Thursday, 20 August 2020

அறிமுகம்

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

அறிமுகம்


    

எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஆய்வுத்திறன் மற்றும் தமிழ் தொழில்நுட்பத்திறன் போன்றவற்றில் தங்களை வளர்த்துக்கொள்ளவும்,  பார்வையற்றோர், பார்வையுள்ளோர் என்ற வேறுபாடின்றி தங்களைப் பயிற்றுவித்துக்கொள்ளவும்  தோன்றியது அந்தகக்கவிப் பேரவை.

தோற்றம்

பல ஆண்டுகளாக சத்யசாயி பக்தர்கள்  சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பார்வையற்றோருக்கு புத்தகங்களை  வாசித்தும், ஒலிப்பதிவு செய்தும் வழங்கி வருகின்றனர். இச்சேவையின் மூலம் பயன்பெற்று உயர்ந்தநிலையை அடைந்தவர்கள் பலர். இந்த வாசிப்பகத்திற்கு சென்று பயன்பெற்ற சிலர், வாசிப்பகம் முடிந்ததும்  சிறுக்கூட்டமாகக் கூடி இலக்கியம் உள்ளிட்ட பல செய்திகளைக் கலந்துரையாடி வந்தனர். இப்படிப் பல செய்திகளை வரையறையின்றி  பேசுவதற்கு பதிலாக  முறையான கூட்டமாக நெறிப்படுத்தி கலந்துரையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாகத் தோன்றியதே அந்தகக்கவிப் பேரவை.

பெயர் காரணம்

தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன், பாரதி என தமிழை வளர்த்தெடுத்து நிலைநிறுத்தியப் புலவர்கள் பலரும் வான்முட்டும் புகழ்ப்பெற்று வாழ்ந்து வருகின்றனர். அந்த  அளவிற்கு இல்லை என்றாலும், எங்கள் அந்தகக்கவியை ஓரளவேனும் நினைவில் இருத்தி, அவரை உயர்த்தி, பார்வையற்றோரை தமிழ் உலகிற்கு அடையாளப்படுத்தும் பொருட்டு இப்பெயர் இடப்பட்டது. அத்தகைய சிறப்பிற்குரிய அந்தகக்கவி வீரராகவர் குறித்த சில குறிப்புகள் பின்வருமாறு.

·         இவர் தொண்டை நாட்டில் பிறந்தவர்.

·         பிறவியிலேயே பார்வையற்றவர்.

·         முதுகில் எழுதச்சொல்லிக் கற்றவர்.

·         கவிஞர், இசைஞானம் உள்ளவர், ஆசிரியர்.

·         பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, கோவை போன்ற இலக்கியங்களைப் படைத்தவர்.

·         இலங்கைக்கு சென்று அரசன் பரராசசிங்கனிடம்  தம் கவிதைக்காக பரிசுகள் பெற்று வந்தவர்.

இவர் பாடிய நூல்கள்

1. திருக்கழுக்குன்றப் புராணம்

2. திருக்கழுக்குன்ற மாலை

3. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்

4. திருவாரூர் உலா.

5. சந்திரவாணன் கோவை

மற்றும் பல தனிப்பாடல்கள்.

பேரவையின் அங்கத்தினர்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணி புரியும் திரு. செ.பிரதீப் தலைவராகவும்,  மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக உள்ள திரு.மு.ராமன் செயலாளராகவும்,  ராணிமேரிக்கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி.சி.வத்சலா பொருளாளராகவும் பொறுப்பேற்று செயலாற்றி வருகின்றனர்.

மாநிலக்கல்லூரி  முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.கி.சக்திவேல்,  மாநிலக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சு.செல்வமணி, அம்பத்தூர் இந்தியன் வங்கியில் பணி புரியும் திரு.சே.பாண்டியராஜ், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட  ஆய்வாளர் திரு.கி. லட்சுமிநாராயணன் போன்றோர் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

பேரவையின் செயல்பாடுகள்

ஒவ்வொரு மாதமும் ஒருவர் அவருக்கு விருப்பமான தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்க, மற்றவர்கள் அதில் தோன்றும் ஐயங்களை எழுப்பித் தெளிவு பெறுதல், நல்ல நூல்களை அறிமுகம் செய்தல், இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கட்டுரை வழங்குதல், மாதம் ஒரு ஆளுமை என்ற தலைப்பின் கீழ் சிறந்த தலைமையாளர்களை அறிமுகம் செய்தல், தமிழ்ச்சுவை என்ற தலைப்பில் சுவைமிகுந்த தமிழ்ப் பாடல்களைப் பகிர்ந்துக்கொள்ளுதல், தங்கள் சொந்த படைப்பை விருந்தாக படைத்தல், பல்துறை தமிழ் அறிஞர்களை அழைத்துத் துறைசார்ந்த அறிவை விரிவு செய்தல் என்ற முறைமைகளில் கூட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பேரவையில் படிக்கப்படும் கட்டுரைகள் மற்றும் படைப்புகள் பெறப்பட்டு பேரவையின் வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வலையொளியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இணையவெளி கூட்டங்கள் வலையொளியில் நேரலை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் படிக்கப்படும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆண்டிற்கு ஒரு முறை ISBN எண்ணுடன் தமிழ் வனம் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதுவரை இரண்டு புத்தகங்கள் (தமிழ் வனம் பகுதி 1, தமிழ் வனம் பகுதி 2) வெளியிடப்பட்டுள்ளது. AKS Books World மற்றும் ஜீவா பதிப்பகத்தின் பதிப்பாளர் கந்தசாமி அவர்கள் தொடர்ந்து நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேரவை நடைபெறும் இடம்

பேரவையின் முதல் கூட்டம் ஆகஸ்ட் 28 2016 ஞாயிற்றுக் கிழமை 1.30 மணி முதல் 3.30 மணி வரை பத்மசேஷாத்ரி பள்ளியின் அருகில் ஓர் மரத்தடியில் நடைபெற்றது. அடுத்தடுத்தக் கூட்டங்கள் ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌண்டேஷன் வாசிப்பகம் உதவியுடன், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து 5 ஏப்ரல் 2020 முதல் ஜூம் அரங்கில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மின்னஞ்சல்

anthakakavi@gmail.com

வலைப்பக்கம்

www.anthakakavi.blogspot.com

வலையொளி

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

நன்றி.


No comments:

Post a Comment