பார்வையற்ற பாவலர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம்
ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.
ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர் அந்தகக்கவி வீரராகவர்
பலச் சிறப்புமிக்க நூல்களையும்,
தனிப்பாடல்களையும் இயற்றியவர். இலக்கணக் கவி, சீட்டுக்கவி என்றெல்லாம் அறியப்படும்
அந்தகக்கவி வீரராகவர், உலா, பிள்ளைத்தமிழ், களம்பகம், கோவை, தல புராணங்கள் என பல
நூல்களையும், சில தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். சோழநாடு, ஈழநாடு என பல நாடுகள் பயணித்து அங்கு
ஆட்சிசெய்த மன்னர்களைப் பாடி பாராட்டும் பரிசும் பெற்றவர். இவர் கவித்திறனையும்
புலமையையும் கண்ட புலவர் ஒருவர், “ஒட்டக்கூத்தன் கவியும் ஓங்கிய கம்பன் கவியும்
பட்டப்பகல் விளக்காய்ப்பட்டதே அட்டத்திக்கும் வீசும் கவி வீரராகவனாம் வேளாளன்
பேசுங்கவி கேட்டப்பின்” என்று வியந்து புகழ்ந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு சிறப்புமிக்க புலவர் அந்தகக்கவி
பிறவியிலேயே பார்வையற்றவர் என்பதும், இறைவனடிச் சேர்ந்த இலக்கணக்கவியின் இழப்பை
ஏற்க இயலாத கயத்தாற்றரசன் இவருக்கு இறங்கட்பா பாடியிருப்பதும் தமிழ்ச்சமூகம் அறிந்ததே.
பார்வையற்ற பாவலர் அந்தகக்கவி வீரராகவர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம்
23/12/2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணி அளவில், திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும்
வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஆர்.கே மகாலில் வெளியிடப்பட்டது. இந்நூல் 23 சருக்கங்களும், 834 பாடல்களும் கொண்டது. திருக்கழுக்குன்றப்
புராணத்தையும், அந்தகக்கவியின் புகழையும் உலகிலுள்ள அனைவரும் அறிய வேண்டும் என்ற
உயரிய நோக்கத்தில் குழிப்பாந்தண்டலம் நடராஜன் உமாபதி அவர்கள் அனைத்துப்
பாடல்களுக்கும் ஆங்கில விளக்கம் எழுதி, வித்துவான் காஞ்சி சபாபதி முதலியார்
அவர்கள் எழுதிய உரையையும் சேர்த்து பதிப்பித்து, திண்டிவனம் ஸ்ரீ அன்னைபதி
நூலகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். விழாவில் திருமிகு. நடராஜன்
உமாபதி அவர்கள் பேசும்போது அந்தகக்கவி என்ற மாபெரும் புலவனின் பெருமைகளை வியந்து
போற்றினார். அவர் சிறு வயது முதல் கண்ட மலையின் வளமையையும், பட்சிகளின் அரசன்
வேதகிரீஸ்வரரை வழிப்பட்டதையும் குறிப்பிட்டு திருக்கழுக்குன்றத்தின் பெருமையை
எடுத்துரைத்தார்.
விழாவிற்கு திரு.செல்வராஜ் DSP (ஓய்வு) அவர்கள் தலைமை வகித்தார். சித்தாந்த ரத்தினம் திரு.
சுந்தர் ஐயா அவர்கள் நூலை வெளியிட, மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் அவர்கள்
முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாம் பிரதியை அந்தகக்கவிப்
பேரவையின் நிறுவன உறுப்பினரும், ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட
ஆய்வாளருமான லட்சுமிநாராயணன் அவர்கள்
பெற்றுக்கொண்டார். திருக்கழுக்குன்றப் புராணத்தை ஆங்கில விளக்கத்துடன் பதிப்பித்த
நடராஜன் உமாபதி ஐயா அவர்களுக்கு அந்தகக்கவிப் பேரவையினர் அனைவரும் இணைந்து சிறப்பு
செய்தனர்.
480 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை 200 ரூபாய் மட்டுமே.
நூலின் அட்டைப்படம், தாளின் தரம் உள்ளிட்ட அனைத்தும் அருமை!
ரூபாய் 500க்கு விற்கப்பட வேண்டிய நூல் வெறும் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது
கூடுதல் சிறப்பு.
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும், பிரதியைப் பெற்றுக்கொள்ளவும்
வாய்ப்பளித்து அந்தகக்கவிப் பேரவையை சிறப்பித்த நடராஜன் உமாபதி ஐயா அவர்களுக்கும்,
அவருக்கு பேரவையை அறிமுகம் செய்திட்ட துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி
தமிழ்த்துறையின் பேராசிரியர் சதானந்தம் ஐயா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த
நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment