Saturday 3 July 2021

சங்கப் பாடல்களில் முருகன் வழிபாடு: ஓர் அறிமுகம்

சங்கப் பாடல்களில் முருகன் வழிபாடு: ஓர் அறிமுகம்

ப. பிரதீபா

முனைவர் பட்ட ஆய்வாளர்

ஆங்கில துறை மாநில கல்லூரி சென்னை.

 

முருகன் வழிபாடு தமிழ்நாட்டின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்றாகும். இவ்வழிபாட்டின் தொடக்கத்தை ஆராய சங்கப்பாடல்கள் நமக்கு உதவுகின்றன. முற்சங்கக் காலத்தில் இருந்த முருகன் வழிபாடுகளைப் புரிந்துகொள்வதும் அவ்வழிபாடு எவ்வாறு மாற்றம் கண்டது என்பதை ஆராய்வதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் உள்ள பல தொகுப்புகளில் முருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் எட்டுத்தொகை நூலான பரிபாடலிலும் பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையிலும் உள்ள முருகன் வழிபாடு பற்றிய குறிப்புகளைப் பிற மேற்கணக்கு நூல்களிலுள்ள முருகன் வழிபாட்டுக் குறிப்புகளோடு ஒப்பிடும்போது சில மாற்றங்களைக் காணலாம். பதினெண்மேற்கணக்கு நூல்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன என்பது அறிஞர்களின் கருத்தாகும். திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் தரவுகளை ஆராய்ந்தால், பண்பாட்டுக் கலப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள் அவற்றில் பொதிந்துள்ளதைக் காணவியலும். எனவே அவை கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கட்டுரையில் திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல் தவிர இதர நூல்கள் முற்சங்க நூல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

 

முற்சங்கப்பாடல்களில் முருகன் வழிபாடு

தொல்காப்பியம் ஐந்திணைக்குரிய கடவுள்களைப் பட்டியலிடும்பொழுது குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகச் சேயோனைச் சுட்டிக்காட்டுகிறது. முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் என்பதைத் தொல்காப்பியம் “சேயோன் மேயமைவரை உலகு” என்ற வரிகளில் குறித்து, “சேயோன் ஆள்கிற, மேகங்களைத் தொடும் மலைக்குன்றுகள்” எனும் பொருள்பட விவரிக்கிறது. சேயோனுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம்பெறவில்லை. இந்த இரு தெய்வங்களும் சிவப்பு நிறத்துடன் தொடர்புடையவை என்பதால் முருகனும் சேயோனும் ஒரே தெய்வத்தை குறிக்கின்றன எனலாம். சேயோன் என்னும் பெயரில் பல்வேறு பொருள்கள் பொதிந்துள்ளன. சிவப்பு நிறம் பொருந்தியவன் என்றும், செங்கதிரைப் போல ஒளி வீசுபவன் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

முருகனைக் குறிக்கும் மற்றொரு பெயர் ‘முருகு’[1]. ‘முருகு’ எனும் சொல் அழகு, இளமை மற்றும் நறுமணத்தைக் குறிக்கும். இக்கடவுளைக் குறிக்கும் மற்றொரு சொல் நெடுவேள்[2] என்பதாகும். உயரமான தோற்றம் உடையவர் மற்றும் பகைவரை அழிக்கும் வீரம் மிகுந்தவரே இனக்குழுவின் தலைவராகக் கருதப்பட்டார். அத்தகைய சிறப்புமிக்கவரை மக்கள் நெடுவேள் என்று அழைத்தனர். குறிஞ்சிக்கடவுளான முருகன் அந்நிலத்தைக் காத்ததால், அவனுக்கும் அப்பெயர் சூட்டப்பட்டது. இப்பெயர் முருகனின் வீரத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

தற்காலத்தில் வேலன் என்ற பெயர் முருகனைக் குறிக்கிறது. ஆனால் சங்கப்பாடல்களில் வேலன் எனும் சொல் முருகனைக் குறிக்காமல் முருகன் வழிபாட்டை நடத்தும் பூசாரி அல்லது சாமியாடியைக் குறித்துள்ளது. வேலை ஏந்தியவன் வேலன் என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான பாடல்களில் வேலனைப் பற்றிய தரவுகள் இடம்பெற்றுள்ளன. வேலன், வெறியாட்டம் எனும் சடங்கில் முக்கியப் பங்கு வகித்தான்[3]. வெறியாட்டம் நிகழ்வு குறிஞ்சி நிலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தன் காதலனைக் காணாமல் தவிக்கும் தலைவி சுணக்கம் ஏற்பட்டு பசலையால் அவதியுறுகிறாள். அவளை அணங்கு தாக்கியது என்று எண்ணி அவளது பெற்றோர் அவளை வேலனிடம் குறிகேட்க அழைத்துச் செல்கின்றனர். வெறியாட்டம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். மக்கள் கூட ஏதுவான இடத்தை சுத்தம் செய்து இள ஆட்டைப் பலி கொடுக்கின்றனர். ஆட்டின் ரத்தத்தை திணையரிசியுடன் கலந்து முருகனுக்குப் படையலிடுவது வழக்கமாகும். வேலன் கையில் வேலை ஏந்திய வண்ணம் ஆடுவதைக் கண்டு அவன் மீது முருகன் இறங்கிக் குறிசொல்வதாய்க் கருதி அவனை வழிபடுகின்றனர்[4].

வெறியாட்டச் சடங்கின் முக்கியப் பணி அணங்கு என்ற தீயசக்தியை அழிப்பதாகும். அணங்கு என்பது நோய் அச்சத்தை மிகுதிப்படுத்தும் ஒரு சக்தி எனலாம். இது பெண்களை  அவதியுற  செய்கிறது . அணங்கைத் தவிர ‘சூர்’ எனும் சக்தியும் அருவிகளில்[5], நீர்ச்சுனைகளில்[6],  மலைக்காடுகளில் ஒளிந்து [7] மலை ஆடுகளை அச்சமுறச் செய்கிறது. உருவமற்றதாக கருதப்பட்டாலும் சில சமயங்களில் பெண் வடிவம் கொள்ளும். சூர் மற்றும் அணங்கை அழிக்கும் வல்லமையை முருகன் கொண்டிருந்தான் என்பதையும் பாடல்கள் தெரிவிக்கின்றன[8].

முருகன் குறிஞ்சி நிலப்பரப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கடவுள் என்பதைக் குறிக்கும் விதமாய் இந்நிலப்பரப்பிற்குரிய கருப்பொருட்கள் பல முருகன் வழிபாட்டோடு தொடர்பு கொண்டிருந்தன. வேலன் கையில் இருக்கும் ஆயுதமான வேல் குறிஞ்சிநில மக்கள் வேட்டைக்குப் பயன்படுத்தும் ஆயுதமாகும். குறிஞ்சி நிலத்தின் பறவையான மயிலின் இறகுகள் அலங்காரத்துக்கு பயன்படுத்தபட்டது. ஆனால் முருகனின் வாகனமாக கருதப்படவில்லை.

இவற்றைத் தவிர்த்து முருகன் வள்ளியோடு[9] தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறான். குறிஞ்சி நிலத் தலைவனும் தலைவியும் முருகன் வள்ளியுடன் ஒப்பிடப்பட்டனர். வள்ளி என்பது ஒரு கொடி வகையாகும். காதலுற்ற பெண்கள் வள்ளிக்கொடியுடன் ஒப்பிடப்பட்டனர் என்று அறிஞர்கள் கூறுகிறர். இது தவிர முருகன் மற்றும் வள்ளியின் திருமணம் பற்றிய தரவுகள் முற்சங்க இலக்கியங்களில் இல்லை.

 பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் வழிபாடு 

முற்சங்கப்பாடல்களில் முருகன் வேறு எந்தக் கடவுளுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை. அவனது பிறப்பு பற்றிய தகவல்களும் இடம்பெறவில்லை. ஆனால் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகனைப் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே இவை இரண்டும் வடமொழி மரபுக் கலப்பினால் தோன்றின என்பதை வானமாமலை போன்ற ஆராய்ச்சியாளர்கள் நிறுவியிருக்கின்றனர்.

முருகனின் பிறப்பை பரிபாடல்[10] விரிவாக விவரிக்கின்றது. உமையுடன் சிவன் புணர்ந்தபோது வெளிவந்த விந்தினை இந்திரன் பெற்றுக்கொண்டான். வலிமைமிக்க வீரனை உருவாக்க எண்ணி சப்தரிஷிகளின் மனைவிமாரிடம் அவர்களே அறியாவண்ணம் விந்தினைத் தீயிலிட்டு உண்ணக் கொடுத்தான். அருந்ததி தவிர்த்து மற்ற அறுவரும் அதை உட்கொண்டு ஆறு குழந்தைகளை ஈன்றெடுத்தனர். அந்த ஆறு குழந்தைகளும் ஒரே உருவமாய் மாறி இந்திரனையே எதிர்கொண்டு போரில் வெற்றிபெறுகின்றனர். இது பரிபாடலில் பதியப்பட்ட கருத்தாகும். திருமுருகாற்றுப்படையில் “ஆல் தெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே”[11] எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல்களில்தான் சிவனும் பார்வதியும் முருகனது தாய் தந்தையாகத் தொடர்புபடுத்தப்பட்டனர். மேலும் திருமுருகாற்றுப்படையில் “கொற்றவைச் சிறுவன்”[12] என்ற வரியின் மூலம், போர் தெய்வமான கொற்றவை முருகனுக்குத் தாயாகிறாள். பிற்காலத்தில் கொற்றவையே பார்வதியுடன் இணைக்கப்படுகிறாள். இவை வடமொழிப் புராணங்கள், காப்பியங்களில் உள்ள ஸ்கந்த மரபுடன் தொடர்புடையவை ஆகும்.

பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகனது மனைவிகளாக வள்ளி மற்றும் தெய்வானை உள்ளனர். பரிபாடலில் குறமகளும் வேட்டுவதலைவனின்[13]  மகளான வள்ளியும், இந்திரனின் மகளும்[14] தேவகுலத்தை சேர்ந்த தெய்வானையும், முருகனின் மனைவிகள் என்ற குறிப்புள்ளது. “மறு இல் கற்பின் வாணுதற் கணவன்” என்று தெய்வானையை திருமுருகாற்றுப்படை குறிப்பதால் அவள் கற்புமணபிராட்டி என்றும் “மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே” என்று முருகன் வள்ளியோடு அருள் புரிந்ததால் அவள் களவுமணப் பிராட்டி என்றும் கருதப்பட்டனர்.  இது  முற்சங்கப் பாடல்களில் இருந்து வேறுபடுகிறது. அப்பாடல்களில்  முருகனுடைய துணையாக வள்ளி மட்டுமே கருதப்பட்டாள். ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் கற்பு மணம் முக்கியத்துவம் பெற்றதால் தெய்வானை முருகனுக்கு மனைவி ஆவதாய் அறிஞர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாது ஸ்கந்த கடவுளின் மனைவியாக இந்திரனின் பெண் இருந்ததால் அந்தக் கதை முருகனோடு சேர்க்கப்படும்போது தெய்வானை முக்கியத்துவம் பெறுகிறாள்.

முருகனின் உருவம் பற்றிய தரவுகளும் இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன. முருகனுக்கு ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் உள்ளன[15] என்று திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் வருணிக்கின்றன. முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி தருவதும் இப்பாடலில் உள்ளது. முற்சங்கப்பாடல்களில் இவ்வருணனைகளை நாம் காணவியலாது. சிவப்பு நிறமுடையவன், வீரம் மற்றும் கோபம் மிக்கவன்[16] என்ற வர்ணனைகள் மட்டுமே மிகுதியாய் உள்ளன. தற்காலத்திலுள்ள முருக உருவ வழிபாடு தோன்றியது ஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகுதான்.

முருகனின் வீர சாகசங்கள் திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் உள்ளன. சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்ய முனைகிறான் முருகன். அந்த அரக்கன் மலையாகவும் குருகாகவும் மாமரமாகவும் உருமாறிக்கொண்டேயிருக்கிறான்[17]. அவற்றை முருகன் அழிக்கிறான். முற்சங்கப் பாடல்களில் முருகன் வேலன் மீது ஏறி அணங்கை அழிப்பது, சூர் எனும் துர்சக்தியை எதிர்ப்பது போன்ற செயல்களைக் காணலாம். இதுவரை உருவமில்லாததாகக் கருதப்பட்ட சூர் திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடலில் ஓர் அசுரனாக  உருவம் கொள்கிறது. வடநாட்டு ஸ்கந்த மரபில் ஸ்கந்தன் அசுரர்களை வதம் செய்தல் ஒரு முக்கிய நிகழ்வாகும். அதன் தாக்கமே சூர் என்ற சக்தி சூரபத்மன் ஆனதன் காரணமாகும்.

சூரபத்மனை வதம் செய்யும் முன் அவன் உருமாறுவது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் சூரபத்மனின் உருவங்கள் அனைத்தும் குலக்குறிகளாக இருந்திருக்கலாம் என்றும், முருகனை தெய்வமாகக் கொண்ட குழுக்கள் அக்குலக்குறியைக் கொண்ட குலங்களைப் போரில் வீழ்த்தியதையே சூரபத்மனின் பல்வேறு உருவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் வானமாமலை மானுடவியல் நோக்கிலிருந்து எடுத்துரைக்கிறார். அதே சமயம் வடமொழிப் புராணங்களில் ஸ்கந்த கடவுளுடன் தொடர்புடைய மயில், ஆடு, சேவல்  ஆகியவற்றைத் தேவர்கள் முருகனுக்குப் பரிசளிப்பதாய் பரிபாடல்[18] குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் குலக்குறிகளாய்த் தோன்றி பின்னர் முருகன்-ஸ்கந்தன் இணைப்பைப் பலப்படுத்த முருகனோடு தொடர்புபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார் வானமாமலை.

வெறியாட்டம்[19] பற்றிய குறிப்புகள் இவ்விரு நூல்களிலும் உள்ளன. முற்சங்கப்பாடல்களில் அணங்கை விரட்டுவதே முருக வழிபாட்டின் முக்கிய நோக்காக இருந்தது. பரிபாடலில் இந்தப்போக்கு மாறியது எனலாம். இன்பம் நிலைத்திருக்கவும் செல்வம் பெறவேண்டியும், பிள்ளைப்பேறுக்காகவும்[20] வழிபட்டனர். அது தவிர, பரிபாடலில் திருப்பரங்குன்றம், திருசீர் அலைவாய், திருவாவின்குடி, திருவேரகம், திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் முருகன் எழுந்தருள்வதாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற சங்கப்பாடல்களில் இவ்வாறு இடங்கள் குறிப்பிடப்படவில்லை.

முருகனைப் பற்றிய சங்கப்பாடல்களில் அத்தெய்வ வழிபாடு பற்றிய தகவல்களோடு சமூகத்தில் கடவுள் பற்றிய கண்ணோட்டம், மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தமிழர் வாழ்வியலில் வடமொழி மரபுகள் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தின எனப் பல்வேறு கண்ணோட்டங்களையும் காணமுடிகிறது. இவ்வாறு தமிழர் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிக்கும் முருகன் வழிபாடு சங்ககாலத்திலிருந்து இன்றளவும் சிறப்புற்று விளங்குகிறது.

 

உசாத்துணை

நா . வானமாமலை, (2017), சென்னை, தமிழர் பண்பாடும் தத்துவமும், தடாகம் பதிப்பகம்.

 

 

A.K. Ramanujan and Norman Cutler, (1999), New Delhi, The Collected Essays of A. K. Ramanujan, Oxford UP.

 

Fred Clothey, (2005), New Delhi, The Many Faces of Murukaṉ: The History and Meaning of a South Indian God, Manoharlal Publications.

 

 

John Ralston Marr, (1985), Madras, The Eight Anthologies: A Study in Early Tamil Literature, Institute of Asian Studies.

 

Kamil Zvelebil, (1981), Madras,  Tiru Murugan, International Institute of Tamil Studies.

 



[1] அகநானூறு 22, 272, ஐங்குறுநூறு 245, குறுந்தொகை 362, நற்றிணை 34, 82

[2] அகநானூறு 22, 98, 272, நற்றிணை 173

[3] அகநானூறு 98, குறுந்தொகை 53, 111, 360, நற்றிணை 34

[4] அகநானூறு 22, 242, 292, நற்றிணை 47

[5] நற்றிணை 34

[6] நற்றிணை268

[7] குறுந்தொகை 52

[8] அகநானூறு 98

[9] நற்றிணை 82

[10] பரிபாடல் 5: 22-54

[11] திருமுருகாற்றுப்படை 256-257

[12] திருமுருகாற்றுப்படை 255

[13] பரிபாடல் 8:69

[14] பரிபாடல் 9:9

[15] திருமுருகாற்றுப்படை  83-103, பரிபாடல் 5:11

[16] அகநானூறு 59

[17] பரிபாடல் 5: 6-10

[18] பரிபாடல் 5: 58-65

[19] பரிபாடல் 5:15

[20] பரிபாடல் 8: 106-08 

No comments:

Post a Comment