Thursday 22 February 2018


நன்றியுடன் அந்தகக்கவிப் பேரவை

அந்தகக்கவிப் பேரவையின் முதலாம் ஆண்டு விழா மற்றும் (தமிழ் வனம்) நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற உதவிய ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  பேரவையின் செயலாளர் திரு.மு.ராமன் வரவேற்புரை வழங்கினார். தலைவர் திரு. செ. பிரதீப் தலைமை உரையாற்றினார்.

போற்றுதற்குரிய பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள், ஈரோடு மாவட்டம், நம்பியூர், திட்டமடை அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. ரங்கநாதன் அவர்கள், நாகை மாவட்டம், மணல்மேடு, அரசு  கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் க. வேலு அவர்கள் பங்கேற்று நூலினை வெளியிட, மதிப்பிற்குரிய கன்னிமாரா நூலகத்தின் மேலாளர் திரு. கார்த்திக் அவர்கள், எழுத்தாளரும்  வாசிப்பாளருமான திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கள், வாசிப்பாளரும் தன்னார்வலருமான திருமதி. பிரேமா  அவர்கள் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர். முதல்வர்கள் பள்ளிக்காலம் முதல் தாங்கள் முதல்வர்களாக பொறுப்பேற்றது வரையிலான அனுபவங்களை அரங்கிற்கு சிறப்பான முறையில் எடுத்துரைத்தனர்.

மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. பழனி அவர்கள் தமிழ் வனம் நூல் குறித்த அறிமுகத்தை அழகுபட தொகுத்துரைத்தார். ஜீவா பதிப்பகத்தின் பதிப்பாளர்  திரு. கந்தசாமி அவர்கள் சிறப்பான முறையில் வாழ்த்துரை வழங்கினார்.

கணினி பொறியாளர் திரு. ச.இரவிக்குமார் அவர்கள் வாசிப்போம்  வலைப்பக்கத்தின் (www.vaasippom.blogspot.in) அறிமுகத்தையும், அதன் வடிவமைப்பு, பயன்படுத்தும் முறை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றையும் சிறப்பாக விளக்கினார்.

தமிழ் வனம் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை படைத்திட்ட கட்டுரையாளர்களுக்கு முதல்வர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளியின் திருக்குறள் முற்றோதல் செம்மல் மாணவர்கள் "பன்னோக்கில் திருக்குறள்" என்ற நிகழ்வில், பார்வையாளர்கள் வியக்கும் வகையில் திருக்குறள் தொடர்பான கேள்விகளுக்கு பதில்சொல்லி அரங்கை அசத்தினர்.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர் முனைவர் அரங்க இராமலிங்கம் அவர்கள் நெறிப்படுத்தலில், "வாழ்வியல் நெறியை பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம்" என்ற  தலைப்பின்கீழ், 'சங்க இலக்கியமே' என்று மாநிலக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மா. உத்திராபதி அவர்களும்,  'நீதி இலக்கியமே' என்று திருவாரூர்  அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். செந்தில்குமார் அவர்களும், 'பக்தி இலக்கியமே' என்று டாக்டர் அம்பேத்கர் அரசினர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் அவர்களும், 'சிற்றிலக்கியமே' என்று உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் திவாகர் அவர்களும், 'இக்கால இலக்கியமே' என்று மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் குமார் அவர்களும், 'காப்பிய இலக்கியமே' என்று நந்தனம் ஆடவர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர். சேஷாத்ரி அவர்களும் அரங்கில்  அமர்ந்தவர்களுக்கு அறுசுவை விருந்து படைக்க, நெறியாளர் அவர்கள் வாழ்வியில் நெறியைப் பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம் நீதி இலக்கியமே என்ற தம் கருத்தைச் சொல்லி பொழிவரங்கை சிறப்பாக முடித்துவைத்தார்.

விழாவில் அனைவருக்கும் ஓடி ஓடி உதவிய தன்னார்வலர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி  சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக திரு. சே. பாண்டியராஜ் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

விழாவில் பங்கேற்று சிறப்பித்த முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், ஸ்ரீ நிகேதன் பள்ளி திருக்குறள் முற்றோதல் செம்மல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொழிவரங்கின் நெறியாளர் உள்ளிட்ட அத்தனை  பொழிவாளர்களுக்கும், விழா சிறப்பாக நடைபெற உதவிய ஒவ்வொரு கொடையாளர்களுக்கும்,  தன்னார்வலர்களுக்கும், நூல் சிறப்பாக வெளிவர உதவிய பதிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும், கட்டுரைகளை வழங்கிய மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்,  விழாவில் கலந்துக்கொண்டு முழுமையாக பங்கேற்ற தினமலர் ஆசிரியர் திரு.முருகராஜ் அவர்களுக்கும், ஒலி ஒளி வசதி செய்த திரு. முத்து அவர்களுக்கும், திரு. கோபிநாத் அவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்.



மேலும் படங்களுக்கு https://photos.app.goo.gl/r5EWe5AuG9gfAxHG2

நன்றியுடன்

அந்தகக்கவிப் பேரவை.

No comments:

Post a Comment