உயிர்ப் பிழைத்தலும் உயர் சாதனைப் படைத்தலும்
அலெக்சேய் மெரேஸ்யெவ் காட்டும் பாதை
27/09/2020 பேரவையின் கூட்டத்தில்
படிக்கப்படவுள்ள கட்டுரை.
முனைவர் மு. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அரசு கலைக் கல்லூரி
ஆத்தூர்.
அலெக்சேய் மெரேஸ்யெவ் ரஷ்ய நாட்டைச் சார்ந்த ஒரு விமானப்படை வீரன். அவனுடைய
விமானம் பழுதடைந்து ஒரு பெரும் காட்டில் விழுந்துவிடுகிறது. அந்தக் காடு பகைவரின்
படையரணாக உள்ளது. அவன் அந்த விபத்தில் தன் இரண்டு கால்கலையும் இழக்கும் நிலை
ஏற்படுகிறது. அவன் தன்னம்பிக்கையை மட்டுமே துணையாகக் கொண்டு பதினெட்டு நாள்
கடுமையான போராட்டத்திற்குப் பின் காட்டைக் கடந்து உயிர்ப் பிழைக்கிறான்.
ஒரு கிராமத்தைச் சார்ந்த இரண்டு சிறுவர்கள் அவனைக் கண்டுகொள்கிறார்கள். அவன்
வெறும் எலும்புக் கூடாய் இருக்கிறான். அவன் உடல்நிலை உணவை ஏற்றுக்கொள்ளும் வகையில்
இல்லை. அவ்வூர் மக்கள் இயற்கை முறையில் அவனுக்கு முதலுதவி செய்து அவன்
உடல்நிலையைச் சமப்படுத்துகிறார்கள்.
அவன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகிறான். மெல்ல மெல்ல உடல்நிலை
தேறுகிறது. ஆனால் அவன் கால்கள் இரண்டையும் கணுக்கால் வரை அகற்ற வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது. அவனுக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. அவன் மனம் தளரவில்லை.
தான் மீண்டும் விமானியாக முடியும் என்று உறுதியாக நம்புகிறான். அதற்காகத்
திட்டமிட்ட, கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறான். மருத்துவமனைச் சூழல் அவனுடைய
தன்னம்பிக்கையை மேலும் மேலும் வளர்க்கிறது.
அவன் மருத்துவமனையிலிருந்து உடல் வலிமை பெறுவதற்கான மையத்தில் சேர்கிறான். அறைக்குள்ளேயே
பயிற்சி செய்துகொண்டிருந்தவன் தற்போது விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்யத்
துணிந்தான். அங்கு நடனம் கற்றுக்கொள்கிறான். அது அவனுக்கு மேலும் உறுதியை
அளிக்கிறது.
அவன் மீண்டும் விமானப்படையில்சேர்வதற்கான தகுதிச் சான்றிதழை பெறச்செல்கிறான். மருத்துவரும்
அதிகாரிகளும் அவனுடைய திறமையையும் நம்பிக்கையையும் பாராட்டுகிறார்கள். ஆனால், அனுமதி
கிடைக்கவில்லை. அவன் தொடர்ந்து முயன்றான். அதன் பயனாக விமானம் ஓட்ட கற்பதற்கான பயிற்சிப் பள்ளியில் சேர
அனுமதி கிடைக்கிறது. அங்கு அவன் விமானம் ஓட்டுவதில் இயல்பு மீரிய திறனை
வெளிப்படுத்துகிறான். அவனுடைய ஆசிரியர் அதைக்கண்டு வியப்படைகிறார்.
அவனுக்கு விமானப்படையில் இடம் கிடைக்கிறது. அவன் வீரமாகவும்
துணிவாகவும் போர் புரிகிறான். ஒரே நாளில் மூன்று விமானங்களைச் சுட்டு
வீழ்த்துகிறான். நெருக்கடியான சூழலில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து
செயல்பட்டு தன் படையினரின் உயிரை காக்கிறான். . எதிரிப் படையின் ஆற்றல் மிக்க ஒரு தலபதியின் விமானத்தைத்
தாக்கி அலிக்கிறான். எரிபொருள் இல்லாமலேயே ஆறு கிலோ மீட்டர் தூரம் விமானத்தை ஓட்டுகிறான். அவனுக்குப் பதவி பதவி
உயர்வு அளிக்கப்படுகிறது. அவன் விமானப்படையினரால் சாதனைக்குரிய வீரனாகப்
போற்றப்படுகிறான்.
அலெக்சேயின் ஒவ்வொரு செயலுக்குப்பின்னாலும் நம்பிக்கை ஊற்று, கற்பனைக்கெட்டாத முயற்சி, திட்டமிடல், இலக்கை
அடைவதற்கான இடைவிடாத செயல் துடிப்பு எல்லாம்
இருக்கின்றன.
பரீஸ் பொலேவோய் ‘உண்மை மனிதனின் கதை’ என்ற புதினத்தில்’ அலெக்சேயின் சுவையான
வாழ்க்கையைச்சித்திரிக்கிறார். அதைப் படிக்கும் நமக்கு எல்லையற்ற செயலூக்கம்
ஏற்படுகிறது. அந்தப் படிப்பு அனுபவத்தைச் சுவைஞர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்
இக்கட்டுரையின் நோக்கம்.
அலெக்சேய்க்கு
நேர்ந்த சிக்கல்கள்
ஒரு போர் விமானிக்கு அவன் பகைவரால் தாக்கப்படுவதைவிட நெருக்கடியான சூழல்
அவனுடைய வெடிபொருள்கள் தீர்ந்துபோவது. ஒரு வீரன் எதிரியின் தாக்குதலுக்கு
இரையாவதைவிட கொடுமையானது அவர்களின் கைதியாவது. இந்த இரண்டு சிக்கல்களையும்
அலெக்சேய் சந்தித்தான். இச்சிக்கல்களை வெள்வதற்காகவே அவன் விமானத்தின்
எரிபொருள்இணைப்பைத் துண்டித்தான். ‘விமானம்
பல பாகங்களாய் உடைந்து விழுந்தது. அவன் ஒரு மரத்தின்மேல் தூக்கி வீசப்பட்டான். அவன்
தன் உணர்வையும் நினைவையும் திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரமானது.’
கரடியின் தாக்குதல்
அலெக்சேய் விமானம் விழுந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள் அவன் மீது அடுத்த
தாக்குதல் நிகழ்ந்தது. அவனுக்கு ‘நினைவு வந்தபோது ஒரு கரடி தன் மேல் அமர்ந்து
தன்னைக் கடித்துக்குதர முற்படுவதை உணர்ந்தான். தான் அசைவற்றுக் கிடந்தால் கரடி
விட்டுவிட்டுப் போய்விடும் என்று நம்பி வலியைப் பொருத்துக்கொண்டு கிடந்தான். அவன்
நினைத்த படி கரடி விடவில்லை. அவன் மிகவும் கடினப்பட்டு உடலை அசைக்காமலும் கரடியின்
பார்வையில் படாமலும் தன் இடுப்பிலிருந்த துப்பாய்க்கியை எடுத்துக்கொண்டான்.
கரடி முன்னிலும் வலுவாக விமான உடையைப் பற்றிக் கிழிக்க முயன்றது. அழுத்தமான
துணி முடமுடத்தது. எனினும் கரடி மறுபடியும் தாக்கியது. வெறித்து உறுமியது.
உடையைப் பற்களால் பற்றி மென்மையாயிருக்கும் பஞ்சுப் பற்றைக்கு ஊடாக உடலை
நசுக்கியது . அலெக்சேய் பெருமுயற்சி செய்து உடல் வலியைப் பொறுத்துக் கொண்டான். கரடி
தன்னை வெண்பனிக் குவியலிலிருந்து வெளியே இழுத்த தருணத்தில் ரிவால்வரைச் சட்டென
உயர்த்திக் குதிரையை அழுத்தினான். மந்தமான வெடியோசை சடாரென்ற ஒலிப்புடன் பரவியது.’
அவன் தன்னைக் கரடியிடமிருந்து காத்துக்கொள்வதற்குத்
தடிமனான விமான உடையும் துப்பாய்க்கியும் பயன்பட்டன என்றாலும் அவனுடைய பொறுமையும்
உடனடி அறிவும்தான் அவனைக் காத்தன.
உயிருடன் இருத்தலின் உண்ணத நினைவு
அலெக்சேய், கரடியின் தாக்குதலால் மேலும்
சோர்வடைந்தான். அதனால் மீண்டும் நினைவிழந்தான். நினைவு திரும்பியபோது அவனுக்கு
இருந்த ஒரே ஆருதல். அவன் உயிருடன் இருக்கிறான் என்பதுதான். அவன்
"நான் உயிரோடிருக்கிறேன்,
உயிரோடிருக்கிறேன்,
உயிரோடிருக்கிறேன்" என்று மனதுக்குள் திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டான். அவனுடைய மனம்
உயிர் வாழ்வின் அற்புதமான , விறல்மிக்க , போதையூட்டும் உணர்வால் நிறைந்தது.
உடல் முழுவதும் களி துள்ளியது. மரணத்தின் எல்லையைத்
தொட்டுத் திரும்பும் ஒவ்வொரு தடவையும் மனிதனுக்கு ஏற்படுவது இந்த உணர்வு.
ஒரு
அடிகூட நகர இயலாமை
அலெக்சேய்க்கு உடல் ரீதியாக துலியளவு
தூரம் கூட நகர இயலாத நிலை ஏற்படுகிறது. ‘தான் உயிருடன் இருக்கிறோம் என்ற உணர்வு
மேலிட்டால் அவன் துள்ளி எழுந்து நின்றான். ஆனால் அப்போதே முனகலுடன் கரடியின் உடல்
மேல் தொப்பென உட்கார்ந்துவிட்டான். உள்ளங்கால்களில் உண்டான வலியால் அவன் உடல்
முழுதும் காந்தியது. மண்டைக்குள் மூளையை அதிரச்செய்யும் கடகடப்புடன் தேய்ந்த பழைய திரிகை சுழல்வது போன்று ஆழ்ந்த கனத்த ஓசை நிறைந்திருந்தது. இமைகளுக்கு மேல் யாரோ விரலால் அழுத்துவது போலக்
கண்கள் வலித்தன.’ அதன் பிறகு அவனை இயக்கியதெல்லாம் அவனுடைய மனம்தான்.
வரைபடப்
பெட்டியைத் தவற விடுதல்
போர் விமானிகள் எதிர்பாராத விபத்துகளால் தரையில் விழும்போது தாங்கள் விழுந்த
இடத்தையும் செல்ல வேண்டிய திசையையும் அறிவதற்குப் பயன்படுவதே வரைபடப் பெட்டி. அதை
அலெக்சேய் தவறவிட்டுவிட்டான். ஆனால், விமானத்தில் பறந்த அனுபவத்தைக் கொண்டே தான்
இருக்கும் இடத்தை அவனால் உணர முடிந்தது. அவன் எந்தத் திசையில் சென்றால் ஊரை
அடையலாம் என்பதையும் உணர்ந்திருந்தான்.
கால்களின்
நிலையை உணர்தல்
அலெக்சேய் மெல்ல மெல்லத் தன் நினைவுக்கு வந்தான். தன் கால்களைப் பார்த்தான்.
‘இரண்டு கால்களும் எதற்கும் பயன்படாத நிலையில் இருந்தன. பைன் மரமுடிகள் மீது
விமானத்தின் மோதலால் அவன் தனது அறையிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது பாதங்களை
எதுவோ நசுக்கி விரலடியும் விரல்களும் சேர்ந்த சிற்றெலும்புகளை நொறுக்கிவிட்டது
போலும்’ என்பதை உணர்ந்தான்.
முதல்
எட்டு
அலெக்சேயின் முரிந்துவீங்கிய கால்களால் எழுந்துகூட நிற்க
முடியாது. ஆனால் ‘அவன் அதையெல்லாம் நினைக்கவில்லை. அவன் இந்தக் காட்டைக் கடக்க
வேண்டுமே. எனவே நடப்பது, கிழக்கு நோக்கி நடப்பது என்று தீர்மானித்தான்.’ ஆனால்
முடியவில்லை. ‘ஐயோ என்று முனகினான். பற்களை நெறுநெறுத்து முதல் அடி எடுத்து வைத்தான். சற்று நின்று மற்ற காலை
வெண்பனியிலிருந்து வெளியில் எடுத்து இன்னோர் அடி வைத்தான். தலைக்குள் இரைச்சல்
உண்டாயிற்று.
வலியும் இறுக்கமும் காரணமாக.
சில அடிகள் முன்னேறியதும் தலைச் சுற்றத் தொடங்கியது.
ஏதேனும் அடி மரத்தில் முதுகைச் சாய்த்தபடி கண்களை மூடிக் கொண்டு நிற்க வேண்டி வந்தது.
இரத்த நாளங்களில் கடுமையான நாடித்துடிப்பை உணர்ந்தவாறு
வெண்பனிக் குவியலில் சற்றே அமர்ந்து இளைப்பாற நேர்ந்தது.
அந்த மாதிரியாக சில மணி நேரம் நடந்தான். ஆயினும் அவன்
திரும்பிப் பார்த்தபோது அவன் புறப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரமே
வந்திருந்தான்.
இது அலெக்ஸேய்க்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அச்சமூட்டவில்லை. இன்னும் விரைவாக செல்ல அவனுக்கு
விருப்பம் ஏற்பட்டது. வெண்பனி குவியலிலிருந்து எழுந்து பற்களை இறுகக்கடித்தவாறு
முன்னே சென்றான்.
அலெக்சேய்
கழித்த முதல் இரவு
அலெக்சேய் ஒரு நகர மனிதன். அவனுக்குக் காடு பற்றிய அறிதல்
கிடையாது. எனவே, இரவு தங்க இடவசதி செய்து கொள்வதையும் நெருப்பு மூட்டுவதையும்
பற்றி அவன் உரிய நேரத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போதோ காரிருள்
சூழ்ந்துவிட்டது. அடிபட்டு நொறுங்கிய அவன் பாதங்கள் உழைத்துச் சோர்ந்து தாங்க
முடியாதபடி வலித்தன. இந்த நிலையில் விறகுத்தேடச் செல்வதற்கு அவனுக்கு இயலவில்லை.
பைன் மரக்கன்றுகள் அடர்ந்தப் புதருக்குள் நுழைந்து.
மரத்தின் அடியில் குந்தி
கைகளால் முட்டைகட்டிக் கொண்டு
முழங்கால்களில் முகத்தை புதைத்தவாறு உருண்டைப் போல முடங்கிவிட்டான்.
கடுங்குளிரின்
தாக்கம்
அலெக்சேயை அடுத்தடுத்த சவால்கள் இடைமரித்தன. குளிர்நிலையைச் சமாளிப்பதற்கு
அவன் மிகவும் கடினப்பட்டான். ‘ஈரக்குளிர்
அவனது விமானி உடையின் "பேய்த் தோலையும் ” மென் மயிரையும் துளைத்துக்கொண்டு
எலும்புகள் வரை ஊடுருவிவிட்டது. உடம்பு கட்டிலடங்காமல் விடவிடத்தது. ஆனால்
எல்லாவற்றிலும் கோரமாக இருந்தன கால்கள். இப்போது.
வெறுமே இருக்கையில் கூட.
அவை முன்னிலும் கடுமையாக வலித்தன. எழுந்திருக்க வேண்டும்
என்று எண்ணியபோது அவனுக்கு பகீர் என்றது.’
உணவின்
தேவை
அலெக்ஸேயைப் பீடித்திருந்த எல்லாத் துன்பங்களுடனும் பசியும் சேர்ந்து கொண்டது அவனுக்கு
இருந்த உடல் நிலையில் உணவுக்காக எந்த ஏற்பாடும் செய்ய முடியவில்லை. எனவே, அவன்
அநேகமாக உணவு இல்லாமலேதான் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
‘அவனுக்கு தற்செயலாகப் போரினால் மறைந்த மருத்துவத் தாதியிடமிருந்து எடுத்த ஒரு
கிலோ கிராம் பதனிட்ட இறைச்சி கொண்ட டப்பி கிடைத்தது. அதிலிருந்து
நாள்தோறும் ஒரு முறைநடுப்பகலில் சாப்பிடுவது என்று தீர்மானித்தான். அது
அவன் பசியை துலியளவும் தீர்க்காதுதான். ஆனாலும் வேறுவழி இல்லை. ஒரு முறை உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத்
துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான்.
ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத
பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க வேண்டும் என்ற ஆசை
எழுந்தது. அதைக் கடினப்பட்டு அடக்கிக்கொண்டான்.
எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.’
அலெக்சேய் ஒரு நாள் ‘பதனிட்ட இறைச்சியின் அற்ப மிச்சங்களை.
மணம் வீசும் கொழுப்பு படிந்த சில இறைச்சி நார்களை
காலையிலேயே தின்பது என்று தீர்மானித்தான். இல்லாவிட்டால் தன்னால் எழுந்து நிற்க
முடியாது என்று அவனுக்குப்பட்டது. டப்பாவின் கூர் விளிம்புகளில் பட்டு கையின் சில
இடங்களைக் கீறிக் கொண்டு விரலால் டப்பாவைத் துப்புரவாக வழித்து நக்கினான்.
அப்புறமும் கொழுப்பு எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. டப்பாவில் வெண்பனியை
நிறைத்தான். அணைந்து கொண்டிருந்த நெருப்பின் வெளிர் சாம்பலைத் திரட்டி
அகற்றினான். தணல் மீது டப்பாவை வைத்தான். பின்னர் சிறிது இறைச்சி மணம்
வீசிய அந்த சுடுநீரைச் சிறுசிறு மடக்குகளாக இன்பத்துடன் பருகினான்.’ மனம்
நினைத்தால் வெறுமையைக் கூட உணவாக உண்ண முடியும் என்ற கண்டுபிடிப்பை அலெக்சேய் அன்று உலகுக்கு அறிவித்தான்.
தேனீர்
உணவு
மனித வாழ்க்கையில் தேனீர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பலபட பேசலாம்.
அலெக்சேய்க்கும் தேனீர் ஒரு உச்சாக ஊக்கியாகப்பட்டது. இரைச்சி காலியான ‘டப்பாவில்
தேநீர் காய்ச்சலாம் என்று தீர்மானித்து அதைப் பைக்குள் வைத்துக் கொண்டான். சூடான
தேநீர் பருகலாம் என்ற நினைவு அவனுக்கு உவப்பளித்தது. . மீண்டும் வழி நடக்க
தொடங்கியபோது இது அவனுக்கு ஓரளவு உற்சாகம் ஊட்டியது. ‘வெண்பனிக்கு அடியிலிருந்து
பாசியைத் தோண்டி எடுத்து இராத்தங்கலின் போது கொதிநீரில் வேகவைப்பான். வெண்பனி
உருகிய இடங்களில் சிவப்பு பில்பெரிப் புதர்களின் மெருகேறிய இலைகளை சேகரித்து
அவற்றால் "தேநீர் தயாரித்துப் பருகுவது அவனுக்கு மிக்க இன்பம் அளிக்கும்.
சூடான நீர் உடலுக்கு வெப்பம் ஊட்டி வயிறு நிறைந்துவிட்டது போன்ற பிரமையைக் கூட உண்டாக்கும். ‘புகை
நெடியும் புல் வாடையும் வீசிய அந்தச் சுடு கஷாயத்தைப் பருகி எப்படியோ முழு அமைதி அடைவான்.’
பசி
மறத்துப் போதல்
அலெக்சேய்க்கு சொல்லும்படியான உணவு கிடைக்காததால் நாள் போக்கில் அவனுக்குப்
பசி மறத்துப் போனது. அதனால் ‘பசியின்
கொடுந்தொல்லை அடங்கி விட்டது. வயிற்றில் இசிவும் குடல்வலியும் நின்றுவிட்டது.
வெற்றான இரைப்பை கட்டியாகிவிட்டது ’ அவனுக்கு உணவு பற்றிய நினைவு வரும்போதெல்லாம் ‘இளம் பைன்மரப் பட்டைகளைக் கட்டாரியால் உரித்து
அவற்றையும் பிர்ச். லின்டன் ஆகிய மரங்களின் இலை மொக்குகளையும் மென்மையான
பாசியையும்மட்டுமே உணவாகக் கொண்டான்.’
கூம்பு
பழக்கொட்டைகள்
அலெக்சேய் சூழலை கண்ணும் கருத்துமாக நோக்கி தேவையான அறிவைப் பெறுவதில் கவனமாக
இருந்தான். அணில் கூம்பு பழக் கொட்டைகளை உண்பதைப் பார்த்து தானும் அதை உண்டான்.
அது மிகவும் சிறியதாக இருந்தது. அணிலின் உணவு அலெக்சேயின் வயிற்றுக்கு
எம்மாத்திரம்? ஆனால் அது சுவையாக இருந்தது. அந்தச் சுவையையே பசியாற்றும் ஆற்றலாக
எண்ணி உண்டான்.
பட்டினியை
மிஞ்சும் எச்சரிக்கை உணர்வு
உண்பதற்காக வாழாமல் வாழ்வதற்காக உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். அலெக்சேய்
தன் பசியையும் பட்டினியையும் எதிர் கொண்ட முறையை நோக்கினால் அவனுடைய ஆளுமையின் மேல் எல்லையை உணரலாம். ஒரு
நாள் அவனுக்கு ‘மிதிப்பட்டு வெண்பனியில் புதைந்திருந்த.
சிறிது கடிக்கப்பட்டிருந்த ரஸ்குத் துண்டு ஒன்று ஓரிடத்தில்
அகப்பட்டது. அது பழையது. பூஞ்சணம் பூத்தது. அவன் அதை வாயருகே கொண்டு போனான்.
ரொட்டியின் புளித்த வாடையை ஆர்வத்துடன் முகர்ந்தான். அதை அப்படியே வாய்க்குள்
திணித்துக்கொண்டு. மணமுள்ள ரொட்டியை ருசித்து ருசித்து சுவைக்க வேண்டும் போல்
ஆசையாயிருந்தது. ஆனால் அலெக்ஸேய் அதை மூன்று கூறுகளாகத் துண்டு போட்டான். இரண்டு
துண்டுகளை காற் சட்டையின் பையில் ஆழத்தில் வைத்தான். ஒரு துண்டைக் கிள்ளிச் சிறு
பொறுக்குகளை வாயிலிட்டு மிட்டாயைக் குதப்புவது போலச் சுவைக்காமல் குதப்பி அவற்றை
உண்டமைக்கான மகிழ்ச்சியை நீடிக்கச் செய்ய
முயன்றான்.’
வலியையும்
சோர்வையும் மறப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள்
அலெக்சேய்க்கு ஒவ்வோர் அடி எடுத்து வைக்கையிலும் கொடியவலி உண்டாயிற்று. அதை உணராதிருக்கும்
பொருட்டு தனது பாதையைப் பற்றி சிந்திப்பதும் கணக்கிடுவதுமாகக் கவனத்தை வேறுபுறம்
திருப்பத் தொடங்கினான். பைன் மரம்,
அடிக்கட்டை, வழியிலிருந்த செடி என்று எதேனும் புலப்படும் பொருளை இலக்காக
வைத்துக்கொண்டு இளைப்பாறும் இடத்திற்குச் செல்வதுபோல அதை நோக்கி
முன்னேறினான். இப்போதோ அவன் இவற்றை எல்லாம் எண்களில் மொழி பெயர்த்தான். காலடிகளின்
எண்ணிக்கையாக மாற்றினான். இளைப்பாறும் இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை ஆயிரம்
அடிகளாக. அதாவது அரைக் கிலோமீட்டராக வைத்துக் கொள்ள நிச்சயித்தான்.
இளைப்பாறுவதையும் நேரக் கணக்கில். ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல் வைத்துக் கொள்வது என்று
முடிவு செய்தான். ஆனால் அவன் நினைத்தபடி செய்ய முடியவில்லை.
கொம்புகளைத்
துணைக் கோடல்
அலெக்சேயின் மன ஓட்டத்திற்கும் உடல் இயக்கத்திற்கும் பாரிய வேறுபாடு இருந்தது.
ஆனால் அவன் மன உந்துதலைக் கட்டுப்படுத்த முயலவில்லை. அதே நேரம் தன் இயக்கத்தை
மிகுவிப்பதற்கான முயற்சிகளைச் சிந்தித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அவன்
‘ஜூனிப்பர் புதரிலிருந்து இரண்டு கொம்புகளை வெட்டி எடுத்துக் கொண்டான். அவற்றைத்
தாங்கலாக ஊன்றிக்கொண்டு நடந்தான். ஆனால் நடப்பது மணிக்கு மணி அதிகக்
கடினமாகிக்கொண்டிருந்தது.”
காதல்
ஊக்கம்
அலெக்சேய் தன் பயணத்தின் ஊடே அவ்வப்பொழுது தன் காதலியின் கடிதங்களையும்
அவளுடைய புகைப்படத்தையும் எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டான். அது அவனுக்கு
ஒரு உச்சாகத்தைத் தந்தது. அவன் இனி இந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகர
முடியாது என்று உணர்ந்த தருணங்களில் எல்லாம் அவனின் காதலி நினைவுதான் அவனை உந்தி
எழுந்து மணிக்கணக்கிலும் நாள்
கணக்கிலும் நடக்கச் செய்தது.
பாதை
மறைதல்
மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் பாதை
என்பதற்கெல்லாம் இடமில்லைதான். ஆனால் அலெக்சேய் தனக்குப்பட்ட ஒரு நேர் கோட்டைப்
பாதையாகக் கற்பனை செய்திருந்தான். ஒரு நாள் இரவில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றம்
அந்தக் கோட்டையும் அழித்திருந்தது. ‘சாய்வான
முடி கூம்பிய வெண்பனிக் குவியல்களால் அது வழியைத்
தடுத்திருந்தது. ஒரே நிறத்தில் பளிச்சிட்ட வெண்ணீலம் கண்களைக் குத்தியது. மென்தூவி
போன்ற இன்னும் படிந்து இறுகாத வெண்பனியில் கால்கள் ஆழப்புதைந்தன. அவற்றை
சிரமத்துடனேயே வெளியில் எடுக்க வேண்டியிருந்தது. வெண்பனியில் புதைந்த
ஊன்றுகோல்களும் நன்றாக உதவவில்லை.’ ஆனால் அலெக்சேயின் நடை நிற்கவில்லை.
அலெக்சேய்
தன் கலைப்புடன் நடத்திய போராட்டம்
‘அலெக்சே பட்டினியான, நோயுற்ற, களைப்பால் செத்துச் சாவடைந்த மனிதன். பிரம்மாண்டமான இந்த
அடர் காட்டில் அவன் தன்னந்தனியன். இருளில் அவன் முன்னே கண்டுகொள்ளமுடியாத
எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை.’
என்றாலும் அவன் தன் மனச்சோர்வுக்குச் சிறிதும் இடமளிக்கவில்லை. ஆனால் அவனுக்கு
நேர்ந்த உடல் சோர்வை அவனால் தடுக்க முடியவில்லை. அதனால் அவன் இயங்க இயலாமையின்
விலிம்புக்கு அடிக்கடி செல்லும் நிலை ஏற்பட்டது.
அலெக்சேய் ‘ஒரு நாள் காலை முதல் நடுப்பகல் வரை சுமார் ஆயிரத்தைந்நூறு அடிகள்
மட்டுமே நடந்திருந்தான். இதற்குள் அவன் ஒரே
அடியாகக் களைத்துப் போனான். மேலே ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் அவன் தன் சித்த
உறுதிக்கு வெகுவாக முறுக்கேற்ற வேண்டியிருந்தது. அவன் தள்ளாடினான். கால்களுக்கு
அடியிலிருந்து தரை வழுகிச் சென்றது. நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான்.
நெறுநெறுக்கும் வெண்பனியில் நெற்றியை அழுத்தியவாறு வெண்பனிக் குவியலின் உச்சியில்
கணநேரம் கிடந்தான். பின்பு எழுந்து இன்னும் சில அடிகள் முன்சென்றான். தூக்கம்
அடக்க மாட்டாமல் விழிகளைக் கப்பியது. படுத்து மறதியில் ஆழவேண்டும்.
ஒரு தசையைக் கூட அசைக்காமல் கிடக்க வேண்டும் என்ற ஆசை
மனத்தை ஈர்த்தது. வருவது வரட்டும் ! என்று குளிரில் விறைத்துப் போய் இடமும்
வலமுமாகத் தள்ளாடியவாறு அவன் நின்றுவிட்டான். பிறகு உதட்டை வலிக்கும்படிக்
கடித்து. தன்னை நிலைப்படுத்திக்கொண்டு கால்களைத் துன்பத்துடன் இழுத்து இழுத்துப்போட்டு மறுபடி சில அடிகள்
முன்னேறினான். மேற்கொண்டு எந்தச் சக்தியும் தன்னை இருக்கும் இடத்தைவிட்டு நகர்த்த
முடியாது என்பது அவன் உணர்வில் பட்டது.’ ஆனால் அவன் உள்ளம் இதை
ஒப்புக்கொள்ளவில்லை. "பரவாயில்லை. பரவாயில்லை. எல்லாம் நலமே முடியும் ! " என்று அடிக்கடிச்
சொல்லிக்கொண்டான்.
தொடர்ந்து
நடப்பதற்கான புதிய முயற்சி
அலெக்சே தான் எந்த அளவிற்குச் சோர்வடைந்தாலும் எத்தனை நேரம் ஒரே இடத்தில்
இருந்தாலும் அதைத் தனக்கான முடிவாகக் கருதவில்லை. அந்த நேரத்தைத் தொடர்ந்து
இயங்கும் நேரம் வரையிலான இடைவெளியாகத்தான் கருதினான். எனவே, அவன் மனமும் கண்களும்
சோர்வை நீக்குவதற்கும் தொடர்ந்து
நடப்பதற்குமான வழியைத் தேடிக்கொண்டே இருந்தன. அவன் அசைவதற்கான ஆற்றல் கூட இன்றி கலைப்புடன்
அமர்ந்திருந்த ஒரு தருணத்தில் ‘ஏக்கத்துடன்
சுற்றும் முற்றும் கண்ணோட்டினான். அருகே பாதையோரத்தில் சுருட்டையான இளம் பைன்
மரக்கன்று நின்றது. கடைசி முயற்சி செய்து நடந்து அதை நெருங்கி அதன் மேல்
விழுந்தான். இரு கவர்களைப் பிரிந்த அதன் உச்சியில் கவட்டின் மோவாயை அழுத்திக் கொண்டான்.
அடிபட்ட கால்கள் மேல் சார்ந்த சுமை ஓரளவு குறைந்தது.
இதமாக இருந்தது. சுருள் வில்கள் போன்ற கிளைகள் மேல்
சாய்ந்தவாறு அமைதியை அனுபவித்தான். இன்னும் வசதியாகப் படுக்கும் விருப்பத்துடன்
மோவாயை பைன் மரத்தின் கவட்டில் சாத்தி. கால்களை ஒவ்வொன்றாக இழுத்துக் கொண்டான். அவை உடலின்
சுமையைத் தாங்கவில்லை ஆதலால் வெண்பனிக் குவியலிலிருந்து சுளுவாக விடுபட்டுவிட்டன.
அப்போது அலெக்சேய்க்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த மரக்கன்றிலிருந்து மேலே கவை உள்ள
ஒரு தடியை உருவாக்க எண்ணினான். அதன் பயன்களைக் கணக்குப் போட்டான்.
‘உடனே அவன் முழந்தாள் படியிட்டு அமர்ந்து.
கட்டாரியால் மரக்கன்றை வெட்டி.
கிளைகளைச் செதுக்கி எறிந்துவிட்டு.
கவட்டில் கைக்குட்டையையும் பட்டித்துணியையும் சுற்றிக்
கட்டினான். அக்கணமே முன் செல்ல முயன்று பார்த்தான். தடியை முன்னே தள்ளி ஊன்றினான்.
மோவாயாலும் கைகளாலும் அதை ஆதாரமாகப் பற்றி அழுத்திக் கொண்டு
ஓர் அடி. இரண்டு அடி முன்னேறினான். மறுபடி தடியை முன்னே ஊன்றினான்.
மோவாயாலும் கைகளாலும் அதை ஆதாரமாக அழுத்திக்கொண்டு ஓர் அடி.
இரண்டு அடி முன்னேறினான். மறுபடி அதை ஆதாரமாகப் பற்றி
அழுத்திக்கொண்டு ஓரிரு அடிகள் நடந்தான். அடிகளை எண்ணுவதும் தனது
முன்னேற்றத்திற்குப் புதிய அளவுமானத்தைத் திட்டம் செய்வதுமாக மேலே சென்றான்.
நெருப்பூட்டியின்
எரிபொருள் தீர்தல்
ரஷ்ய நாட்டுக் குளிரின் தன்மையை உலகம்
அறியும். அலெக்சேய் காட்டில் கடும் பனிமூட்டத்தின் ஊடாகத்தான் இயங்கிக்
கொண்டிருந்தான். அவனுக்குப் பனியின் கடுமையை ஓரளவு தனிப்பதற்கு அவன் மூட்டிய
நெருப்புதான் துணை செய்தது. ஒரு கட்டத்தில் அவன் பயன்படுத்திய சிகரெட் கொழுவியில்
எரிபொருள் தீர்ந்துவிட்டது. அதன்பிறகு குளிரின் முழு தாக்கத்தையும் அவன்
தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
அலெக்சேயை
இயக்கிய சொல்லும் ஒலியும்
ஆற்றலின்றி ஒரு பொருளின் இயக்கமில்லை என்கிறது அறிவியல். அலெக்சேய் அந்த
விதியை மீரினான். அசையக்கூட சத்தின்றி விழுந்து கிடக்கும் அவனை எழுந்து இயங்கச்
செய்வதற்கு ஒரே ஒரு சொல்லும் எங்கிருந்தோ கேட்கும் ஒலியுமே போதுமானவையாக இருந்தன.
‘அன்றைய
தினம் வெண்பனியில் நூற்றைம்பது அடிகள் கூட முன்னேற அவனுக்கு வாய்க்கவில்லை. இறுகப் பிணைத்திருந்த மரத்துப் போன கைகளைப்
பிரித்ததும் தன்னால் எழுந்து நிற்க முடியாது என்பதை அவன் உணர்ந்தான்.
எழுந்திருப்பதற்கு சில வீண் முயற்சிகள் செய்கையில் அவனது ஊன்றுகோல்
முறிந்துவிட்டது. சாக்குப்போலத் தரையில் துவண்டு விழுந்தான். மீண்டும் மீண்டும் எழ
முயன்றான். ஆனால் முடியவில்லை. அவன் கால்கள் எழ மறுத்தன..
இது தான்
முடிவா என்ன ? இங்கே. பைன் மரங்களுக்கு அடியில்.
இப்படியே மடிந்து போவதுதானா?
இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று
எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும். அந்த எலும்புகளைக் கூட எவனும் ஒரு போதும்
காணமாட்டான். அடக்கம் செய்ய மாட்டானே! சோர்வு திமிற முடியாதபடி அவனைத்
தரையோடு தரையாக அழுத்தியது. அப்போது தொலைவில் முழங்கிற்று பீரங்கிக் குண்டுவீச்சு.
அது அவனை கவர்ந்து இழுத்தது. உற்சாகம் ஊட்டிற்று. அவனை வற்புறுத்தி அழைத்தது. அந்த அழைப்புக்கு அவன் பதில்
அளித்தான். தன்னை யாராவது அடக்கம் செய்ய வேண்டுமே என்ற ஏக்கமும் போர் முழக்கமும்
அவனை முன்னினும் வேகமாய் இயங்கச் செய்தன.
தவழ்ந்து
செல்லல்
அலெக்சேயின் உடல் நிலை எந்த அளவிற்குச் சோர்வடைந்து கொண்டே சென்றதோ அதைவிட
அதிக அளவில் அவன் மனம் நம்பிக்கை பெற்றது. அதனால்தான் அவனால் குளிரையும் பசியையும்
எதிர்கொள்ள முடிந்தது. ஒரு நிலையில் இயங்க முடியாவிட்டால் வேறு நிலையைச் சிந்திக்க
முடிந்தது.
அலெக்சேய் தன்னால் எழுந்து நடக்க முடியாது என்பதை உணர்ந்தபோது அவன் மனம் வேறு வழியைக்கண்டுபிடித்தது.
அவன் ‘கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி எழுந்து
கிழக்கு நோக்கித் தவழ்ந்து செல்லலானான். தொடக்கத்தில்
தொலைவில் நடந்த சண்டை ஓசைகளால் மயக்கப்பட்டு வசமின்றிச் சென்றான். பின்னர் சுய
உணர்வுடன் முன்னேறினான். காட்டில் இந்த மாதிரி முன்னேறுவது ஊன்று கோலின் உதவியுடன்
செல்வதைவிட எளிது. பாதங்கள் இப்போது எந்தச் சுமையையும் தாங்க வேண்டியிருக்கவில்லை
ஆதலால் குறைவாகவே வலிக்கின்றன. விலங்கு போல் தவழ்ந்து செல்வதால் எவ்வளவோ அதிக
விரைவாகத் தன்னால் முன்னேற முடியும் என்பதை எல்லாம் அவன் புரிந்து கொண்டான்.
செருப்புத்
தயாரித்தல்
அலெக்சேய் தன் கைகளுக்கும் முழங்கால்களுக்கும் மரப்பட்டைகளால் ஆன செருப்புத்
தயாரித்தான். அதைச் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் மிகுந்த பயனளித்தது.
எதிர்மறை
எண்ணங்களை வளர விடாமை
தன்னூக்கக் கல்வியின் முதன்மையான கூறுகளில் ஒன்று நேர்மறை எண்ணங்களை நீரூற்றி உரமிட்டு வளர்க்க
வேண்டும்; எதிர்மறை எண்ணங்களை உடனடியாக நசுக்க வேண்டும் என்பதாகும். அலெக்சேய்
சந்தித்த கடுமையான சவால்களுக்கிடையே அவனுக்கு அவ்வப்போது நம்மால் முடியாதோ என்ற
எண்ணம் எழத்தான் செய்தது. ஆனால் அதை அவன் வளரவிடவில்லை. ஒரு நாள் இரவு அவன்
தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அவனுக்கு அருகில் ஏதோ ஒன்று நடமாடியது. நீண்ட
நேரம் அவனைச் சுற்றி சுற்றி வந்தது. விடிந்த பிறகுதான் அது நரி என்பதை அவன்
அறிந்தான்.
‘அலெக்ஸேயின் மனத்தில் கெட்ட சிந்தனை உதயமாயிற்று. தந்திரமுள்ள இந்தப் பிராணி.
மனிதனின் சாவை முன் கூட்டி உணர்ந்து கொள்கிறது என்றும்.
சாவு விதிக்கப்பட்டவனைப் பின்பற்றத் தொடங்குகிறது என்றும் வேட்டைக்காரர்கள் சொல்வது அவன் நினைவுக்கு
வருகிறது. கோழைத்தனமுள்ள இந்த ஊனுண்ணியை இந்த முன்னுணர்வுதான் அவனுடன்
பிணைத்திருக்கிறதோ ? என்று எண்ணலானான்.
திடீரென அவன்
எச்சரிக்கை அடைந்தான். கிழக்கேயிருந்து இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த பீரங்கி
குண்டுகளின் அதிரொலியின் ஊடாக. மெஷின்கன் குண்டு வரிசைகளின் சடசடப்பு சட்டெனத் துலக்கமாக
அவன் காதுகளுக்கு எட்டிற்று.
களைப்பை
அக்கணமே உதறி எறிந்து விட்டு. நரியையும் இளைப்பாறலையும் மறந்துவிட்டு.
மீண்டும் காட்டுக்கு உள்ளே தவழ்ந்து முன்னேறினான்.
கால உணர்வை
இழத்தல்
அலெக்சேயின் பயனம் தொடர்ந்துகொண்டே இருந்தது. அவனால் இன்னும் எல்லையை அடைய
முடியவில்லை. அவனுக்கு ‘நேரக் கணக்கு
தப்பிவிட்டது. தன்னுணர்வற்ற பிரையாசைகளின் கோவையில் எல்லாம் ஒன்று கலந்துவிட்டன.
சிற்சில வேளைகளில் உறக்க மயக்கமோ மறதியோ எதுவோ ஒன்று அவனை ஆட்கொண்டுவிடும். சென்ற
வண்ணமாகவே உறக்கத்தில் ஆழ்ந்து விடுவான். ஆனால்.
அந்த மறதி நிலையிலும் அவன் தொடர்ந்து மெதுவாகத் தவழ்ந்து
சென்று கொண்டே இருந்தான். ஏதேனும் மரத்திலோ புதரிலோ மோதிக் கொண்டாலோ.
உருகிய பனி நீரில் முகம் குப்புற விழுந்தாலோதான் அவன்
இயக்கம் நிற்கும். அவனைக் கிழக்கு நோக்கி ஈர்த்த சக்தி அத்துணை வலியதாக இருந்தது.
அவனுடைய சித்தவுறுதி அனைத்தும் தெளிவற்ற எண்ணங்கள் யாவும் ஒரேயொரு சிறு புள்ளியில் குவிமனைப்படுத்தப்
பட்டிருந்தன. தவழ வேண்டும். இயங்க வேண்டும். என்ன நேர்ந்தாலும் சரியே.
முன்னே செல்ல வேண்டும் என்பதே அது.
புற்றெறும்பு
அளித்த புது ஊட்டம்
அலெக்சேய் தனக்கு நேரும் துன்பங்களிலிருந்தெல்லாம் நம்பிக்கை பெறும் மனப்பக்குவத்தை
அடைந்திருந்தான். எனவே, அவனுக்கு நிகழ்ந்த தடைகளை யெல்லாம் முன்னேற்றப் படிகளாகவே
மாற்றினான்.
‘அவனுக்கு ஒரு முறை பெரிய எறும்பு புற்று எதிர்ப்பட்டது. உண்ண உணவு எதுவும் கிடைக்காததால் எறும்புகளின்
உணவான தீனிப் புல்லை உண்ண முடிவு செய்தான். அவற்றை எடுப்பதற்காக புற்றுக்குள் கையை
விட்டான். அவன் அதை வெளியில் எடுத்தபோது
அவனுடைய கையில் எறும்புகள் அப்பியிருந்தன. அவற்றை உலர்ந்த வறண்ட வாயில்
தின்னலானான். எறும்பு சாற்றின் சுவை ‘போதையூட்டும் கடும்
புளிப்புள்ளதாக இருந்தது. மறுபடி மறுபடி
எறும்புப் புற்றுக்குள் அவன் கையை விட்டான். எதிர்பாராத இந்த தாக்குதலால் விழிப்படைந்து
புற்று முழுவதும் உயிர்த்தெழுந்தது.
அங்கிருந்து எழும்பிய எறும்புகள் அலெக்ஸேயின் கையையும் உதட்டையும் நாக்கையும்
கடித்தன. விமானி உடைக்குள் புகுந்து அவனுடைய உடலைக் கடித்துப் பிடுங்கின. ஆனால்.
அவன் துவலவில்லை. அந்தக் கடிகள் உவப்பாகக் கூட இருந்தன. எறும்புச்
சாற்றின் காரமான சுவை அவனுக்கு உற்சாகம் ஊட்டிற்று. சிற்றுயிர்கள் கடும்
சீற்றத்துடன் தற்காத்துப் போராடுவதைக் கண்டு அவன் நெஞ்சுறமடைந்தான்.
பள்ளத்திலிருந்து
மேலேறுதல்
அலெக்சேய் ஒரு நாள் இறவு ஒரு பள்ளத்தைப் பார்த்தான். அதில்
இரங்கி உறங்கினால் குளிர் மட்டுப்பட்டிருக்கும் என்று எண்ணினான். எனவே, அந்தப்
பள்ளத்திற்கு ஊர்ந்து சென்றான். அவன் நினைத்தது போலவே அங்கு வசதியாகத் தூங்கினான்;
ஆனால் ‘காலையாகும் முன் குளிர் அதிகரித்தது. ஈர உறை
பனி மரங்கள் மீது தொங்கிக்கொண்டிருந்தது. காற்று திசை மாறி வடக்கேயிருந்து வீசத் தொடங்கவே.
இந்த உறை பனிக் கட்டியாகி இறுகி விட்டது.
இந்த நேரத்தில் அலெக்ஸேய் என்ன காரணத்தினாலோ ஒரு போதும் இல்லாத அளவு பலவீனம்
அடைந்துவிட்டான்.’
‘காலையில் ‘பள்ளத்தின் சுவற்றைப் பற்றி ஏறத் தொடங்கினான். ஆனால்.
பனிக்கட்டிப் படிந்து இருந்த மணல் மீது அவன் கைகள் சக்தியின்றி
வழுகின. தொற்றி ஏறி வெளிச் செல்ல அவன் மீண்டும் மீண்டும் வழுகிப் பள்ளத்தின்
அடித்தளத்தில் சரிந்தான். தடவைக்குத் தடவை அவனுடைய முயற்சிகள் பலவீனம் அடைந்து
கொண்டு போயின.
வேறொருவர் உதவி இன்றித் தன்னால் வெளியேற முடியாது என்று அவனுக்கு உறுதியாய்ப்
பட்டது. ஆனால் அந்த எண்ணம் நீடிக்கவில்லை. எனவே, அவன் வழுக்குச் சுவர் மேல் மீண்டும்
தொற்றியேற முயன்றான். . கைகளை சில தடவைகள் மட்டுமே எடுத்து வைத்தவன்.
திராணியற்று சோர்ந்து வழுக்கி விழுந்துவிட்டான்.
"அவ்வளவுதான்! இனி எல்லாம் ஒன்றுதான் ! "
பள்ளத்தின் அடித்தளத்தில் சுருண்டு முடங்கினான் அவன். சித்தவுறுதியைக்
குறைத்து அதைச் செயலற்று ஆக்கும் பயங்கர அமைதியை உடல் முழுவதிலும் உணர்ந்தான். தன்
காதலியின் நிழல் படத்தை எடுத்தான். அவளிடம் கடைசி பிரிவைச் சொல்லிக்கொள்ள
வேண்டியதுதானா? என்று யோசித்தான்.
அப்போது திடீரென அவன் காதில் ஒரு போர்விமானத்தின் ஓசை விழுந்தது. அதையே
நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தான். தன்னை ஒரு விமானப் படை வீரன் என்பதை அவன்
நிலைப்படுத்திக்கொண்டான். தான் விமானப்படை அலுவலக அறையில் இருப்பதாகக் கற்பனை
செய்தான்.
அப்பொழுது தனக்குள் புது ஆற்றல் ஊறிப்
பெருகுவதை உணர்ந்தான். பள்ளத்திலிருந்து மேலே ஏறுவதற்கான முயற்சியைத்
தொடர்ந்தான்.
உறைந்த மணலை நகங்களால் பறண்டி படிகள் அமைப்பதில் முனைந்தான். அவன் நகங்கள் பிய்ந்து
போயின. விரல்களில் இரத்தம் கசிந்தது. எனினும் அவன் கட்டாரியாலும் நகங்களாலும்
முன்னிலும் விடாப்பிடியாக வேலையைத் தொடர்ந்தான். அப்புறம் இந்தக் குழிப் படிகள்
மேல் முழங்கால்களையும் கைகளையும் ஆதரவாக வைத்துக் கொண்டு அவன் மெதுவாக ஏறத்
தொடங்கினான். அரண்சுவர் வரை எட்ட அவனுக்கு வாய்த்துவிட்டது. இன்னும் ஒரு மூச்சு
முயன்றால் அரண்சுவர் மேல் படுத்து வெளியே உருண்டுவிடலாம். ஆனால் கால்கள் வழுக்கவே
வலியுண்டாகும்படி முகத்தால் கட்டிப் பனி மீது இடித்தவாறு
கீழே சரிந்துவிட்டான். அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆனால். விமான எஞ்சினின் கடகடப்பு இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக்
கொண்டிருந்தது. இன்னொரு தடவை தொற்றியேற முயன்று மீண்டும் வழுக்கி விழுந்தான்.
அப்போது தன் வேலையை விமர்சன நோக்குடன் கவனித்துப் பார்த்தான். படிகளை இன்னும் ஆழமாக்கினான். மேல் படிகளின் விளிம்புகளை முன்னிலும்
கூர்படுத்தினான். பிறகு. வலுக்குறைந்து கொண்டு போன உடலின் சக்தியை எல்லாம் எச்சரிக்கையாக
ஒரு முனைப்படுத்தி மீண்டும் தவழ்ந்து ஏறினான்.
மிக்க சிரமத்துடன் அவன் மணல் அரண் சுவரின் குறுக்காக
மறுபுறம் விழுந்து. தன் செயலின்றியே உருண்டான்.”
தவழ்ந்து
செல்வதில் அயற்சி
அலெக்சேய் பள்ளத்திலிருந்து மேலேறியது ஒரு பெரும் வெற்றிதான். ஆனால்,அவன் . தொடர்ந்து
தவழ்ந்து செல்ல மிகவும் கடினப்பட்டான். மெல்ல மெல்ல அவன் தவழ்ந்து செல்லும்
வலிமையை இழந்தான். அதே நேரம் இதுவரை இல்லாத ஏதோ ஒரு கவர்ச்சி அவனை முன்னே
இழுத்தது. எனவே, ‘விமானம் பறந்து சென்ற
திக்கில் தவழ்ந்து முன்னேறினான். ஆனால் தவழ்வது முற்றிலும் கடினமாக இருந்தது.
கைகள் நடுங்கின. உடலின் சுமையைத் தாங்க மாட்டாமல் துவண்டு மயங்கின. இளகிய
வெண்பனியில் சில தடவை அவன் முகம் புதைய விழுந்தான். புவியின் ஈர்ப்புச் சக்தி பல
மடங்கு அதிகமாகி விட்டது போல அவனுக்குத் தோன்றியது. அதை எதிர்த்து வெல்வது
அசாத்தியமாக இருந்தது. ஆனாலும் உடலைப்
பிணித்த அயர்வை மதியாமல் அவன் மேலே மேலே தவழ்ந்து முன்னேறினான்.
விழுந்தான். பசியையோ.
அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு
வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை.
உள்ளங்கைகள் தாங்க வலுவற்றுப் போனதும் அவன் முழங்கைகளை ஊன்றித் தவழ முயன்றான். இது
மிகவும் அசௌகரியமாக இருந்தது.’
படுத்து
உருளுதல்
அலெக்சேய் இனி தன்னால் மண்டி போட்டு
தவழ முடியாது என்ற நிலையை உணர்ந்தபோது அவன் உடல் அனிச்சையாய் இன்னொரு
நிலைக்கு மாறியது. அப்போது அவன் நீண்டுப் படுத்து
முழங்கைகளால் வெண்பனியை அழுத்திப் புரண்டு முன் செல்ல
முயற்சி செய்தான். இதில் அவனுக்கு வெற்றி கிட்டிற்று. இவ்வாறு புரண்டு உருண்டு
முன்னே செல்வது அதிகச் சுளுவாயிருந்தது. அதற்குப் பெரும் பிரயாசைத்
தேவைப்படவில்லை. தலை மட்டுந்தான் மிகவும் கிறுகிறுத்தது. ஒவ்வொரு நிமிடமும்
தன்னுணர்வு தப்பியது. புரள்வதை அடிக்கடி நிறுத்தி
வெண்பனியில் உட்கார்ந்து
தரையும் காடும் வானும் சுழல்வது நிற்கும் வரை காத்திருக்க
நேர்ந்தது.
அலெக்சேய் ‘புரள்வதைப் பார்க்க அவன் ஒரு கரடியைப் போலத் தெரிந்தான். விலாவுக்கு
விலா புரண்டான். முதுகுப் புறமிருந்து வயிற்றுப் புறத்திற்கும் வயிற்றுப்
புறமிருந்து முதுகுப் புறத்திற்குமாகப் புரண்டான்.’
முடியும்
வரை இயங்குதல்
அலெக்சேய்க்கு அவன் இதுவரை எத்தனை
நாள்கள் நடந்திருக்கிறான்? இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? அதற்கான ஆற்றல்
தன்னிடம் இருக்கிறதா? என்பதெல்லாம் தெரியவில்லை. இப்போதெல்லாம் ‘தன்னவர்களிடம்
போய்ச் சேர வாய்க்குமா என்பது பற்றி அவன் எண்ணவே இல்லை. உடம்பு இயங்கும்
நிலைமையில் இருக்கும் வரை தவழ்ந்தும் புரண்டும் முன்னேறிக் கொண்டிருப்போம்
என்று
அவன் முடிவு செய்தான்.
கணப்பொழுது நினைவு தப்புகையிலும் அவனுடைய கைகளும் உடல் முழுவதும் முன்போன்றே
சிக்கலான இயக்கங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு போயின.
அவன் பீரங்கிக் குண்டு வீச்சு நடந்த திசையைக்
கிழக்கை நோக்கி வெண்பனியில் புரண்டு சென்ற
வண்ணமாயிருந்தான். அவனுக்கு அடிக்கடி தான் இயங்குகிறோமா? இல்லையா? என்பதே
தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வலி என்னும் விலங்கால் மாட்டப்பட்டிருந்த உடல்
கல்லாகச் சமைந்து விட்டது போலிருந்தது.
அலெக்சேய்
இரண்டு சிறுவர்களின் பார்வையில் படுதல்
அலெக்சேய் உருண்டு புரண்டு சென்றுகொண்டிருக்கையில் அவனை ஒரு கிராமத்தின்
இரண்டு சிறுவர்கள் பார்த்தார்கள். ரஷ்ய மொழியில் அவர்களின் குரலை கேட்ட கனத்தில்
அவனுக்கு ஒரு வெற்றி மின்னல் தெரித்தது. தான் ரஷ்யாவின் விமானப் படை வீரன் என்பதை
அந்தச் சிறுவர்களையும் மிகையில் தாத்தாவையும் நம்ப வைக்க அலெக்சேய் மிகவும்
கடினப்பட்டான். அவன் மனிதர்களைச் சந்தித்த கனத்தில்
‘தான்
முற்றிலும் வலு இழந்து விட்டதையும் கையையோ காலையோ மேற்கொண்டு அசைக்கவோ.
இயங்கவோ. தற்காத்துக் கொள்ளவோ தன்னால் முடியாது என்பதையும் தனது
நெடும் பயணத்தில் முதல் தடவையாக உணர்ந்தான்.’ ஒரு வேளை அவன் இன்னும் மனிதர்களைச்
சந்திக்காமலிருந்தால் இன்னமும் நம்பிக்கையுடன் இயங்குவான்.
கிராம
மக்களின் வியப்பும் நம்பிக்கையும்
அலெக்சேயைக் காட்டிலிருந்து மீட்ட கிராம மக்கள் அவன் நிலையைக் கண்டு
வியந்தார்கள். சோர்விலிருந்து மயக்க நிலைக்குச் சென்ற அவன் உடல்நிலையை மெல்ல
மெல்லச் சூடேற்றி, தகுந்த உணவளித்து, உரிய மருத்துவம் செய்து, அவன் இயல்பு
நிலைக்கு வரத் துணை செய்தார்கள். தங்கள் செயல்பாடுகள் மூலம் அவனுக்கு நம்பிக்கை
அளித்தார்கள்.
மிகைலஸ் தாத்தா ரெஜிமென்ட் ஸ்குவாட்ரன்ட் தெத்தியாரென்கோவிடம் அலெக்சேய்
குறித்த தன் வியப்பைக் கூறுகிறார். ‘நான் சொல்வதைக் கேள். அப்புறம் உன்
மேலதிகாரிகளுக்குச் சொல்லு இதை எல்லாம்... இந்த ஆள் பெரிய வீரச் செயல்
செய்திருக்கிறான்! எப்பேர்பட்டவன் பார்! இந்த ஒரு வாரமாக நாங்கள் கூட்டுப் பண்ணைக்காரர்கள்
எல்லோரும் இவனுக்கு பணிவிடை செய்கிறோம். இவனாலோ அசையக்கூட முடியவில்லை. ஆனால் தன்
சக்தியை எல்லாம் திரட்டி எங்கள் காடு வழியாக ஊர்ந்திருக்கிறான். எத்தனை பேரால்
இப்படிச் செய்ய முடியும். தம்பி !
ஒன்றுதான் எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. இவன் சாகாமல் எப்படித்
தப்பினான். ஊம்.. ? ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான்.
சரிதான். ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது ?
வேறும் எலும்புக் கூடு இவன்.
எப்படி ஊர்ந்து வந்தான் என்பது எனக்கு விளங்கவில்லை.
தன்னவர்களுக்காக ரொம்ப ஏங்கி போயிருப்பான். விமான நிலையம். விமான நிலையம் என்று பிதற்றுகிறான். என்று கூறி வியந்தார்.
அலெக்சேயின்
கால்கள் அகற்றப்படல்
அலெக்சேயின் இரண்டு கால்களும் மருத்துப்போய் அழுகிய நிலையிலிருந்தன. ஆனாலும்
அவை நீக்கப்படுவதை அவன் விரும்பவில்லை. கால்கள் இல்லாவிட்டால் தனக்கு நேரும்
துன்பங்களை எண்ணி வருந்தினான். அவற்றை அகற்ற வேண்டுமென்று மருத்துவர் கூறியதை அவன்
ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் பல சிகிச்சை முயற்சிகள் செய்யப்பட்டன. அவற்றாலும்
பயனில்லை. கால்களை எடுக்காவிட்டால் உயிருக்கே பாதிப்பாகிவிடும் என்ற நிலை வந்தபோது
மருத்துவர் கட்டாயமாகக் காலை அகற்ற முடிவு
செய்தார். அலெக்சேய் அந்த எதார்த்தத்தை உடனடியாகப் புரிந்து கொண்டான்.
‘உண்மையாகவே அலெக்ஸேய்க்குச் சுமை இறங்கியது போல் இருந்தது. விரைவில் அவன்
நிம்மதி அடைந்தான். தன்னை நெடுங்காலமாக வதைக்கும் பிரச்சினைக்கு முடிவில் தீர்வு
கண்டதும் மனிதனுக்கு எப்போதும் ஏற்படுவது போன்ற ஆறுதலைக்கூட அவன் உணர்ந்தான்.
அலெக்சேயின் மன திடம்
அலெக்சேய்க்கு அருவை சிகிச்சை செய்யப்பட்டபோது அவன்
சிறிதும் வருந்தவில்லை. முகம் சுழிக்கவில்லை. வலியை வெளிக்காட்டவில்லை. ‘நீர்
அருமையான ஆள். மற்றவர்கள் கத்துவார்கள். மற்றவர்களை வாரினால் இறுக்கிக் கட்டுவதோடு
பிடித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும். நீரோ முணுக்கென்று கூட வாய் திறக்கவில்லை.....
நீ ஜெர்மானியர்களிடமிருந்து தப்பி
பதினெட்டு நாட்கள் தவழ்ந்து
ஊர்ந்து வெளியேறினாய் என்பதை இப்போது நம்புகிறேன்.
தம்பி. என் வாழ்நாளில் நான் எத்தனை படைவீரர்களைக்
கண்டிருக்கிறேனோ. அத்தனை உருளைக் கிழங்குகளைக்கூட நீ தின்றிருக்க மாட்டாய்.
ஆனால் உன் போன்றவனுக்கு அறுவை செய்ய இதுவரை வாய்க்கவில்லை" என்று அருவை
சிகிச்சை செய்த தலைமை மருத்துவர் அவனைப் பாராட்டினார்.
அலெக்சேயின்
விமானத் துறை ஈடுபாடு
அலெக்சேய்க்கு தன் உயிர் வாழ்தல் உறுதிப்பட்ட உடன் அவன் எண்ணம் அடுத்த
கட்டத்திற்குத் தாவியது. தன் கால்கள் அகற்றப்பட்டாலும் தான் மீண்டும்
விமானப்படையில் சேர்ந்து பறக்க வேண்டும் என்பதைத் தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்தான்.
அலெக்சேய்க்கு விமானம் ஓட்டும் எண்ணம் சிறு வயதிலிருந்தே கிளைத்து வளர்ந்தது.
அவன் ஒரு முறை ஒரு தட்டாம் பூச்சி ரீங்காரமிட்டுக்கொண்டு பறந்ததைப் பார்த்த போது
அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது.
தைகா என்ற இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட குழுவிற்குத் தலைமை வகித்தான். அங்கிருந்துதான்
அவன் முதல் பயிற்சி விமானத்தில் பறந்தான். பிறகு அவன் இராணுவ விமானப் பயிற்சிக்
கல்லூரியில் பயின்றான். அதில் தானே இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தான். அப்போதுதான்
போர் மூண்டது. கல்லூரி நிர்வாகிகள் அச்சுறுத்தியதைப் பொருட்படுத்தாமல் அலெக்ஸேய்
பயிற்சி ஆசிரியன் வேலையை விட்டுவிட்டுப் போரிடும் இராணுவத்தில் சேர்ந்தான்.
அவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம்,
கிளர்ச்சி, மகிழ்வு, வருங்காலத் திட்டங்கள், நிகழ்கால வெற்றி - எல்லாமே விமானப்
பறப்புடன் இணைந்திருந்தன.....
கமிர்சார்
அளித்த நம்பிக்கை
அலெக்சேய் சிகிச்சை பெற்ற ராணுவ மருத்துவமனையில்
கமிர்சாரும் சிகிச்சை பெறுவதற்காகச் சேர்ந்தார். அவர் ஒரு மனிதனுக்கு எப்படி
நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுப்பவராகத் திகழ்ந்தார். தன்னுடன்
சிகிச்சை பெற்ற மனிதர்களுக்கு உச்சாகமும் நம்பிக்கையும் ஊட்டுவதே அவருடைய
விருப்பார்ந்த செயலாக இருந்தது. அவர் எல்லோருக்கும் தன்னம்பிக்கை அளித்தார்.
அவர்களின் மனத்திலெல்லாம் மகிழ்ச்சியைக் கண்டார்.
ஆனால் அலெக்சேய் அவருக்கு ஒரு சவாலாக அமைந்தான். அவனுடைய
தேவை கால்கள் இல்லாத தன் கவலையை மறப்பது அல்ல. தான் எப்படியாவது விமானியாக
வேண்டும் என்பதுதான். தனக்குக் கால்கள் இல்லாத நிலையில் தன்னால் விமானியாக
முடியாது என்றே அவன் நினைத்தான். எனவே எந்த நம்பிக்கைக் கீற்றாலும் அவன்
துயரத்தைப் போக்க முடியவில்லை. கமிர்சார் அவனால்மீண்டும் விமானியாக முடியும் என்ற
நம்பிக்கையை உருவாக்க எண்ணினார். அதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்தார். அவை அலெக்சேவுக்கு
நிறைவளிக்கவில்லை.
கமிர்சாரின் தேடலில் ருஷ்ய இராணுவ விமானி லெப்டினன்ட் வலெரியான்
அர்க்காதியெவிச் கார்ப்போவிச் பற்றிய கட்டுரை ஒன்று கிடைத்தது. லெப்டினன்ட்
வலெரியான் ஒரு விமான விபத்தில் ஒரு காலை இழந்தார். ஆனாலும் மனம் துவலாமல்
கடுமையாகப் பயிற்சி செய்து தொடர்ந்து விமானப் படையிலேயே பணியாற்றினார். ஒரு
காலுடன் அவரால் விமானம் ஓட்டமுடிந்தது.
கமிர்சார் அலெக்சேய்க்கு அந்தக் கட்டுரையைப் படிக்கத்தந்தார்.
அலெக்சேய் அதை ஒரு முறை இருமுறை அல்ல பல முறை படித்தான்.
அவரால் ஒரு கால் இல்லாமல் விமானம் ஓட்ட முடிந்தபோது தன்னால் இரண்டு கால்களும்
இல்லாமல் ஓட்ட முடியாதா என்று எண்ணினான். அந்தக் கட்டுரையைப் பத்திரமாக
வைத்துக்கொண்டான். வலெரியானின் புகைப்படம் தந்த நம்பிக்கை
அலெக்சேய் அடிக்கடி அந்தக் கட்டுரையில் இருந்த லெப்டினன்ட்
வலெரியான் புகைப்படத்தைப் பார்த்தான். அவன் வலெரியானிடம் சொல்வதுபோல் ‘உனக்குக்
கஷ்டமாக இருந்தது. ஆயினும் நீ சமாளித்து விட்டாய். எனக்கு பதின்மடங்கு அதிகக்
கடினமாக இருக்கும். ஆனாலும் நானும் பின்தங்கிவிட மாட்டேன்.
நீயே பார்ப்பாய். " என்று சொல்லிக்கொண்டான்.
நம்பிக்கைப்
பிறந்தது
அலெக்சேய் தன்னால் விமானம் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றான். அது
ஏற்கனவே தான் உயிர்ப் பிழைத்தலுக்காக நடத்திய போராட்டத்தைவிட இது ஒன்றும்
பெரிதில்லை என்று அவன் எண்ணினான். இரண்டு கால்களும் இல்லாத நிலையில் விமானம் ஓட்ட
முடியும் என்பதை தொழில் நுட்பம் அறிந்தவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான்.
ஆனால், ‘அச்செயல் மனிதத் திறனின் எல்லைக்கு உட்பட்டதுதான்’ என்று உறுதியாக நம்பினான்.
உரிய
தகவமைப்புகள்
அலெக்சேய் தான் விமானம் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றதும் வாளா
இருந்துவிடவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டான். மருத்துவ சிகிச்சைகளையும்
மருந்துகளையும் அக்கறையுடன் எடுத்துக்கொண்டான். பசி எடுக்காவிட்டாலும் நேரம்
தவறாமல் உணவு உண்டான். தூக்கத்தை வளிந்து வரவைத்துக்கொண்டான். இச்செயல்களால் அவன்
உடல் நிலையை மெல்ல மெல்லத் தகுதிப்படுத்தினான்.
உடல்
பயிற்சி
அலெக்சேய்க்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கான மன உறுதி
இருந்தது. அதற்கேற்ப தன் உடல் திறனையும் வளர்த்துக்கொள்ள திட்டமிட்டான். அதற்காக
உடல் பயிற்சிசெய்ய முற்பட்டான். அது
அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் இருந்த உடல் பயிற்சிகளை அவன்
பின்பற்ற முடியாது. கால்களை இழந்து கட்டிலிலேயே கிடக்கும் அவனுக்கு ஏற்ற வகையில்
புதிய உடல் பயிற்சி முறைகளை அவன் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
‘தனக்கு ஏற்ற உடற்பயிற்சியை அவனே கற்பனை செய்து அமைத்துக் கொண்டான்.
அவன் கட்டிலிலேயே ஒரு மணி நேரம் ‘வளைவதும்
நிமிர்வதும் விலாவில் கைகளை ஊன்றியவாறு உடலை முறுக்குவதும் முள்ளெலும்புகள்
கடகடக்கும்படி தலையை இரு மருங்கும்
உற்சாகமாகத் திருப்புவதுமாக இருப்பான்.’ கால்களிலிருந்து கட்டுக்கள் அகற்றப்பட்டு.
கட்டிலின் எல்லைக்குள் அதிக அங்க அசைவுக்கு வாய்ப்பு
கிடைத்ததும் உடற்பயிற்சியை இன்னும் சிக்கலாக்கிக் கொண்டான்.
கட்டில் விளிம்பின் அடியே வெட்டுண்ட கால்களைப் புகுத்திக் கொண்டு இடுப்பில்
கைகளை ஊன்றியவாறு மெதுவாக வளையவும் நிமிரவும் தொடங்கினான். தடவைக்குத் தடவை வேகத்தைக்
குறைத்து “ வளைதலின் ” எண்ணிக்கையை அதிகப்படுத்தினான். பின்பு கால்களுக்கேற்ற
பயிற்சித் தொடரை முறைப்படுத்திக் கொண்டான். கட்டிலில் நிமிர்ந்து படுத்துக்
கால்களைத் தன் பக்கம் இழுத்து வளைப்பான். பின்பு நேராக்கி முன்னே வீசிப் போடுவான்.
கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கிற்று. எனினும் ஒவ்வொரு நாளும் பயிற்சி
நேரத்தை முந்திய நாளைவிட ஒரு நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான்.
அலெக்சேய் எண்ணங்கள் யாவும் கால்களையே மையமாகக் கொண்டு சுழன்றன. சில வேளைகளில்
மறதி காரணமாகப் பாதங்கள் வலிப்பதாக உணர்வான்.
கிடக்கையை மாற்றிக் கொள்வான். பாதங்கள் இல்லை என்ற நினைவு
அப்புறந்தான் அவனுக்கு வரும்.
சாமார்த்தியத்தாலும் பயிற்சியாலும் கால்கள் இல்லாக் குறையை நிறைவுபடுத்த
அவனுக்கு இயலுமா? சண்டை விமான ஓட்டியாக மீண்டும் பணியாற்ற முடியுமா?
குறித்த நோக்கத்தை அடைவதற்கு மேலும் மேலும் விடாப்பிடியாக
முயன்றான்.
பயிற்சி நேரத்தைப் படிப்படியாக அதிகப்படுத்தி
காலையிலும் மாலையிலும் கால்களைப் பழக்கப்படுத்துவதையும்
பொது உடற்பயிற்சியையும் இரண்டு மணி நேரம் வரை செய்யலானான். ஆனால் இது கூட
அவனுக்குக் குறைவாகப்பட்டது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யத்
தொடங்கினான்.
அலெக்சேயின்
பயிற்சிக்கான அங்கிகாரம்
அலெக்சேயுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக
இருந்தனர். ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் ஊக்கியாகவும் இருந்தனர்.
‘கால்கள்
இல்லாமல் விமானம் ஓட்ட முடியும் என்பதை வார்டில் ஒருவரும் நம்பவில்லை. ஆயினும்
தோழனின் விடாப்பிடியான முயற்சியை எல்லோரும் மதித்தார்கள்.’
செயற்கைக்
கால்கள் பொருத்தல்
அலெக்சேய்க்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தின் ஒரு பகுதியாக அவனுக்குச் செயற்கைக்
கால்கள் பொருத்தப்பட்டன. அவன் விமானியாக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை அந்தக்
கால்களைச் செய்யச் சொன்ன தலைமை மருத்துவரும் செய்த கலைஞரும் கால்களின் உருவில்
வெளிப்படுத்தியிருந்தார்கள்.
செயற்கைக்
கால்களில் நடக்க முயற்சித்தல்
அலெக்சேய்க்கு உடனே செயற்கைக் கால்களை சோதித்துப் பார்க்க
ஆசையாயிருந்தது. லேசான அலுமினியக் கவைக்கோல்கள் அவனுக்குத் தரப்பட்டன. அவற்றைத்
தரையில் ஊன்றிக்கொண்டு கக்கங்களுக்கு அடியில் கைத்திண்டுகளை அழுத்தியவாறு மெதுவாக
ஜாக்கிரதையாகக் கட்டிலிலிருந்து வழுகிச் செயற்கைக்கால்களில்
நின்றான். மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான்.
தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு
ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.
தாயாரோ பாட்டியோ முதல் நடக்கக் கற்பிப்பது போலவே க்ளாவ்தியா மிஹாய்லவும் முதிய
தொழிற்சிற்பியும் மெரேஸ்யெவைப் பரிவுடன் இரு புறங்களிலிலும் தாங்கிக் கொண்டார்கள்.
மெரேஸ்யெவ் பதபாகமாக இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தான். இந்த முதல் அடிகளை
எடுத்து வைப்பது அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கதவு வரை போய் திரும்புவதற்குள்
ஏதோ ஒரு மாவு மூட்டையை ஐந்தாவது மாடிக்குச் சுமந்து சென்றது போல அவனுக்கு அயர்வு
உண்டாயிற்று.
கால்கள் கறுமுறுக்க அளவாக அடியெடுத்து வைத்து ஆளோடியில் முன்னும் பின்னும்
சளைக்காமல் நடை போட்டான். ஒரு முறை. இரண்டு. பத்து. பதினைந்து. இருபது முறைகள் கடந்து சென்றான். காலையிலும் மாலையிலும்
தனது ஏதோ திட்டத்தின்படி அவன் நடந்து பழகினான். ஒவ்வொரு நாளும் அவன் தூரம்
அதிகமாகிக் கொண்டு போயிற்று.
"அருமையான ஆள்! விடாமுயற்சி உள்ளவன்.
பிடிவாதக்காரன். இவனுக்குத்தான் என்ன சித்தவுறுதி! கவைக்
கோல்களின் உதவியால் விரைவாகவும் லாவகமாகவும் நடக்க ஒரு வாரத்தில் பயின்று
விட்டான். மற்றவர்களுக்கு இவ்வாறு பழகச் சில மாதங்கள் பிடிக்கும்.
தினப்படி பயிற்சியைக் காலையில் இருபத்து மூன்று.
மாலையில் இருபத்து மூன்று.
ஆக நாற்பத்து ஆறு நடைகள் ஆக்குவது என்றும் மறுநாள்
புத்துணர்ச்சியுடன் இருக்கும் பொழுது கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்ப்பது
என்றும் மெரேஸ்யெவ் முடிவு செய்தான். இது இருண்ட எண்ணங்களிலிருந்து அவன் மனத்தை
வேறுபுறம் திருப்பியது. உற்சாகம் ஊட்டியது. செயல்புரியச் சித்தமான மனநிலையை ஏற்படுத்தியது. மாலையில்
அவன் பெருத்த மன எழுச்சியுடன் நடை பழகத் தொடங்கினான்.
நடையை
ஓட்டமாக்குதல்
அலெக்சேய் தன் இடைவிடாத திட்டமிட்ட பயிற்சியினால் படிப்படியாகத் நடக்கும்
நேரத்தையும் நடையின் வேகத்தையும் அதிகரித்தான். ஒரு முறை அவனுக்கு தொலைபேசி
அழைப்பு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அது அவனுடைய காதலி ஓட்காவின் அழைப்பாக
இருக்கும் என்று நினைத்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு ஆற்றல் பிறந்தது.
அந்நேரத்தில் அவன் ‘கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான்.
முதல் முறை மெய்யாகவே ஓடினான்’ கால்கள் சரக்சரக்கென்று கறுமுறுத்தன.’
மனிதனுக்குச் செயல் துடிப்பு இருந்தால் அவனுக்கு யானையின் வலிமை வந்துவிடும் என்று
சொல்வார்கள். இதை அலெக்சேயின் அனுபவம் உணர்த்தியது.
உறுதியான
நம்பிக்கை
அலெக்சேய்க்கு தான் மேற்கொண்ட பயிற்சியின் விளைவாக தன் குறிக்கோளை அடைய
முடியும் என்ற நம்பிக்கைப் பிறந்தது.
‘பரவாயில்லை. இன்றில்லாவிட்டால் நாளை. நாளையில்லாவிட்டால் நாளை மறுநாள்.
வெற்றி பெற்றே தீருவோம்.
பார்க்கலாம் ஒரு கை ! எல்லாம் நலமே முடியும் ! மறுபடி
ஓடவும் விமானம் ஓட்டவும் போரிடவும் தொடங்குவோம் என்பதில் அவனுக்குச் சந்தேகமே
ஏற்படவில்லை.
அலெக்சேய்
வகுத்த பயிற்சித் திட்டம்
அலெக்சேய் மருத்துவ சிகிச்சை முடிந்து உடல்வள
நிறுவனத்தில் சேர்ந்தான். அங்கு அவனுக்கு இருபத்தெட்டு நாள்கள் காலம்
இருந்தது. அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றான். ஒரு தெளிவான பயிற்சித்
திட்டத்தை வகுத்தான்.
“காலை,
மாலை உடற்பயிற்சி, நடை, ஓட்டம், கால்களுக்குச் சிறப்புப் பயிற்சி ஆகியவற்றை இந்தத்
திட்டத்தில் அவன் சேர்த்துக் கொண்டான். சீனாவுடன் அவன் நிகழ்த்திய உரையாடல்தான் அவனுக்குச்
சிறப்பாகக் கவர்ச்சி அளித்தது. சீனாதான் செயற்கைக் கால்களை எல்லா வகைகளிலும் பழக்கித்
தேர்ச்சிபெறச் செய்வதாக நம்பிக்கை ஊட்டினார்.”
அலெக்சேய்
தன் மீதான பார்வையை மாற்றுதல்
அலெக்சேய் உடல் பயிற்சியின் போது நிளையத்திலிருந்தவர்கள் வியப்படையும் வகையில்
பலத் திறன்களை வெளிப்படுத்தினான். அவர்களெல்லாம் அதைப் பாராட்டினார்கள். ஆனால் மீண்டும்
விமானியாக வேண்டும் என்ற அவனுடைய ஆசையை வேடிக்கையாகப் பார்த்தார்கள். ஆனால், அவன்
மேலும் மேலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தினான். எல்லோரிடமும் நெருங்கிப் பழகினான். அவர்களெல்லாம்
அவன் விமானியாக முடியாது என்ற தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டார்களோ இல்லையோ அவனைப்
பற்றி புறம் பேசுவதை ஒரு அரை நாளுக்குள்ளாக நிறுத்திக்கொண்டார்கள்.
நடனமாட கற்றல்
நடனமாடக் கற்றுக் கொள்வது என்று அவன் முடிவு செய்தான். நடன ஆசிரியர் சீனாவிடம்
தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவர் முதலில் கேள்விக் குறியுடன் பார்த்தாலும்
உடனே அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டாள். அலெக்சேயின் நடனப் பயிற்சித் தொடங்கியது.
அதில் அவன் விரைவிலேயே சிறப்பாகத் தேர்ச்சியடைந்தான்.
‘கால்களைத்
தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான். புதிதாகக் கற்றுத் தேர்ந்த
ஒவ்வொரு ஜதிவரிசையும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று அவனுக்குக்
களிப்பூட்டியது.
‘அவன் தன் ஆசிரியையைத் தூக்கித் தட்டாமாலை சுற்றத் தொடங்குவான். தன்மீதே தான்
அடைந்த வெற்றிக்காக பெருமைப்படுவான்.’ ஆனால், அதற்கு அவன் கொடுத்த விளை அதிகம். ‘சிக்கலான,
வெவ்வேறு தன்மைகள் கொண்ட இந்தக் குதிப்புகள் அவனுக்கு எவ்வளவோ
வலியை உண்டாக்கின. இந்தக் கலையைப் பயில்வதற்கு அவன் எத்தகைய விலை
செலுத்த வேண்டியிருந்தது என்பதை யாருமே.
முக்கியமாக அவனுடைய ஆசிரியை ஊகிக்கவே முடியவில்லை. சில
வேளைகளில் அவன் முகத்து வியர்வையுடன் கட்டுக்கடங்காது மல்கிய கண்ணீரையும்
அலட்சியமான கைவீச்சுடன் புன்னகை செய்தவாறு துடைத்துக் கொண்டதை ஒருவரும் கவனிக்கவில்லை.
ஒரு தடவை அவன் ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து.
அதே சமயம் குதூகலம் பொங்க அறைக்குள் தத்திக் குதித்து
வந்தான்.
"நடனமாடக் கற்றுக்கொள்கிறேன்! " என்று மேஜர் ஸ்த்ருச்கோவிடம்
வெற்றிக்
குரலில் அறிவித்தான் கற்றுத் தேர்ந்துவிடுவேன்.
கட்டாயமாக! " என்று பிடிவாதத்துடன் மொழிந்தான்.
கால்கள்
உணர்ச்சியுள்ள அங்கமாதல்
அலெக்சேய் தன் கால்களுக்குப் பலவகையான பயிற்சி அளித்தான். அதனால். அவற்றை
நினைத்தபடியெல்லாம் வளையவும் மடக்கவும் நீட்டவும் திருப்பவும் முடிந்தது. ‘கால்களின்
தளைப்பூட்டும் பாதிப்பு வர வர குறைந்தது. அலெக்சேய்க்குத் தான் செயற்கைக்
கால்களைப் பொருத்தியிருக்கிறோம் என்ற எண்ணமே மெல்ல மெல்ல மறைந்தது. கொஞ்சங் கொஞ்சமாக அவை அவனுடைய அங்கங்கள் போல்
ஆகிவிட்டன.
பணியில்
சேர்வதற்கான தகுதி
அலெக்சேய் மீண்டும் விமானப்படையில் சேர்வதற்கான தேர்வில் கலந்துகொண்டான்.
அப்பொழுதுதான் தன் உடல் திறன் எந்த அளவிற்கு மேம்பட்டிருக்கிறது என்பது அவருக்கே
தெரிந்தது. ‘அவருடைய கட்டுக்குட்டான. முறுக்கேறிய வலிய உடலை வியந்து நோக்கினார் மருத்துவர்.
பழுப்புத் தோலுக்கு அடியில் ஒவ்வொரு தசையும் துலக்கமாகத் தெரிந்தது.
மெரேஸ்யெவ் எல்லாச் சோதனைகளிலும் சுளுவாகத் தேறிவிட்டான். திட்ட அளவுக்கு
ஒன்றரை மடங்கு வலுவுடன் கைகளை முட்டி பிடித்து இறுக்கினான். அளவைக் காட்டும் அம்பு
கடைசி எல்லைக் கோட்டைத் தொடும்வரையில் மூச்சை வெளியிட்டான். அவனது இரத்த அழுத்தம்
திட்ட அளவுப்படி இருந்தது. நரம்புகள் சிறந்த நிலையில் இருந்தன. முடிவில் வலிமை
அளவிடு கருவியின் கைப்பிடியை அவன் அழுத்திய விசையில் கருவி பழுதாகிவிட்டது’
அலெக்சேய்
நிராகரிப்பு
தேர்வுக் குழு அலெக்சேய்க்கு கால்கள் இல்லை என்பதை அறிந்ததும் அவனை
மறுதளித்தது. குழுவின் மருத்துவர் கால்கள்
இல்லாமலே விமானம் ஓட்ட நினைக்கிறாயா? என்று கேட்டார்..
" நான் நினைக்கவில்லை. கட்டாயம் திரும்புவேன் " என்று
தணித்த குரலில் சொன்னான் அவனுடைய ஜிப்ஸிக் கண்கள் பிடிவாத அறைகூவல் விடுபவை போலச்
சுடர் வீசின.
தொடர்ந்து வாதாடினான். லெப்டினன்ட் வலெரியான்
பற்றிய கட்டுரையைக் காண்பித்தான். சீனா அவனுக்கு நடனமாடத் தெரியும்
என்பதைத் தெரிவித்தாள். அலெக்சேய் நடனமாடிக் காட்டினான். தேர்வுக்குழுவின் மருத்துவர் இவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டால்
இவரால் விமானம் ஓட்ட முடியும் என்று குறிப்பு எழுதினார்.
விமானப்படை
விதிகள்
அலெக்சேய் உயிர் பிழைப்பதற்காக காட்டில் போராடியதைவிடவும் விமானப்படையில்
சேர்வதற்காக மருத்துவமனையில் உடல் பயிற்சி செய்ததைவிடவும் மிகுதியான துன்பத்தை
விமானப்படையில் சேர்வதற்கான தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கான போராட்டத்தில்
அனுபவித்தான். அவன் பல அதிகாரிகளைச் சந்தித்தான். தன் தகுதியையும் திறமையையும்
பல்வேறு வகைகளில் நிறுபித்தான். அவர்களும் அவனுடைய செயல் திறனைப் பார்த்து.
பாராட்டினார்கள். ஆனால், இறுதியில் விமானப்படை விதிகளைக் காட்டி அவன் விண்ணப்பத்தை
நிராகரித்தார்கள்.
‘எங்களுக்குக் கட்டளை உள்ளது. விமானப் படைக்கு ஏற்ற தகுதி பற்றிய
எல்லாத்தரங்களும் அதில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இரண்டு கால்களும்
அல்ல. இரண்டே விரல்கள் மட்டும் உங்களிடம் குறைவாயிருந்தால் கூட விமானம் ஓட்ட உங்களை
அனுமதிக்க என்னால் முடியாது. உங்கள் விழைவை மதிக்கிறேன்.
ஆனால்..... " என்று இழுத்தார்கள்.
விடா முயற்சி
அலெக்சேய் இந்தப் பதிலைக் கேட்டு அயர்ந்துவிடவில்லை. தொடர்ந்து முயன்றான். அலுவலகங்களை
அவன் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றி வந்தான். அதிகாரிகளெல்லாம் அவன் கதையைக்
கேட்டார்கள். வியந்தார்கள். பரிவு காட்டினார்கள்.
மலைத்தார்கள். பின்பு கையை விரித்துவிட்டார்கள். உண்மையிலேயே அவர்களால்
என்ன செய்திருக்க முடியும்? உத்தரவு. தலைமை அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட.
முற்றிலும் சரியான உத்தரவு இருந்தது. பல ஆண்டுகளாக
வழங்கிவந்த மரபுகள் இருந்தன. அவற்றை மீறுவது எப்படி?
அவர்களால் மரபை மீர முடியாவிட்டாலும் அலெக்சேய் அதனை மீர
முடிவு செய்தான்.
அதிகாரிகளின்
மன மாற்றம்
அலெக்சேயின் நிலையை அறிந்த சில அதிகாரிகளுக்கு அவனுடைய உறுதிப்பாட்டின் மீது
உளமார்ந்த இரக்கம் பிறந்தது. அவனிடம் முடியாது " என்று வெட்டொன்று
துண்டிரண்டாக சொல்ல எவருக்கும் நா எழவில்லை. அவன்
" பணியாளர் நியமன அலுவலகத்திலிருந்து அணியமைப்பு அலுவலகத்துக்கு.
ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு என்று மாறி மாறி அனுப்பப்பட்டான்.
அவன் மீது பரிவு கொண்டு அதிகாரிகள் அவனை மீண்டும் தேர்வுக் குழுவிடம் அனுப்பி
வைத்தார்கள்.
அலைக்சேயின்
எதிர்வினை
அலெக்சேயின் சிக்கல் எளிதில் தீர்ந்துவிடவில்லை. அவன் மறுதலிப்புகளோ.
அறிவுறுத்தும் தொனியோ.
இகழ்வுபடுத்தும் அனுதாபமும் தயையுமோ ( இவற்றுக்கு எதிராக
அவனது தன்மானம் மிக்க ஆன்மா அனைத்தும் பொங்கி எழுந்தது எனினும் ) இப்போது
மெரேஸ்யெவுக்குக் கட்டுக் கடங்காத கோபம் உண்டாகவில்லை. தன்னைக் கட்டுக்குள்
வைத்திருக்க அவன் பழகிக்கொண்டான். மனுதாரனின் தோரணையை மேற்கொண்டான். சில
சமயங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று மறுதலிப்புக்களைப் பெற்ற போதிலும்
நம்பிக்கையைக் கைவிடவில்லை. பத்திரிக்கைத் துணுக்கும் இராணுவ மருத்துவரின்
முடிவும் அடிக்கடி பையிலிருந்து எடுக்கப்பட்டமையால் நைந்து மடிப்புக்களில்
விட்டுப்போயின. எண்ணெய்த் தாளில் அவற்றை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
நடனமாடிக்
காட்டுதல்
அலெக்சேய்க்கு ஒவ்வொரு அலுவலகத்திலும்வெவ்வேறு சொற்களில் ஒரே பதில் கிடைத்தது.
அவனுக்கு ஒரு அளுவலகத்தில் கிடைத்த அனுபவம் இது.
‘கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியாது. என்றார் ஒரு கேப்டன். அலெக்சேய் "
ஓட்ட முடியும்... இதோ.... " என்று பத்திரிக்கைத்
துணுக்குகளையும் இராணுவ மருத்துவரது முடிவையும் அவரது
சிபாரிசையும் எடுத்து வைத்தான்.”
’கால்கள் இல்லாமல் நீ எப்படி விமானம் ஓட்டுவாய் ?
விசித்திரப் பேர்வழி ! முடியாதப்பா.ருஷ்யப் பழமொழி கூட
உண்டே. ‘காலில்லாதவன் நடனமாட முடியாது ‘என்று. " முடியாதோ ? ” - இவ்வாறு கத்திவிட்டு எதிர்பார்ப்பு அறையிலேயே நடனம் ஆடத்
தொடங்கிவிட்டான்.’காப்டன் பாராட்டுத் தோன்ற அவனைக் கவனித்தான்
மாற்றுப்பணி
அலெக்சேய்க்கு ஒரு அதிகாரி இதே ஊதியத்தில் இதே வசதிகளுடன் மாற்றுப்பணி அளிக்க
இசைவளித்தார். ஆனால், அலெக்சேய்
ஆத்திரமடைந்தான்.
அட உங்களுக்கு என் இது புரியமாட்டேன் என்கின்றது ?
வயிற்றுப்பாட்டையும் சம்பளத்தையும் பற்றி அல்ல நான்
கவலைப்படுவது. நான் விமானி. புரிகிறதா ? நான் விரும்புகிறேன் விமானம் ஓட்ட.
போரிட! இதை ஏன் ஒருவரும் புரிந்துகொள்வதில்லை?
இது வெகு சுலபமான விஷயம் ஆயிற்றே’ என்று கத்தினான்.
உச்ச
அதிகாரியின் அனுமதி
அலெக்சேய் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தாலும் தளரவில்லை. இறுதியாக
ராணுவத்தின் தலைமை அதிகாரியைச் சந்தித்தான். அவருக்கு விதி நினைவுக்கு வந்தாலும்
அதை மிஞ்சிக்கொண்டு அலெக்சே மீது நம்பிக்கை பிறந்தது. ‘நீ ரஸ்யன்
நீ என்ன
செய்வாய் என்று யார் கண்டது ?... இந்த யுத்தத்தில் நம் ஆட்கள் உலகை பிரமிக்க வைத்து விட்டார்கள்
என்றால் வெறுமேதானா... என்று சொல்லிக்கொண்டே
காகிதத்தின்
குறுக்கே நீல நிறப் பென்சிலால் விளங்காத கையெழுத்தில் அரைகுறைச் சொற்களில் "
பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புக " என்று எழுதினார்.
அலெக்சேயின்
விமானம் ஓட்டும் திறன்
அலெக்சேய் விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தான். அங்கு நவூமவ் என்பவர் அவனுடைய ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவர் அலெக்சேயின் முதல் விமான ஓட்டத்தைக் கண்டு திகைப்படைந்தார். விமானம் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவனாகத் தோன்றிய
இந்த அழகிய சாமள நிற இளைஞனின் முகத்தில் இப்போது கண்ணாடி வாயிலாக அவர் கண்ட
விந்தையான பாவத்தை பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய பல ஆண்டுகளில் ஒரு தரங்கூட அவர்
காணவில்லை.
ஜுரத்தினால் ஏற்படுவது போன்ற புள்ளிகள் அடர்ந்த செம்மை புதியவனின் சாமள நிறத்
தோலின் ஊடாகப் பரவியது. அவன் உதடுகள் வெளிறின.
ஆனால் அச்சத்தால் அல்ல.
நிச்சயமாக இல்லை.
"யாரோ விசித்திரப் பிரகதி! இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும். என்ன செய்வானோ. யார் கண்டது? " என்று தீர்மானித்துக் கொண்டார் ஆனால் சதுரக்
கண்ணாடியிலிருந்து தம்மை நோக்கிய அந்தக் கிளர்ச்சி பொங்கிய முகத்தில் இருந்த ஏதோ
ஓர் உணர்ச்சி ஆசிரியரையும் பற்றிக் கொண்டது. தமது தொண்டையிலும் ஏதோ அடைத்துக்
கொள்வதை உணர்ந்து அவர் வியப்படைந்தார்.
அலெக்ஸேயின்
ஒவ்வொரு அசைவையும் முன்னிருந்த கருவிகள் அப்படியே இயங்கிக் காட்டின. புதியவன்
தன்னம்பிக்கையுள்ள. கைதேர்ந்த விமானி என்பதை அவற்றிலிருந்து அவர் கண்டுகொண்டார்.
முதல் சுற்றுக்குப் பின் நவூமவ் தன் சீடனைக் குறித்து அஞ்சுவதை
விட்டுவிட்டார். விமானம் தயக்கமின்றி உரிய முறையில் இயங்கியது.
அலெக்சேயின்
நிலையை ஆசிரியர் உணர்தல்
அலெக்சேய் முதல் முறை விமானத்தை
ஓட்டிக் காட்டும் வரை அவனுக்குக் கால்கள் இல்லை என்பது ஆசிரியருக்குத் தெரியாது.
அவனுக்குக் கால்கள் இல்லை என்பதை அவர் அறிந்தபோது
‘யாரோ
தலையில் சம்மட்டியால் அடித்து தரையில் பதித்து விட்டது போல நொடிப்பொழுது மலைத்து
நின்றுவிட்டார்.
கால்கள் இல்லையாவது ? இப்போதுதானே இவன் விமானம் ஓட்டினான்.
அதுவும் நன்றாகவே ஓட்டினான் !.... என்று திகைப்பில்
ஆழ்ந்தார்.
“அடேயப்பா.
எப்படி உன்னால் முடிந்தது ?
அருமையான ஆள் நீ ! அட உனக்கே தெரியாது நீ எப்பேர்பட்ட
மனிதன் என்று.. " எனத் தொண்டை தழுதழுக்கக் கூறினார்.
மிகவும்
உடல் நலம் வாய்ந்தவர்கள் மட்டுமே அவர்களிலுங்கூட அதிகமாய்ப் போனால் நூற்றுக்கு ஒருவர்
மட்டுமே அடைய முடியும் என்று உலகெங்கும் இதுவரை எண்ணப்பட்டு வந்த சிறந்த
தேர்ச்சியைக் கால்கள் இல்லாமலே நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்பதுதான் விஷயம்.
நீங்கள் வெறும் பிரஜை மெரேஸ்யெவ் அல்ல. நீங்கள் மாபெரும் சோதனையாளர்.... என்று அலெக்சேயைப்
புகழ்ந்தார்.
நேர்த்தியான
விமானப்பயிற்சி
அலெக்சேய்க்குத் தன் ஆசிரியரைக் கவர்ந்துவிட்டதில் பெரு மகிழ்ச்சி. அது
அவனுக்கு மேலும் ஆர்வத்தையும் கற்றல் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது.
மறுநாள் முதல் தனியாகப் பயிற்சி செய்யலானான்.
உண்மையான
அகத்தூண்டல் அவனை ஆட்கொண்டுவிட்டது. பறப்புத் தொழில் நுட்பத்தைப் பகுத்தாயவும்.
அதன் எல்லா அம்சங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப்
பார்க்கவும். மிக மிகச் சிறு இயக்கங்கள்.
அசைவுகளாக அதைப் பாகுபடுத்தவும்.
ஒவ்வொரு அசைவையும் தனியாகப் பயின்று தேறவும் அவன்
முயன்றான்.
பாலப் பருவத்தில் தானாகவே புரிந்துகொண்ட விஷயங்களை இப்போது ஆராய்ந்து கற்றான்.
முன்பு அனுபவத்தாலும் பழக்கத்தாலும் தேர்ந்து கொண்டவற்றை இப்போது அறிவால்
நுணுகித் தெரிந்து பயின்றான். விமானம் ஓட்டும் செயல்முறையை உறுப்பு அணைப்புள்ள
அசைவுகளாகக் கூறுபடுத்தி காலின் செயல் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பாதங்களிலிருந்து
கெண்டைக் கால்களுக்குக் கொண்டு வந்து. ஒவ்வோர் அசைவிலும் தனக்குத் தனிப்பட்ட தேர்ந்த திறமையை
முயன்று ஏற்படுத்திக் கொண்டான்.
இது மிகவும் கடினமான சள்ளைபிடித்த வேலையாக இருந்தது. அதன் விளைவுகள்
தொடக்கத்தில் அனேகமாகத் தட்டுப்படவில்லை. எனினும்
தடவைக்குத் தடவை விமானம் தன்னோடு மேலும் மேலும் இணைந்து
ஒன்றாவது போலவும் தன் விருப்பத்திற்கு இணங்கச் செயல்படுவது போலவும் அவன்
உணர்ந்தான்.
புதிய
சோதனைகள்
போர் விமானத்தை இயக்குவது என்பது புதிய புதிய சவால்களையும் சிக்கல்களையும்
கொண்டது. தேர்ந்த விமானியால் கூட முழுமையாகக் கற்ற நிறைவைக் காண முடியாது. இதை
அலெக்சேய் நன்கு உணர்ந்திருந்தான். எனவே, அவன் பயிற்சியின்போதே விமானத்தைவானில்
எப்படியெல்லாம் ஓட்டிப் பார்க்கலாம் என்பதைக் கற்பனை செய்து சோதிக்க எண்ணினான். ‘தனது
தேர்ந்த திறமையில் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை உண்டாயிற்று.
விமானமோ. உயிர்ப் பிராணிபோல அவனுக்கு ஒத்துழைப்பு அளித்தது. விடாமுயற்சியுடன் நிறையப்
பறந்தான். மறுபடி விமானத்துடன் ஒன்று கலந்துவிட.
பொய்க்கால்களின் உலோகம்.
தோல் இவற்றின் ஊடாக அதைப் புரிந்து கொள்ள அரும்பாடுபட்டான்.
இதில் தான் வெற்றி அடைவதாகச் சில வேளைகளில் அவனுக்குத் தோன்றும். அவன் களிப்புற்று
விமானத்தை ஏதேனும் சிக்கலான வடிவுப் பறப்பில் செலுத்துவான். ஆனால் அவன் இயக்கம்
சரியானதாக இல்லை. விமானம் இடக்குப் பண்ணுகிறது.
தன் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது என்று உடனேயே
உணர்வான். நம்பிக்கை ஒளி மங்கிவிட்டதால் துயருற்று.
சலிப்பூட்டும் பயிற்சியில் மறுபடி ஈடுபடுவான்.
அவனுடைய தொடர் பயிற்சியின் பயனாக சவாரிக்காரன் என உணரும் குதிரை போல.
வர வர அதிகக் கீழ்படிவு உள்ளதாயிற்று. தனது பறப்புப்
பண்புகள் யாவற்றையும் விமானம் அலெக்ஸேய்க்குப் படிப்படியாக வெளிக்காட்டியது.
விமானத்தின்
இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல்
அலெக்சேய் ஒவ்வொரு நால் பயிற்சியிலும் விமானத்தை லாவகமாக்குவதில் முனைந்தான்.
எல்லா இயற்கைச் சூழல்களிலும் விமானத்தை ஓட்டிப் பார்த்தான். ‘அன்று அலெக்ஸேய் தனது
சண்டை விமானத்தில் வானில் கிளம்பினான். அப்போது காற்று எதிரிலிருந்து விலாப்
புறமாக வீசியது. விமானம் ஒரு பக்கம் விலகிற்று.
அலெக்ஸேய் அதை ஓயாமல் நேர்படுத்த வேண்டியிருந்தது.
விமானத்தை நேர்பாதைக்குத் திருப்புகையில்தான் சட்டெனக் கண்டு கொண்டான் -
விமானம் தனக்குக் கீழ்படுகிறது என்பதையும். தான் அதை உள்ளத்தாலும் உடலாலும் முழுமையாக உணர்வதையும்.
இந்த உணர்வு மின்வெட்டுப் போலப் பளிச்சிட்டது. முதலில் அலெக்ஸேய் அதை நம்பவில்லை.
மட்டுமீறிய ஏமாற்றங்களை அனுபவித்தவன் ஆதலால் தனது உயர்திறனை அவனால் உடனே நம்ப
முடியவில்லை.
விமானத்தைச் சட்டென வலப்புறம் திருப்பி ஒரு வளையமிட்டான். விமானம் படிந்து.
கணக்காகத் திரும்பியது. மப்பு மந்தாரமான நாள் திடீரென
வெயிலொளியில் சுடர்வது போலிருந்தது அவனுக்கு.
எத்தனை எத்தனையோ நாட்கள் செய்த கடும் உழைப்பின் பலனை இப்போது அவன் எளிதாக
அனுபவித்தான். இவ்வளவு நீண்ட காலமாகக் கை வராமல் நழுவிச் சென்ற முக்கிய விஷயம்
இப்போது அவனுக்குக் கைவந்து விட்டது. தனது விமானத்துடன் அவன் இரண்டுற
கலந்துவிட்டான். தனது உடலின் நீட்சி போல அதை உணர்ந்தான். உணர்ச்சியோ பிகுவோ
அற்ற பொய்க் கால்கள் கூட இந்த ஒன்று கலத்தலுக்கு இப்போது தடையாக இல்லை. தனக்குள்
ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்தான். சில குறுகிய வளையங்கள் இட்டான்.
கரணமடித்தான். அடித்து முடித்ததுமே விமானத்தை பம்பரமாகச் சுழலச் செய்தான்.
தரை சீழ்கையுடன் வெறிகொண்டு சுழன்றது.
விமான நிலையமும். பள்ளிக் கட்டிடமும். வானிலை ஆராய்ச்சிக் கோபுரமும் எல்லாமே மொத்தையான
சுழற்சியில் ஒன்று கலந்தன. அவன் தயக்கமின்றி நேர் நிலைக்குக் கொண்டுவந்து சுருக்கு
வளையமிட்டான்.
விமானத்துடன்
இரண்டுற கலத்தல்
அலெக்சேய் தன்னில் விமானத்தையும் விமானத்தில் தன்னையும் ஒன்றாய் உணர்ந்தான். விமான
எஞ்சின் தன் நெஞ்சில் துடிப்பது போல அவனுக்குப்பட்டது. விமான இறக்கைகளையும் வால் சுக்கானையும்
அவன் தன் உடல். உள்ளம் அனைத்தாலும் உணர்ந்தான். பாங்கற்ற பொய்க்கால்கள் கூட
நுண்ணுணர்வு பெற்றுவிட்டன போன்றும். வெறிப் பாய்ச்சல் கொண்ட இயக்கத்தில் விமானத்துடன் தான்
ஒன்றாகிவிடுவதற்குத் தடையாக இல்லை போலவும் அவனுக்குத் தோன்றியது.
அலெக்சேய்
தன்னை முழு வீரனாக உணர்தல்
அலெக்சேய் ஒரு நாள், கடுமையான போரில் இரண்டு ஜெர்மன்
விமானங்களைச் சுட்டு வீழ்த்தினான். எதற்காகத் தனது சித்தவுறுதி முழுவதையும். பலம் அனைத்தையும் ஈடுபடுத்தி
முயன்றானோ. அவனது வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான நிகழ்ச்சியாக அது
அமைந்தது. . அது அவனது அடுத்துவரும்
வாழ்க்கை முழுவதையும் நிர்ணயிப்பதாக அவனுக்குப் பட்டது. உடல் நலமுள்ள முழு மதிப்பு வாய்ந்த மனிதர்களின்
அணிகளில் அவன் மீண்டும் சேர்ந்ததை அந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது.
சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சம உரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான்.
அவன் பார்வையும் செவிப்புலனும்
சிந்தனையும் எல்லாம் முடிந்தவரை கூராகி விட்டன.
நண்பனின்
உயிரைக் காத்தல்
அலெக்சேய் மீண்டும் விமானப்படையில் சேர்ந்த நாளில் பெத்ரோவ் என்ற இளைஞன் புதிதாக
விமானப்படையில் சேர்ந்தான். அவன் அலெக்சேய்க்கு நெருங்கிய நண்பனாகிவிட்டான்.
வானில் போர் நடந்துகொண்டிருந்த போது அந்த இளைஞனின் விமானம் பகைவரின் பிடியில்
சிக்கி உள்ளதை அலெக்சேய் உணர்ந்தான். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று
எண்ணினான். உடனே விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் விமானத்தை விரைந்து இயக்கினான்.
‘திரும்புவதற்கு நேரமோ இடமோ இல்லை. ஆபத்தில் இருந்த நண்பனின் உயிரைக்
காப்பாற்றுவதற்காக அபாயத்தை மேற்கொள்ளத் துணிந்தான். தன் விமானத்தைக் கீழ்
நோக்கித் திருப்பி விரைவை அதிகப்படுத்தினான். தனது சொந்த கனத்தின் ஈர்ப்பு வேகம்
சட வேகத்தாலும் எஞ்சினின் முழு ஆற்றலாலும் பன்மடங்காகி விடவே.
விமானம் அசாதாரண இறுக்கத்தால் அதிர்ந்து நடுங்கியவாறு
கல் போல
- அல்ல. கல்போல அல்ல. ராக்கெட் போல ‘போக் ‘விமானத்தின் குட்டை இறக்கைகள் கொண்ட உடல் மீது நூல்கள்
போன்று குண்டுவரிசைகளை வீசியபடி பாய்ந்தது.
அலெக்சேய்
நிகழ்த்திய வெற்றித் தாக்குதல்
அலெக்சேய் போர்க்கலத்தில் ஒரு புகழ் பெற்ற விமானியை எதிர்கொள்ள நேர்ந்தது.
‘அவன் ரிஹ்த்கோபென்’ டிவிஷனைச் சேர்ந்த தேர்ந்த விமானி. எத்தனையோ விமானப்
போர்களில் அடைந்த வெற்றிகள் அவனது விமானத்தின் மேல் விமான வரையுருக்களின் வடிவில்
பொறிக்கப்பட்டிருக்கும். இவன் விலக மாட்டான். மோதலிலிருந்து நழுவ மாட்டான்.
ஒரேயடியாக இறுக்கம் அடைந்திருந்த அலெக்ஸேய்க்கு.
தனது விமானத்தினது உந்துவிசிறியின் பளிச்சிடும் அரை வட்டத்திற்கு
அப்பால் பகை விமானி அறையின் ஒளிபுகும் முன் சுவரும் அதன் ஊடாகக் குத்திட்டு
நோக்கும் இரு மனித விழிகளும் தென்படுவது போல் இருந்தது. அந்த விழிகளில் உக்கிரமான
வெறுப்புக் கனல் வீசியது. இது நரம்பு இறுக்கத்தால் உண்டான மாயத் தோற்றமே. எனினும்
அலெக்ஸேய் அந்த விழிகளைத் தெளிவாகக் கண்டான். தனது எல்லாத் தசைகளையும் மொத்தமான
கட்டியாகும் படி இறுக்கிக் கொண்டு. " அவ்வளவு தான்! எல்லாம் முடிந்தது ! " என்று எண்ணினான்.
நேரே நோக்கியவாறு அதிகரிக்கும் விரைவுடன் எதிரே சென்றான். இல்லை.
ஜெர்மானியனும் விலகவில்லை. வாழ்வு தீர்ந்தது. கணச்
சாவுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான். திடீரென எங்கோ - கைக்கெட்டும்
தொலைவில் என்று அலெக்ஸேய்க்குத் தோன்றியது - ஜெர்மானியன் தாக்கு பிடிக்க மாட்டாமல்
உயரே கிளம்பினான். அவனது விமானத்தின் நீலவயிறு வெயில் பட்டு மின் வெட்டுப் போல
அலெக்ஸேயின் எதிரே பளிச்சிட்டது. அக்கணமே அலெக்ஸேய் எல்லாச் சுடுவிசைகளையும்
அழுத்தி மூன்று நெருப்புத் தாரைகளால் அதைத் துளைத்துக் கிழித்துவிட்டான்.
மறு கணத்தில் அவன் தன் விமானத்தைக் குப்புறச் செலுத்திக் கரணம் அடித்தான். தரை
அவன் தலைக்கு மேலே பாய்ந்து செல்கையில் அதன் பின்னணியில் மெதுவாக
தன் வசமின்றிப் பறந்த பகைவிமானத்தைக் கண்ணுற்றான். வெற்றி
வெறிக்களிப்பு அவனுக்குள் ஊற்றெடுத்துப் பீறிட்டது.
போர்க்கலத்தைப் பொருத்தவரை சாவுக்குத் துணிந்த ஒரு
வீரனால்தான் தன்னைவிட அனுபவமும் வீரமும் மிக்க ஒருவனை எதிர்த்துப் போராட முடியும்.
அவரை வென்று வீழ்த்தவும் முடியும். அலெக்சேய் சாவுக்கு அஞ்சாததால்தான் அவனால் அந்த
வீரனின் விமானத்தை வீழ்த்த முடிந்தது.
அலெக்சேயின்
உயர் சாதனை
ஒரு வான்படை வீரன் பகைவரின் தாக்குதலை எதிர்கொள்வது மட்டுமின்றி வேறு
சவால்களையும் சந்திக்கிறான். சில தருணங்களில் போர் நடந்துகொண்டிருக்கும்போதே
குண்டுகள் தீர்ந்துவிடுவதுண்டு. அப்பொழுது குண்டுகள் இல்லாத நிலையை எதிரி
அறியாதவாறு போர் புரிய வேண்டும். அப்படியே அது அறியப்பட்டாலும் பகைவரால் தாக்க
முடியாதபடி அவருடைய விமானத்திற்குப் பின்னால் அவரைத் தொடர வேண்டும். சில
நேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடுவதுண்டு. இதைச் சமாளிப்பது மிகவும் கடினம்.
அலெக்சேய் அப்படி ஒரு நிலையை எதிர்கொண்ட விதம்தான் அவனுடைய உயர் சாதனை.
அலெக்சேய் வானில் தான் சுட்டு வீழ்த்திய பகைவரின் விமானம் தரையில் விழுந்து
நொருங்குவதைப் பார்க்கும் ஆவலில் கீழே இரங்கிவிட்டான். வெற்றிக் களிப்பில் துள்ளிய
கணத்தில் அவன் பார்வை பெற்றோள் மானியின் எண் வட்டத்தின் மேல் பட்டது. முள்
சூனியத்தின் வெகு அருகே நடுங்கியது.
பெட்ரோல் மூன்று நிமிடங்களுக்கே. அதிகமாய்ப் போனால் நான்கு நிமிடங்களுக்கே போதுமாயிருந்தது.
நிலையம் சேர்வதற்குக் குறைந்தது பத்து நிமிடங்களாவது பறந்தாக வேண்டும். அதுவும்
உயரே கிளம்புவதில் இன்னும் நேரம் செலவிட்டால்.....
துணிவும் பதற்றமின்மையும் உள்ளவர்களின் மூளை ஆபத்துக் காலத்தில் வேலை செய்வது
போலவே அலெக்ஸேயின் மூளையும் கூர்மையாக. தெளிவாகச் சிந்தித்தது. முதன்மையாக முடிந்தவரை அதிக
உயரத்திற்குப் போய்விட வேண்டும். ஆனால் வட்டங்கள் இடாமல்.
மேலே மேலே ஏறுகையிலே விமான நிலையத்தை நெருங்க வேண்டும்என்று
திட்டமிட்டான். நல்லது.
விமானத்தைத் தேவையான செல்திசையில் திருப்பி.
தரை விலகிப் போவதையும் படிப்படியாகத் தொடுவானத்தில் மூடுபனி
சூல்வதையும் கவனித்தவாறு அவன் தனது கணக்கீட்டை இன்னும் நிதானமாகத்
தொடர்ந்தான். அவன் அந்தத்திட்டமிடலில் சிறிது தூரத்தைக் கூடுதலாகக்
கடந்திருந்தாலும் நிலையத்தை அடைவதற்குத்
தேவையான எரிபொருள் இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்தான்.
விமானத்தைத்
தரை இரக்கும் முயற்சியைக் கைவிடல்
விமானிகள் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்படும்போதுஅதைத் தரை
இரக்குவதற்கான வாய்ப்புகளைத் தேடுவது இயல்பு. அதற்குத் தகுந்த நிலவியலறிவுத் தேவை.
அது அலெக்சேயிடம் மிகுதியாக இருந்தது. வழியில் இறங்குவதா?
எங்கே? குறுகிய
வழி முழுவதையும் அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். தழைமரக் காடுகள்.
சதுப்பு நிலச் சோலைகள்.
மேடும் பள்ளமுமான வயல்கள். நீண்டகால அரணைப்புக்கள் இருந்த
வட்டாரத்தில் உள்ள இந்த வயல்கள் குறுக்கும் நெருக்கும் எங்கும் தோண்டப்பட்டு.
குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட குழிகள் நிறைந்து
முட்கம்பிகள் பின்னிக்கிடந்தன என்பதை அவன் உடனே அறிந்தான். ‘இறங்கினால் சாவு நிச்சயம்.’ என்ற முடிவுக்கு
வந்தான்.
பாராசூட்டின்
உதவியால் தப்பித்தலைக் கைவிடல்
விமானி உயிர் தப்புவதற்கான இறுதி வாய்ப்பு ‘பாராசூட்’ அலெக்சேய் அதைப்
பயன்படுத்தலாமா? என்று ஒரு கனம் யோசித்தான். பாராஷூட்டின் உதவியால் குதிப்பதா ?
அது செய்யலாம் ஆனால்
விமானம்! லாவகமும் விசையும் உள்ள இந்த அற்புதமான கரும் பறவை ! இதன் போர்ப்
பண்புகள் இன்று மூன்று முறை அவன் உயிரைக் காப்பாற்றின. விமானம் நேர்த்தியான.
வலிய. பெருந்தன்மையும் விசுவாசமும் வாய்ந்த உயிர்ப்பிராணியாக அவனுக்கு
அந்தக் கணத்தில் தோன்றியது. அதை விட்டுவிடுவது துரோகச் செயலாகப்பட்டது.எனவே, அதைச்
செய்ய அவன் விரும்பவில்லை.
விமானத்தை
எதிர்பார்க்கும் நிலையைத் தவிர்த்தல்
அலெக்சேய் பாராசூட்டில் குதிக்க நினைக்காமைக்கு வேறு காரணமும் இருந்தது. மீண்டும்
பணியில் சேர்ந்த முதல் போரிலேயே அவன் தன் விமானத்தை இழக்க விரும்பவில்லை. அப்படி
செய்தால் மீண்டும் விமானம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். ‘முதல்
சண்டையிலேயே விமானத்தை கோட்டை விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது விமானத்தை
எதிர்பார்த்துச் சேமிப்பில் ஈயோட்டிக் கொண்டிருப்பது.
போர்முனையில் நமது பெருவெற்றி உதயமாகியிருக்கும் இந்த
மும்முரமான நேரத்தில் செயலற்றுச் சோம்பியிருப்பது
இப்பேர்பட்ட நாட்களில் வெட்டியாக வளையவருவது என்பதை
நினைக்கவே அவன் கூசினான். எனவே, ‘எஞ்சின் நின்றுவிடும் வரை பறப்பது’ என்று முடிவு
செய்தான்
அலெக்சேயின் செயல் தத்துவம்
அலெக்சேயின்
செயல் தத்துவம், இலக்கை அடைய முடியுமோ? முடியாதோ? ஆனால், இயக்கத்தை
நிறுத்தக்கூடாது.என்பதாகும். இங்கும் அதுவே நிகழ்ந்தது. . . விமானம் தொடர்ந்து
இயங்கிக்கொண்டிருந்தது. விமான நிலையம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், எந்த
நேரமும் நின்றுவிடும் நிலை.
‘குதித்துவிடலாமா? வேண்டாம். இன்னும் கொஞ்சம் போகட்டும்என்று
இயக்கினான். விமானம் சாய்வாக கீழிறங்கும்
படி வைத்து காற்று மலை மேலிருந்து வழுகலானான். இந்த வழுகலைக் கூடியவரை
அதிகச் சரிவாகச் செய்யவும் அதே சமயம் விமானம் புரண்டு சுழல இடங் கொடாமலிருக்கவும்
முயன்றான்.
வானிலே இந்த முழு நிசப்தம் எவ்வளவு பயங்கரம் ! சூடு ஆறும்
எஞ்சின் சடக்கென ஒலிப்பதும். விரைந்த இறக்கம் காரணமாகக் கன்னப்பொருத்துக்களில்
இரத்தவோட்டம் விண்விண்ணென்று தெறிப்பதும் காதுகள் நொய்யென்று இரைவதும் கேட்கும்
அளவுக்கு நிசப்தம். பிரம்மாண்டமான காந்தத்தால் விமானத்தை நோக்கி ஈர்க்கப்படுவது
போல அதை எதிர் கொண்டு விரைந்து பாய்ந்தது தரை !
இதோ காட்டோரம். அதற்கு அப்பால் பளிச்சிடுகிறது
மரகதப்பச்சைத் துணித்துண்டு போன்ற விமானத் திடல்.
விமானத்திடலை
அடைதல்
அலெக்சேயின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்திருக்கும்என்பதை
விமான நிலையப்பதிவேடு உறுதி செய்தது. எனவே, அவன் விமானம் நிலையம் வந்தடையும் என்ற
நம்பிக்கை யாருக்குமே இல்லை. ஆனால், அது வந்து இரங்கியது. அதிலிருந்து அலெக்சேய்
இரங்கவில்லை. விமான நிலையத்தலைவர் விமானக்கதவைத் திறந்து உள்ளே பார்த்தார்.
அலெக்சேயிடம் அசைவில்லை. உயிரோடிருக்கிறாயா? காயம்பட்டிருக்கிறதா? என்று கேட்டார்.
சற்று நேரத்தில் தன் நினைவுக்கு வந்த அலெக்சேய்
" இல்லை. சௌக்கியமாயிருக்கிறேன். மட்டுமீறிக் கிலி
கொண்டுவிட்டேன்.... ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே வந்தேன் ” என்றான்.
அலெக்சேய்
வீழ்த்திய மூன்று விமானங்கள்
அலெக்சேய் ஒரு நாள் போரில் மூன்று விமானங்களைச் சுட்டு
வீழ்த்தினான். மூன்றாவது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அவனே அறியவில்லை. ஒரு ரெஜிமென்ட்
கமாண்டர் அந்த விமானம் அலெக்சேயால் சுட்டு
வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்து அதைப் பதிவு செய்தார். அலெக்சேயைப் பாராட்டினார்.
“நன்றி.
சீனியர் லெப்டினன்ட் ! அற்புதமான தாக்கு.
பாராட்டுகிறேன். என்னைக் காப்பாற்றினாய். ஆமாம்.
தரை வரையில் அந்த விமானத்தைப் பின்பற்றிச் சென்றேன். அது
தரையில் மோதிச் சிதறியதைப் பார்த்தேன்.’ என்றார்.
நிறைவாக
‘make the road by walk” என்று பாவ்லோபிரையிரே கூறுவார். அலெக்சேய் தனக்குப் பாதமே இல்லாத
நிலையிலும் தன் மனப்பாதத்தால் அழுத்தமான தன்னம்பிக்கைப் பாதையை அமைத்திருக்கிறான்.
அவன் அமைத்த பாதையை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அந்தப் பாதையில்
நாம் நகரலாம், உருளலாம், தவழலாம், நடக்கலாம், ஓடலாம், பறக்கலாம். ஆக எதையாவது
ஒன்றைச் செய்ய வேண்டும்.
அலெக்சேய் தன் பயணத்தின் ஊடாக நமக்குப் பலநம்பிக்கை
கீற்றுகளை அளிக்கிறான். அவற்றுள் சிலவற்றை
இப்படி தொகுத்துக்கொள்ளலாம்.
நமக்கு அடிப்படைத் தேவையான உணவு கிடைக்காத சூழலில்
நாம் நினைத்தால்,வெறுமையைக் கூட உணவாகக் கொள்ள முடியும்.
ஆற்றல் இன்றி இயக்கமில்லை என்ற ஆராய்ச்சி அறிவியலை
அனுபவம் என்ற அறிவியல் மாற்றும். நாம் முயன்றால், நம்மால் ஆற்றல் இன்றியும் இயங்க
முடியும்.
இலக்கை அடைய முடிகிறதோ இல்லையோ இயக்கத்தை
நிறுத்தக்கூடாது.
நாம் எவ்வளவு கடினமான சிக்கலில் மாட்டிக்கொண்டாலும்
அதிலிருந்து விடுபடுவதற்கான கல்வியை அங்குள்ள சுற்றுப்புரத்திலிருந்து பெற
முடியும்.
நெருக்கடியான சூழலிலும் மூளையின் செயல்பாடு தெளிவாக
அமைய வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் மரபும் விதியும் நமக்கு பயன்
அளிக்காவிட்டால் அவற்றை மாற்றி புதிய விதியையும் மரபையும் உருவாக்க வேண்டும்.
நாம் எதன் மீதெல்லாம் அன்பு செலுத்துகிறோமோ அவற்றையெல்லாம்
தேவைப்படும்போது நம்மைச் செயல்படத் தூண்டும் உயிர்ப்பாற்றலாக மாற்ற முடியும்.
நாம் ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும் என்றால் அதை
வருத்தத்துடனும் துயரத்துடனும் இழக்காமல் தெளிவுடனும் தெம்புடனும் இழக்க வேண்டும்.
நாம் நம் ‘மன இயல் காலத்தை’ விரைவாகவும் உண்மையாகவும்
அடைய வேண்டும் என்றால் அதற்கான பணிகளை இடைநிறுத்தாமல் செய்துகொண்டே இருக்க
வேண்டும்.
வாழ்க்கை என்பது ஊதியத்திற்கும் வசதிகளுக்கும்
மட்டுமானதல்ல. அது எண்ணிய குறிக்கோளை அடைவதற்கான போராட்டம்.
அலெக்சேய் நமக்குக் காட்டும் வாழ்க்கை நெறி, உயிர்
வாழ்தல் என்பதன் உச்சக்கட்ட எல்லை உயர் சாதனை படைத்தல் என்பதுதான் இதை நாமும்
பின்பற்றுவோம். மற்றவர்களுக்கும் சொல்வோம்.
No comments:
Post a Comment