Wednesday 23 September 2020

கவிதை - கடல்

படைப்பு விருந்து - கவிதை

கடல்:

மெல்லிய காற்று மேனியைத் தீண்ட,

சொல்லிய கவிதைகள் காதினுள் கேட்க,

பொன்னிற மணலிலே மனதினை பதித்து,

வெண்ணிற நுறையிலே கால்களை நனைத்து,

தலையினை கோதும் கடற்கரை காற்றில்,

அலையென வாழ அலைந்திடும் மனது!

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை,

ஆழ்கடல் அளந்து வென்றவர் இல்லை,

அலைக் கரம் வரைந்திடும் ஓவியம் போலே,

அவனியில் அழகிற்கு சான்றுகள் இல்லை!

விழுவதும் எழுவதும் வாடிக்கை என்று,

வாழ்க்கைக்கு பாடங்கள் கற்பிக்கும் கடலில்,

கரை மீது தான் கொண்ட காதலைச் சொல்ல,

கவிபாடும் அலையோசை காதினுல் மெல்ல!

சமுத்திர கிடங்கினில் சர்வமும் அடங்கும்,

சகலத்தை அனுசரித்தே கடல் சேவை தொடங்கும்,

கலங்கரை விளக்கத்தால் இருள் மெல்ல விலகும்,

கடந்திடும் பாதைக்கு வழித்துணையாய் திகழும்!

கதிரவன் கண் விழிக்க தன் மடி கொடுத்து,

விடியலின் காட்சிகள் பிரசவிக்கும் பொழுது,

புலர்ந்தது காலையோ அழகினை சுமந்து,

கிளர்ந்தெழும் அலைகளின் பொற்பாதம் பணிந்து!

மனிதனின் நாகரிக வளர்ச்சிகள் மெல்ல,

இங்கே வளர்ந்தது என்றெல்லாம் வரலாறு சொல்ல,

வணிகத்தை வளர்த்தெடுத்த கடலினுள் உள்ள,

மர்மங்கள் பலவற்றை யாருண்டு வெல்ல!

மீனவர் கண்ணீரை தனக்குள்ளே ஈர்த்து,

மிளிர்கின்ற வியர்வையை தினந்தோறும் பார்த்து,

அழுகின்ற தன்மையால் கடல்நீரும் கறிக்கும்,

அதை அனுதினமும் நீ ருசித்தால் சலிக்காமல் உரைக்கும்!

நாற்புறமும் அரண் போலே வலைந்தோடும் கடல்நீர்,

நானிலத்தில் தீவு என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும்,

மூன்றின் கீழ் நான்கு என்ற அளவினை கொண்டாள்,

தீபகற்பம் என்ற வேறு சொல்லை உலகிற்கு முழங்கும்!

கடப்பதற்கு அரிய உன்னை கடல் என்றே போதித்தோம்,

கடந்து பார்க்க முயற்சித்து அரைகுறையாய் சாதித்தோம்,

கழிவுகளால் உன்னை நிரப்பி உன் பொறுமையினை சோதித்தோம்,

நீ கொதித்தெழுந்து கோபம் கொண்டால் நாங்களன்றோ பாதிப்போம்!

தவழ்ந்து ஓடும் குழந்தை என்று கவிவரிகள் சமர்ப்பித்தோம்,

தரணியாளும் உனைத்தானே தாயைப்போல பாவித்தோம்,

கடற்கரையில் மனம் புதைக்கும் காதல் ஜோடிகளின் பார்வையிலே,

கைக்கூப்பி தொட நினைக்கும் கடவுளைப் போல் பூஜித்தோம்!

மனித சுயநலத்தின் ஆக்கிரமிப்பால் உனக்குள்ளே நடுக்கம்,

அதை பிரதிபலிக்க நீ துணிந்தால் அகிலமெங்கும் நடுங்கும்,

கரை தொட்டு கால் நனைப்பதே கடல்நீரின் பழக்கம்,

கரை மீறி தரை பிறண்டால் அகிலமெல்லாம் முடங்கும்!

இயற்கை கூட கர்வம்கொள்ளும் கடல் அழகை பார்த்து,

இயந்திர உலகம் அலச்சியம் கொள்வது பிழை தான் என போதித்து,

இணையத்தின் வழியே காணொளியாக அலைப்பாயும் கடலை,

இனியாவது மீட்டெடுக்க முயற்சி கொள் மனிதா!

-    படைப்பாளர் திருமதி தாஹிரா ஷஃபியுள்ளா

ஆங்கில பட்டதாரி ஆசிரியை, வேலூர்.

  

No comments:

Post a Comment