Monday 24 September 2018

தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் வெளியீடு


தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் வெளியீடு


நெஞ்சார்ந்த நன்றி!

அந்தகக்கவிப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா 16/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  பேரவையின் செயலாளரும், மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியருமான மு. ராமன் அவர்கள் வரவேற்புரை வழங்க, பேரவையின் தலைவரும், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளருமான செ. பிரதீப் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

தெற்கு இரயில்வேவில் துணை முதன்மை பணியாளர் அலுவலராக பதவி வகிக்கும்  திருமிகு. தி.தே. தினகர் அவர்கள் தமிழ் வனம் (இரண்டாம் பகுதி) நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில் அந்தகக்கவி என்ற பெயர் தன் உள்ளத்தில் உரைந்து, நினைவில் வின்ற நிகழ்வை சிறப்பாக பகிர்ந்துக்கொண்டார். மேலும், பார்வையற்றோர் தம் துறைசார்ந்து மட்டும் நின்றுவிடாமல் தங்கள் ஆய்வு பரப்பை பல்துறையிலும் விரிவு செய்ய வேண்டும் என்று எடுத்துறைத்தார்.

சிறப்புமிக்க இருபெரும் கல்லூரிகளின் தமிழ்த்துறைத் தலைவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினர். சென்னைமாதனாங்குப்பத்தில் உள்ள சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சே. கண்மணி அவர்கள் தம் உரையில் தமிழ் ஆர்வத்தைத் தம்முள் விதைத்து தமிழைக் கற்கச் செய்த தன் தந்தையை நினைவுக்கூர்ந்து, தமிழால் தாம் பெற்றப் பேற்றினையும், தமிழ்ப் படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்றும் அரங்கிற்கு அறிவுருத்தி இடம் அமர்ந்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.முருகன் அவர்கள் பேசுகயில் தமிழ் படித்ததால் தான் இப்பொழுது இருக்கும் நிலையையும், தன்னோடு படித்த சக நண்பர்களின் தற்போதய நிலையையும் விளக்கி தமிழின் பெருமையை அரங்கிற்கு உணர்த்தினார். தமிழை விரும்பிப் படித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவது உறுதி என்பதை பல உதாரணங்கள் வழி விளக்கினார். தமிழ் வனம் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றிருக்கும்  கட்டுரைகளின் தலைப்பு  குறித்தும், ஆய்வாளர்களின் உழைப்பு, தேடல் குறித்தும் வியந்து பாராட்டினார். விழாவில் கலை நிகழ்ச்சி வழங்க இருந்த மாணவர்களுக்கு இராமானுஜர் குறித்த புத்தகத்தை நினைவாக வழங்கி ஊக்கப்படுத்தினார். பேரவையின் செயல்பாடுகளை எண்ணி மகிழ்ந்து பேரவையினருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராக பணிப் புரியும் முனைவர் இரா. பசுபதி அவர்கள் தம் வாழ்த்துரையில், தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் குறித்தும், அதன் பெயர் பொருத்தம் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார். சவால் நிறைந்த இன்றைய உலகில் பார்வையற்றோர் கணினி, ஆண்டிராய்டு செல்பேசி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கற்பதன் அவசியத்தையும், அதன் தேவைகளையும் எடுத்துரைத்தார்.

ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷனின் தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர் திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள் நூல் குறித்து வியந்து மகிழ்ந்து பேசினார். பார்வையற்றோர் முன்னேற்றத்திற்காக தன் இறுதி மூச்சு உள்ளவரைப் பணியாற்றுவேன் என்று சொல்லி, பேரவைக்கு வாழ்த்துத் தெரிவித்து விடைப்பெற்றார்.

நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து சோகா இகெதா கலைமற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்வியைப் பயிலும் பார்வையுள்ள மாணாக்கியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழைப் போற்றும் பாடல், நாட்டுப்புற பாடலுக்கு நாட்டியம், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம் என அரங்கம் கலைக்கட்டியது. இயல் இசை நாடகம் என தங்கள் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்திய மாணாக்கியருக்கு, தமிழ் ஆர்வலரும், இந்தியன் வங்கி அம்பத்தூர் கிளையின் முதன்மை மேலாளருமான  திரு. அமீருல்லா ஜவஹிர் அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

பிற்பகல் 02:30 மணி அளவில் சமுதாயக் கருத்துகளை அதிகம் வலியுறுத்திய கவிஞர் மகாகவியே! புரட்சிக்கவியே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் (பணி நிறைவு) முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் நடுவராக பங்கேற்று சிறப்பித்தார்.

மகாகவியே என்ற அணியில், செல்வி. கு. பாரதி, (முதுகலைத் தமிழ், இரண்டாம் ஆண்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.) திரு. சு. செல்வமணி, (நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.) திரு. கு. ராமலிங்கம், (பட்டதாரி தமிழ் ஆசிரியர், பதிப்பகச் செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி,  கோடம்பாக்கம், சென்னை.) திரு. தி. மாரிச்செல்வம், (முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர், சி.ச.சுப்பைய்யா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.).

புரட்சிக்கவியே என்ற அணியில், செல்வி. பெ. மோ. பூஜா, (முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.) திரு. கி. லட்சுமிநாராயணன், (நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.) திரு. இரா. பாரதிராஜா, (பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  காட்டுமன்னார்கோயில், கடலூர்.) திரு. இரா. சின்னதுரை, (பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,  க.பரமத்தி, கரூர்.).

இரு அணியினரும் கவிஞர் வழி நின்று தங்கள் கருத்துக்களை பாக்களால் வாதிட்டு வலியுறுத்தி அணிக்கு வலு சேர்த்தனர். பேச்சாளர்களின் கருத்துக்களை நன்கு ஆராய்ந்த நடுவர் அவர்கள் செய்திகளைத் தொகுத்து கூறி, மகாகவி சொன்னான், புரட்சிக்கவி செய்தான்! என்று சொல்லி தம் தீர்ப்பினை வழங்கினார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற கூட்டங்களில் கட்டுரை வாசித்த கட்டுரையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் திருமிகு. தி.தே. தினகர் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். ஒலி ஒளி கலைஞர், புகைப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் அன்பளிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  பேரவையின் நிறுவன உறுப்பினர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுமான திரு. கி. சக்திவேல், திரு. க. சிவக்குமார், திருமதி. சி. வத்சலா நிகழ்ச்சியினை சிறப்பாக தொகுத்து வழங்கினர். விழாவினை தங்கள் சேவையால் சிறப்பித்த KRM சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கும், சோகா இகெதா கல்லூரி மாணாக்கியருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பேரவை நிறுவன உறுப்பினரும், இந்தியன் வங்கிப் பணியாளருமான திரு. சே. பாண்டியராஜ் நன்றியுரை நவில்ந்தார். நாட்டுவாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

விழா சிறப்பாக நடைபெற சலுகை விலையில் அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முருகன்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பேரவையின் தமிழ் வனம் என்ற நூலின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பான முறையில் பதிப்பித்து வரும் AKS Books World மற்றும் ஜீவா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. கந்தசாமி அவர்களுக்கு பேரவை சார்பாக மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம். நூலினை மெய்ப்பு பார்த்திட்ட சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் முனைவர். அபிராமி அவர்களுக்கு நன்றி நவில்வதில் உவகைக்கொள்கிறோம்.  அனைத்து கூட்டங்களிலும் உற்றத் துணையாக இருந்து உதவிவரும் வாசிப்போம் வலைப்பக்கத்தின் நிறுவனர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு எங்கள் நன்றியினை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம். சலுகை விலையில் சிறுதானிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய திரு சிவக்குமார்  அவர்களுக்கும்  எங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். விழா சிறப்பாக நடைபெற உதவிய கொடையாளர்கள், பங்கேற்று சிறப்பித்த விருந்தினர்கள், பேச்சாளர்கள், பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், வாசிப்பாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வனம் செய்வோம்

தமிழ் வனம் செய்வோம்!

நன்றி.

விழா புகைப்படங்களைக் காண தொடுப்பைச் சொடுக்கவும்

https://photos.app.goo.gl/FfsNpJo7kG3KkY5J9

 

No comments:

Post a Comment