Tuesday 9 June 2020

திரைப்படப் பாடல்களில் அணி நயம்


திரைப்படப் பாடல்களில் அணி நயம்
ரா. பாலகணேசன்
முதுநிலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
ஜோகில்பட்டி, விருதுநகர் மாவட்டம்

முன்னுரை
காலந்தோறும் தனது வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது இலக்கியம். ஆனால், கல்விப் புலங்களில் கற்பிக்கப்படும் தமிழ் இலக்கண நூல்களும், அவற்றிற்கு விளக்கம் அளிக்கவல்ல உரைகளும் நாம் வாழும் காலத்திற்கு முந்தையதாகவே இருக்கின்றன. இதனால் மாணவர்களுக்குக் கற்றலில் ஓர் அந்நியத் தன்மை ஏற்பட்டுவிடுகிறது.
இவற்றிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்தால் விளைந்த ஒரு சிறு முயற்சியே இவ்வாய்வுக் கட்டுரை. கடல் போன்ற தேவை இருக்கும் இப்பொருளில் ஒரு சிறு துளியாய் அமைகிறது எனது கட்டுரை.

ஆய்வு அறிமுகம்
தற்காலத்தில் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட சாதனங்களில் ஒன்று திரைப்படம். இதன் பல கூறுகளுள் ஒன்று பாடல்கள். இவை மக்களிடம் எளிதாகச் சென்றடைகின்றன; மக்களால் அதிகமாகவும் விரும்பப்படுகின்றன.
இதுவரை எந்த ஒரு இலக்கியமும் இத்தகைய சாதனையைச் செய்திடவில்லை எனலாம்.
சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாக இருந்தாலும், அவை கொஞ்சம் கொஞ்சமாக மேட்டுக்குடியினருடையதாக மாறத் தொடங்கின. கற்றறிந்தவர்கள் ஒன்று கூடி ஒப்புதல் அளிக்கவேண்டிய, கடுமையான வரையறைக்கு உட்பட்டதாக அவை மாறின.
பக்தி இலக்கியங்களும் மக்களிடம் செல்வாக்கு பெற்றே இருந்தன. இசையோடு பாடியிருந்ததாலும் தலம் தலமாகச் சென்று பாடியதாலும் இத்தகைய செல்வாக்கு வந்தது எனலாம். ஆயினும் திரைப்படப் பாடல்களைப் போல அவை பரந்த அளவில் பேசப்படவில்லை.
திரைப்படப் பாடல்களின் இத்தகைய செல்வாக்கிற்கு தொழில்நுட்பம் மிக முக்கியக் காரணமாகும். அக்காலத்தில் ஏடு, குரல் என்ற வசதிகலே இருந்தன. ஆனால் இப்போது திரைப்படம், ஒலிநாடா, இணையம், தொலைக்காட்சி, வானொலி, ஒலிப்பேழை, புத்தகம் எனப்பல வசதிகள் வந்துவிட்டன. இவ்வாறு நாம் காரணம் காட்டினாலும் மேற்கண்ட நவீன கருவிகளைக் கொண்டு பிற செய்திகள் பரவுவதைக் காட்டிலும் திரைப்படப் பாடல்கள் மிக விரைவாக மக்களைச் சென்றடைகின்றன.
இத்தகைய வீச்சைப் பெற்றிருக்கும் திரைப்படப் பாடல்களில், இலக்கண ஆசிரியர்கள் விவரித்துள்ள அணிகளுக்குச் சான்றுகளைக் காட்ட முடியும் என்று நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
21-ஆம் நூற்றாண்டில் நின்று கொண்டு தண்டியலங்காரம் கூறும் அணிக் கோட்பாடுகளை ஆராய்வது முழுமையாகாது என்றாலும், திரைப்படப் பாடல்களின் மேன்மையை உணர்த்தவும், அணி இலக்கண எடுத்துக்காட்டுகளை எளிமைப்படுத்தவும் இந்த ஆய்வு அவசியமாகிறது.

அணி இலக்கணம்
எழுத்து மொழிக்கு உருவமும் உள்ளடக்கமும் அவசியம். அவை சிறப்பாக அமைவதற்குப் பயன்படுத்தப்படுவதே உத்தி. இந்த உத்தியை அணி என்கிறோம். மற்றவற்றிலிருந்து மாறுபட்டால் தான் ஒரு படைப்பு வெற்றி பெற முடியும். அவ்வகையில் பயன்படுத்தப்படும் சில உத்திகள் அணிகள் என அழைக்கப்படுகின்றன.
தொல்காப்பியர் தனது நூலில் பொருளதிகாரத்தில் உவமையியல் என்ற ஓர் இயலை அமைத்துள்ளார். அதுவே அணி இலக்கணம் தமிழில் எழுதுவதற்கான தொடக்கமானது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தனியொரு இலக்கண வகையாக அணி மாறியது.
பிற்காலத்தில் வந்த ஐந்து இலக்கண நூல்களான வீரசோழியம், தொன்னூல் விளக்கம் முதலிய இலக்கண நூல்கள் அணி இலக்கணம் குறித்துப் பேசின. (
அலங்காரம்என்ற வடமொழிக் கோட்பாடே தமிழில் அணி இலக்கணமாக உருப்பெற்றது என்று கூறுவோரும் உண்டு. அணி இலக்கணத்திற்கென தனி நூல்களும் எழாமல் இல்லை. தண்டியலங்காரம், மாறன் அலங்காரம், குவளையானந்தம் போன்ற நூல்கள் அணி இலக்கணம் குறித்து மட்டும் கூறுவனவாக அமைந்தன.
 
ஆய்வுக் களம்:
பொ.. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தண்டியலங்காரம் என்ற நூலே இவ்வாய்வுக்கான அடிப்படைக் களமாகிறது. இந்நூலே தற்போது பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்நூலில் பொருளணியியல் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள 35 அணிகளுக்குத் திரைப்படப் பாடல்களில் சான்று காணும் முயற்சியே இக்கட்டுரை.
சான்றாகக் காட்டப்படும் திரைப்படப் பாடல்களுக்கு என்று எந்தவொரு கால வரம்பும் இல்லை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பாடல்கள்  ஆய்வாளரின் ரசனைக்கு உட்பட்டவை. வேறு எந்த வகைமைக்குள்ளும், எல்லைக்குள்ளும் திரைப்பாடல்கள் இங்கு கையாளப்பட வில்லை.
தண்டியலங்காரத்தின் பொருளணியியலில் இருக்கும் 35 அணிகளில் அனைத்திற்கும் நம்மால் இங்கு சான்று காட்ட இயலாது. கட்டுரையின் அளவையும் அது பாதிக்கும். மேலும்,  இந்நூல் வடமொழி நூலின் தழுவல் என்பதால் பல அணிகளுக்குச் சான்றுகள் இல்லாமல் நூலாசிரியரே சான்று காட்டவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. மாதிரிக்காக 10 அணிகளுக்கு மட்டும் இங்கு சான்றுகள் தரப்படுகின்றன

தண்டியலங்காரம்
தமிழில் எழுந்த அணி இலக்கண நூல்களுள் மிக முக்கியமானது தண்டியலங்காரம். வடமொழியிலிருந்து எடுத்தாளப்பெற்ற அலங்காரக் கோட்பாட்டை இந்நூல் சிறப்பாக விளக்குகிறது. இதன் மூலநூல் 'காவிய தரிசம்' என்ற வடமொழி நூலாகும்.
இந்நூலில் தற்சிறப்புப் பாயிரம், பொதுவணி இயல், பொருளணி இயல், சொல்லணி இயல் என 4 இயல்கள் அமைந்துள்ளன. தற்சிறப்புப்பாயிரத்தைப் பொதுவணி இயலில் கொள்ளுதலும் அமையும்.
இந்நூலின் ஆசிரியர் தண்டி. இந்நூலில் அநபாயச் சோழன் குறித்தும் ஒட்டக்கூத்தர் குறித்தும் குறிப்புகள் இருப்பதைக் கொண்டு ஆசிரியர் சோழ நாட்டினர் என்பதையும் 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதையும் அறியலாம். இவர் அம்பிகாபதியின் மகன் என்றும் கூறப்படுகிறார். இவர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். பெரும்பாலான அணிகளுக்கு இவரே சான்றுகளை உருவாக்கி வழங்கியுள்ளார்.

 தண்டியலங்காரம் கூறும் பொருளணிகள்
1. தன்மையணி (இயல்பு நவிற்சியணி)
2. உவமையணி
3. உருவக அணி
4. தீவக அணி
5. பின்வருநிலையணி
6. முன்னவிலக்கணி
7. வேற்றுப்பொருள் வைப்பணி
8. வேற்றுமையணி
9. விபாவனையணி
10. ஒட்டணி (பிறிதுமொழிதல் அணி)
11. அதிசயவணி (உயர்வு நவிற்சியணி)
12. தற்குறிப்பேற்றவணி
13. ஏதுவணி
14. நுட்பவணி
15. இலேசவணி
16. நிரல்நிறையணி
17. ஆர்வ மொழியணி
18. சுவை அணி
19. தன் மேம்பாட்டு உரையணி
20. பரியாயவணி
21. சமாகிதவணி
22. உதாத்தவணி
23. அவனூதியணி
24. சிலேடையணி
25. விசேட அணி
26. ஒப்புமை கூட்டவணி
27. விரோத அணி
28. மாறுபடு புகழ்நிலையணி
29. புகழாப் புகழ்ச்சியணி (வஞ்சப் புகழ்ச்சியணி)
30. நிதரிசனவணி
31. புணர்நிலையணி
32. பரிவர்த்தணையணி
33. வாழ்த்தணி
34. சங்கிரணவணி
35. பாவிகவவணி

திரைப்படப் பாடல்களிலிருந்து சில அணிகளுக்கான சான்றுகள்
1. தீவக அணி
"குணந்தொழில் சாதிபொருள் குறித்தொரு சொல்
ஒரு வயினின்றும் பலவயிற் பொருடாற்
தீவகஞ் செய்யுண் மூவிடத்தியலும்" - (தண்டி 39)
தீவகம் என்ற சொல்லுக்கு விளக்கு என்று பொருள். ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கு எல்லா இடங்களுக்கும் ஒளி தருவது போல பாடலின் ஒரு சொல் பல இடங்களிலும் சென்று பொருள் தருமாயின் அது தீவக அணியாகும். விளக்காக இருக்கும் சொல் அமைந்திருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இது முதனிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலை தீவகம் என்று மூவகைப்படும்.

) முதனிலைத் தீவகம்
.கா: "போறாளே பொன்னுத்தாயி பொலபொலவுண்ணு கண்ணீர்விட்டு
தண்ணீரும் சோறுந்தந்த மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்து கோழிய விட்டு
போறாளே பொட்டப்புள்ள ஊரவிட்டு
சாமந்திப் பூவா? ஊமத்தம்பூவா? கருத்தம்மா எந்த பூவம்மா
அஞ்சாறு சீவன் உள்ளூர ஏங்க
பொதிமாட்டு வண்டி மேல போட்டு வச்ச மூட்ட போல"
(திரைப்படம்: கருத்தம்மா
வரிகள்: வைரமுத்து)
இதில்போறாளேஎன்ற முதல் வரிச் சொல்  கடைசி வரியான "பொதி மாட்டு வண்டி மேல போட்டு வச்ச மூட்டை போல- போறாளே" என வந்து பொருள் தருகிறது.

) இடைநிலைத் தீவகம்
.கா. "தேரோடும் மன்னர் ஏது
பேரோடு புலவர் ஏது
ஏரோடும் உழவர் இன்றி
வேரோடு மனிதர் ஏது?”
(திரைப்படம்: பழநி
தொடக்கம்: ஆறோடும் மண்ணில் என்றும்
வரிகள்: கண்ணதாசன்)
இப்பாடலில் மூன்றாம் அடியானஏரோடும் உழவர் இன்றிபிற அனைத்து அடிகளோடும் இணைந்து பொருள் தருகிறது.

) இறுதிநிலைத் தீவகம்
.கா:  மூளை திருகும்; மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலமாகும்
வாய் மட்டும் பேசாது; உடம்பெல்லாம் பேசும்
இது மோசமான நோய்; ரொம்பப் பாசமான நோய்"
 (திரைப்படம்: கனாக் கண்டேன்
வரிகள்: வைரமுத்து)
இதில் இறுதியில் இருக்கும் 'நோய்' என்ற சொல் எல்லா இடங்களிலும் சென்று பொருள் தருகிறது.

2. பின்வருநிலையணி
"முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரும் என்னிற் பின்வரு நிலையே" -(தண்டி 41)
ஒரு செய்யுளில் ஒரு சொல்லோ, ஒரு பொருளோ பின் வந்தாலும், சொல்லும் பொருளும் இணைந்து பின் வந்தாலும் அவை பின்வருநிலையணி.

) சொல்பின்வருநிலையணி
ஒரு சொல்லே மீண்டும் மீண்டும் வந்தாலும் பொருள் மாறுபட்டு இருக்கும்.
.கா: “நாடு; அதை நாடு; அதை நாடாவிட்டால் ஏதுவீடு?"
(திரைப்படம்: அரசகட்டளை
வரிகள்: கண்ணதாசன்)
இப்பாடலில்நாடுஎன்ற சொல் தேசம், தேடு என்று வெவ்வேறு பொருள்களில் வருகிறது.

) பொருட் பின்வரு நிலையணி:
ஒரே பொருளைக் கொண்ட பல சொற்கள் அமைந்து வருவது.
 .கா: “சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்
  சிறு சிப்பியிலே விழுந்தால் கடல் முத்தெனவே முதிர்வாய்
  பயிர்வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
  என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
(  திரைப்படம்: என் சுவாசக்காற்றே
  தொடக்கம்: சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ
  வரிகள்: வைரமுத்து)
  இதில் வெளியிடுதல் என்ற பொருளை குறிக்க வருதல், முதிர்தல், விளைதல், மலர்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சொல் மாறுபடினும் ஒரே பொருளையே குறிக்கின்றன.

) சொற்பொருள் பின்வருநிலையணி
  ஒரு செய்யுளில் ஒரு சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவது.
  .கா: “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
  யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
  ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
  ரகசியம் இல்லா உள்ளம் கேட்டேன்
(  திரைப்படம்: அமர்க்களம்
  வரிகள்: வைரமுத்து)
  இப்பாடல் முழுவதிலும் "கேட்டேன்" என்ற சொல் ஒரே பொருளோடு மீண்டும் மீண்டும் பயின்று வந்துள்ளது.

3. முன்ன விலக்கு அணி
  "முன்னத்தில் மறுப்பின் அது முன்ன விலக்கே  (தண்டி 42)
  செய்யுளில் ஒரு நிகழ்வு நடந்ததாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என மறுப்பது இவ்வாறு அழைக்கப்பெறும்.
.கா: அவள்: உள்ளமென்னும் ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
             தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
  அவன்: என்னைப் பற்றி நீயும் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
அவள்: இரு உயிர்கள் என்பதே கிடையாது
  இதில் உனது எனது என்ற பிரிவேது?"
  (திரைப்படம்: காதலர் தினம்
  தொடக்கம்: "தாண்டியா ஆட்டமும் ஆட"
  வரிகள்: வாலி)
  இப்பாடல் வரிகளில் உள்ளத்தை அவனிடம் தந்ததாக கூறும் அவள் அடுத்து "உனது எனது என்ற பிரிவேது" என வினவுவதால் இது முன்னவிலக்கணி ஆயிற்று.

4. வேற்றுப் பொருள் வைப்பணி
  *"முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
  பின்னொரு பொருளை உலகறி பெற்றி
  ஏற்றி வைத்துரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே" (தண்டி- 46)
கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை விளக்க உலகறிந்த ஒன்றை எடுத்துக் காட்டுவது வேற்றுப் பொருள் வைப்பாகும். இதில் கவிஞன் கூற விரும்பிய பொருள் சிறப்பு பொருளென்றும், உலகியல் பொருள் பொதுப் பொருள் என்றும் கூறப்படுகிறது.
.கா: “நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்;
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ?”
(பாடலின் தொடக்கம் விழிகளில் ஒரு வானவில்
படம்: தெய்வத் திருமகள்
வரிகள்: நா. முத்துக்குமார்)
இப்பாடலில் அவன் சென்ற பிறகு ஏற்படும் பிரிவின் துயரைத் தேர் உலா முடிந்த வீதியின் நிலையின் மூலம் விளக்குகிறார் கவிஞர்.

5. வேற்றுமையணி
  கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
  வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே" –(தண்டி 47)
  இரு பொருள்களை முதலில் ஒப்புமைப்படுத்தும் கவிஙர் பிறகு வேறுபடுத்தினால் அது வேற்றுமையணி ஆகும்.
  .கா: "ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
  ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாங்கிக் கொள்ள மட்டும்தான் தனித்தனியே தேடுகிறோம்"
  (திரைப்படம்: ஜீன்ஸ்
  தொடக்கம்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
  வரிகள்: வைரமுத்து)
  இருவரையும் தொடக்க வரிகளில் ஒன்றுபடுத்திய கவிஞர் இறுதி வரியில் வேறுபடுத்துகிறார்.

6. ஒட்டணி
  "கருதிய பொருள் தொகுத்து அது புலப்படுத்தற்கு
  ஒத்ததொன்று உரைப்பின் அஃது ஒட்டண ஒழிப" (-தண்டி 51)
  கவிஞன் தான் கருதிய பொருளை மறைத்து அதை வெளிப்படுத்த வேறொன்றைச் சொன்னால் அது ஒட்டணியாகும்.

.கா: அவன்: எண்ணெயும் தண்ணியும் ஒண்ணாக் கலந்ததில்ல
  நெல்லப் போல கோர எண்ணைக்கும் விளஞ்சதில்ல
அவள்: நட்டுவச்ச நாத்து பூமியை பிடிப்பதில்ல
 வேர்விட்ட பிறகு மண்ண பிரிவதில்ல
அவன்: பாதையில் விதைச்ச விதை பலனுக்கு வருவதில்ல
 அவள்: பாறையில செடி முளைச்சும் ஏன் அத பாக்கவில்லல்
அவன்: கல்லிலே நார் உரிக்கும் கத எங்கும் நடந்ததில்ல
அவள்: கல்லிலே சிலை செதுக்கும் கத அது பொய்யுமில்ல
  திரைப்படம்: பாரதி கண்ணம்மா
  தொடக்கம்: தென்றலுக்குத் தெரியுமா தெம்மாங்குப் பாட்டு
  வரிகள்: வைரமுத்து
  இப்பாடலில் அவன் தங்களுக்கிடையேயான காதல் சாத்தியமாகாது என்றும், அவள் அதை சாத்தியமாக்கலாம் என்றும் நேரடியாகக் கூறாமல், அதே பொருளில் பல சான்றுகளைக் கூறுவதால் இது ஒட்டணி ஆயிற்று.

7. அதிசயவணி
"மனப்படும் ஒரு பொருள் வனப்புவந்து உரைப்புழி
உலகு வரம் பிறவ நிலைமைத்தாகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்" -(தண்டி 53)
  மனத்தின்கன் புலப்படும் ஒரு பொருளை அதன் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்து கூறுகையில் உலக நடைமுறையைக் கடந்த வகையில் ஆன்றோர்கள் வியந்து ஏத்துமாறு உரைப்பது அதிசயமென்னும் அணி.

.கா.: “எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது
  பாதங்கள் இரண்டும் பறவை ஆனது
  விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
  புருவங்கள் இறங்கி மீசை ஆனது.
  ஆனந்தக் கண்ணீர் மொண்டு  குளித்தேன்
  ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
  கற்கண்டைச் சுற்றிக்கொண்டே நடந்தேன் சிறு எறும்பாய்
நான்   தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
  காதல் சொன்ன கணமே!"
  (திரைப்படம்: பாய்ஸ்
  வரிகள்: கபிலன்)
  இப்பாடலில் காதலைச் சொன்ன நொடியிலிருந்த மகிழ்ச்சியை கவிஞர் விதம் விதமாக விளக்குகிறார். இப்பாடல் முழுதுமே இவ்வணி அமைந்துள்ளது.

8. தற்குறிப்பேற்றணி
"பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயலொன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப்பேற்றம். -(தண்டி 55)
  இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வில் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்றம் ஆகும்.

.கா: "ஒரு ஓலையிலே உன் நினப்ப எழுதிவச்சேன்
  ஒரு எழுத்தறியாத காத்து வந்து இழுத்தது என்ன?"
  (திரைப்படம்: பாரதி
  தொடக்கம்: மயில் போல பொண்ணு ஒன்னு
  வரிகள்: மு. மேத்தா)
  காற்று ஓலையை இழுப்பது இயற்கை. அவள் நினைவு அதில் இருந்ததால் தான் காற்று கூட ஓலையை இழுத்தது என்பது தற்குறிப்பேற்றம்.

9. நுட்ப அணி
  "தெரிபு வேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
  அரிதுணர் வினைத்திறம் நுட்பம் ஆகும்"-(தண்டி 63)
  நன்கு தெரிந்து வேறுபட மொழியாது குறிப்பினாலும் தொழிலினாலும் அரிதாக உணரும் தன்மை கொண்டு விளங்குவது நுட்ப அணியாகும்.

.கா.: "உன் சமையலறையில் நான் உப்பா...? சர்க்கரையா...?"
  (திரைப்படம்: தில்
  வரிகள்: கபிலன்)
  இப்பாடலில் கூறப்படும் உப்பு தனியாக சுவைக்க சர்க்கரையைப் போல் இனிமை தராது; ஆனால் பெரும்பாலான சமையல்களில் கட்டாயம் பயன்படும். சர்க்கரை இனிமையாக இருந்தாலும் எப்போதாவது தான் (உப்போடு ஒப்பிடும்போது) பயன்படும். இதிலிருந்து கவிஞர் "இனிமை இல்லையென்றாலும் நான் எப்போதும் உன்னோடு இருக்க வேண்டுமா? இனிமையாக நான் எப்போதாவது உன்னோடு இருக்க வேண்டுமா? என்று நுட்பமாக வினவுகிறார் என அறியலாம். இப்பாடலின் பெரும்பாலான வரிகளில் இந்த அணி நிற்பதைக் காணலாம்.
  "நீ விரல்களென்றால் நான் நகமா...? மோதிரமா...?
  நீ மொழிகளென்றால் நான் தமிழா...? ஓசைகளா...?
  நீ புதுவையென்றால் நான் பாரதியா...? பாரதிதாசனா?
  முதலியன இதற்குச் சான்றுகளாகும்.

10. சங்கீரண அணி
  "மொழியப்பட்ட அணி பல தம்முள்
  தழுவ உரைப்பது சங்கீரணமே" - (தண்டி 88)
  தண்டியலங்காரத்தில் விவரிக்கப்பட்ட அணிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் ஒரே பாடலில் வருமானால் அது சங்கீரணம் என்னும் அணியாகும்.

.கா.: “  "வெள்ளி மலரே வெள்ளி மலரே"
  திரைப்படம்: ஜோடி
  வரிகள்: வைரமுத்து
இப்பாடலில் கீழ்க்கண்ட அணிகள் அமைந்துள்ளன
) சொற்பொருள் பின்வருநிலையணி
) தற்குறிப்பேற்றணி
) நுட்ப அணி
) அதிசய அணி

) சொற்பொருள் பின்வருநிலையணி
  "வெள்ளி மலரே வெள்ளி மலரே"-இவ்வரியில் ஒரே சொல் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்ததால் இவ்வணி ஆயிற்று.

) தற்குறிப்பேற்றணி
அவள்: வெள்ளி மலரே, வெள்ளி மலரே
  நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்
  ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய்
  மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
  சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
  இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
  தேன் சிதறும் மன்மத மலர் நீ என்றே சொல்வாயோ?
அவன்: இளந்தளிரே இளந்தளிரே
  வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்க்கு
  பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு"
  இவ்வரிகளில் ஒரு மலரின் இயல்பான நிலை விளக்கப்படுகிறது. அதில் கவிஞர் தன் குறிப்பை ஏற்று காதலியின் கூந்தலின் இடம் பெறுவதற்காகவே அம்மலர் இத்தனை தவங்களையும் செய்திருப்பதாக கூறுவதால் இது தற்குறிப்பேற்றணி ஆயிற்று.
 
) நுட்ப அணி
  "வெட்கம் கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
  தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
  ஆடைக் கொள்ளப் பார்த்தீர் ஐயோ தள்ளி நில் நில்"!
  இவ்வரிகளின்படி காதலன் தென்றலோடு ஒப்பிடப்படுகிறான். தென்றலை வெட்கம் கெட்டது என்று அவள் குறிப்பிட்டாலும், இங்கு வெட்கம் கெட்டவனாக அவள் தன் காதலனைத் தான் குறிக்க விரும்புகிறாள் என்பது குறிப்பு.

) அதிசயவணி
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்”.
இல்லாத ஒன்றைக் கூறுவதால் இது அதிசய அணி.
இப்படி  ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் இடம்பெற்றிருப்பதால் இப்பாடல் சங்கிரண அணிக்குரியதாக ஆயிற்று.

முடிவுரை
 இன்னும் பல அணிகளுக்குத் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் சான்றுகளைத் தேடலாம். கல்லூரி மாணவர்களுக்கு இலக்கண அறிவை ஊட்டவும், திரைப்படப் பாடல்கள் குறித்த தாழ்வெண்ணத்தைக் கல்விப் புலங்களிலிருந்து போக்கவும், மாணவர்களைப் படைப்பாளர்களாக்கவும் இது போன்ற ஆய்வுகள் அவசியமாகின்றன.

துணை நூல்கள்
1. தண்டியலங்காரம் மூலமும் உரையும்
  .. இராம. சுப்பிரமணியம்
  முல்லை நிலையம், சென்னை
2. தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்,
  சுப்ரமணிய தேசிகர் உரையுடன், தமிழ்ப்பண்டிதர், திரு. கொ. இராமலிங்கத் தம்பிரானவர்களால் குறிப்புரை எழுதப்பட்டது. கழக வெளியீடு
3. வினா-விடை அமைப்பில் தண்டியலங்காரம்
  .மா. வெள்ளை வாரணம்;
  மோகன் பதிப்பகம், சென்னை.


No comments:

Post a Comment