Friday, 31 August 2018

மானுடம் போற்றிய பாரதி


                                                                                                                                                மானுடம் போற்றிய பாரதி

 
17/12/17
ஜெ. முத்தம்மாள்
இளங்கலைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு

       எட்டயபுரத்தில் பிறந்து திருவல்லிக்கேணியில் செத்துப்போனார் என்பது அவரது வாழ்க்கை . மனிதனாய் பிறந்து – கவிஞனாய் வளர்ந்து - மானுடத்தை உயர்த்தும் பணியில் மரித்துப்போனார் என்பது அவரது வரலாறு.
       விஞ்ஞான வெளிச்சத்தில் உலகம் விடிந்து கொண்டிருந்த வேளையில் அவர் பெற்றெடுக்கப்பட்டார் . விஞ்ஞானம் மனிதனைச் சிங்காரித்துக் கொண்டிருந்தது .  மானுடத்தைப் பற்றிக் கவலைப்பட விஞ்ஞானிகள் மறுத்தப் போது ஞானிகள் கவலைப்பட்டார்கள் . உலகந்தழுவிய மானுடத்திற்காய்த் தமிழ் மண்ணிலிருந்து கவலைப்பட்ட கவி - பாரதி .
       இந்திய அரசியல் விடுதலை என்பது வரலாறு உச்சரித்துத் தீர வேண்டிய ஒரு விஷயம் . மானுட விடுதலை என்பதே மனித குலம் எய்த வேண்டிய இலட்சியம் .
       பாரதியின் எழுத்தெல்லாம் இந்த லட்சியத்தை நோக்கியே பயணப்படுகிறது . ஆதலின் , பாரதி எனும் நெருப்பு பழையதாகி விடுவதில்லை .
       " தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
              இமைதிற வாமல் இருந்த நிலையில்
        தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
              தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
        இலகு பாரதிப் புலவர் தோன்றினார் " .
அற்புதமிக்க தன் கவிதைகளால் உலக மக்களை ஒன்று திரட்டி இந்த ஜகத்திணையினையே திரும்பிப் பார்க்க வைத்தார் .
       " பாரதி உலகமே போற்றும் மகாகவி
        அகத்தில் அன்பும்
        பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் " .
என்று பாரதியின் சிறப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறார் .
       மண்ணுண்ட வாய்திறந்து கண்ணன் யசோதைக்கு அகிலம் காட்டியது போல இந்த பாரதியின் வாய்த்திறப்பில் தமிழன்னை இன்றளவும் கவிமுகந்து கொண்டிருக்கிறாள் . தென்றலாய் வீசி மனிதனை இதப்படுத்தி நயப்படுத்த முடியாத போது பாரதியின் படைப்புகள் புயலாக வீசி பழமையை விரட்டி புதுமையை நாட்டின .
       " எல்லோரும் ஓர் குலம்
        எல்லோரும் ஓர் நிலை
        எல்லோரும் இந்நாட்டு மன்னார் "
என்ற பாரதியின் சிந்தனை பொதுவான நிலைப்பாட்டில் மானுடர் அனைவரும் சமம் . அரசனையும் ஆண்டியையும் ஒரே தராசில் நிற்க! அது ஒரே மதிப்பில் இருவரையும் நிறுத்துகிறது .
       ஆதிக்கச் சமுதாயத்தில் கூட ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிற பாரதியின் ஆன்மீக சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கும் புதிய தகுதியை உணர்த்திக் காட்டுகிறது . பாரதி காட்டுகிற மானுட நெறி புதியது , திடமானது  என்பதில் சந்தேகமில்லை . இறுகிய தரையில் நடப்படுகிற செடி ஆழமாக வேறூன்றச் செய்ய தரையை நன்கு தோண்டி வைப்பது போல பாரதியின் நெறி  வாழ்வில் ஆழமான பிடிப்புக் கொண்டது .
       அதனால் தான், அச்சம் தவிர் , ஆண்மை தவறேல் , ஏறு போல் நட , கொடுமையை எதிர்த்து நில் , புதியன விரும்பு என்று வீரமாகப் பேசுகிறார் பாரதி .
       பாரதியின் மானுட சிந்தனைகள் 20ம் நூற்றாண்டில் மட்டுமல்ல அதற்கடுத்த நூற்றாண்டிலும் விழிப்புணர்ச்சி தந்து கொண்டு இருக்கிற ஆக்கப்பூர்வமான அம்சங்கள் தாங்கியவை .
       புழுப்பூச்சிகளாய்க்  காலங்காலமாக அழுத்தப்பட்டுக் கிடந்தவர்கள் தங்களுக்கும் சுதந்திரமாக மூச்சி விடும் உரிமை உண்டு என்பதனையும் , அது பெரு மூச்சாய் இல்லாமல் திருப்தி தருகின்ற சுத்த இதய சுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும் ஜனநாயகத்தை உணரச் செய்தார் .
       சுதந்திரப் போராட்டம் அன்னிய ஆட்சிக்கு எதிரானது மட்டுமன்றி , ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்புக்கு எதிரானதுமாகும் என்று காந்திஜியைப் போல் பாரதியும் கருதினார் . பெண்கள் உரிமைக்காக  போராடினார் . பெண்களிடம் காட்டப்படும் பாராபச்சத்திற்கு எதிராகப் போராடினார் .
       " இதுவரை  கத்தியும் , துப்பாக்கியும் ,
        சிறைச்சாலையும் , தூக்கு மேடையும்
        பயன்படுத்தி மனிதர் ஒருவரை ஒருவர்
        நெறிப்படுத்த முயன்றதெல்லாம் வீண் முயற்சியே .
        வீட்டுப் பெண்டிர்களே தமது தாலாட்டுப் பாடல்களாலும்
        செவிவழி கதைகளாலும் மனித குலத்தை
        மேம்படுத்தியதைப் போல்
        வேறெந்த ஆயுதமும் செயல்பட்டதில்லை ".
என உணர்ச்சியுடன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .
       ஒரு நாட்டில் ஆண்மக்களைப் போலவே பெண் மக்களும் உரிமைப் பெற்று வாழ்தல் வேண்டும் . பெண்ணடிமை கொண்ட நாடு அடிமைக் குடில் என்றும் வீழ்ந்தே கிடக்கும் என்கிறார் பாரதி . 
        தேசபக்தி, பெண்ணுரிமையைப் பற்றி பாடிய பாக்கள் பெரிதும் எமது உள்ளத்தில் இன்பமூட்டிக் கொண்டிருக்கும் . தமிழ் நாட்டில் தோன்றிய புலவருள் பெண்ணுரிமைக்குப் போராடிய வீரருள் தலை சிறந்து விளங்கியவர் பாரதியாராவார் .
       " ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
        அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம் " .
எனப் பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் எனப் பெண்ணுரிமையை ஏத்தினார் .
       " போற்றிப் போற்றி ஓராயிரம் போற்றி நின்
        பொன்னடிக்கேப் பல்லாயிரம் போற்றிகாண் ".
பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றும். பெண்களின் கல்விஅறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்டார் பாரதி .
       " ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
        றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
        வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
        விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் "
       " பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
        பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
        எட்டு மாறிவிநிலாணுக் கிங்கே பெண்
        இளைப்பிள்ளை காணென்று கும்மியடி "
       " வேதம் படைக்கவும் நிதிகள் செய்யவும்
        வேண்டி வந்தோமென்று கும்மியடி
        சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
        சாதி படைக்கவும் செய்திடுவோம் "
       " சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
        தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
        நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
        நித்தமும் சண்டைகள் செய்வார் "
என்று 20ஆம் நூற்றாண்டின் நிலையைக் கூறினார் பாரதி .
       இப்போது இருக்கும் நிலை என்ன ? அந்தச் சாதிப் பிரிவுகளும் நீதி என்ற பெயரில் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் . அந்த நிலை மாறுவதற்காகத் தான் மீண்டும் பாரதி ,
       " சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
        தன்னிற் செழித்திடும் வையம் !
என வலியுறுத்துகிறார் .
       " மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
        வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
        வானுலகு நீர்த் தருமேல் மண்மீது மரங்கள்
        வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றோ  "
அதனால் எதற்கும் அஞ்சாமல் , உடலை வறுத்தாமல் மானுடர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என பாரதி கூறுகிறார் . இந்த உலகம் உயர்ந்திட வேண்டுமென்றால் மனிதர்களெல்லாம் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் . இதனையே
       " வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
        வாழும் மனிதர்க்கெல்லாம்
        பயிற்றி பலகல்வி தந்து - இந்த
        பாறை உயர்த்திட வேண்டும் "
என்கிறார்.
       " இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்து
        கெடுக்க உலகயியற்றி யான் " என்று வள்ளுவர் கூறிய கோப - சாப நிலையை மாற்றி அதனை ,
       " இனியொரு விதி செய்வோம் - அதை
        எந்நாளும் காப்போம் !
        தனியொருவனுக்குக் குணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் ! "
என்று ஆவேசத்துடன் பாடினார் .
       ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுத் திட்டங்களும் , அரசியல் கட்சிகள் நடத்தும் கொள்கைப் போராட்டங்களும் பாரதி காண விரும்பிய நவபாரதத்தை - புதிய தமிழகத்தை - உருவாக்கியாக வேண்டும் .
       அதுவே அமரகவி பாரதியாருக்கு நாம் அளிக்கும் காணிக்கையாகும் .
       " தனியொருவனுக்கு உணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் "
என்று பாரதி சொன்னது ஒட்டுமொத்தமான இந்த உலகினை அல்ல . தனியொருவனுக்கு உணவு இல்லாமல் இறந்திடும் நிலையை தான் காரணமாகக் காட்டுகிறார்.
       அதற்காகத் தான் " இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் " என மனிதர்களின் வாழ்க்கை நடைமுறைக்குச் சாத்தியமான திட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார் .
       மானுடர்களாகிய நமக்கு எல்லாரும் ஓரினம், சுதந்திரம், புதுமைப் பெண், பெண்கல்வி , சாதிப் பிரிவு , மனித வாழ்வு நெறி , தனி மனித  உரிமை என இத்தகைய பல கோணங்களில் மானுடத்தை போற்றிய பாரதியை நாமும் போற்றுவோம் .
      
                          நன்றி

No comments:

Post a Comment