சஞ்சாரம் நாவலில் பாத்திர உளவியல் சிக்கல்
ஆ. அடிசன்,
முனைவர்பட்டஆய்வாளர்,
சுப்பிரமணியபாரதியார்தமிழியற்புலம்,
புதுவைப்பல்கலைக்கழகம்,
புதுச்சேரி-
605 014,
jonceadison@gmail.com,
7305818138.
சஞ்சாரம் எனும் இந்த நாவல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.2014ஆம் ஆண்டு சென்னை உயிர்மை பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டது.தற்பொழுது உள்ள தமிழ்ச் சூழலில் பல எழுத்தாளர்கள் தலித்திய மக்கள் பற்றியும் ஒடுக்கப்படுகின்ற விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் பலர் தங்கள் கதைகளில் பேசி வருகின்றனர். எனினும் இந்த நாவல் பெரிய அளவில் பிறரால் பேசப்படாத நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றி பேசியுள்ளது.
வசதியாலும் சாதியாலும் உயர்ந்த சில மக்கள் தங்களுடைய அதிகார வேட்கை வெளிப்படுத்துவதற்காகவும்
தன்னை எதிர்க்காத ஒரு சிலர் மீது தன்னுடைய வலிமையை வெளிப்படுத்திப் பிறரிடம் தன்னுடைய பெருமையை நிரூபிப்பதற்காகவும் பகட்டான வாழ்வியல் முறையைப் பின்பற்றுகின்றனர்.இந்த நாவலின் களமும் நாதஸ்வரக் கலைஞர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வது, அவர்களைத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவது, கேட்க யாரும் இல்லை என்ற மன தைரியத்துடன் அவர்களை அடிப்பது போன்ற அதிகார வர்க்கச் செயற்பாடுகளைப் புலப்படுத்தியுள்ளது.தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லாத சூழலில்கூட அந்தக் கலைஞர்கள் தங்களுடைய நியாயமான கேள்விகளை முன்வைக்க முடியாமல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்கள் இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது.அந்தத் தருணத்தில் அவர்கள் அடைகின்ற மனச்சிக்கலானது, தான் ஏன் இத்தகைய தொழிலைச் செய்கிறோம்? வருமானத்திற்காக மட்டுமின்றி இந்தத் தொழிலானது மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்ட நிலைமாறி, இதுபோன்ற சமூக விரோதச் செயல் செய்கின்றவர்களிடம் வருமானத்திற்காகத் தங்கள் மானம் இழந்து வாழ வேண்டிய நிலை உள்ளதே என்று இதிலுள்ள கதாபாத்திரங்கள் வருந்துவதாக இந்த நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் இறுதிவரை பயணிக்கின்றன.ஒருவர் பக்கிரி; மற்றொருவர் ரத்தினம்.பக்கிரி வாலிபராகவும் ரத்தினம் திருமணமான வயோதிகராகவும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றனர்.இந்த இருவரும் கதையின் துவக்கத்தில் ஒரு கோவில் நிகழ்ச்சிக்காக நாதஸ்வரம் வாசிக்க சென்றிருப்பார்கள்.அங்கே நடந்த பிரச்சனையில் இவர்கள் இருவரும் இழிவாக நடத்தப்பட்ட பிறகு, கோபத்தில் பக்கிரி கோவில் பந்தலுக்குத் தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.இவர்கள் சென்ற பிறகு அங்கே உள்ள ஊர் மக்களுக்கு நடுவே மிகப்பெரிய கலவரம் உருவாகிவிடும். இவர்கள் இந்த ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ளும் பொழுது சில முக்கியமான ஊர்களைக் கடந்து செல்லும்பொழுதெல்லாம்
அந்தந்த இடத்தைப் பற்றியும் ஒரு சில கிளைக் கதைகள் வந்து கொண்டே இருக்கும்.எனவே, இந்த நாவலில் இடையிடையே நிறைய கிளைக் கதைகள் இருப்பதோடு சில சில சுவாரசியமான கதாபாத்திரங்களும் இடம்பெறுவதைக் காணமுடிகிறது.
அவ்வாறு தப்பிவந்த ரத்தினமும் பக்கிரியும் லாரியில் பயணம் செய்யும்பொழுது அரட்டானம் எனும் ஊரைக் கடந்து செல்வார்கள்.உடனே அந்தக் கோவில் பற்றி சொல்லப்பட்ட ஒரு வரலாறு நினைவுக்கு வரும். குறிப்பாக, மாலிக்காபூர் படையெடுத்து வந்த பொழுது அந்தக் கோவில் கொள்ளையடிக்கப்பட இருந்த சூழலில்,லட்சயா என்னும் நாதஸ்வரக் கலைஞர் தன்னுடைய நாதஸ்வரக் கலைத்திறமையால் மாலிக்காபூரை மயக்கி அந்தக் கோவில் கொள்ளையடிக்காத வண்ணம் காப்பாற்றினார் என்ற வரலாறும் இடையே கடந்து செல்லும்.அச்சூழலிலும்கூட கோவிலைக் காப்பாற்றுவதற்காக ஒரு நாதஸ்வரக் கலைஞன் எப்படிப்பட்ட இன்னல்களைச் சந்திக்கிறான் என்பது பற்றியும் இந்தக்கிளைக்கதை விவரிக்கும்.
மேலும் இந்த நாவலின் கதைக்களமானது மதுரைக்கு அப்பாலுள்ள கரிசல் வட்டாரப் பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அம்மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவை இடம் பெற்றிருக்கிறது.குறிப்பாக அவர்களிடம் சாதியம் சார்ந்த நம்பிக்கை மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதை இந்நாவல் வெளிப்படுத்தியிருக்கும். நாதஸ்வரக் கலைஞர்களுக்கு உணவு, நீர் அளிக்கத் தயங்குவது, அப்படியே அளித்தாலும் அவர்களை வீட்டிற்கு வெளியே அமர வைத்து உணவு கொடுப்பது போன்ற காட்சிகளை வெகு நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.
ரத்தினமும் பக்கிரியும் பல தருணங்களில் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த தஞ்சை நாதஸ்வரக் கலைஞர்களுக்குக் கிடைத்த உயர்வான நிலையும் மரியாதையும் தற்பொழுது உள்ள தங்களைப் போன்ற நாதஸ்வரக் கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தக் கூடிய நிலை இந்த நாவலில் பேசப்பட்டிருக்கிறதைக்
காணலாம். குறிப்பாக, திருமணத்திற்கு வாசிக்கச் சென்றால் அங்கே இவர்களுக்காகக் காத்திராமல் நவீன டிரம்ஸ் போன்ற கருவிகளைப்பயன்படுத்தி
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, இவர்களுக்கான பேசிய தொகையைக் கொடுக்காமல் விரட்டி அடிப்பதும், உணவருந்த சென்றால் இவர்கள் சமமாக அவர்களோடு அமர்ந்து உணவருந்தக் கூடாது என்று முகத்திற்கு நேரே அவமதித்து அனுப்புவதும், இந்தக் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வருந்தத்தக்க மன அழுத்தத்தையும் சமூகத்தின் மீது மிகுந்த வெறுப்பையும் சமூகமே உருவாக்குவது போன்ற உணர்வுநிலை விரவி இருப்பதைக் காணமுடிகிறது
இதேபோன்று அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் இவர்களை ஓட்டுக்காக நாதஸ்வரம் வாசிக்க அழைப்பது, அந்தச் சமயத்தில் கூட அவர்கள் இவர்களோடு ஒத்துழைப்புக் கொடுக்காமல் இருந்துவிட்டு சினிமா நடிகைகளை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தவில்லை என்று இரத்தினம் பக்கிரியைத் துன்புறுத்துவதும் தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யமுடியும் என்று மிரட்டும் தொனியில் பேசுவதும் எங்கு சென்றாலும் இவர்களுக்கு உரிய மரியாதையும் மனநிம்மதியும் கிடைப்பது இல்லையே என்ற உண்மையை உணரச் செய்யும் அளவிலான நிகழ்வுகள் நடைபெறுவதை நம் மனம் கொந்தளிப்பு உடனே வாசிக்க முடிகிறது.
இதுபோலவே லண்டனுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு ஒருமுறை ரத்தினம், பக்கிரி குழுவிற்கு கிடைத்திருந்தது. அங்கும் இவர்களைப் பெயருக்காகக் கோவிலில் வாசிக்க வைத்து விட்டு மற்ற இடங்களில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இவர்களை ஒரு ஓரமாக நின்று வாசிக்கச் சொல்லிவிட்டு அவர்கள் உணவு அருந்துவதும் நாதஸ்வரம் எனும் கிராமம் சார்ந்த ஒரு முன்னோடி கலைக்கு இவ்வளவுதான் தற்போதைய நவீன மக்களின் மரியாதை என்பதை புரிய வைக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த நாவலில் தன்னாசி எனும் பார்வையற்ற நாதஸ்வரக் கலைஞர் பற்றிய ஒரு கிளைக்கதை இடம்பெற்றிருக்கிறது. அவர் பார்வையற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரது உறவினர்கள் கண்டுகொள்ளாமல் அவரைத் தனியே விட்டுவிட்டுச் சென்று விடுவதன் மூலம் அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கிய அந்தச் சிறுவன், எப்படிச் சமூகத்தினால் மனதளவில் ஒடுக்கப்பட்டு பின்னாளில் அவர் நாதஸ்வரக் கலையைக் கற்றுக்கொண்டு உயர்வான இடத்திற்குச் சென்ற பிறகும் தன்னை வருத்திய சமூகத்தையும் மக்களையும் அவரை அறியாமலே அவருடைய மனமானது பல செயல்களின் வாயிலாக அவர்களைத் துன்புறுத்துகின்ற நிகழ்வுகள் ஒருவருடைய குழந்தைப்பருவ வேடிக்கைகளும் அமுக்கப்பட்ட சாவிச்சை உணர்ச்சிகளும் எவ்வாறு சமூகத்தின்மீது பிரதிபலிக்கிறது என்பதைத் தன்னாசி எனும் கதாபாத்திரம் வழி அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக அவரை யாரும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், அவர் வேசியரிடம் இன்பம் காண்பதும் அவர்களையே துன்புறுத்திப் பாலியல் இன்பம் பெற எண்ணுவதும், அவரைக் கொண்டாடும் சக ஊர் மக்களுக்கு பிடிக்காத செயல்கள் செய்து அவர்களை எரிச்சலடைய செய்து தனக்குள் இன்பம் காண்பதும் இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.இந்தப் பாத்திரத்தின் உருவாக்கமானது அற்புதமான உளவியல் திறனாய்வுக்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறு இந்த நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள், அவர்கள் செய்கின்ற தொழில் அடிப்படையில்ஒடுக்கப்படுகின்ற
நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும்.சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒரே மாதிரியான மரியாதையற்ற கண்ணோட்டத்தில்நாதஸ்வரக்
கலைஞர்களை நடத்துவார்கள்.உதாரணமாக நாவலின் ஒரு காட்சியில், சிறுவர்கள் நாதஸ்வரக் கலைஞர்களைக் கையில் ஊறுகாய் வைத்துக்கொண்டு அதைச் சப்பிக் காட்டி வெறுப்பேற்றுவதும் பெரியவரென்றும் பாராமல் அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவதும் கலைஞர்களுக்குச் சினத்தை உண்டு பண்ணுவதாக இருந்தாலும் அதை அவர்களால் வெளிப்படுத்த இயலாத சூழலே சமூகத்தில் காணப்படுவதை ஆசிரியர் நாவலில் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு மனிதனின் மனதில் அன்பு, இரக்கம், நேர்மை, பொறுமை போன்ற நல்ல உணர்ச்சிகளும் கோபம், காமம், பேராசை போன்ற தீமையான உணர்ச்சிகளும் இயற்கையாகவே இருக்கின்றன.அவற்றை மனிதன் எப்படிப் பயன்படுத்துகிறான், எந்த சூழல்களில் கட்டுப்படுத்துகிறான்
போன்றவை அவன் வாழும் சமூகத்தில் பெறும் அனுபவங்களே தீர்மானிக்கின்றன.மனிதனின் வாழ்வியல் நன்மையான உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலம் அவன் மிகுந்த நல்ல உள்ளம் படைத்தவனாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறது.அவ்வாறு இல்லாமல் ஒருவரைத் தொடர்ந்து ஒதுக்குவதும் அடிமைப்படுத்துவதும் ஒருவருடைய மனதில் உள்ள தீமையான உணர்ச்சிகளைத் தூண்டி அவனைக்குற்றவாளி ஆக்கிவிடுகிறது.இப்படிப்பட்ட இரண்டாம் நிலையான உணர்ச்சிகளைத் தூண்டுவதே தற்போதைய சமூகத்தின் வழக்கமாக உள்ளது.
நாதஸ்வரக் கலைஞர்கள் எப்படி அவர்கள் வெளித்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பது உட்பட அவர்களுடைய சிந்தனை, உணர்ச்சி, செயல் போன்ற அனைத்தையும் தவறான வழிகளில் நெறிப்படுத்துதலையே இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற மக்கள் செய்துவருகின்றனர்.எனவேதான் இன்று இந்தக் கலை அழிந்து வரக்கூடிய நிலையை எட்டியுள்ளது.இதற்கு இந்தச் சமூகம் தான் பொறுப்பேற்க வேண்டும்.இந்தத் தமிழ் மண்ணின் புனிதமான கலையாகப் போற்றப்பட்ட நாதஸ்வரக் கலை இன்று மனிதனின் நாகரிக வளர்ச்சியாலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களாலும் ஒடுக்கப்பட்டு விட்டது. இதுபோலவே தமிழ் மண்ணின் எத்தனையோ கலைகளும் பண்பாட்டுச் செயல்பாடுகளும் நம்முடைய பொறுப்பின்மையாலும் மூடப் பழக்கங்களாலும் சமூகத்தில் உள்ள சாதிய சிக்கல்கள் காரணத்தாலும் அழிந்துவருகின்றன.
இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பது மனித மனதில் உள்ள ‘தான்’ என்ற உயர்வு மனப்பான்மை சிக்கல்தான். இந்த உணர்ச்சிதான் தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதற்காகப் பிறரைத் தாழ்த்துவதும் தன்னுடைய வலிமையைத் தன்னைவிட தாழ்ந்தவன்மீது வெளிப்படுத்தித் தன்னை வலிமையானவனாகச் சமூகத்திற்கு அடையாளம் காட்ட முனைகிறது.இந்த உளச்சிக்கல் காரணமாகவே சமூகத்தில் பல வகையான பிரச்சினைகள் எழுகின்றன.எனவே, மனிதன் என்றைக்குச் சரியான மனப்பக்குவத்தையும் அறம் சார்ந்த கருத்தியலோடும் வாழ்கின்றானோ அப்போதுதான் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
ஆசிரியர் பல நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றும் தனது சிறு வயது முதல் நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றி அறிந்த தகவல்களை வைத்துமே கற்பனைகளோடு இந்த நாவலைப் புனைந்துள்ளார்.இந்த நாவல் 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.
சஞ்சாரம் என்பதன் பொருள் என்னவெனில், சஞ்சரித்துச் செல்லுதல்; அதாவது, அடுத்தடுத்த நிலைக்குக் கடந்து செல்லுதல். இதைப்போன்று மனித சமூகத்தில் உள்ள பலவிதமான சிக்கல்கள் தீர்ந்து இந்தச் சமூகம், அடுத்த பண்பட்ட நிலைக்குக் கடந்து செல்ல வேண்டும் என்ற ஒரு மையப் பொருண்மை இந்த நாவலுக்குள் இருப்பதாக உணர முடிகிறது.இந்த நாவலை வாசித்த எந்த ஒரு வாசகனும் அல்லது ஆய்வாளரும் நாதஸ்வரக் கலைஞர்களைக் கண்டும் காணாமல் செல்ல இயலாது.அந்த அளவிற்கு அவர்கள் மீதான ஒரு மரியாதையை மற்றும் நல்லதோர் உளப்பாங்கு காண்பவருக்கு ஏற்படக்கூடும்.
பார்வைக்கு:
v எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம், டிசம்பர் 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை-08.
No comments:
Post a Comment