Sunday 30 June 2019

பழம் பாக்களில் மண் குறித்த அறிவியல் சிந்தனை


பழம் பாக்களில் மண் குறித்த அறிவியல் சிந்தனை

24.03.2019


                                சி. வத்சலா லட்சுமிநாராயணன்
                                முனைவர் பட்ட ஆய்வாளர்
                                ராணி மேரி கல்லூரி
                                சென்னை   600004
முன்னுரை:
            அறிவியல் வளர்ச்சி இல்லாதிருந்த காலத்திலேயே மண்ணின் வகைகளையும் எந்தெந்த மண்ணில் என்னென்ன பயிரிடலாம் என்ற அறிவு மிக்கவர்களாக நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்.  எந்த விதக் கருவிகளும் இல்லாமல் , பரிசோதனை செய்யும் வசதி இல்லாத காலத்திலும் தங்களது அனுபவத்தினாலேயே மண்ணின் தரம் அறிந்து எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைத்துள்ள அறிவியல் சிந்தனையை பழம் பாக்களின் வழி உணர்ந்து எடுத்துரைக்கப் பட்டுள்ளதை பின் வருமாறு காணலாம்..
நிலத்தின் தோற்றம்:
            புவியோட்டின் மேற்புறம் பல வகையான பாறை அடுக்குகளைக் கொண்டுள்ளது. புவிமேலோடு புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள நெருப்புக் குழம்பின் மேல் மிதந்து கொண்டிருக்கிறது.  இம்மேலோட்டின் மீதே பலவகையான பாறைகளும் மண்வகைகளும் அமைந்திருக்கின்றன.  இவ்வமைப்பே நிலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுண்மையை மதுரைக் காஞ்சி ,
            பு நிலம் அமர் வையம் (மதுரைக்காஞ்சி அடி 470)
என்று சுட்டுகிறது.  புவியின் நிலா அமைப்பு விரிந்து பரந்துள்ளது.  விரிந்து பறந்து விளங்கும் நிலத்தின் சுழற்சியை சங்க இலக்கியப் பாடல்கள் கீழ் வருமாறு குறிக்கின்றன.
            இருநிலம் (ஐங்குறுநூறு பா. 320:3)
            உருகெழு மாநிலம் ( கலித்தொகை  பா. 106:18)
            நனந்தலைப் பைந்நிலம் (பதிற்றுப் பத்து பா. 17:10)
            பெருநிலம் ( அகநானூறு பா. 233:3)
            பெருங்கண்மாநிலம் (புறநானூறு பா  363:1).
அகன்று கிடக்கும் நிலப் பரப்பு கடற்கரையோடு முடிந்து விடவில்லை.  கடலுக்கு அடியிலும் தொடர்கிறது. பரந்து விளங்கும் கடல் நீரை நிலம் தாங்கி நிற்கிறது என்பதைப் பரிபாடல்,
            நீர் நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்து (பா. 18:3)என்று குறிப்பிடுகிறது.

மண்
            உலகில் வாழும் தாவர இனங்களும் உயிரினங்களும் பல்கிப் பெருக மண் முக்கிய காரணமாகும். மண்ணைச் சார்ந்து தாவரங்கள் வளர்கின்றன.  உயிரினங்களுள் ஒரு வகையான தாவர உண்ணிகள் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.  ஊன் உண்ணிகள் இறுதியில் மண்ணோடு மண்ணாகின்றன. இவ்வாறு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் உணவுச் சங்கிலி அமைப்பில் மண் முதல் இடத்தை வகிக்கிறது.  மண், புவியின் மேற்பரப்பில் செறிவுடன் இறுகிக் காணப்படுகிறது. அவ்வுண்மையை அகநானூறு மண்திணி கிடக்கை ( அகநானூறு பக். 379:6)என்று சுட்டுகிறது.  இக்கருத்தைப் பதிற்றுப்பத்து மண்கெழுஞாலம் (பதிற்றுப்பத்து பா.69:12 ) என்று குறிப்பிடுகிறது.  மண்ணின் இத்தகைய நிலையை புறநானூற்றின் 2 ம் பாடல் மண்திணிந்த நிலம் என்று குறிப்பிடுகிறது.
மண் விளக்கம்:
            மண் என்பது இரண்டு நிலைகளில் விளக்கம் பெறுகிறது.  புவியின் புறப்பரப்பில், பாறை அடுக்கின் மேல் காணப்படும் சிதைவுற்ற படலம் முழுமையும் மண் என பொறியியல் கருத்தும், வேளாண் துறையில் தாவர வளர்ச்சிக்கு ஆதரவாய் விளங்கும் மேல் மண் பகுதியையே இச்சொல் சுட்டுகிறது.  (சுற்றுச் சூழல் களஞ்சிய அகராதி , தொகுதி  2 ,ப.1165).

மண் வகைகள்:
            மண், அதனுடைய நிறம் மற்றும் தன்மை அடிப்படையில் இடத்திற்கு இடம் வேறு படுகிறது.  தமிழகத்தில் வண்டல் மண், செம்மண், கரிசல் மண், உவர் மண் போன்ற மண் வகைகள் காணப்படுகின்றன.  மனிதன் வேளாண்மை செய்யத் தொடங்கிய காலந்தொட்டு மண், மண்வளம் (மண்வகைகள் பற்றிய ) அடிப்படை அறிவைப் பெற்றிருந்தான்.
            சங்க இலக்கியப் பாடல்கள் நிலத்தை அதன் தன்மை அடிப்படையில் வண்நிலம் என்றும் மெந்நிலம் என்றும் இரண்டு நிலைகளில் கூறுகின்றன.  கடினத் தன்மையுடைய குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் வன்னிலம் எனப்படுகிறது.  மருதமும், நெய்தலும் சேறு நிரம்பிய வயல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியாதளால் மென்னிலம் எனப்படுகிறது.  இந்நிலப் பகுதிகளில் காணப்படும் செம்மண், வண்டல் மண், களர் மண், வெண்மணல், உவர்மண் ஆகியவற்றை சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.


செம்மண்:
            சிவந்த நிறமுடைய மண் செம்மண் எனப்படுகிறது.  உருமாறிய பாறைகளில் உள்ள இரும்பு ஆக்சைடு ,மண்ணிற்குச் செந்நிறம் அளிக்கிறது.  இம்மண் வண்டல் மண்ணிற்கும் மணலுக்கும் இடைப்பட்ட அளவிலான துகள்களால் ஆனது.  துகள்களுக்கிடையே ஓரளவு இடைவெளி உண்டு.  ஓரளவு நீரை உறிஞ்சும் தன்மை உடையது.  இதில் இரும்புச் சத்து மிகுதி. இம்மண்ணில் பாஸ்பரஸ், நைட்ரஜன் , சுண்ணாம்பு குறைந்தும் அமிலத்தன்மை மிகுந்தும் காணப்படும்.  இவ்வகை மண்ணில் வறட்சியைத் தாங்கும் மரங்கள் வளர்கின்றன.
            சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் செம்மண் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  சிவந்த மண் படர்ந்த செம்மண் நிலப்பரப்பை அகநானூறு,
            அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி (அகநானூறு பா. 14:1 ) என்றும்,
            ஓவத்தன்ன கோபச் செந்நிலம் ( அக. பா. 54:4 )
            செய்து விட் டன்ன செந்நில மருங்கின் (அக.பா.304:6 )
என்றும் குறிப்பிடுகிறது.  செம்மண் நிலம், வண்டல் மண்ணிற்கும், மணலுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள நுண்துகள்களைக் கொண்டிருக்கும் என்னும் உண்மையை,
            குறும்புதற் பிடலின் நெடுங்கால் அலரி
            செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப (  அக.பாடல் 154-4-5 )
என்ற அடிகள் சுட்டுகின்றன.  இதில் உள்ள நுண் அயிர் என்பதே நுண்துகள்களைக் குறிக்கிறது. வேனிற் காலத்தில் நீரின்றி வரட்சிக்குள்ளாகும் போது செம்மண் துகள்கள் புழுதிகளாக மேற் பரப்பில் படிந்து விடும். இதனை,
            செந்நிலப் படுநீறு (பா. 227:10 ) என்கிறது அகநானூறு.
செம்மண் படர்ந்த நிலப்பரப்பே தமிழர் வகுத்த முல்லை நிலம் என்பதை,
            செந்நிலப் புறவின் ( நற் பா. 321:1)    
            செம் புலப் புறவில் (நற்.பா.221:53) என்றும் நற்றிணை அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
            செம்மை மிக்க செம்மண் படர்ந்த மெட்டு நிலத்தில் மழை பொழிந்த்ததால் ஏற்பட்ட ஈரமுடைய நிலத்தை உழவர்கள் தம் ஏர் கலப்பையைக் கொண்டு உழுதனர்.  இதனை,
            வெப்புள் விளைந்த வேங்கை செஞ்சுவற்
             கார்ப்பெயற் கழிந்த பெரும்பாட்டீரத்துப்
            பூழி மயங்கப் பலவுழுது வித்தி ( புறநானூறு 120:1-3)    
என்ற அடிகள் விளக்குகின்றன.    
            செம்மண் நிலத்தில் வறட்சியைத் தாங்கக் கூடிய மரங்கள்,  கொடிகள் வளர்கின்றன.  அதனாலேயே செம்மண் படர்ந்த முல்லை நிலம் , மரங்கள் அடர்ந்த காடுகளாகக் காணப்படுகின்றன.  காடுகள் நிறைந்த இப்பகுதியில் உள்ள நிலப்பரப்புகள் மழையை எதிர்பார்த்து விளையும் புன்செய் நிலங்களாக உள்ளன.  இந்நிலையினை,
            முதை படு  பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
            பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்   (அகநானூறு பா. 262:1-2) என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.
            மழை பொழிந்த வைகறை வேளையில் உழவர்கள் ஏர் கொண்டு உழுத செம்மண் நிலத்தில் வரகை விதைக்கின்றனர்.  விதைக்கப்பட்ட இவ்விதைகள் பலவும் முளைத்து வளர்ந்து நன்றாக விளைந்திருக்கின்ற சூழலை,
            பேருறை தலை இய பெரும் புலர் வைகறை
              ஏரிடம் படுத்த இருமறுப் பூழிப்
             புறமாறு பெற்ற பூவல் ஈரத்து
            ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
            வித்திய மருங்கின் விதை பல நாரி
            இரலை நன் மானினம்பரந் தவை போல்
            கோடுடைத் தலைக் குடை சூடிய வினைஞர்
            கறங்கு பறை சீரின் இறங்க வாங்கிக்
            களைகால் கழிஇய பெரும்புன வரகின்
            கலைக்கதிர் இரும்புறங் கதூஉ  உண்ட ( அகநானூறு பா. 194-1:10)
என்னும் பாடல் விளக்குகிறது. இவ்வகை நிலத்தில் நல்ல மழைப் பொழிவு உள்ள காலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படும்.
            முல்லை சார்ந்த நிலங்கள் புன்செய் நிலங்களாகும். நீர்வளம் குறைந்து இறுகிக் காணப் படுவதால் இம்மண்ணில் நெல் விளையாது.  வரகு, தினை போன்றவையே வளரும்.  இத்தன்மையினை
            புலால னடைமுதற் புரவு சேர்ந் திருந்த
            புன்புலச் சீறூர் நெல் விளையாதே
            வரகுந் தினையு முள்ளவைஎல்லாம்     ( புறநானூறு 328-1:3)
என்ற அடிகள் விளம்புகின்றன.
            காடுகள் நிறைந்த சிவந்த முல்லை நிலத்தில் உரிய மழை பொழிந்ததால் வரகு நன்றாக விளைந்திருந்ததை முல்லைப் பாட்டு குறிக்கின்றது.
            கானம் நந்திய செந்நிலப் பெருவழி
            வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின் ( முல்லைப்பாட்டு 97-98)
இவ்வாறு மேற்கண்ட பாடல்களில் செம்மண் நிறத்தின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.



வண்டல் மண்:
            ஆற்றுச் சமவெளியான மருத நிலம், நிலவளமும் நீர் வளமும் ஒருங்கே பெற்றுள்ளது.  இந்நிலத்தில் காணப்படும் வளம் மிக்க மண்ணே வண்டல் மண் என்றழைக்கப்படுகிறது. இவ்வண்டல் மண்மிகச் சிறிய மண்துகள்களைக் கொண்டுள்ளது.  இம்மண் துகள்களுக்கிடையே இடைவெளி அதிகம் இருப்பதால்
அதிக அளவு ஈரப்பதம் உடையதாக விளங்குகிறது.
            வண்டல் மண் பதிவு உள்ள இடங்களில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் செழித்து வளரும். தமிழ் இலக்கியங்கள் மருத நிலத்தின் சிறப்புப் பயிராக நெல்லையும், கரும்பையும் சுட்டி, அவை செழித்து விளைந்திருப்பதையும் புகழ்ந்துரைக்கின்றன.  சங்க இலக்கியங்களில் வண்டல் என்ற சொல்லாட்சி கையாளப் பட்டுள்ளது.  ஆனால் அது மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பாவையைக் குறிக்கின்றது.
            வளைபவர் வண்டல் போல் வார் மணல் வடுக்கொள (கலித்தொகை 29:5)
            வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ (அகநா. பா. 370:1)
            மணல் காண்தோறும் வண்டல் தை இ   (நற் .பா. 9:8)
            தண்புனல் வண்டல் உய்த்தென (ஐங்குறுநூறு பா.    69:3)
மேற்குறிப்பிட்டவற்றில் உள்ள வண்டல் என்பது விளையாட்டுப் பாவையைக் குறிக்கிறது.
            மலை]ப் பகுதியிலிருந்து வேகமாக ஓடிவரும் ஆற்று நீர் சமவெளிப் பகுதியில் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறது.  இதனால் ஆற்று நீரோடு கலந்து வந்த மண் துகள்கள் சமவெளிப் பகுதிகளில் படிந்து விடுகின்றன.  இப்பதிவு கடற்கரைப் பகுதி வரையுள்ள நிலப்பரப்புகளில் படிகின்றன.  இத்தகைய மண் படிவே வண்டல் மண் எனப்படுகிறது.  இவ்வண்டல் மண்துகள்கள் வளமுடையதாக உள்ளன.  இவ்வண்டல் மண்துகள்கள் கருநிற்த்தைக் கொண்டிருக்கும். இதனை நெடுநல்வாடை,
            இருங்களி பரந்த ஈரவெண்மணல் ( நெ. அடி. 16) என்று குறிப்பிடுகிறது.  இதில் கூறப்பட்டுள்ள களி என்பது வண்டல் மண்ணைக் குறிக்கிறது.  ஆற்று நீரோட்டத்தின் காரணமாக கருமை நிறங்கொண்ட இம் மண் வரிவரியாகப் படர்ந்து காணப்படுவதை இலக்கியங்கள் மகளிரின் கூந்தல் நிறத்துக்கு உவமைப் படுத்தியுள்ளன.
            சாயறல் கடுக்கும் தாழிருங் கூந்தல் ( பதிற்றுப்பத்து பா. 74.3)
            அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் ( மலைபடுகடாம் அடி  304)
            அறல் போற்கூந்தல் (பொருநராற்றுப்படை, அடி 25)
            இளைபவரைம்பால் போல் எக்கரபோழ்ந்தறல் வார (கலித்தொகை பா29-6)
            அறல் மருள் கூந்தலின்(அகநானூறு பா. 299)   
கடற்கரையின் கழி முகத்தின் அருகில் உள்ள கானளின்கண் உள்ள வளமிக்க மண்ணை அகநானூறு,
            இழுமென் கானல் விழுமணல் ( அகம்., பா. 190:15)
என்று குறிக்கிறது.  வண்டல் மண் அதிக அளவு நீரைத்தேக்கி வைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் நெல்லை விதைத்து அறுவடை செய்த பின்னரும் மீண்டும் ஒரு முறை விதை விதைக்கத் தேவையான நீரைக் கொண்டிருக்கும் இத்தன்மையை,
            அரிகால் மாறிய அங்கண் அகல் வயல்
            மறு கால் உழுத ஈரச் செறுவின்
            வித்தொடு சென்ற வட்டி பற்பல
            மீனோடு பெயரும் யாணர் ஊர (நற் பா 210 1 4)
என்னும் பாடல் அடிகள் விளக்குகின்றன. 
கான்யாற்றின் அருகில் இருக்கும் இம்மண்ணைப்பற்றி
குறுந்தொகை
                        ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
                        செய்ததும் அன்றே சிறுகான் யாறே
                        இறைத் தேர் வெண்குருகல்லதுதியாவதும்
                        துன்னல் போகின்றால் பொழிலே யாமெம்
            கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும் ( குறுந்தொகை பா. 113:1-5)
என்று குறிப்பிடுகிறது.
வயல்களிடத்து ஈரம் நிறைந்த மண் துகள்கள் சேறாகியிருந்ததை,
                        குறுந்தொடி மகளிர் குறுஉ ப்புனல் முயை யின்
                        பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்
கரந்தையஞ்செருவின் வெண் குருகு ஒப்பும் (அகநானூறு 226:4-5)                                 
என்ற அடிகள் சுட்டுகின்றன.  நீரை அதிகமாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மண் துகள்கள் சேறாகிவிடும் என்னும் கருத்தை,
            நீர் பெயர்ந்து மாறிய செறி  சேற்று அள்ளல் (நற் பா 291:1)
என்று நற்றிணை சுட்டுகிறது. 

பனை மரத்தின் பழம் ஒன்று விசையுடன் விழுந்து சேற்றினுள் புதைந்ததை
            ...................     கழி சேர்ப்பு
            கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம்
            வன்னிதழ் நெய்தல் வருந்த மூக்கிறுபு
            அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென  ( நற் பா 372 :1-4)  
என்னும் அடிகள் விளக்குகின்றன.  இவ்வாறு சங்க இலக்கியங்கள் மேற்கண்ட பாடல்களில் வண்டல் மண்ணையும் அதன் வளமையையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

களர் மண்
சங்க இலக்கியதினுள் குறிக்கப் பெரும் மண் வகைகளுள் களர் மண்ணும் ஒன்று கரையும் உப்புகள் மிகுதியில்லாத 15% அளவுக்கு மேல் சோடியம் அயனிகள் கொண்ட மண் களர் மண் எனப்படும் . இம்மண் 8.5  முதல் 10 வரை ph மதிப்பு ( அமிலத்தன்மை) கொண்டிருக்கும்.  இவை மழை குறைவான பகுதிகளில் காணப்படும்.  இதிலுள்ள சோடியம் நேரடியாகவும் அதன் கார்பனேட், பைகார்பனேட் சேர்மங்கள் வடிவிலும் தாவர வளர்ச்சியைப் பாதிக்கும். இது மண்ணின் பொசிமையை ( இலகுத்தன்மையை) மிகவும் குறைத்து விடுவதால் தாவரங்களுக்கு நீரும் அதன் வழி ஊட்டங்களும் செல்லல் மிக மட்டுப்படுகிறது.  மண்ணிலுள்ள கரிமப் பொருள் நன்கு விரவப் பட்டுத் துகள்கள் மீது படர்ந்து மண்ணுக்கு கருநிறம் தருகிறது.  இந்நிலம் உழுவதற்கும் மிகக் கடினமானது ஆகும்.  ( சுற்றுச்  சூழல் களஞ்சிய அகராதி. தொடு 2 ம 1164). இத்தகைய களர் நிலத்தைப் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப் படுகின்றன. 
புறநானூறு
            கள்ளி போகிய களரியம் பறந்தவை  ( புறநானூறு பா. 245:3)
என்னும் அடியில் களர் நிலத்தைப் பாழ்பட்ட நிலம் என்று குறிக்கிறது.  கழிந்து பெயர்கின்ற களர் நிலத்தில் மான் சென்றதை
            கழிப் பெயர் களரில் போகிய மட மான் (நற்றிணை பா. 242:7)
என்னும் அடி குறிப்பிடுகிறது.  களர் உள்ள மண் படிவுகளில் கரையாத உப்புகள் உள்ளதால் அவை மண்ணின் மேற்பரப்பில் வெண்ணிறரமாகப் படிந்திருக்கும்.  இத்தன்மையினை,
                        பைங்காய் நிள்ளிடம் ஓரி இய செங்காய்க்
                        கருங்களி ஈந்தின் வெண்புறக் களரிட
                        இடுநீறு ( நற். பா. 126) எனும் அடிகள்    
குறிப்பிடுகின்றன.  களர் நிலத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவை
                        சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
                        பிரவா வெண்ணெய் உருப்பு கிடந்தன்ன
                        உளர் ஏழு களரி ஓமை அம் காட்சி (நற். பா. 84:3)  
என நற்றிணை குறிப்பிடுகிறது.  இந்த உப்புப் படிவுகள் தயிர் உள்ள தாழியில் மத்திட்டுக் கடையும் போது திரண்டு வரும் வெண்ணெய் சிதரைப் போல் உள்ளதாக காட்சிப் படுத்துகிறது.
            களர்நிலம் உப்புப்படிவுகளின் காரணமாக வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது.  இத்தகைய தோற்றம் விலங்கின் தோலையுரித்து அதன் உள்பகுதி வெளியில் தெரியும்படி விரிந்து வைத்துள்ளதைப் போல் தோன்றுவதாக,
            அதளெறிந் தன்ன நெடு வெண் களர் ( புறநானூறு பா. 193)
என்று புறநானூறு உவமித்துள்ளது.
            ஆடைகளை வெளுக்கும் வண்ணார் ஆடைகளை வெளுப்பதற்கு உவர்மண் என்னும் மண்ணைப் பயன்படுத்துவர்.  இந்த உவர் மண்ணை அவர்கள் களர் நிலத்திலிருந்து எடுப்பர்.
                                    சிறியிலை வேலத்து
            ஊழுறு விளை நெற்றுதிரக், காழியர்
            கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்
            களரி பரந்த கல் நெடு மருங்கின் (அகநானூறு பா. 89:6-9)
என்னும் பாடலடிகள் இதனை விளக்குகின்றன.  களர் நிலத்தில் தோண்டப்பட்ட கூவலில்  நாளும் புலத்தி துணிகளை வெளுத்ததை,
            களர்ப்படு கூவற் தோண்டி நாளும்
            புலைத்தி சுழீ இய தூவெள் அறுவை ( புறநானூறு பா. 311:1-2)
எனும் அடிகள் சுட்டுகின்றன.  களர்நிலம் வேளாண்மை மேற்கொள்வதற்கு தகுதியற்றது.  ஆயினும் சில வகை தாவர இனங்கள் இம்மண்ணில் வளருகின்றன.  வெள்ளிய நிறத்தையுடைய களர்நிலத்தில் மழை பொழிந்ததால் பிடலமரம் துளிர்த்து அரும்புகள் அரும்பியது.  இதனை,
            வளமழை பொழிந்த வால் நிறக் களரி
            உளர்தரு தண்வெளி உறதொறும்  நிலவேனத்
            தொகுமுகை விரிந்த முடக்காற் விடவின்   (அகநானூறு பா.344:1-3)
என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.  களர் நிலத்தில் ஈந்தமரம் வளருவதைப் பெரும்பாணாற்றுப்படை,
            கலர் வளர் ஈந்தின் (பெரும்பாணாற்றுப்படைஅடி 130) என்று குறிக்கிறது.
களர் நிலத்தில் விளைந்த புளியங்கனியை உப்பு வணிகம் செய்யும் உமணர் சுவைத்து உண்ட செயலை நற்றிணை,
            முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
             ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
             களரி புளியிற் காய்பசி பெயர்ப்ப ( பதிற்றுப்பத்து. பா. 374:1-3)
            எனும் அடி சுட்டுகிறது.  இவ்வாறு சங்கப் புலவர்கள் களர் நிலத்தின் இயல்புகளை தம் பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

வெண்மணல் :
            மணல் என்பது மண்ணினின்று சிறிது வேறுபடுகிறது.  மண் என்பது மிகவும் செறிவுடையதாக இருக்கும். மணல் என்பது மண் துகள்களுக்கிடையே செறிவுத் தன்மையற்று நெருக்கம் இல்லாமல் இருப்பது ஆகும்.  செறிவுற்ற மண் துகள்களைக் கொண்டிருக்கும் மணற்பரப்புகள், ஆறுகள் உள்ள பகுதிகளில், கடற்கரையோர நிலப் பரப்பிலும் காணப்படுகின்றன.
ஆற்றங்கரைப் பகுதிகளில் உள்ள மணலைக் காட்டிலும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மணற்துகள்கள் மிக நுண்ணியதாக இருக்கும்.  இவ்வகையான மணற்பரப்பு நீரைத் தேக்கி வைக்காது உறிஞ்சும் தன்மையுடையது.  இத்தகைய மணல் வெளியை தமிழ் இலக்கியங்கள் நெய்தல் நிலமாகச் சுட்டுகின்றன.  தமிழகக் கடற்கரைப் பகுதிகள் வளைவு நெளிவுகள் குறைந்து நேராக அமைந்துள்ளன.  நாலாங்காற்பேரூழிக் (பிலைச்டோசன் ஊழியாகிய ) காலத்தால்தான் கண்டங்களும் கடல்களும் தற்போதுள்ள எல்லைகளுக்கு உட்பட்டன.  கடற்கரைகள் உயர்ந்து மணர் பரப்பாயின.  தமிழ் நாட்டின் தென் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் காணப்படும் மணல் மேடுகளும் நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.  தேரி என வழங்கப்படும் செம்மண் பரப்புகளும் இக்காலத்தில் அமைந்தவை என நம்பப்படுகின்றன.  (தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவின் தமிழ் நாட்டு வரலாறு தொல் பழங்காலம் ப. 21) வெண்மை நிறங்கொண்ட இம்மணற் பரப்பைப் பற்றி சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் பதிவு செய்துள்ளன.  கடற்கரைப் பகுதிகளில் மலையைப் போன்று மணல் குவிந்திருப்பதை,
            குன்றத் தன்ன குலவு மணல் (குறுந்தொகை 236)
என்ற அடி சுட்டுகிறது.  கடலின் அலைகள் மணலை அளிப்பதை நற்றிணை,
            முழங்கு திரைப் புதுமணல் அழுந்தக் கொடகும்
            வால் உளைப் பொலிந்த புரவித்
            தேர்     ( மேற்படி பா 135:7-8)
                                    பெருங்கடல்
            ஏறிதிரை கொழீ இய எக்கர்    ( நற்றிணை பா. 106:1-2)
            பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரை (நற் .பா. 35:1) என்று குறிப்பிடுகிறது.     
            கடற்கரைப் பகுதியில் உள்ள மனற்பரப்புகளின் மீது சில வகைத் தாவரங்கள், மரங்கள் வளர்கின்றன.  மணல் நிறைந்த பகுதிகளில் ஞாழல் மரங்கள் வளர்ந்திருந்தன.
            எக்கர் ஞாழல் செருந்தியொரு கமழ (ஐங்குறுநூறு பா. 141:1) என்று ஐங்குறுநூறு இதனைக் குறிக்கிறது. ஐங்குறுநூற்றின் 141-1 முதல் 15  வரையுள்ள பாடல்கள் மணற்பரப்பில் வளர்ந்திருந்த ஞாழல் மரங்களைப் பற்றிகே குறிப்பிடுகின்றன.
            நுண்மையான மணல் துகள்கள் காற்றின் மூலம் இடம் பெயர்ந்து ஓரிடத்தில் இருந்து வேறு ஓர் இடத்தில் சென்று குவியும்.  இவ்வாறு குவியும் மனற்பறப்பே மனற்குன்றுகளாகின்றன. சிறு தாவரங்கள் இல்லாத மணல் வெளிகளில் இத்தகைய நிகழ்வுகள் எளிதில் நடை பெறுகின்றன.
            அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையோடு
            எல்லியும் இரவும் எள்ளாது கல்லெனக்
            கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப
            நிலவுத் தவழ் மணற்கோடு ஏறிச் செலவர (நற்றிணை பா.163:2-5)
என்னும் அடிகள் தாழை மரங்கள் சூழ்ந்தத சோலையின் கண் உள்ள வெண்மணலை ஊதைக்காற்று இடம் பெயர செய்தமையும் மணற்குன்றுகள் நிறைந்து இருந்ததையும் குறிக்கின்றன.
            கடற்கரை அடுத்திருந்த மணல் நிறைந்த கொல்லைகளில் பனை மரங்கள் உயர்ந்து வளர்ந்து இருந்தன.
            பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
            கானல் ( நற் பா. 123:4-5) எனும் அடிகள் இதனைக் குறிப்பிடுகின்றன.
ஆற்றின் முகத்துவாரமாகிய கழி சூழ்ந்த காண்டவாயில் என்னும் ஊரில் உள்ள மணல் மேடுகளில் பனை மரங்கள் வளர்ந்திருந்தன. இதனை,
            கழிசூழ் படைப்பைக் காண்டவாயில்
            ஒலிகா வோலை முன்மிடை வேலிப்
            பெண்ணை இவரும் ஆங்கண்
            வென்மணற் படப்பை யெம் அழுந்கலூரே (நற் பா. 38:6-10)  எனும் அடிகள் சுட்டுகின்றன.  செறிய மனற்பரப்புகளில் ஞாழல் மரமும் புன்னைமரமும் பூத்துக் குலுங்கின.
            நறுவீ ஞாழல் மாமலர் தா அய்ப்
            புன்னை ததைந்த வெண்மணல்   (நற். பா. 96:1-2)
கடற்கரையின் அருகில் மணல் குன்று போல குவிந்திருந்தது.  
குன்றத்தின்ன குவவு  மணல் அடைகரை (குறுந் பா. 263:3) 
குறுங்கால் அன்னம் குவவு மணற் சேர்க்கும்nee
            கடல் சூழ் மண்புலம் ( குறுந்தொகை பா. 300:6-7)    
எனும் குறுந்தொகைப் பாடல்கள் இதனை விளக்குகின்றன.
            பரந்து விரிந்து கிடக்கும் மணல், பால் போல் வெண்ணிரமாகக் காட்சியளிக்கிறது.
            படுதிரை  கொழீ இய பால்நிற எக்கர் (நற். பா. 49:1)
கடற்துறையில் காணப்படும் வெள்ளிய மணலுக்கு சங்க இலக்கியங்களின் பல பாடல்கள் நிலவொளியை உவமையாகக் கூறியுள்ளன.
            நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
            எக்கர் தொறும் பறக்கும் துறை  (குறுந்தொகை பா. 320:3-4).
உவர்மண்:
            ஆறு கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதியில் உள்ள உவர் நிலத்தில் பரதவ மக்கள் உப்பு விளைவிப்பர்.  இதனை,
            உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
            ஓசை உமணர் வருபதம் நோக்கிக்
            கானலிட்ட கரவற் குப்பை ( நற் பா. 331:1-3) என்னும் நெய்தல் பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
            மழை பொழியாது வறட்சி ஏற்படுகின்ற காலத்தில் கழிமுகத்தில் உள்ள சேற்று நிலம் காய்ந்து உப்பு விளையும் தன்மையை,
            வறப்பின் மாநீர் முண்டகந் தாஅய்ச் சேறுபுலர்ந்து
            இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும் ( நற். பா. 311:3-4) என்னும் அடிகள் குறிக்கின்றன.  சங்க இலக்கியங்களில் உவர் மண் பற்றிய குறிப்பு குறைவாக உள்ளன.
            இறுகிய பாறைகளும் செறிந்த மண்ணும் நிறைந்த நிலத்தைப் பற்றிய அறிவைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர்.  பழந்தமிழரின் நிலப்பாகுபாடு அவர்களின் நிலவியல் அறிவிற்குச் சான்றாக அமைகிறது.  நான்கு வகையான நிலப்பாகுபாடு மட்டுமின்றி மண்வகைகள் மற்றும் அதன் வளம் ஆகியவற்றைப் பற்றியும் தெளிவாக அறிந்திருந்தனர்.  இதன் வழி பழந்தமிழர் பன்நெடுங்காலத்திற்கு முன்பே நிலத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி விட்டனர் என்பது புலனாகிறது.
            அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் பல பயிர்களின் விளைச்சல் மற்றும் புதுவகைப் பயிர்கள், புதுரகநெல், வெளிநாட்டுப் பயிர்வகைகள் ஆகியவற்றைப் பயிரிடத் தொடங்கியதால் விளைச்சல் அதிகமானதே தவிர, அது சில வருடங்களுக்கு மட்டுமே, மேலும் மண்ணுக்கும் , விவசாயிகளுக்கும் நிறையவே கேடுகளும் நிகழ்ந்தன.  இராசாயன உரங்கள், நீன உழவுக் கருவிகள், பூச்சிக் கொல்லிகள், ஆகியவற்றின் பயன்பட்டால் மண் வளம் சீர் குலைந்துள்ளது.  நெகிழி மற்றும் மக்காத பொருட்களை மண்ணில் போட்டு காற்று, நீர் ஆகியவை மண்ணுக்குள் புகாதவண்ணம் தடுத்து விடுகிறோம்.  மேலும், இராசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் காற்று, மண், நீர், ஆகியவை நச்சுத்தன்மையின் காரணமாக மாசடைந்துள்ளது.  சுற்றுச் சூழல் சீர் குலைந்துள்ளது.  இரசாயனம் கலந்த விளைபொருட்களால் மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டுள்ளது.

முடிவுரை:
            அறிவியல் வளர்ச்சி உச்ச எச்சத்தைக் கடந்த இந்த உலகத்தில் வேளாண்மையை (உழவு)  வீட்சி என்று சொல்வதில் நிரடல் ஏற்பட்டாலும் விரைவில் பெற்று விட வேண்டும் என்று எண்ணம்  மக்களை முப்போகம் விளையும் விளைச்சல் நிலங்களை, இயற்கை மறுசுழற்சியிளிருந்து மறுதலிப்பதன் விளைவு, விதவிதமான பூச்சிக் கொல்லி மருந்துகளும், இரசாயன உரங்களும் பயன்படுத்தியதால் மண்ணின் தன்மையைக் கெடுத்து விட்டது.
            முன்னோர்கள் நமக்கு அளித்த இயற்கையின் செழிப்பை நவயுக இந்தியா என்று மார் தட்டிக் கொள்ளுய்ம் கணினிமயமான இவ்வுலகில் நாம், இயற்கை  அன்னையை, காடுமலைகளை அழித்து கட்டடங்களாக உயர்த்தியது மட்டுமின்றி, நம் அன்றாட அத்தியாவசியமான உணவுப் பொருட்களில் ( தானியங்கள், காய்கறிகள்), இரசாயன மருந்துகள் கலந்திருப்பதால், எது தரமானது என்று அறிய முடியாமல் உண்டு வாழும் சூழல் உருவாகி இருக்கிறது.
            நம் பழமையான செழிப்பை மறுபடி பெற வேண்டுவது மிகவும் அவசியம் ஆகும்.  இத்தகைய பாரம்பரிய மண் வளத்தை மீட்டெடுக்க இளைய தலைமுறை செய்ய வேண்டியவவை,
            நீர்நிலைகளைப் பராமரித்தல் வேண்டும்,
            இரசாயன உரங்களைப் பயன் படுத்தக் கூடாது,
            நெகிழித் தன்மையுள்ள அனைத்துப் பொருட்களையும் மண்ணில்   
                      போடாதிருத்தல்,
கல்விப பாடத்திட்டங்களில் மண்வளம் பற்றியும், விவசாயம், தொடர்பான                                 
              அறிவையும் ஊட்டுதல்,
            இயற்கையான முறையில் மரம், செடி, கோடி, இவகைளை வளர்த்திடுதல்.
இவற்றையெல்லாம் மேற்கொண்டால்,
மோடி கூறும் பசுமை இந்தியா மட்டுமல்லாது, நம் பாரம்பரியமான வேளாண்மை இந்தியாவையும், மண் வளத்தையும் மீட்டெடுக்கலாம்.
                                                ------------------------------
           
   
                     

1 comment: