ளார். அவருடைய அருட்பாவில் முழுமையாகப் படித்துக் கொண்டாலும் இங்கே ஒரு சிலவற்றையாவது காண்போம்.

      காலையில் சூரிய உதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து எழுந்துவிட வேண்டும். பின்னர் சூரிய உதயம் வரையில் எந்தச் சிந்தையுமின்றி ஏகாந்தமாக இருந்து பழக வேண்டும். வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுக்க வேண்டும். ஆகாரத்தில் உப்பு, புளி, மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல, மிளகு சீரகம் அதிகமாகச் சேர்க்க வேண்டும். புலால் எந்த வகையிலும் புசிக்கக்கூடாது. பகலில் எந்த வகையிலும் தூங்கக்கூடாது. ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீசம், பயம் பூஜ்யம் ஆகப் பெறல்.

      இவ்வாறு இரவு படுக்கப்போகும் வரையில் நம்முடைய தினசரி வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று வகுத்துள்ளார்.

உயர்வு தாழ்வு அற்ற சமுதாயம்


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் மேதினிமேல்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

      ஆண்டவன் படைப்பிலே ஆண், பெண் என்று இரண்டு சாதிகள்தான் உண்டு. ஜாதிகள் அவசியம் தேவை என்றால் தருமம் செய்வோர் மேல் ஜாதி என்றும் யாருக்கும் எதுவும் இடாத லோபிகளைத் தாழ்ந்த ஜாதி என்றும் கொள்ளலாம் என்று அவ்வையார் அன்றே அறிவுறுத்தியுள்ளார்.

      இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பைகளை எல்லாம் புன்செய் நிலத்திலே எருவாக்கிப்போட்டு மருட்சாதி சமயங்கள், மதங்கள், ஆசிரம வழக்கெல்லாம் குழி கொட்டி மண்மூடிப் போட்டு” என்று சாடுவார்.

திருக்குறள் வகுப்பு


சிறந்த வாழ்வியல் நெறியில் மக்கள் தழைத்தோங்க திருக்குறள் வகுப்பினை நடத்தி மிகப் பெரிய சமுதாயத் தொண்டாற்றினார் வள்ளலார்.


வள்ளலார் காட்டும் வாழ்க்கை நெறி


இதுவரை தோன்றிய அருளாளர்கள் யாருமே மரணமிலாப் பெருவாழ்வை நாம் பெற முடியும் என்று போதிக்கவில்லை. வள்ளலார் ஒருவர் தான் மரணமிலாப் பெருவாழ்வை மனிதனால் அடையமுடியும் என்று திடமாகச் சொன்னவர். தான் சொன்னது உண்மை என்று நிருபிக்கும் வகையில் தான் அதை அடைந்தும் காட்டினார்.

அவர் அடைந்தார், நாம் எப்படி அடைவது? சிந்திப்போம், செயல்படுவோம், நன்னிலை அடைவோம்.

வள்ளலாரின் உள்ளம் பக்தியில் மட்டும் திளைக்கவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மனித சமுதாயம் வீணாகக்கூடாதே என்று ஆழ்ந்த இரக்கத்தினால் இதுவரை எந்த அருளாளரும் கூறாத வாழ்க்கை முறையையும் கூறியுள்ளார் எனலாம்.

ஒழுக்கங்கள்


ஒரு மனிதன் அடையவேண்டிய பேறுகளை நான்கு என்றார். அதாவது ஏமசத்தி, சாகாக் கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். இந்த நான்கு பேறுகளை அடைய நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் நான்கு. அவை இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகும். சமுதாயம் என்பது மக்கள் கூட்டமேயாகும். மக்கள் திருந்தினால் சமுதாயமே திருந்தியதாகும். மரணமிலாப் பெருவாழ்வு என்பது இதுவரை யாருமே சொல்லி இராதது. அதனை நம்மால் அடையமுடியும் என்று வள்ளலார் சொன்னது மட்டுமல்லலாமல் நாம் எப்படி வாழ்ந்தால் அந்த அறிய நிலையை அடையமுடியும் என்று வழி காட்டி உள்ளார். அவர் காட்டியுள்ள நெறிமுறைகளை மக்கள் பின்பற்றினால் சமுதாயம் மட்டுமல்ல உலகமே திருந்தும். அவர் காட்டிய வழிதான் என்ன? அவர் வழியை முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்று அவ்வையார் பாடியுள்ளார். வள்ளலார் கூட எல்லாப் பிறப்புகளிலும் உயர்வுடைப் பிறப்பாகிய மனித உடம்பைப் பெற்றுக் கொண்ட நீங்கள் இதுவரை வீண் காலம் கழித்தது போல் இனியும் கழித்துக்கொண்டிராதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார். இன்றைய தினசரிச் செய்தித்தாள்களைப் பார்க்கும்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகள் வராத நாளே இல்லை எனலாம். அந்தக் காலங்களில் வீடுகளில் கதவுகளே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். “ஆலிலை பழுப்பதேன், இராவ்ழி நடப்பதேன்?” என்றால் “பறிப்பாரற்று” என்று சிறு வயதில் படித்திருக்கிறோம். திருடு இல்லை, வழிப்பறி இல்லை. இதுவல்லவா நாகரிகம்! காலம் ஏன் மாறிவிட்டது? சுயநலம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சிறுநெறி, இவையெல்லாம் தலைதூக்கி விட்டன.

மொத்தத்தில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலிய இழிகுணங்கள் மக்கள் மத்தியில் வளர்ந்துவிட்டன. அருளாளர்கள் தோன்றி பக்தியை வளர்த்தார்கள். இறைவனுக்குப் பயந்தாவது மனிதன் தவறு செய்யாமல் இருப்பான் என்று எதிர்ப்பார்த்தார்கள். அதனால்தான் பய பக்தி என்றே சொல்லி வைத்தார்கள். ஆனால் மனிதன் யாருக்கும் பயப்படுவதாக இல்லை.

ஜாதி வெறி தலைதூக்கி ஆடுகிறது. மெத்தப் படித்தவர்கள்கூட ஜாதிப்பற்று உடையவர்களாய் இருக்கிறார்கள். வள்ளலார் வந்தார். அவர்களைப் பார்த்துக் கேட்டார். மனிதனுடைய தோல் வண்ணம் பார்த்து உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் சொல்ல முடியுமா? என்று கேட்டார். ஜாதி தொழில் ஒழுக்கம் பற்றியே வந்தது. அது ஆண்டவன் படைப்பல்ல. யாராய் இருந்தாலும் தொண்ணூற்றாறு அங்குலம்தான். ஜாதி வெறி உள்ளவன் இறைவனைக் காணமாட்டான்.

எவன் ஒருவன் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் காண்கிறானோ அவன் உள்ளம்தான் இறைவன் குடிகொள்ளும் இடம் என்றார். ஆண் பெண் என்பது உருவத்தில் ஒருவாறு கொள்ளலாம். ஆனால் அனுபவத்தில் கொள்ளக்கூடாது.

தனிமனிதன் தன்னளவிற் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளாகக் கீழ் காண்பவை அமைகின்றன.
1.   சமயங்களில் நம்பிக்கைக் கொண்டு அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமை
2.   இறைவன் ஒருவன் என்பதை ஏற்று அவ்விறைவனை ஒளிவடிவில் வழிபடல்
3.   ராமலிங்கர் குறிப்பிட்ட ஒழுக்கங்களைக் கடைபிடித்தல்
4.   மனைவியை இழந்தோர் மறுமணம் செய்து கொள்ளாமை
5.   அணிகலன்களை அணிந்து கொள்ளாமை
6.   கணவனை இழந்த பெண்கள் தாலியைக் கழற்றாமல் அணிந்து கொள்ளல்


தனிமனிதன் சமுதாயளவிற் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளாகக் கீழ்க்காண்பவை குறிப்பிடப்படுகின்றன.
1.   உயிரிரக்க உணர்வு கொண்டிரங்கல்
2.   ஒருமைப்பாட்டுணர்வினைக் கைக்கொள்ளல்
3.   இறந்தாரை அடக்கம் செய்தல்
4.   பெண்களை ஆண்களுக்குச் சமமாக எண்ணல்

மேற்காட்டிய இக்கொள்கைகளின் வழி நடந்து நாமும் உயர்வோம்.
சமுதாயத்தையும் உயர்த்துவோம்.

      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
       எல்லா உயிரும் தொழும்

என்கிறார் திருவள்ளுவர். ஆம்! கொல்லாமை, புலால் மறுத்தல் எனப் பல்வேறு வாழ்வியல் அறங்களை, நெறிகளைக் கற்பித்து, நன்னெறி புகட்டிய வள்ளலாரைக் கைகூப்பித் தொழுது, உய்வு பெறுவோமாக.

-----------
க.சிவக்குமார்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்


No comments:

Post a Comment