தமிழ் இலக்கியத்தில் தத்துவ சிந்ந்தனைகள்
24/02/2019
திரு. ஜெயசங்கர்,
பட்டதாரி தமிழ் ஆசிரியர்,
ஜெயகோபால்கரோடியா அரசுப் பள்ளி,
திருவற்றியூர், சென்னை.
முன்னுரை
உலகத்தோற்றத்தைப் பற்றி அவரவர் மதத்தைச்
சார்ந்து பல்வேறு கருத்துகள் அறியப்படுகின்றன. உலகத்தோற்றம், உயிர்தோற்றம்,
இனத்தோற்றம் என்ற படிநிலைகளைக் கடந்து அவை தோன்றிய முறையை ஆராய்ந்தால் நிலையான
முடிவை அறிந்துகொள்ள முடியாது. எனினும், உலகத்தையும் உயிர்களையும் படைத்தவன்
இறைவனே என்னும் தத்துவத்தை ஆராய்ந்தால் உலகத் தோற்றத்தையும் உயிர்தோற்றத்தையும்
பற்றிய சிந்தனைகள் நம் மனதில் விசாலமாய் தோன்றலாம்.
உலகம் தோன்றியது முதல் இன்னால் வரையிலும்
பல்வேறு மாற்றங்கள் வளர்ச்சி பாதையை நோக்கியுள்ளது. தோன்றிய பொருட்கள் ஒரு
காலக்கட்டத்தில் அழிந்துவிடும் என்பது உலக நியதி. இதை சற்றே விரிவாகக் கூறினால் உலகில்
தோன்றிய உயிர்கள் தனது சக்தி முடியும் காலத்தில் வேறொரு மாற்றத்தை நோக்கிச் செல்லுமே
தவிர நிரந்தரமாக அழிந்துவிடுவதில்லை.
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வினைக்கும்
மறுவினை உண்டு என்பதை தமிழ் இலக்கியம் தோன்றிய காலம் முதல் அறிவுறுத்தி வருகிறது.
இன்னிலைக்கு முதன்மைக் காரணம் உலகில் தோன்றிய மனித இனம் அறச்செயல்களை மேற்கொள்ள
வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனையோடு இலக்கியப் படைப்புகள் படைக்கப்படுகின்றன.
ஐம்புலன்களையும் பெற்று பகுத்தறிவோடு வாழும் மனித இனம் தலைச்சிறந்த இனமாக
உலகத்தில் கருதப்பட்டபோதிலும் அந்த இனத்தாரது நெறிகளை வரையறைப்படுத்தும் பண்பினை
இலக்கியங்கள் ஆற்றுகின்றன. இலக்கியம் சார்ந்த படைப்புகளில் காணப்படும் தத்துவங்கள்
மனித இனத்தை எவ்வாறு நெறிப்படுத்துகின்றன என்பதை இக்கட்டுரையில் விரிவாகக்
காண்போம்.
தத்துவக்கோட்பாடுகள்
வடமொழி இலக்கியம், தத்துவங்கள் 96 உள்ளன என்றும் அதில் முதன்மையானவை 36
தத்துவங்கள் என்றும் கூறுகிறது. ஆன்ம தத்துவங்கள் - 24, உடலின் வாசல்கள் – 9,
தாதுக்கள் – 7, மண்டலங்கள் – 3, குணங்கள் – 3, மலங்கள் – 3, வியாதிகள் – 3,
விகாரங்கள் – 8, ஆதாரங்கள் – 6, வாயுக்கள் – 10, நாடிகள் – 10, அவத்தைகள் – 5,
ஐவுடம்புகள் – 5 என வரையறுக்கப்பட்ட போதிலும் சிவ தத்துவங்களான நாதம், விந்து,
சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை என
ஐந்தும்; வித்யா தத்துவமான மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்ற ஏழும்; ஆன்ம தத்துவங்களான பஞ்சபூதம் -5, ஞானேந்திரியங்கள் -5, கர்மேந்திரியங்கள் -5, பிராணாதி வாயுக்கள் – 5, அந்தகரணங்கள் – 4, என இருபத்து நான்கும் முதன்மைத் தத்துவங்களாகக் கருதப்பட்டு மாந்தர் வாழ்வில் அறச்செயல்களை மேற்கொள்ள உதவுகின்றன. ஒரு ஆன்மாவை இறைவனிடத்தே கொண்டுசேர்க்கும் பணியை நாம் எடுக்கும் பிறவிகளும் பிறவிகளில் நாம் மேற்கொள்ளும் வினைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
ஐந்தும்; வித்யா தத்துவமான மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்ற ஏழும்; ஆன்ம தத்துவங்களான பஞ்சபூதம் -5, ஞானேந்திரியங்கள் -5, கர்மேந்திரியங்கள் -5, பிராணாதி வாயுக்கள் – 5, அந்தகரணங்கள் – 4, என இருபத்து நான்கும் முதன்மைத் தத்துவங்களாகக் கருதப்பட்டு மாந்தர் வாழ்வில் அறச்செயல்களை மேற்கொள்ள உதவுகின்றன. ஒரு ஆன்மாவை இறைவனிடத்தே கொண்டுசேர்க்கும் பணியை நாம் எடுக்கும் பிறவிகளும் பிறவிகளில் நாம் மேற்கொள்ளும் வினைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
வினைக்கோட்பாடு
உயிருள்ள ஒரு பொருள் தான் மேற்கொள்ளும் வினைக்கான மறுவினையை அதே
பிறவியிலும் அடைந்து விடலாம் அல்லது அடுத்துவரும் பிறவிகளிலும் அடைந்துவிடலாம் என
தத்துவங்கள் நமக்கு விளக்குகின்றன. விரிவாக ஆராய்ந்தால் நானேந்திரியங்கள் செய்யும்
செயலுக்கான வினை அதே பிறவியில் மறுவினையை அடைந்து விடுகின்றன. ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்னும் வரியின் மூலம் அறிவது யாதெனில்,
ஒவ்வொரு வினைக்கும் மறு வினை உண்டு என்பது ஆகும். ஆனால், இப்பாடலில் வாழ்க்க்கைத்
தத்துவச் சிந்தனை உரைக்கப்பட்டுள்ளதே தவிர இறைத் தத்துவத்தை விளக்கவில்லை. மேற்குறித்த
தத்துவச் சிந்தனையை தத்துவ நெறியில் எடுத்து ஆராய்ந்தால் நெருப்பை மெய் தீண்டும் போது நெருப்பால்
ஏற்படக்கூடிய அனுபவத்தை உடனடியாகப் பெற்றுவிடும். ஆனால், நெருப்பை மெய்
தீண்டுவதற்கு காரணமாக இருந்தவர் அதற்கான மறுவினையை சற்று தாமதமாக அடையக்கூடும்.
எனவே, நாம் செய்யும் வினை யாவும் ஊழ்வினை என்னும் பெயரிலும் விதி என்னும்
பெயரிலும் நம்மை பின்தோடர்ந்து வருகின்றன என்பதில் ஐயமில்லை.
நாம் செய்யும் வினைகள் பக்குவம்
அடைந்ததும் உரிய காலத்தில் நம்மை வந்து அடையும் என்பது உலகநியதி. “தர்மம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர்
காக்கும்” என்பது
திரையிலக்கியத்தில் படைக்கப்பட்ட வினைக்கோட்பாட்டின் தத்துவமாகும்.
பண்பட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள் யாவும் பருவ காலத்திற்கேற்ப பலன்
தருவது போல நாம் மேற்கொண்ட வினைகளும் நமக்கு பயன் அளிக்கும். விளக்கமாகக் கூறின் “கீரை விதைகளை ஒருவன் விதைத்தால் ஓரிரு
வாரங்களில் அருவடைச் செய்து விடலாம். மாறாக வாழை, தென்னை போன்றவற்றை விதைத்தால்
மரமாகி, காயாகி, கனியாகும் வரை (காலத்திற்கேற்ப) காத்திருக்க வேண்டியுள்ளது.” இதுப் போன்று நாம் செய்யும் வினைகள் நம்மை
அனுகாமல் இருக்க இயலாது. சான்றாக, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்பதை கோவலனின் வாழ்க்கை மூலமாக
விளக்கியுள்ளார்.
பிறவியை விரும்பாது இறையுணர்வையே உயிரெனக் கருதும் பட்டினத்தாரடிகள் “இருவினை வேண்டேன்” எனப்பாடியிருப்பதன் நோக்கம் யாதெனில்,
நல்வினைகளைச் செய்தால் அடுத்த பிறவியில் அந்த நன்மைகள் வந்து சேரும் என்றும் அதேப்
போன்று தீ வினை செய்தால் அதற்கான தண்டனையும் வந்து சேரும் என்பதையும் பட்டினத்தார்
அறிந்திருந்தார். எனவேதான் பட்டினத்தார் இருவினையும் வேண்டாம் என்கின்றார்.
இருவினைகளும் இறைவனை அடைவதற்கு தடையாக இருப்பதை உணர்ந்தே இவ்வாறு கூறுகின்றார்.
இறைவனிடத்தே மன்றாடி வேண்டினாலும், கண்ணீர் சிந்தினாலும், அவரவர் செய்த வினைப்
பலனை அடைந்தே ஆகவேண்டும்.
“பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்னும் குறளில் தொழில் எனச் சொல்லியிருப்பது
வினையைக் குறிக்கும் எனக் கருதலாம். தீவினைப் புரியும் மாந்தருக்கு தாம் செய்த வினை
தமக்கே வந்து சேரும் என்பதை வள்ளுவர் வழி விளக்க முற்பட்டால்
“பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
என்றக் குறளைச் சான்று காட்டலாம். இக்குறளில் பிற்பகல்
எனச் சொல்லிருப்பது உரியக் காலம் அல்லது மறுபிறவியைச் சுட்டும்.
தோற்றமும் அழிவும்
இந்த
உலகம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களினால் ஆனது.
இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு தொடர்பு உண்டு. ஒன்றில்லாமல் ஒன்று தனித்து இயங்கவோ,
இருக்கவோ முடியாது..
அணுக்களின் கூட்டுக் கலவையான சேர்மங்கள் யாவும்
அழியக் கூடியன. சூரியன், சந்திரன் மற்றப் பிற கோள்களும் அணுக்களின் சேர்மங்கள்
ஆகும். எனவே இவற்றிற்கு கட்டாயம் அழிவு உண்டு. பூமியில் தோன்றியக் கடைசி உயிரினம்
மனிதன் என்று கூறுவோரும் உளர். உலகில் தோன்றிய உயிர்கள் யாவும் அழிவு என்னும்
முடிவுக்கு உட்பட்டதாகும். “பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்” என்ற வரி மேற்குறித்த கருத்திற்குச் சான்றாய்
அமைகின்றன. ஒரு பிறவியில் விலங்காகப் பிறந்த உயிர் அது செய்யும் வினைக்கேற்ப
மறுபிறவியை அடைவது அனைவரும் அறிந்ததே. சுருங்கக்கூறின் உலகில் அனைத்தும் இரண்டெனப்
பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
பதி, பசு, பாசம் என்னும் இம்மூன்றும் தோற்றம் இல்லாத நிலையான
பொருட்களாகும். பதி என்பது இறைவனையும் பசு என்பது உயிரையும், பாசம் என்பது
மும்மலங்களையும் (மாயை, ஆனவம், கன்மம்) குறிக்கும். இதில் பதி என்பவர் அருநிலை, அருவுருவ நிலை, உருவ நிலை, ஒளி நிலை
என்னும் நான்கு நிலைகளில் ஒவ்வொரு மனிதனின் பக்திக்கேற்ப மாறுபட்டு காணப்படுகின்றது.
எனவே, இறைவனுக்கு தோற்றமும் அழிவும் இல்லை என்பதை தெளிவாக உணரமுடிகின்றது. உருவ
நிலையை ஒரு சமயத்தாரும், அருவுருவ நிலையை ஒரு சமயத்தாரும், உருவ நிலையை ஒரு
சமயத்தாரும் பின்பற்றி வருகின்றனர். மனிதர்கள் தனக்கு தீங்கு நேராதிருக்கவும்,
இன்பம் நிலைத்திருக்கவும் இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
பசு என்று அழைக்கப்படும் உயிரானது பாசம் என்னும் கயிற்றால் (மும்மலங்களால் வழி நடத்தப்பட்டு) கட்டப்பட்டு இறைவனை அடையமுடியாத நிலைக்கு
உட்படுத்தப்படுகிறது. இம்மூன்றில் மாயை என்னும் குணத்தை, உயிர் அளவிற்கு அதிகமாக
விரும்புவதால் பின்வரும் பிறவிகளில் வெவ்வேறு வடிவங்களை பெற வேண்டியுள்ளது. ஆசையே
துன்பத்திற்கு காரணம் என்னும் புத்தரது கோட்பாட்டை இங்கு ஆராய்ந்தால் மனதால்
செய்யக்கூடிய ஆசை, அழுக்காறு என்னும் இரு பாவங்களை தவிர்த்து வாழும் மனித இனம்
இறைவனை எளிதில் அடையமுடியும். ஆனவம், கன்மம் போன்ற மலங்கள் ஆசை என்னும்
குணத்திற்கு மாறானவை அல்ல. ஆசை அதிகரிக்கும்போது ஆனவமும், கன்மமும் நெறிபிழந்து
மனித இனத்தை சிதைத்து விடுகின்றன. ஆசை இல்லாத உயிர்கள் இல்லை என்ற போதிலும் தமிழ்
இலக்கியம் கூறும் தத்துவச் செய்திகளைக் கற்று பற்றற்ற வாழ்க்கையை மேற்கொள்வது
இக்காலத்திற்கு ஏற்றதல்ல.
சாத்வீகம், இராட்சசம், தாமசம்(மயக்கம்) ஆகிய மூன்று குணங்களும் மனித வாழ்வை
நெறிப்படுத்தும் நிலைக்கலன்களாக அமைகின்றன. இத்தகைய குணங்கள் எல்லோருக்கும்
பொதுவானதாய் இருந்தபோதிலும் எந்த குணம் அதீத ஆற்றலைப் பெற்றுள்ளதோ அதன் வழியே மனித
வாழ்க்கையும் அமையும். சாத்வீக குணம் அதிகமாயிருப்பின் நற்குணமும், இராட்சச குணம் அதிகமாயிருப்பின்
விடாமுயற்சியும், தாமச குணம் அதிகமாயிருப்பின் காம உணர்வும் ஒருவருக்குள்
நிறைந்திருக்கும். எனவேதான் ஒவ்வொரு மனிதனும் வேறுபட்ட நெறியில் வாழ்கின்ற
நிலையைக் காணமுடிகின்றது.
சமய நெறியில் தத்துவச் செய்திகள்
சமயம் மதம் என்னும் பெயரால் அழைக்கப்படுவதை
நாம் அறிவோம். இந்திய மெய்ஞானத்தில் மதம் என்பது கொள்கையைக் குறிக்கின்றது. ஆனால்
அது தற்போது வழிபாடு சார்ந்த நிலையாக மாறிவிட்டது. உலகில் உள்ள சமயங்களில் அதிக
அளவு மக்களால் பின்பற்றப்படும் இந்து சமயம் தத்துவ நெறியையும், இசுலாமிய சமயம்
மாற்க நெறியையும், கிறிஸ்த்துவ சமயம் கொள்கை நெறியையும் பின்பற்றுகின்றன. மற்ற
மதங்களான சீக்கியம், பௌத்தம், சமணம் ஆகியன குறைந்த அளவு மக்களால் பின்பற்றப்பட்டு
வருகின்றன. சமயங்களின் பெயர் வேறுபட்டிருந்தபோதிலும் எல்லா சமயங்களும் அறக்கோட்பாட்டையே
மையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பிரிவுகளும் உண்டு. சமய
வழக்கத்திற்கேற்ப சடங்குகள் மாறுபடுமே தவிர நம்பிக்கை மாறுபடுவதில்லை.
மணிமேகையில் சமயகணக்கர் தன் திறன் கேட்ட காதையில் தத்துவச்செய்திகள் இடம்
பெற்றுள்ளன. இக்காதையில் சாத்தனார் பத்து வகையான அளவையைப் பற்றிக் கூறுகின்றார். அவை,
காட்சி, கருத்து, உவமை, ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சி,
உள்ள நெறி.
மணிமேகலையில்
தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் தர்க்கவியல் பேசப்படுகிறது. உலகாயதவாதிகள்
காட்சி அளவை மட்டுமே ஏற்பர். சௌத்ராந்திகர் என்னும் தேராவாதப் பிரிவினரும் காட்சி
அளவையை மட்டுமே பின்பற்றினர். சௌத்ராந்திக யோகசாரர்களோ காட்சி அளவையோடு அனுமானம்
எனப்படும் கருத்தளவையும் ஏற்று வாழ்ந்தனர்.
“கண்கூடு அல்லது கருத்துஅளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயணும்இப் பிறப்பே
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல்”
கண்கூடாகப் பார்க்கப்படும் கட்சியளவை மட்டுமே
உண்மை, கருத்தால் அறிந்துக்கொள்வதாக கூறப்படும் அளவை என்பது நிரூபிக்கமுடியாமல்
அழிந்துவிடக்கூடியதாக இருக்கும். இம்மை எனப்படும் தற்போது எடுத்துள்ள பிறவி
மட்டுமே உண்மை. இப்பிறவியில் செய்கின்ற செயல்களுக்கான பயனும் இந்தப் பிறவியிலேயே
கிடைத்து விடும் என்று லோகாயதம் கூறுவதாக மணிமேகலை கூறுகிறது. உயிர் எவ்வாறு தோன்றுகின்றது
மறைகிறது என்பதை மணிமேகலை கீழ்வருமாறு கூறுகின்றது.
“தாதகிப் பூவும்
கட்டியும் இட்டு
மறரும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடு பூதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வுஅவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்”
தாதகிப் பூ என்பது அத்திபூவாகும். சுட்டி என்பது
கருப்பட்டி. இவை இரண்டுடன் வேறு சில பொருட்களையும் சேர்ப்பதால் மது உருவாகி அதனைக்
குடிப்பதால் களிப்பு பிறப்பதைப் போல பூதங்களின் சேர்க்கையால் உடலும் அதுசார்ந்த
உயிர் என்ற உணர்வும் தோன்றுகின்றன. இந்த உயிர் என்ற உணர்வானது அது சார்ந்துள்ள
பூதங்களின் அழிவால் அதாவது, அந்த உடலில் இந்த பூதங்களால் தோன்றிய சேர்க்கைப்
பொருட்களின் அழிவால் அந்ததந்த பூதங்கள் பிரிந்து அவை அவை அந்த இனத்தோடு சேரும்.
இதனால் உயிர் என்ற உணர்வும் பறையில்(மேளத்தில்) எழுந்த ஓர் ஓசையானது படிப்படியாக அடங்குவதைப்
போல மறைந்து போய்விடும் என்று கூறப்படுகிறது. மணிமேகலையில் கூறியுள்ளதைப் போன்று
நீலகேசியிலும் உயிர் தோன்றல் மற்றும் அழிவது பற்றி கூறப்பட்டுள்ளது.
“திண்ணென் தீநில
நீர்வளி ஆகாயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றம் சுவையினொடு ஊறுஒலி
யெண்ணுங் காலை இயைந்துழி எய்துமே”
நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய
ஐம்பூதங்களும் இணைந்ததால் கண், மூக்கு, நா, உடல், செவி ஆகிய ஐம்பூதங்களும் ,
பார்வைத் திறன், முகர்வுத் திறன், ருசியறியும் திறன், தொடு உணர்வுத் திறன்,
கேட்கும் திறன் ஆகியவை உடையதாய் இணைந்து உயிருள்ள உடலாய் தோன்றுகின்ரது. மேலும்,
“ஐந்துங் கூடி அறிவுஇன்பம் ஆதியாய்
வந்து தோன்றி மதுமயக் குஆற்றலின்
சிந்தி னால்அவை சென்றினஞ் சேருமே”
இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையே அறிவாகவும்,
இன்பம் முதலியனவாகவும் வந்து தோன்றி மது எவ்வாறு அறிவை மயக்கும் ஆற்றலைப்
பெறுகிறதோ அதுபோல ஆன்மா உயிர் என்ற மயக்கத்தை உருவாக்கி, இறுதி நாள் வரும்போது
ஐம்பூதங்களும் கெட்டு அழிகையில் அந்ததந்த பூதங்கள் அவற்றின் இனத்தைப் போய்
சேருகின்றன என்று நீலகேசியில் பிசாசகன் என்ற பூதவாதி நீலகேசியிடம் தனது மத
கேட்பாட்டை விளக்குகிறான். இதனைக் கேட்ட நீலகேசி ஆன்மா, நன்னெறி, நல்வினை, நற்பயன்
இவை அனைத்துமே இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று என்று கூறி சமண சமயத்தின்
அடிப்படையிலான அறக்கோட்பாட்பாடுகளை வாதிடுகிறாள் என்பதை கீழ்க்காணும் வரிகள் காட்டுகின்றன.
“பூத மல்லது பொய்பிற
நூலென்று
வாதஞ் செய்து வருந்தி முடிப்பதுஎன்
நாதன் நன்னெறி நல்வினை நற்பயன்
யாது மில்லை எனில்அஃது அவத்தமே”
இங்கு அனைத்து சமயங்களும் கூறும் கருத்துகள்
ஒன்றாகவே இருக்கின்றது. எனினும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அறனெறிக்கோட்பாடுகளை
மக்களுக்கு கூறுவதில் கற்பனைகள் மாறுபட்டு இருந்தனவே தவிர கருத்துகளில் எவ்வித
மாற்றமும் இல்லை.
ஆன்மாவின் அவஸ்தைகள்
உலகில் பிறப்பெடுத்த அனைத்து ஆன்மாக்களும் பதினெட்டு வகையான அவஸ்தைகளைப்
பெற்றாக வேண்டும் என்பது தத்துவ நெறியில் வாழும் மனிதர்களால் உணர்த்தப்பட்ட
செய்தியாகும். குறிப்பாக மனித ஆன்மா மேலவஸ்தை, கீழ் அவஸ்தை, ஆதார அவஸ்தை என்னும்
படிநிலைகளில் பதினெட்டு வகையான துன்பங்களைப் பெற வேண்டியுள்ளது. பாடான(கல்) நிலையில் இருக்கும் ஆன்மா மாயையை விரும்பி
ஏற்கும்போது கேவல நிலையை அடைந்து விடுகிறது.
1. கேவல நிலை – ஆணவத்தோடு மட்டும் ஆன்மா
இருக்கும். இதில் ஆன்மா சிறிதும் அறிவின்றிப் பருப்பொருள் போல் இருக்கும்,
2. சகல நிலை – மும்மலங்களும் சேர்ந்திருக்கும்
நிலை. இதில் ஆன்மா அறிவைச் சிறிது பெற்று உலகியலில் ஈடுபடும். இந்நிலையில்தான் வினைகளை
அது ஈட்டுதலும் அவற்றின் பயனை நுகர்தலும் நசைபெறுகிறது. இந்நிலையில் ஆன்மா
ஒன்றையறிதலும் அறிந்ததை மறத்தலும் ஆகிய இரண்டினையும் உடையது. அப்படிப்பட்ட
நினைப்பு மறத்தலை நூல்களில் சகலம், கேவலம் என்பர். இந்நிலையில் ஆன்மாவிற்கு வரும்
உறக்கம், விழிப்பு ஆகிய இரண்டும் முறையே கேவலம், சகலம் எனப்படும். இவற்றுள்
விழிப்பு நிலையை மகாசகலம் என்பர். காரிய அவத்தை ஐந்தனுள் சாக்கிரம் எனப்படும்
ஆன்மா, தூய்மைபெறும் நிலையை சுத்த நிலை என அழைப்பர். இதுவே ஆன்மாவின் இறுதிநிலை
ஆகும். இந்நிலை, இறுதியில் இறைவனை அடையக்கூடிய வழியைக்காட்டும்.
சாக்கிரநிலை
வடமொழியில் சாக்கிரநிலை என அழைக்கப்படுவதை தமிழில் நனவு நிலை, விழிப்பு
நிலை என்னும் பெயர்களில் சுட்டலாம். இந்நிலையில்தான் நானேந்திரியங்கள்,
கர்மேந்திரியங்கள், தசவாயுக்கள், கர்ணசுத்திகள், சப்த நாதி, வச நாதி, புருடன் ஆகிய
முப்பத்தைந்தும் செயல்படுகின்றன.
சொப்பனநிலை
இந்நிலையை கனவுநிலை எனவும் அழைக்கலாம். உறக்கத்தின் போது பொறிகள் ஐந்தும்
தனக்குரிய செயலை தவிர்த்து இயங்கும். கனவு நிலையைப் பற்றி திருக்குறளில்
இன்பத்துப்பாலில் செய்திகள் உள்ளன. எனினும் கனவுநிலை தத்துவங்களை ஆராய்ந்தால்
ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களே கனவாக வரும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
வாழ்வில் நடக்கப்போகின்ற செயல்களை கனவு நமக்கு உணர்த்துகின்றது என்ற கருத்தும்
உண்டு. கனவு நிலையின்போது புலன்களும் பொறிகளும் இயங்கும். மேலும், உறக்கத்தின்போது
சுழுத்தி நிலையில் (மயக்கநிலை) இதயம் மட்டுமே
இயங்கும். துரியநிலையில் (வாசிநிலை) புருடனும்,
சுவாசமும் தொப்பூழ் கமலத்தில் அமைந்திருக்கும். துரியாதீதம் நிலை இதனை பற்றற்ற
நிலை, உணர்வற்ற நிலை எனவும் அழைப்பர். இந்நிலையில் புருடன் மட்டும் இயங்குமே தவிர
மற்ற உறுப்புகளின் இயக்கம் இல்லாதிருக்கும்.
சித்தர்கள் கூறும் தத்துவச் செய்திகள்
இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிராத்தியாகாரம், தாரணை, தியானம்,
சமாதி ஆகிய அட்டாங்க யோகங்களைப் பெற்றவர்கள் சித்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
மேலும் சித்தர்கள் உடற்கூறு தத்துவங்களை உணர்ந்து பற்றற்ற வாழ்க்கையை மேற்கொள்ள
எல்லா தத்துவங்களையும் ஒரே நிலையில் கையாளுவர். சில பொறிகளை குறைத்து செயல்படுத்தினாலும் பல பொறிகளை அதிகமாக செயல்படுத்தினாலும் சித்தி
நிலையை அடைய இயலாது. உடற்கூறுகள் அனைத்தையும் சரிவர செயல்படுத்தினால்தான் பற்றற்ற
வாழ்வை மேற்கொள்ள முடியும். எனவே, தத்துவ நெறியில் ஒரு மனிதன் செயல்பட
வேண்டுமானால் அனுபவம் வாய்ந்த சித்தர்கள் வழியைப் பின்பற்றுதல் அவசியம்.
சித்தர்கள் வாழ்விற்குத் தேவையான நெறிமுறைகளை
அதிகப் பாடல்களில் கூறியுள்ளபோதிலும் தத்துவம் நிறைந்தக் கருத்துக்களைத்
திருமந்திரத்திலும், பட்டினத்தார், சிவவாக்கியார் பாடல்களிலும் காணலாம். சித்தர்களின்
தத்துவத் கோட்பாடுகள் பெரும்பாலும் ஆயுளை நீட்டிக்கும் வாழ்வியல் நெறிகளையும்,
அறக்கோட்பாடுகளையும் உரைக்கின்றனவே தவிர தத்துவ மார்கத்தை அதிக அளவில் எடுத்துக்
கூறவில்லை.
மனித மாண்புகளை மிக அழகாகவும், துல்லியமாகவும் உலகிற்கு உணர்த்தியவர்கள்
சித்தர்கள். மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மானுட வாழ்வியல் நெறிகளில்
ஊறித்திளைத்தனர். மனித உரிமைகளையும், மக்கள் பிரச்சனைகளையும் நன்றாக
அறிந்திருந்தனர். அன்பையும், அருளையும் போற்றினர். அத்துடன் யோகம், ஞானம் ஆகியவற்றின்
வழி இறைவனுடன் இரண்டறக்கலக்கும் தவ வலிமை பெற்றிருந்தனர். சித்தர்கள் மனித
உணர்வுகளும் ஆற்றலும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒருமித்த சிந்தனைகள் வளர வேண்டுமென
எண்ணியவர்கள். தமது சிந்தனைகளை சமயம் மற்றும் சமுதாய கோட்பாடுகளாக வடிவமைத்து
நெறிமுறைகளை அறிவுறுத்தினர்.
சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் விட்டொழித்து சிற்றின்ப ஆசைகளைத்
துறந்து, நிலையாமையை வலியுறுத்தினர்.
“சினம் அடங்கக்
கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே”
என்று தாயுமானவர் கூறுகின்றார். மேற்குறித்த
வரியில் அறிவு நிரம்பப்பெற்று, கோபத்தை அடக்கும் ஆற்றலையும் பெற்று வாழும்
மனிதர்களில் மனதை அடக்க தெரியாதோர்க்கு இறையருள் கிட்டாது என்னும் உண்மை
வெளிப்படுகிறது.
“அன்பும் சிவமும்
இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
அன்பும் சிவமும் வெவ்வேறானவை என்று
அறிவில்லாதவர்களே கூறுவர். அன்பே சிவம் என்பதை யாரும் அறியவில்லை. அன்பும் சிவமும்
ஒன்று என்பதை உணர்ந்த ஞானிகள் அன்பே வடிவமாகி,
சிவகதியில் மூழ்கியிருப்பர் என்று திருமூலர் கூறுகின்றார். அன்புடையவர் தம் பொருளை
மட்டுமின்றி இயன்றால் தம் உடலையும்
உயிரையும் கூட பிறருக்காக கொடுத்துவிடுவர் என்று திருவள்ளுவரும் கூறுகின்றார்.
“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே”
எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்றும்
பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு
ஆறுதல் கூறுவது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்று
திரூமூலர் கூறுகின்றார்.
கடவுளின் பெயரால் ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்க
சிவவாக்கியார் கீழ்வருமாறு கூறுகின்றார்.
“நட்ட கல்லைத்
தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”
சமூக அமைதிக்கும், சமத்துவத்திற்கும்,
மறுமலர்ச்சிக்கும் தடையாக இருப்பவை சாதி மத பேதங்களே. சாதீயச் சிந்தனைகள்
அகற்றப்பட்டால்தான் சமூகம் முன்னேற இயலும் என்பதை உணர்ந்த சித்தர்கள் சாதியால்,
மதத்தால் மனித இனம் பிரிக்கப்படுவதை வெறுத்தனர். பார்த்தால் பாவம், பட்டால் தீட்டு
என்கிற அவல நிலைகண்டு உள்ளம் கொதித்தனர். மனிதனை அடிமைப்படுத்தும் சாத்திரச்
சடங்குகள் யாவும் மனித உரிமையைப் பறிக்கும் உத்தியே தவிர வேறில்லை என்பதை,
“சாத்திரங்கள் ஓதுகின்ற
சட்டநாத பட்டரே
வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து தவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது? சத்தி முத்தி சித்தியே”
சித்தர்கள் மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்கள்.
பக்தி, மாயம், மந்திரம் என்கிற பெயரில் அவர்களை ஏமாற்றமுடியாது. திருமூலர்,
“பார்ப்பான் அகத்திலே
பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே”
மேற்குறித்த பாடலில் பசு என்பது உயிரையும்,
மேய்ப்பார் என்பது மனதையும் ஐந்து என்பது ஐம்புலன்களையும் சுட்டுகின்றன.
ஐம்புலன்களை மனதால் அடக்கி வாழத்தெரிந்தவனே இறைவன் அருளை இன்னதென்று உணர முடியும்
என திருமூலர் கூறுகின்றார்.
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க
அழுதிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே”
ஒருவன் இறந்தப்பின் ஊரிலுள்ளவர்களெல்லாம் ஒன்று
சேர்ந்து அழுது அவனுடைய பழைய பெயரை நீக்கிவிட்டு பிணம் என்னும் புதிய பெயரிட்டு,
சுடுகாட்டில் கொண்டு எரித்து/புதைத்து குளத்திலே நீராடியப்பின் இறந்தவரை மறந்து
வாழ்கின்றனர் என்னும் நிலையாமை செய்தியை திருமூலர் கூறுகின்றார்.
மதவாதிகளும், ஆத்திகர்களும் அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ள
மக்கள் நூறாண்டுகள் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால், நூற்றுக்கணக்கான,
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை. கற்பக
மூலிகைகளை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்
வாழமுடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும்.
வீடுபேறு அடைதல் பற்றிய கருத்துகள்
வீடுபேறு அல்லது மோட்சம் என்பது மனிதர்
வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் கூறுகிறது. அவையாதெனில்,
தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம், மற்றும் இறுதியாக வீடுபேறு
என்னும் மோட்சம். இதில் இறுதியாக கூறப்பட்ட மோட்சமடைதலை விதேக முக்தி என்றும்
அழைப்பர். இந்த இறுதி இலக்கான வீடுபேற்றுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு
முந்தைய பாதையான இல்லறம் அவசியமானது. ஏனெனில் இல்லறத்தில் கர்ம யோக வாழ்க்கையில்
ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்குத் தயாராகிறார். துறவு
வாழ்க்கையில் பக்குவப்பட்டு இறுதி இலக்கான வீடுபேறு என்னும் மறுபிறவி இல்லாத
நிலையான விதேக முக்தியை அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட
பாதை. ஆயினும் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே, விடுப்பட்ட நிலையினை அடைய
இயலுமென்பதும் நம்பிக்கை.
வீடு அல்லது வீடுபேறு என்பது இந்துக் கருத்துருவில் சொர்கம் புகுதல் என்று
கூறுவர். பொதுப்பயன்பாட்டில் வீடுதல் என்பது மரணித்தல் அல்லது அழித்தல்
எனப்பொருள்படும். சான்றாக, “கம்பராமாயணத்தில் சீதையைத் தேடி இலங்காபுரி வந்த அனுமன் தேடி இவ்வழி கண்பனேன்
தீருமென் சிறுமை மற்றிவ் வீடுவேன் இவ்விலங்கண் மேல் இலங்கையை வீட்டு என்கிறான்.”
வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம் பற்றிய செய்திகளை அளித்திருப்பதன் மூலம்
இல்லறம் மேற்கொள்பவர் துறவறம் பூண்டு வீடுபேறு அடையலாம் என்ற கருத்து தெரியவருகின்றது.
தமிழ் இலக்கியத்தில் பிரம்மச்சரியம் முதலாக சந்நியாசம் வரை நான்கு நிலையைப்
பகுத்துள்ளனர். அந்நிலையிலும் இல்லறம் வீடுபேறு அடைவதற்கான வழிமுறையைக்
காட்டுகின்றது என்ற கருத்தை அறியமுடிகின்றது.
வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளை நீதிநூல்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
இம்மையில் செய்த செயல்கள் அனைத்தும் மறுமையில் தொடரும் என்ற வினைக்கோட்பாட்டை
அறியாதோர் இலர். எனினும், அறச்செயல்களை அதிகம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே
நீதிநூல்கள் எழுதப்பட்டன. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாரதே’ எனக்கூறும் பகவத்கீதை கடமையை அறச்செயல் என
உணர்த்துகிறது.
இயற்கையோடு இணைந்த தமிழரது வாழ்வுமுறை பழி, பாவம், பகை, அச்சம்
ஆகியவற்றிற்கு அஞ்சியும் பக்தி இலக்கியம் வாயிலாக இறை தத்துவங்களை உணர்ந்தும்
செயல்பட வேண்டியது அவசியம்.
முடிவுரை
ஆன்மா அனுபவிக்கும் அவத்தைகளையும் அவத்தைகள் நேர்வதற்கான வினைக்கோட்பாடு
பற்றியும் பல்வேறு நூல்கள் செய்திகளைப் பகர்கின்றன. ஒருவருக்கு தெய்வீக அனுகூலம்
இருப்பினும் அவர் செய்த வினையே பின்தொடரும் என்ற உண்மையை அறியமுடிகின்றது. ஏனெனில்
விருப்பு வெறுப்பு அற்றவனாக இறைவன் இருப்பதால் ஒருவருக்கு நன்மையும், மற்றவருக்கு
தீமையும் இறைவன் அளிப்பதில்லை. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்னும் வரியை உணர்ந்தால் மேற்குறித்த உண்மை
நமக்கு புலப்படும். அதே சமயம் நற்செயல்களும், தீயசெயல்களும் உலகில் இரண்டறக்
கலந்திருப்பதால் இறைவனை பண்பில்லாதவன் என புறநானூறு விளக்குகின்றது. ஆனால்,
நற்செயலையும், தீயசெயலையும் ஒருவன் தன் வினையால் அனுபவிக்கின்றான் என்பது உண்மை.
இதனை, “தன் வினைத் தன்னைச்
சுடும்”என்னும் தொடர் வழி
அறியலாம். எனவே, இறைவனை அடைய பக்தி என்னும் நெறியில் செல்வதற்கு தத்துவங்கள் உணர்த்தும்
அறக்கோட்பாட்டு வழியே சென்றால் இறைவனை அடையலாம். பக்தி நெறியில் இறைவனை அடைதல்
என்பது “மரம் விட்டு மரம்
தாவும் தாய்க் குரங்கை அதன் குட்டி வயிற்றைப் பிடித்துக் கொண்டு தாவுதல் போன்றது” என்றும், தத்துவ நெறியில் இறைவனை அடைதல் என்பது
“பூனைக் குட்டியைத் தாய்பூனை கவ்விக் கொண்டு
செல்லுதல் போன்றது” என்றும் உவமைக் கூறுவர் தமிழரிஞர்கள். விரிவாகக் கூறின், தத்துவ நெறியைப்
பின்பற்றும் மாந்தரை இறைவனே தன்பால் ஈர்த்துக் கொள்வான் என்பது உண்மை. இத்தகைய
மாந்தரின் இறப்பைச் சமாதி அடைதல் என்னும் பொருளில் சுட்டலாம். மேற்குறித்த
தத்துவங்கள் தொண்ணூற்றாரும் இறைவனை விடுத்து ஆனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.
மேலும், ஆன்மாவின் அவத்தைகள் யாவும் சுத்த நிலையை அடைய தத்துவம் என்னும் ஒருவழி
பாதையைத் தேர்ந்தெடுத்து செல்வது சாலச்சிறந்தது. சிற்பத்தை செதுக்கும் உளி போல
தத்துவங்களை பயன்படுத்தினால் ஆன்மா சுத்தநிலையை
அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஆன்மா துன்பங்களை அனுபவிக்கிறது என்றெண்ணி தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ள
மனிதர்கள் எண்ணினாலும் உடலைவிட்டுப் பிரியும் உயிர் தனக்குரியத் துன்பங்களை
அனுபவிக்க வேறு உடலைத் தேடிக்கொள்ளுமேத் தவிர இறைவனடி சேராது என்றக் கருத்தும்
உண்டு. சான்றாக,
“பிறவிப் பெருங்கடல்
நீந்துவார் நீந்தாதார்
இறைவனடிச் சேரா தார்”
என்றக் குறளைக் காட்டலாம். எனவே எடுத்தப் பிறவியில் நல்வினைகளைப் புரிந்து
அடுத்தப் பிறவிக்குரிய பலனை அடைய தத்துவங்கள் கூறும் வழியில் வாழ முயல்வோமாக.
No comments:
Post a Comment