இந்தியச் சூழலில் சிறை எழுத்துகள் – ஓர் அறிமுகம்
கட்டுரையாளர்: அஜய் ராமகிருஷ்ணன் வெங்கிடாச்சலம்
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்
நெறியாளர்: முனைவர். வெ. சிவராமன்,
இணைப் பேராசிரியர் – ஆங்கிலத்துறை
மாநிலக் கல்லூரி, சென்னை -05.
தமிழில்: கோ. கார்த்தி,
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
நெறியாளர்: முனைவர். வெ. சிவராமன்,
இணைப் பேராசிரியர் – ஆங்கிலத்துறை
மாநிலக் கல்லூரி, சென்னை -05.
இந்தியச் சூழலில் சிறை எழுத்துகள் – ஓர் அறிமுகம்
மனித சமூகத்தில் பன்னெடுங்காலமாகவே குற்றங்களும் குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் வழக்கமும் இருந்து வருகிறது. தண்டனை என்பது ஒருவரது உயிரை எடுக்கும் அளவிற்கு மரண தண்டனையாகவும் வாழ்நாள் முழுக்கவோ அல்லது குறிப்பிட்ட கால அளவிற்குச் சிறைவாசம் அனுபவிக்கும் நடைமுறைக்ள் நாம் அறிந்ததே. அவ்வாறு தண்டனை பெரும் மனிதர்கள் சிறைவாசம் அனுபவிக்கும் போது பல்வேறு விடயங்களை தங்களின் எழுத்துக்களின் மூலம் பொதுமக்களுக்கு விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு சிறைகளிலிருந்து எழுதப்படும் எழுத்துக்களைச் சிறை எழுத்துக்கள் எனக் கொள்கிறோம். இக்கட்டுரையானது இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறை எழுத்துக்களை ஒரு வரலாற்று நோக்கில் அறிமுகப் படுத்த விழைகிறது. சிறை எழுத்துக்கள் என்றாலே அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்குப் பிறகு என்று சில ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் வேலையில், இக்கட்டுரையானது ஒரு படி மேலே சென்று காலனியாதிக்கதிற்கு முன் உள்ள காலகட்டத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களையும் கணக்கில் கொள்கிறது. அதாவது பழங்கால மற்றும் இடைக்கால சிறை எழுத்துக்களில் உள்ள வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் ஒரு வரலாற்று நோக்கில் ஆராய முனைகிறது. இக்கட்டுரையின் வழி இந்திய வரலாற்றில் குற்றங்கள், தண்டனை, சிறைவாசம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதைத் தரவுகளுடன் விளக்க இப்பகுப்பாய்வு உதவும்.
பழங்கால சிறைச்சாலைகளின் அமைப்பு
பண்டைய இந்திய துணைக்கண்டத்தில் சட்டம், குற்றம், தண்டனை பற்றிய தகவல் தர்மசாஸ்திரம் எனும் நூற்தொகுதியில் காணக் கிடைக்கிறது. இன்று இந்து மதம் பின்பற்றும் நீதி பரிபாலன முறைகளை உள்ளடக்கிய இந்நூலானது கி.மு ஏழாம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள கால கட்டத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் (Lochtefeld 191-2). தர்மசாஸ்திரங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு – அபஸ்தம்பா, பவுத்தாயனா, கௌதமா மற்றும் வசிஸ்தா என்று அழைக்கப்படுகின்றன. மேலும் பண்டைய இந்தியாவில் குற்றம் தண்டனை ஆகியவற்றை வரையறுக்கும் போது தண்ட-நீதி என்றே குறிப்பிடப்படுகிறது. இவ்வரையறைகள் காலத்திற்கு ஏற்ப திருத்தி எழுதப்பட்டவைகளாக இருக்கின்றன (Dhawan 9-30,
Chowdhury 22-3). அரசனின் நீதி மற்றும் தண்டனை வழங்கும் முறையை எமதருமனின் செயலுடன் ஒப்பிடும் கவுடில்ய முனிவரின் அர்த்தசாஸ்திரம் மற்றுமொரு முக்கிய நூலாகும். இந்நூலில் சிறைச்சாலை அமைப்பு, காவல் கண்காணிப்பு, ஆண்-பெண்ணுக்கென தனிச் சிறை, பொதுகூட வசதி, தண்ணீர், மருத்துவம் மற்றும் கழிவறை வசதிகள், அந்தந்த குலத்திற்கேற்ற கடவுளை வணங்கும் வசதி ஆகியவற்றை எப்படி ஏற்படுத்த வேண்டுமென விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நல்லெண்ண அடிப்படையில் சிறைக் கைதிகள் திருவிழா நாட்களில் விடுதலை செய்யும் முறையையும் கூறுகின்றது அர்த்தசாஸ்திரம்.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மாளவிக்னாகிமித்ரம் மிர்சகக்கடிகம் உள்ளிட்ட நாடகப் பிரதிகளிலும் சிறைவாசிகளை எந்தெந்த பொழுதுகளில் விடுதலை செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் அரசனின் பிறந்தநாளன்று அதாவது பெருநாள் அல்லது பெருமங்கலம் என்று அழைக்கப்பட்ட நாட்களில் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைக்கிறது. அசோகர் ஆட்சிக்காலத்தில் குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தக் கூடாது என தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதை டவுளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதுமட்டுமில்லாமல் அசோகரின் ஆட்சியில் 26 ஆண்டுகளில் 25 முறை சிறைவாசிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அசோகரின் ஐந்தாவது தூண் சின்னமான டெல்லி டோப்ராவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது (Kane 406). இவை அனைத்தும் பண்டைய காலம் முதலே அரசனின் பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது புலனாகிறது.
சிறைவாசி அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூலான புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழச் செங்கனன் எனும் மன்னனால் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்கிற மன்னனால் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். இரும்பொறை மன்னனால் பாடப்பெற்ற பாடல் எண் 74, கீழே வழங்கப்பட்டுள்ளது.
குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்,
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய,
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் 5
தாம் இரந்து உண்ணும் அளவை,
ஈன்மரோ இவ் உலகத்தானே?
(புறநானூறு 74, பாடியவன்: சேரமான் கணைக்கால் இரும்பொறை, திணை: பொதுவியல், துறை: முதுமொழிக் காஞ்சி)
நவீன சிறை எழுத்துக்களில் பிரதிபலிப்பது போலவே பண்டைய காலத்தில் கைதிகள் நடத்தப்படும் விதத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எழுத்துக்களில் இல்லை என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகிறது.
இந்தியாவில் குற்றம், தண்டனை மற்றும் நீதி சார்ந்த அமைப்புகள் பன்னெடுங்காலம் தொட்டே இருந்து வந்தாலும் நவீன காலத்தில் உள்ள நீதி மற்றும் தண்டனை வழங்கும் அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் இருந்ததில்லை. மேலும் பண்டைய கால நீதி பரிபாலனத்திற்கும் நவீனக் கால நீதி பரிபாலனத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால் அது சாதி/வர்ணம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகும். குற்றவாளியின் சாதியைக் கணக்கில் கொண்டே அவர் செய்த குற்றத்திற்கான தண்டனை இருக்கும். இதன் நீட்சியை தற்போது எழுதப்படும் சிறை எழுத்துக்களிலும் காணலாம்.
இடைக்கால சிறைச்சாலைகளின் அமைப்பு
முகலாய மன்னர்கள் ஆட்சி செய்த 1526 ஆம் ஆண்டு முதல் 1857 வரை உள்ள காலகட்டத்தை இடைக்கால சிறைச்சாலைகளின் அமைப்பு என்று வரலாற்றாசிரியர்கள் வரையறுக்கின்றனர். இசுலாமிய ஆட்சியாளர்கள் நீதி வழங்கும் முறை ‘fiqh’ என்று கூறப்படும் திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின் படி செயல்படுத்தினர் (Saran 336). பண்டைய ரோமாணிய – துருக்கிய சட்டங்களின் படி பின்பற்றப்பட்ட இம்முறையானது மனிதத்தன்மை உடைய அம்சங்களை உள்ளடக்கியது. இச்சட்டம் இசுலாமியர் அல்லாதவர்களை நாட்டின் குடிமகன்களாகவே கருதவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் முகலாயர்கள் ஆட்சியின் போது இந்தியச் சூழலுக்கு ஏற்ப அவை மாற்றி அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இசுலாமிய ஆட்சியாளர்களான பிரோஸ் சுல்தான் மற்றும் மாலிக் அகமது ஆகியேருக்கு இடையில் நடைபெற்ற உரையாடலே சாட்சி (Saran 337). செர்ஷா எனும் மன்னன் ஒரு படி மேலே சென்று இசுலாமியர் அல்லாதவர்கள் சுதந்திரமாக தங்களது மதத்தினை பின்பற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். இவ்வாறாக முகலாய மன்னர்கள் தாங்கள் பின்பற்றிய ஃபிக் (fiqh) சட்டங்களை அப்படியே பயன்படுத்தாமல் இந்திய சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
இக்காலகட்டத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலைகள் இரு வகைகளாகப் பிரிக்கலாம் – மன்னர்கள், அவர் சார்ந்த குடும்பத்தினர் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைத் தனியாக முதல் தரமான சிறையிலும் சாதாரண மனிதர்களை இரண்டாம் தரமான சிறைகளிலும் அடைக்கப்பட்டனர் (Saran 390). முகலாய ஆட்சிக்காலத்தில் கைதிகளைச் சிறையில் அடைக்கும் வழக்கத்தைத் தொடங்கியவர் அபுல் பாசல் எனும் அமைச்சர் ஆவர். இவர் அக்பரின் சபையில் முக்கிய அமைச்சராகவும் ஐன்-இ-அக்பரி என்ற நூலையும் எழுதியவர். சிறைச்சாலைகள் பெரும்பாலும் கோட்டைகளில் அமைக்கப்பட்டன. அவ்வாறு கோட்டைகளில் கட்டப்பட்ட சிறைகளை இன்றும் குவாலியர், ரந்தாம்பூர், ரோத்தாஸ், பாக்கர், ஜூனையார் போன்ற இடங்களில் காணலாம். மேலும் bandikhanas என்று அழைக்கப்படும் பொது சிறைகளும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தன. முகலாய ஆட்சிக்காலத்தில் உள்ள சிறைச்சாலைகள் பற்றி போர்த்துகீசிய இறைப்பணியாளரும் பயணியுமான ஃப்ரே செபாஸ்டியன் மான்ரிக் (1629-1643) விரிவாக எழுதியுள்ளார். அவரும் அவருடன் வந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் என எண்ணி மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டனர். செபாஸ்டியன் மான்ரிக் தனது குறிப்பில் எவ்வாறு தான் ஒரு பணக்கார வியாபாரியிடம் பழகி நீதிபதியிடம் பேசி நல்ல உணவும் இருப்பிடமும் பெற்றார் என்பதையும் குறிப்பிடுகிறார். பத்ராச்சல ராமதாசு என்பவர் குதுப் வம்சத்தின் கடைசி அரசனான தானா ஷா ஆட்சிக்காலத்தில் சிறையில் அனுபவித்த கொடுமைகளை முதன் முறையாக கீர்த்தனைகளாக பதிவு செய்துள்ளார். இராம பக்தரான அவருக்குச் சிறை அனுபவம் ஒரு ஆன்மீகப் புரிதலை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் (Ram & Ram 86-7).
இவ்வகையான ஆன்மீக அனுபவம் பின்னர் வந்த காலனிய ஆட்சிக்காலத்தில் உள்ள சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டதாகப் பலர் குறிப்பிடுகின்றனர்.
முகலாய ஆட்சிக்காலம் முடியும் போது வந்த போர்த்துகீச்சியர்களால் கட்டப்பட்ட கோவாவில் உள்ள தேவாலய சிறை முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கத்தோலிக்க நெறிமுறைகளைப் பின்பற்றிய அவர்கள் கைதிகளை உடல் ரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்த்து தனிமைச் சிறையில் அடைத்து மனமாற்றம் செய்யலாம் என நம்பினர். இவ்வாறாக ஐரோப்பிய வழியிலான தண்டனை முறை சிறைச்சாலை அமைப்பு இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியச் சிறைச்சாலைகளின் அமைப்பு
கிழக்கு இந்திய கம்பெனி தொடங்கப்பட்ட 1600ஆம் ஆண்டிலிருந்தே ஆங்கிலேயர்கள் தங்கள் சட்டம் மற்றும் தண்டனை வழங்கும் முறையை கடைப்பிடித்து வந்தனர். இருப்பினும் இந்தியாவில் நிலவும் சாதி மத பாகுபாடுள், நீதி பரிபாலன முறை, சிறைத் தண்டனைகள் உள்ளிட்டவற்றை அறிந்தே வைத்திருந்தனர். ஆகையால் இந்தியச் சூழலுக்கு ஏற்ப தாங்கள் பின்பற்றிவரும் ஐரோப்பியத் தண்டனை வழங்கும் முறைகளை மாற்றி செயல் படுத்தினர் (Arnold 142-3).
ஐரோப்பியச் சிறைச்சாலைகளில் பின்பற்றப்படும் சில சட்டங்களை இந்தியாவில் பின்பற்றினால் சிறைச்சாலைகளில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் இது நாட்டிற்கு ஆபத்தான போக்காக அமையும் எனச் சிறை அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சிறைச்சட்டங்கள் கடுமையானதாக அல்லாமல் அடிக்கடி மாற்றி அமைக்கப்பட்டதாலும் அரசுக்கு எதிரான கருத்துக்கள் குறிப்பிட்ட அளவு அனுமதிக்கப்பட்டதாலும் இக்காலகட்டத்தில் சிறை எழுத்துக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டது போலப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் கூறிய சிறைச்சாலை சட்ட நடைமுறைகளை அப்படியே இங்குச் செயல்படுத்த முடியவில்லை. அதாவது பதினான்காம் நூற்றாண்டில் நடந்த இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த சிந்தனையாளர் பெக்காரியா என்பவர் எழுதிய ’குற்றங்களும் தண்டனைகளும்’ என்ற நூலானது பின்வந்த ஆங்கிலேயச் சிறைச்சாலை சீர்திருத்தவாதிகளான ஜெரிமி பென்தம், ஈடன் மற்றும் பிளாக்ஸ்டோன் உள்ளிட்டவர்களை வெகுவாக பாதித்தது. இடைக்காலத்தில் ஏற்பட்ட சிறைச்சாலைகள் குறித்த சிந்தனைகள் கைதிகளை ஒருபுறம் மனிதநேயப் பார்வையுடனும் மற்றொருபுறம் அவர்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்று எழுந்தன (Draper 179).
18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த அறிவொளி (Enlightenment)
கால சிறைச்சாலை குறித்த சிந்தனைகளை இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்தும் போது சில சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக 1836 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளை ஒழுங்கு படுத்த ‘சிறைச்சாலை ஒழுங்குமுறை குழு’ ஒன்றை அமைத்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் (Arnold “India: The Contested Prison” 152-6). அதாவது இந்தியா போன்ற பன்முக அடையாளம் கொண்ட சிறைக் கைதிகள் உள்ள நாட்டில் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் போல் ஒற்றைத்தன்மை கொண்ட சிறைக் கைதிகள் இல்லை. இந்தியாவில் மனிதர்கள் சாதியாக பிரிந்து கிடப்பதால் சிறைச் சாலைகளிலும் அது பிரதிபலிக்கிறது. வட இந்தியாவில் ஆணவக் கொலைகளை நிகழ்த்துபவர்கள் உயர் சாதியினராகவும் திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவது தாழ்ந்த சாதியினராகவும் இருக்கின்றனர் என்று ஆய்வாளர் அர்னால்ட் குறிப்பிடுகிறார். மேலும் சில சாதிகளும் குலங்களும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ‘சிறைச்சாலை ஒழுங்குமுறை குழு’ அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிடித்தது. ஆகவே நவீன சிறைவிதிகள் இன்று கூறப்படுபவை யாவும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப துண்டுதுண்டாக அமல் படுத்தப்பட்டவையாகும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு எனத் தனி சிறைச்சாலை விதிகளைக் கண்டடைய வேண்டிய தேவையிருந்தது. ஒவ்வொரு கைதிகக்கும் தனிச்சிறை என்பதை சாத்தியப்படுத்தப் பிரிட்டிஷ் அதிகாரிகள் முயன்று பார்த்தனர். ஆனால் அதனை சாத்திப்படுத்த முடியாமல் திணறியதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் சிறைச்சாலைகள் வெளியே உள்ள சக்திகளால் கட்டுப்படுத்தும் சூழல் இருந்தது. இதன் காரணமாகவே கைதிகளைக் கடல் கடந்து அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிங்கப்பூரில் வைத்து தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை எதிர்த்து நடந்த முதல் புரட்சி வேலூர் சிறையில் ஜூலை 10, 1806 ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்புரட்சியினை பற்றி பல்வேறு ஆய்வாளர்கள் ஏற்கனவே எழுதியுள்ளமையால் மற்ற சிறைச்சாலைகளில் இதன் தாக்கத்தால் நடந்தவற்றைப் பார்ப்போம். 1840களில் பீகார் சிறைகளில் சமபந்தி முறையை அறிமுகப்படுத்தும் போது பல சாதிகளாகப் பிரிந்திருக்கும் கைதிகள் இதற்கு கடும் எதிர்பு தெரிவித்தனர். இதனால் சிறையில் உண்ணாவிரதம், கைதிகளிடையே மோதல்கள், சிறைச்சலையை கபளீகரம் செய்தல் போன்றவை நடைபெற்றன (Arnold 142). இதே போல் 1855 ஆம் ஆண்டு வங்க சிறைச்சாலைகளை ஆய்வு செய்த பிரிட்டிஷ் அதிகாரி லோட்டாக்களைப் பரிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனால் கைதிகள் தங்கள் சாதி- மத அடையாளங்களை அழித்து அவர்களைக் கிருத்துவத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சியோ என்று சந்தேகித்தனர். சிறையில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு வகையில் சிறையில் நடந்த இது போன்ற போராட்டங்களே பின்னர் வந்த 1857 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்கான முதல் போராட்டமாக அமைந்தது எனலாம்.
இந்தியச் சிறை வரலாற்றிலும் சிறை எழுத்துக்களிலும் 1857 ஆம் ஆண்டு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து சிறைக்குச் செல்வது ஒரு தேசப்பற்று மிக்க புனித செயலாக இந்தியர்கள் கருத ஆரம்பித்தனர். மேலும் சிறை செல்பவர்கள் ஆங்கிலேய அரசு நம் நாட்டின் மீது நிகழ்த்தும் கொடுங்கோன்மைகளை சிறையில் நடக்கும் கொடுமைகளை வைத்தே புரிந்து கொண்டனர். எம்.கே. காந்தியின் புகழ்பெற்ற படைப்பான யெர்வாடா மந்திர் (1932) இதை எடுத்துக்காட்டுகிறது. அவர் தனது சிறை அனுபவங்களைத் தனது ஆசிரமங்களின் விதிகளை வகுக்க பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது (Arnold “The
Self and the Cell” 37).
இந்த காலகட்டத்தில் மூன்று வெவ்வேறு வகையான சிறை எழுத்துக்கள் உருவாகின. முதலாவதாக ஒருவரின் சிறை அனுபவம் ஆன்மீக நம்பிக்கையைச் சோதிப்பதாக அமைந்த எழுத்துக்கள். குறிப்பாகக் காந்தியின் சத்திய சோதனை (1927), யெர்வாடா மந்திர் (1932), சிறையிலிருந்து பாடல்கள் (1934) உள்ளிட்ட நூல்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இரண்டாவதாக, சிறைவாசத்தின் போது சிறைக்கு வெளியே உள்ள விஷயங்களை பற்றிப் பேசிய படைப்புகள். உதாரணமாக ஜவஹர்லால் நேருவின் தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா (1946) மற்றும் உலக வரலாற்றின் மீதான கண்ணோட்டங்கள் (1934). மூன்றாவதாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சிறையின் கொடூரத்தை சித்தரிக்கும் பரிந்திர குமார் கோஸின் தி டேல் ஆஃப் மை எக்ஸைல் (1922) போன்ற படைப்புகளும் இருந்தன. மேலும் ராஜாஜியின் சிறை நாட்குறிப்பு (1941), பகத் சிங்கின் சிறை நாட்குறிப்பு (1929), அரபிந்தோ கோஸின் சிறைச்சாலை கதைகள் (1909), லாலா லஜ்பத் ராயின் இன் தி ஸ்டோரி ஆஃப் மை டிபோர்டேஷன் (1908), ஊர்மிளா சாஸ்திரியின் சிறைச்சாலையில் எனது நாட்கள் ( 1930), உல்லாஸ்கர் தத்தின் என் சிறை வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகள் (1924), பி.கே. சின்ஹாவின் அந்தமான்: தி இந்தியன் பாஸ்டில் (1939) போன்ற சிறை எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. இப்புத்தகங்கள் அனைத்தும் சிறைக்குள் எழுதப்பட்டவை மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறை போக்குகளைக் கேள்விக்குள்ளாக்கின. இருப்பினும் இந்தியா விடுதலை பெற்று மக்களாட்சியாக மலர்ந்த பின்னரும் சிறைச்சாலைகள் அதே கட்டமைப்பையே நிலைநிறுத்திக் கொண்டன.
இந்தியச் சிறை எழுத்துக்களில் அடுத்த கட்டம் இந்தியாவில் கம்யூனிசம் மற்றும் தொழிற்சங்ககளின் எழுச்சிக்குப் பின்னர் நிகழ்ந்தது. இந்த நிகழ்வின் வினையூக்கி 1945 முதல் 1947 வரை நிகழ்ந்த சீனவில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி ஆகும். இதனால் நாட்டின் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று சிறைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. எஸ்.ஏ. டாங்கேவின் போன்றவர்கள் முற்கால கம்யூனிசம் முதல் அடிமைத்தனம் வரை (1949) போன்ற சிறை எழுத்துக்களை எழுதுவதற்கும் வழிவகுத்தது. சுதந்திரத்திற்கு பிந்தய சிறை எழுத்துக்களில் மாற்றம் நிகழ்ந்ததை இது குறிக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் சிறைச்சாலையை வர்க்கப் பார்வையுடனும் அரச அதிகாரத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடாகவே கருதினர். மகாதேவ் தேசாயின் ஒன்பது தொகுதிகளாக எழுதப்பட்ட காந்தியுடன் அனுதினமும் (1953) போன்ற சிறை எழுத்துக்கள் இடதுசாரி சாராம்சம் அல்லாத பிற சிறை எழுத்துக்களும் இருந்தன.
அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளின் முற்பகுதியிலும் நக்சல்பாரி மற்றும் மாவோயிச சிந்தனைகளால் உந்தப்பட்ட இளைஞர் எழுச்சியின் விளைவாக ஏராளமான கைதுகள் நிகழ்ந்தன. இந்தியா சுதந்திர நாடாக மாறிய பின்னரும் காலனிய அதிகாரிகள் அறிமுகப்படுத்திய அதே சட்டங்களை வைத்து அதிகமானோரை சிறைவாசப்படுத்தியது இக்காலகட்டத்தில் தான். இதுவே பின்னர் வந்த சிறைச்சாலை எழுத்துக்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. இங்குக் குறிப்பிடக்கூடிய ஓர் அம்சம் என்னவென்றால் பண்டைய காலத்திலிருந்தது போன்ற சிறைச்சாலைக்கு ஒரு புனித பிம்பம் தற்போது இல்லை. சிறை என்பது சிறைவாசிகளின் சீர்திருத்த மையமாக மாறியது. இதற்கு முக்கிய காரணியாகச் சிறைக்குள்ளும் வெளியேவும் சோசியலிச மற்றும் சமத்துவ சிந்தனைகள் வளர்ந்தது காரணமாக அமைந்தது.
இந்தியாவில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை (1975-77) பிறப்பித்த பின்னர் சிறை எழுத்துகள் மேலும் உத்வேகம் அடைந்தன. இக்காலத்தின் முக்கிய தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயண் (சிறைச்சாலைக் குறிப்புகள் (1977)), மொரார்ஜி தேசாய் (ஸ்டோரி ஆஃப் மை லைஃப் (1979)), சினேகலதா ரெட்டியின் (சிறை நாட்குறிப்பு (1970)) போன்றவர்கள் தங்கள் சிறை அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர்.தோழர் சி.ஏ. பாலனின் சிறைச்சாலையின் நிழலில் எனும் நூலானது 1976ல் வெளியிடப்பட்டிருந்தாலும் 1950களில் அவரது சிறைவாசம் பற்றிப் பேசுகிறது. 1967ஆம் ஆண்டிலிருந்து மாவோயிசம் மற்றும் நக்சலிசத்தின் எழுச்சி முதல் 1975-1977 அவசரநிலை காலகட்டம் வரையிலான இந்த வரலாற்று காலம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்கள் சிறைச்சாலையை எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதில் முக்கியம் பெறுகிறது. சிறைச்சாலை என்பதைப் புனிதத் தன்மையுடன் அணுகாமல் அந்த அமைப்பு நிகழ்த்தும் கொடூரங்களைக் கேள்விக்குட்படுத்தின இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறை எழுத்துக்கள். மேலும் இக்காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்துக்கள் ஒரு நபரைச் சிறைக்குள் அடைத்து தனிமைப்படுத்துவதில் அவர் மனமாற்றம் அடையவில்லை மாறாகச் சிறை என்பது பன்முகத்தன்மை உள்ள கூட்டுத் தொடர்பு மூலம் அவரின் மனம் மாறுகிறது என்பதை உரத்துப் பேசுகின்றன.
முடிவுரை
இக்கட்டுரையானது இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் பற்றி மூன்று கட்டங்களாக பிரித்து அதன் அமைப்பு, சிறைச்சட்டங்கள் மற்றும் கைதிகள் பற்றி அல்லது கைதிகள் எழுதிய எழுத்துக்களை அறிமுகப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த விவாதம் இந்தியாவில் சிறை மற்றும் சிறை எழுத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அரசியல் ஆகியவற்றை இலக்கிய மற்றும் கலாச்சார சூழல்களைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே, இந்த முயற்சி இந்தியச் சிறை அனுபவத்தின் தனித்துவமான வரலாறு மற்றும் சிறை இயங்கியல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
Works Cited
Arnold, David. “The Colonial
Prison: Power, Knowledge, and Penology in Nineteenth-Century
India.” A Subaltern Studies Reader, 1986-1995,
edited by Ranajit Guha, Oxford
University Press, 2000, pp. 140–179.
---. “The Self and the Cell:
Indian Prison Narratives as Life Histories.” Telling Lives
in India: Biography, Autobiography, and Life History, edited by Stuart H. Blackburn and
David Arnold, Indiana University Press, 2005, pp. 29–54.
---. “India: The Contested
Prison.” Cultures of Confinement: A History of the Prison
in Africa, Asia and Latin America, edited by Dikötter Frank and Ian Brown, Cornell
University Press, 2007, pp. 147–184.
Balan, C. A. Tūkkumarattinr̲e
nil̲alil. New Century Book House, 2014.
Chowdhury, Nitai Roy. “Reformation of Prisoners in Historical
Perspective.” Indian Prison
Laws and Corretion of Prisoners, by Nitai Roy Chowdhury, Deep & Deep
Publications
Pvt. Ltd., 2002, pp. 22–23.
Dhawan, S S. “The Lucknow Law
Journal.” The Lucknow Law Journal, vol. 13, 1967, pp. 9–
30. Seminar Special, doi: https://books.google.co.in/books?id=eEt7sYvMgSEC&pg=PA
22&dq=Dhavan,+S.+S.,+The+Lucknow+Law+Journal,+Vol.+XIII+and+XIV.
Dikshitar, V.R. Ramachandra,
translator. The Silappadikaram. By
Ilango Adigal, Oxford
University Press, 1939, pp. 57-58, https://archive.org/details/in.ernet
.dli.2015.201802/page/n5.
Draper, Anthony J. “Cesare
Beccaria's Influence on English Discussions of Punishment, 1764–
1789.” History of European Ideas, vol. 26,
no. 3-4, 2000, pp. 177–199.,
doi:10.1016/s0191-6599(01)00017-1.
Foucault, Michel. Discipline
and Punish: The Birth of The Prison. Translated by Alan Sheridan,
Penguin Books, 1991.
Hamilton, Charles.
“Preliminary Discourse.” The Hedaya or Guide: A Commentary on The
Mussulman Laws, by Charles Hamilton, 2nd ed., W.H. Allen & Co., London,
1870, pp.
18–48, https://archive.org/details/hedayaorguideac00hamigoog/page/n4.
Hart, George Luzerne.
“Introduction.” The Four Hundred Songs of War and Wisdom: An
Anthology of Poems from Classical Tamil: The Puṟanāṉūṟu, edited and translated by
George Luzerne Hart and Hank Heifetz., Columbia
University Press, 1999, pp. 15–37.
Herbert, Vaidehi,
translator.“Ettuthokai – Purananuru 1-200.” Sangam Poems Translated by
Vaidehi, 5 May 2012, sangamtranslationsbyvaidehi.com/.
Kalidasa. The Malavikagnimitra. Translated by C.
H. Tawney, 2nd ed., Thacker, Spink and co.,
1891, pp.69-84, https://archive.org/details/in.ernet.dli.2015.283495.
Kane, Pandurang Vaman.
“History of Dharmasastra.” History of Dharmaśāstra, 2nd ed., vol.
3,
Bhandarkar Oriental Research Institute, 1973, pp.
400–460. Government Oriental Series,
No. 6. https://archive.org/details/in.ernet.dli.2015.291330/page/n507.
Kautilya. “Kautilya's
Arthashastra.” Translated by R Shamasastry, Csboa.com, Mysore Print
and
Publication House, 1961, pp. 32–212,
csboa.com/eBooks/Arthashastra_of_Chanakya
_-_English.pdf.
Lammens, Henri.
“Jurisprudence and The Law of Islam.” Islam: Beliefs and
Institutions, translated by Sir E. Denison Ross. by Henri Lammens,
Frank Cass & Co.
Ltd., 1968, pp. 80–123.
Lochtefeld, James G. “Dharma
Sutras.” The Illustrated Encyclopedia of Hinduism. N-Z, 1st ed.,
vol. 2, Rosen, 2002, pp. 191–192.
Mitra Jayā. Killing
Days: Prison Memoirs. Edited by Shampa Banerjee, Kali for Women, 2004.
Permanent Delegation of India
to UNESCO . “The Qutb Shahi Monuments of Hyderabad
Golconda Fort, Qutb Shahi Tombs, Charminar.” UNESCO
World Heritage Centre,
UNESCO, 10 Sept. 2010,
whc.unesco.org/en/tentativelists/5573/.
Ram, Uma, and K.S. Ram. “The
Prison Route To Rama: The Songs of Bhadrachala
Ramdas.” Prison Writing in India, edited by
C. N. Srinath, Sahitya Akademi, 2014, pp.
84–92.
Saran, Parmatma. “Law and
Justice: Police and Jails.” The Provincial Government of the
Mughals, 1526-1658, by Parmatma Saran, Kitabistan, 1941, pp. 300–400.
Shudraka. Mrcchakatika, Translated by Arthur
William Ryder, Harvard Oriental Series, vol. 9,
Harvard University, 1905, pp. 190-212,
https://archive.org/details/in.ernet.dli.2015.
209026/page/n7.