‘அகத்திணைக்
கூறுகள் வழி மனவள மேம்பாட்டுக் கல்வி உருவாக்கம்’ சில சிந்தனைகள்
16/06/2019
முனைவர் மு. முருகேசன்,
உதவிப் பேராசிரியர்,
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,
ஆத்தூர், சேலம் மாவட்டம்.
செல்பேசி: 9962445442.
மனித சமுதாயத்தின் இன்றைய போக்குகள்
மனித சமுதாயம் மரபுவழி வாழ்க்கைக் கூறுகளிலிருந்து
விரைவாக விலகிக்கொண்டிருக்கிறது.
அடிப்படைகளற்ற
நவீன செயலூக்கங்களில் ஈடுபட்டு படிப்படியாகத் தன் இயல்புகளை
இழந்துகொண்டிருக்கிறது.
தன்னியமான
சிந்தனையாற்றலுக்குச் சிறிதும் இடமில்லாத வகையில் முதலாளிய ஊடகங்கள் பரப்பும் நுகர்வு கலாச்சார அறிவைப்
பெருக்கிக்கொண்டிருக்கிறது.
சொத்துடமை
மோகத்தால் ஏற்படும் பற்றாக்குறைக்கு மக்கள்தொகைப் பெருக்கமே காரணம் என்ற தவறான
கற்பிதத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இயற்கையைப்
பயன்படுத்துவதற்கான கடந்தகால நெறிமுறைகளைப் புறந்தள்ளி அண்மைய அறிவியல்
கண்டுபிடிப்புகளைக் கொண்டு அதைச் சீரழிக்கும் போக்கை வளர்த்துக்கொண்டிருக்கிறது. .
உலகம்
தழுவிய பெருமுதலாளியம் தன்னலன்களுக்காகப் பொதுவளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்
ஆற்றலை இழந்து அதற்குத் துணைபோகிறது.
மனித
ஆற்றலும் உண்மையான அறிவுத்திறனும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது குறித்து
கவலைப்படாமல் அதுவே இயல்பு என்று எண்ணி ஏமார்ந்துகொண்டிருக்கிறது.
மனித
உறவுகளைப் பேணி உவகையுடனும் உயிர்ப்புடனும் வாழ்க்கை நடத்துவதற்குப் பதிலாக ஒரு
விட்டேற்றித்தனமான முறைமையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இத்தகைய
போக்குகளுக்கெல்லாம் முதன்மையான விடையம் நம்முடைய மனம்தான்.
மனத்தைப் பற்றிய அறியாமை
மனிதர்களுடைய அறியாமைகளிலேயே
முதன்மையானது அவர்கள் தங்கள் மனத்தின் முழு பரிமாணங்களையும் உணராமல் இருப்பதுதான்.
மனத்தின் ஆற்றலை அறிவதும் அதை வளர்ப்பதும் பயன்படுத்துவதும் மனிதர்களுக்கு மட்டுமே
உள்ள தனித்தன்மையாகும். அவர்கள் தங்கள் மனத்தின் ஆற்றலை அறிந்து அதைப்
பயன்படுத்தும் வலிமையைப் பெற்றுவிட்டால் ஒரு புதிய வாழ்க்கை பின்புலம் அமைவது
உறுதி.
மனத்தின் ஆற்றல்
நம்முடைய மனம் பன்முகத்தன்மை
கொண்டது. எல்லையற்ற ஆற்றலைக் கொண்டது. நம் ஒவ்வொருவரின் மனமும் ஒரு ஆய்வுக்கூடம்.
சிந்தனைக் களஞ்சியம். கருத்துக் கருவூலம். நம்பிக்கை ஆயுதம். ஆனால் நாம் அதனை அந்த
வகைகளில் எல்லாம் பயன்படுத்துவதில்லை.
போலச்செய்தல்
நாம் யாரோ ஒருவர் சொன்னதையே
சொல்லுதல்; யாரோ செய்ததையே செய்தல்; யாரோ நினைத்ததையே நினைத்தல்; யாரோ சென்ற
வழியிலேயே செல்லுதல் என்ற போலச்செய்தல் முறையிலேயே மனத்தைப் பழக்குகிறோம்.
இப்போக்கு எளிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றலாம். ஆனால், பயனற்றது; தீங்கு
தருவது; முன்னேற்றத்தைத் தடுப்பது; செயலூக்கத்தை மழுங்கடிப்பது.
மனமும் அறிவும்
இந்த இடத்தில் ஒரு கருத்தைத்
தெளிவுபடுத்திக்கொண்டு மேலே செல்வது அவசியம். மனம் என்பதும் அறிவு என்பதும் ஒன்றா?
வேறா? என்ற விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொதுவாக, மனிதனின் அக உணர்ச்சி
சார்ந்த இயல்புகளை மனம் என்றும் புற உலகு சார்ந்த திரட்சியை அறிவு என்றும் சொல்வது
வழக்கம். ஆனால் மனம், அறிவு இரண்டின் இயக்கமும் மூளையில்தான்இருக்கின்றன. அதாவது
மூளை இயங்காவிட்டால் மனமும் இயங்காது. அறிவும் இயங்காது.
ஒருவர் தன் மனவளத்தை
மேம்படுத்திக்கொள்ளாவிட்டால் அவர் தன் அறிவையும் நன்கு வளர்க்கவோ முழுமையாகப்
பயன்படுத்தவோ முடியாது. அதனால்தான் பெரும்பாலானோரால், அறிவியல் விஞ்ஞானிகளாகவும்
கலைஞர்களாகவும் தத்துவ மேதைகளாகவும் படைப்பாளிகளாகவும் சாதனையாளர்களாகவும்
துணிவும் பண்பும் கொண்ட மாந்தர்களாகவும் உருவாக முடியவில்லை.
மனவளம்
‘மனவளம்’ என்பது தற்போது யோகா
செய்தல் என்பது போன்ற சுருங்கிய பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இதன்
பொருள் மிகவும் விரிந்தது. ஒருவர் தன்னுடைய மனத்தின் ஆற்றலை உணர்ந்து அதைப்
பயன்படுத்துவதையே மனவளம் எனலாம். ஒரு மனிதர் தன்னளவிலும் தன் குடும்பத்துடனும் ஊருடனும்
நாட்டுடனும் உலகத்துடனும் இணைந்தும் வாழ்வதற்கேற்ப அவர் மனத்திற்குப்
பயிற்சியளிக்க வேண்டும். அவருடைய மனத்தை
வாழ்க்கைக்கு ஒவ்வாத புறச்சூழல்களால் பாதிக்கப்படாத வகையில் வலிமையாக்க
வேண்டும். குழந்தைப் பருவத்திலும் இளம் வயதிலும் மண வாழ்க்கையிலும் முதுமையிலும்
அவர் சந்திக்கும் சவால்களை முன்கூட்டியே உணர்த்தி அவற்றைச் சமாளிக்கும் மனப்பாங்கை
வளர்க்க வேண்டும். தோல்விக்கு அஞ்சாமல், துவலாமல் அதனை எதிர்த்து நின்று மீண்டும்
மீண்டும் முயலும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். புதிய புதிய வழிகளில் திறனை
வளர்ப்பதற்கான வாய்ப்புகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். ‘மனவளம்’ என்பதை
தனிமனிதருக்கானதாகக் கருதாமல் சமுதாயத்திற்கானதாகக் கருத வேண்டும்.
மனவளக் குறைபாடு
நம் சமுதாயத்திற்குப் போதிய
மனவளம் இல்லை. அதனால்தான் சிறு சிறு மன வருத்தங்களுக்கெல்லாம் பெருமளவில்
இழப்புகள் ஏற்படுகின்றன. இங்கு ஒரு சொல்லுக்கு இருக்கும் மதிப்புகூட ஒரு உயிருக்கு
இருப்பதில்லை. தன்னைச் சுட்டி சொல்லப்பட்ட சொல்லுக்கு அஞ்சி தற்கொலை
செய்துகொள்பவர்களைப் பார்த்தால் இந்த
உண்மை புரியும்.
இன்றைய கல்வி
நம்முடைய இன்றைய கல்வி முறை நம்மை
அகநிலையிலும் புற நிலையிலும் மேம்படுத்த போதுமானதாக இல்லை. உலக அளவில் எந்தத்
துறைசார்ந்த வல்லுநர்களின் பட்டியலிலும் நம்மவர்களின் பெயர்கள் அறிதாகவே உள்ளன.
‘சுந்தர்விச்சை’ போன்ற ஓரிரு அயல்நாடு வாழ் இந்தியர்களைக் காட்டி நாம் உலகப்பெருமை
தேடுகிறோம். நம் தலைமுறையின் நிலையே இது என்றால் அடுத்த தலைமுறையின் நிலை இதைவிட
மோசமானதாக உள்ளது. அனைத்துலக அளவில் நடைபெறும் திறனறித் தேர்வுகளில் முதல் நூறு
பேரில் ஒருவராகக்கூட நம் மாணவர்களால் வர முடிவதில்லை.
மனவளக் கல்வி
நம் சமுதாயத்தின் மனவளத்தை
மேம்படுத்துவதற்கு நமக்கு உள்ள ஒரே வாய்ப்பு கல்விதான். எனவே நம் கல்வி முறைகளில்
உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மனவளக் கல்வியை ஒரு கட்டாயப் பாடமாகச்
சேர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2016இல் கூட இதற்கான எந்த முயற்சியும்
இல்லை என்பதுதான் தற்போது நமக்கு உள்ள பெரிய சவால்.
மனவளக் கல்வி பாலியல் கல்விக்கு மாற்று
இன்றைய இளம் தலைமுறையினரின் மன
ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அவர்கள் தங்களுடைய- எதிர்ப்பாலினருடைய
உடலியல் மாற்றங்களை அறிந்து கொள்வதற்காகவும்
பள்ளி வகுப்புகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள்
போராடுகின்றனர். ஆனால் அது புனிதத்திற்கு எதிரானது என்று சொல்லி அதைத் தடுக்க மத
வாதிகள் கங்கணம் கட்டுகின்றனர். மேலும்,
பாலியல் கல்வி என்ற பெயரில்
தொகுக்கப்படும் பாடங்கள் உடலியல், உயிரியல், இனப்பெருக்கவியல் என்ற வகையிலேயே
உள்ளன. அவை குழந்தைகளையும் இளைஞர்களையும் வாழ்க்கைக்குத் தகுதிப்படுத்த போதுமானதாக
இல்லை. பருவ நிலைகளுக்கேற்ப உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கற்பிப்பதனால்
அவர்களின் மனம் பக்குவமடைந்துவிடுமா என்பதைச் சிந்திக்க வேண்டும். மேலும்
வாழ்க்கைச் சிக்கல்கள் என்பவை இனக்கவர்ச்சி சார்ந்தவைமட்டுமல்ல. அவை ஒரு சிறு கூறு
மட்டுமே. அதனால்தான் நம்முடைய
மாணவர்களுக்கு ‘பாலியல் கல்வி’ என்பதைவிட ‘மனவளக் கல்வி ‘ என்பதே ஏற்புடையதாக
இருக்கும். மனவளக் கல்வியை பாலியல் கல்வியின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும்
அதைத் தாண்டிய வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் செம்மைப்படுத்திக்கொள்ளும்
வகையிலும் அமைக்கலாம். மலேயா போன்ற
நாடுகளில்கூட ‘மனவளக் கல்வி’ என்ற பெயரில்தான் மாணவர்களுக்கான வாழ்க்கைக் கல்வி
கற்பிக்கப்படுகிறது.
மனவளக் கல்விக்கான பாடத் திட்டம்
மனவளக் கல்விக்கான பாடப்பகுதிகளை
மேலை நாட்டுச்சிந்தனை முறைகளிலிருந்து தொகுக்காமல் நம் தேசிய இனங்களின் மரபார்ந்த
அறிவுத் தொகுப்பிலிருந்து திரட்ட வேண்டும். நம் மாணவர்களுக்கான மனவளக்
கல்விக்குரிய தரவுகளை நம் அக மரபிலிருந்து தேட முடியும் என்பதே இக்கட்டுரையின்
கருதுகோள்.
செவ்வியல் பனுவல்களைப் படிக்கும் முறை
நம்முடைய செவ்வியல் பனுவல்களைப்
படிப்பதிலும் பொருள்கொள்வதிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பொதுவாக
அவற்றை நாம் ஒட்டுமொத்தமாகப் படிக்கவும்
ஒற்றைப் பொருண்மையில் விளக்கப்படுத்தவுமே பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால்
அவற்றைத் தனித்தனிக் கூறுகளாகப் படிக்கவேண்டும். மேலும் அவற்றிற்குப் பன்னோக்கு
நிலைகளில் பொருள் கோடல் நிகழ்த்த வேண்டும். அதாவது, சங்க அக இலக்கியங்களைக் காதல்
பற்றியவை என்றும் புற இலக்கியங்களைப் போர் பற்றியவை என்றும் ஒற்றைப்
பொருளுரைத்தலோடு நிறுத்திவிடாமல் அப்பாடல்களைத் தனித்தனியே படித்து ஒவ்வொன்றின்
பொருளையும் நோக்கினால் அவற்றில் வெவ்வேறு பரிமாணங்கள் ஊடாடுவதைக் காணலாம். பண்டைத்
தமிழர் காதல் உணர்வையும் வீரப் பண்பையும் மட்டும் போற்றவில்லை. அவர்கள் அறவியல்,
ஆட்சி இயல், இயற்கை இயல், ஈகை இயல், உலகியல், ஊழியல், கல்வி இயல், கலை இயல்,
தொழிலியல், மெய்யியல், வாழ்வியல், போர் எதிர்ப்பியல் என்று அனைத்துத் துறைகள்
குறித்தும் சிந்தித்துள்ளனர். ஒரு இனத்தின் பண்பாட்டு வளமே அவ்வினத்தின் மனவளம்
என்ற அடிப்படையில் நம்முடைய அறிவு மரபை. இன்றைய வாழ்வியல் சிக்கல்களுக்குத்
தீர்வாக அமையும் வகையில் பாடப்பொருளாக வடிவமைத்து மாணவர்களுக்குக் கற்பிக்க
வேண்டும். அது ஒரு தேர்வுக்கான பாடம் என்ற கண்ணோட்டத்தை மாற்றி வாழ்க்கைக்கான
அரிச்சுவடி என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
தொல்காப்பியர் காட்டும் காதல் வாழ்க்கை
தொல்காப்பியர் காட்டும் காதல்
வாழ்க்கையை இன்றைய இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதனை இன்றைய காதலுடன் ஒப்பிட்டுக் காட்டி அதன் மேன்மையை உணர்த்த
வேண்டும்.
அறிவும் உணர்ச்சியும் இணைந்த கலவை
தொல்காப்பியர் காட்டும் அன்றைய
காதல் வெறும் உணர்ச்சிகரமானது மட்டுமல்ல. உணர்வும் அறிவும் இணைந்தது.
தலைமக்களுக்கு உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறுப் புணர்ச்சியும் ஒருங்கே நிகழ்ந்தன.
தலைமக்களுக்கிடையே உயிருண்ணும் அளவிற்கு அன்பு வளர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டனர். ஒருவரின் குறை நிறைகளை மற்றவர் அறிந்துகொண்டனர்.
களவொழுக்க மாந்தர்கள்
தொல்காப்பியர் காட்டும் களவு
ஒழுக்கத்தில் பல மாந்தர்கள் இடம்பெறுகிறார்கள். அவர்கள் காதலை நெறிப்படுத்துகிறார்கள்.
குறிப்பாக, தோழி தலைமக்களின் காதலை அறிவுக்கண்கொண்டு ஆராய்கிறாள். தலைவனின் பண்பு
நலன்களைக் கண்டு தெளிகிறாள். தலைவனும் தலைவியும் தவறு செய்யுமிடத்தில் இருவரையும்
இடித்துரைக்கிறாள். இன்றைய காதலில் மூன்றாவது மனிதர்களுக்கு இடமிருப்பதில்லை.
அதனால்தான் அது உண்மையான காதலாகத் திகழ்ந்து இன்பமூட்டுவதில் பல தடைகள்
ஏற்படுகின்றன. இன்றைய காதலர் வாழ்வில் தோழியைப் போன்ற ஒரு பாத்திரத்திற்கு
இடமிருக்குமானால் காதலில் ஏற்படும் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
காதல் தோல்வியைத் தவிர்த்தல்
இன்றைய இளைஞர்கள் வாழ்வில் காதல் தோல்விகளும்
அதன் விளைவால் தற்கொலைகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. பழங்காலக் காதலிலும் தோல்வி
ஏற்படும் சூழல்கள் இருந்தன. ஆனால் அவர்கள் தற்கொலை செய்வதில்லை. மடலேறி தற்கொலை செய்துகொள்வதாக எச்சரிப்பார்கள்
அவ்வளவுதான். உடனே அவர்களின் காதல் நிறைவேறிவிடும். இன்றைய இளைஞர்களும் எச்சரிக்கை
விடுப்பார்களேயானால் அதைப் பெற்றோரால் அலட்சியம் செய்ய முடியாது. ஆணவக்கொலை
செய்யும் பெற்றோரைக் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை. பழங்காலத்தில் மடலேறும் உரிமை
பெண்களுக்கு இல்லையே என்ற கேள்வி எழலாம். ஆடவருக்கு உரிய இந்த வழக்கத்தைப் பெண்டீருக்கும்
விரிவுபடுத்தி பயன்படுத்த வேண்டியதுதான்.
உடன்போக்கு
அன்றைய சமுதாயத்தில்
உடன்போக்கிற்கு ஒரு மதிப்பு இருந்தது. யாரும் அதைக் குற்றமாகக் கருதவில்லை.
தலைமகள் தலைமகன் மீது நம்பிக்கை வைத்து அவனுடன் சேர்ந்து உடன்போக்கில் சென்றால்
அவர்களுக்குத் தலைமகன் வீட்டாரும் சமுதாயமும் இணைந்து சிறப்பாகத் திருமணம் செய்து
வைத்தனர். அத்திருமணங்கள் கொடுப்போரின்றி நடந்தாலும் குறையுடையவையாகப்
பார்க்கப்படவில்லை..
‘கொடுப்போர்
இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து
உடன் போகிய காலையான.’ தொல்பொருள் 2
சமுதாயத்தின் கடமை
காதலை வெற்றிபெறச் செய்து
காதலர்களை வாழ வைக்க வேண்டியது சமுதாயத்தின் இன்றியமையாத கடமையாகும். இதனைப்
பண்டைத் தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். களவொழுக்க மாந்தர்கள் இக்கடமையை
நிறைவேற்றினர். சான்றாக கண்டோரின் பணிகளைக் குறிப்பிடலாம். உடன்போக்கில் செல்லும் காதலர்களை
அங்கீகரிப்பவர்களாகவும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாகவும் திகழ்ந்தனர்.
அவர்களின் பயணத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகளைச் சுட்டிக்காட்டி அதற்குரிய தீர்வுகளையும் கூறினர். உடன்போக்கில்
சென்ற தலைமகளைத் தேடிச் செல்லும் செவிலித்தாயை ஆற்றுப்படுத்தினர்.
‘பொழுதும்
ஆறும் உட்கு வரத் தோன்றி
வழுவின்
ஆகிய குற்றம் காட்டலும்
ஊரது
சார்பும் செல்லும் தேயமும்
ஆர்வ
நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர்
பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்து
எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்
தாய் நிலை
கண்டு தடுப்பினும் விடுப்பினும்
சேய்
நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
கண்டோர்
மொழிதல் கண்டது என்ப’ தொல் அகம் . 43
இந்தப்
பண்புகள் இப்போது அழிந்துவிட்டன. இன்றைய சமுதாயம் உடன்போக்கில் செல்பவர்களைத்
தேடிப் பிடித்துப் பிரித்து வைப்பதையே வீரியமாகச் செய்கிறது.
குடும்ப வாழ்க்கை
தொல்காப்பியர் காட்டும் குடும்ப
வாழ்க்கையும் இன்றைய இளைஞர்களுக்கு இனிய இல்லற நெறியாக அமையும். காதலைப் போலவே,
கற்பு வாழ்க்கையும் நன்கு நடைபெறுவதற்கு கற்பு கால கூற்றுகளும் வாயில்களும் துணை
நின்றனர்.
தலை மகளுக்கு இல்லறத் தலைமை
புராதனப் பொது உடைமைச் சமுதாயத்தில்
கூட்டு வாழ்க்கைமுறை இருந்தது. அதற்குப் பெண் தலைமை வகித்தாள். அக்காலத்தில்
மக்கள் வாழ்க்கை சீராக நடைபெற்றதை வரலாற்றுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன.
தொல்காப்பியர் காலத்தில் நில உடைமைச் சமுதாய முறை வளர்ந்துவிட்டது.
இனக்குழுவிற்கும் பேரரசுக்கும் ஆண்கள் தலைமை வகிக்கின்றனர். ஆனால் தொல்காப்பியர்
காட்டும் தலைவன் தன் குடும்பத் தலைமையைத் தலைமகளிடம் ஒப்படைக்கிறான். மணமானவுடன்
அவளுடைய இல்லறப் பண்புகளைக் கண்ணுற்று வியந்து அதே பண்புகளுடன் இல்லறத்தை நடத்த
வேண்டும் என்று அவளை வேண்டுகிறான்.
‘பெற்ற
தேஎத்துப் பெருமையின் நிலைஇ
குற்றம்
சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்’ தொல் கற்பியல் 5.
அவளை
மனைவி என்று மட்டும் நினைக்காமல் தன் குடும்பத்தை நடத்தும் ஆளுமையாக எண்ணுகிறான்.
அவளுக்கு சான்றோருடனும் ஏனைய சமுதாயத்தினருடனும் பழகும் முறைகளைக் கற்பிக்கிறான்.
‘அந்தணர் திறத்தும்
சான்றோர் தேஎத்தும்
அந்தம் இல்
சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கம்
காட்டிய குறிப்பினும்’ தொல் கற்பியல்
5.
அவளும்
தன் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறாள்.
தொல்காப்பியர் அகம் புகும் வாயில்களின் மொழியில் தலைவியின்
மாட்சிமை பொருந்திய இல்லற இயல்புகளை விளக்குகிறார். தலைவி தன் உயிரைவிட இல்லறத்தை
மேலாகப் போற்றுபவள். தலைவன் மீது மிகுந்த அன்பு கொண்டவள். சான்றோர் கூறும் நல்லொழுக்கங்களைப்
பேணுபவள். பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுப்பவள். இன்சொற்களைப் பேசுபவள். பிறர்
அறியக்கூடாத இல்லத்தின் நிகழ்ச்சிகளை மறைப்பவள். குடும்பத்தில் பொருளாதாரம்,
மனத்துயரம் போன்ற சிக்கல்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் விருந்தினரைப்
போற்றுபவள். சுற்றத்தாரை ஓம்புபவள்.
இப்பண்புகளை வாயில்கள்,
‘கற்பும்
காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல் இயல்
பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து
புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும்
அன்ன கிழவோள் மாண்புகள்’ தொல் கற் 11.
என்று
தலைவனிடம் உரைக்கின்றனர்.
இதனால்
அவள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒரு மதிப்புமிக்க அங்கமாகிறாள்.
பாராட்டு மொழிதல்
இன்றைய குடும்பச்சிக்கல்களுக்குத்
தீர்வு காணும் உளவியல் மருத்துவர்களும் குடும்ப நல ஆலோசகர்களும் கணவன் மனைவியின்
சமையலை வாயாறப் பாராட்ட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு சமையலைப்
புகழ்வோரின் குடும்பங்களில் சிக்கல்கள் மிகவும் குறைவு என்பதும் மனைவியுடன்
சேர்ந்து வீட்டுச் சமையலில் ஈடுபடும் கணவன்மார்களின் குடும்பங்களில் சிக்கல்களே
எழுவதில்லை என்பதும் எதார்த்தங்கள். பழங்காலத் தலைவன் தன்மனைவியின் சமையலை
அமிழ்தத்தைவிட உயர்வாக இருப்பதாகப் போற்றுகிறான்.
‘ஏனது
சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர்
அமிழ்தம் புரையுமால் எமக்கு என
அடிசிலும்
பூவும் தொடுதற்கண்ணும்’ தொல் கற்பியல் 5.
எனத்
தலைவி சமைத்த உணவையும் அவள் சூடியுள்ள பூவையும் அவன் புகழ்கிறான். மேலும்,
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளின் அனைத்து செயல்களையும் பாராட்டுகிறான்.
அவனுடைய பாராட்டு மொழிகள் தலைவியின் கடமைகளை நன்கு நிறைவேற்றுவதற்கும் அவள் தலைவன்
மீது அன்பை வளர்ப்பதற்கும் காரணமாக அமைகின்றன.
பொருள் தேடல்
பண்டைய தலைவன் பெற்றோருக்குச்
சுமையாக இருக்கவில்லை. தனக்குத் திருமண வயது வந்ததும் தானே ஏதோ ஒரு தொழில் செய்து
பொருள் தேடி அதைக்கொண்டே தன் திருமணத்தை நடத்திக்கொண்டான். தன் இல்லறத்திற்குத்
தேவையான பொருளையும் அவனே ஈட்டிக்கொண்டான். ஆனால், அவன் பொருளைவிட தலைவியின் அன்பிற்கு முதன்மையளித்தான். மேலும்
அவன் பொருள் தேடுவதிலேயே எல்லாக் காலத்தையும் செலவிடவில்லை. குறிப்பிட்ட காலப்
பகுதியில் மட்டுமே பொருள் தேடச்சென்றான். எஞ்சிய காலத்தில் தன் மனைவியுடனும்
குழந்தைகளுடனும் இருந்து வாழ்க்கை நடத்தினான். தன் முதுமை வயதில் இன்னும் இன்னும்
பொருள் தேடும் ஆசையை விட்டுத் தேடிய பொருளைக் கொண்டு
‘ஏமம் சான்ற
மக்களொடு துவன்றி
அறம் புரி
சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது
பயிற்றல் இறந்ததன் பயன்.’ தொல் கற் 51
என்று
வாழ்ந்தான்.
தோழி, செவிலி ஆகியோரின் பங்கு
களவொழுக்கத்தி்ல் இன்றியமையாத பங்கு வகித்த தோழி
கற்பொழுக்கத்திலும் திறம்பட செயலாற்றுகிறாள்.
கற்பொழுக்கத்தில் ஈடுபட்டு
இல்லறம் நடத்தும் தலைமக்களுக்குத் தக்க அறிவுரைகளைக் கூறி நெறிப்படுத்தும் கடமையை
செவிலித்தாய் நிறைவேற்றுகிறாள். இக்காலத்தில் திருமணத்திற்குப் பின் தன்மகளின்
குடும்ப வாழ்வில் தலையிடும் உரிமை அவளுடைய தாய்க்குக்கூட இருப்பதில்லை.
குடும்ப ஆலோசகர்
இப்போதெல்லாம் குடும்ப மருத்துவர்
என்ற பதம் மதிப்புப் பெற்று வழங்குவதைக் காண்கிறோம். உடல் நலம் கருதி இந்த
ஏற்பாட்டை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் யாருடைய குடும்பத்திற்காவது குடும்ப
ஆலோசகர் இருக்கிறாரா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தொழில்ரீதியான உளவியல்
மருத்துவர்களையோ நெருங்கிய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ குடும்ப ஆலோசகர்களாக
ஏற்றுக்கொண்டு , எந்தச் சிக்கலானாலும் அவரிடம் தெரிவித்து அவருடைய அறிவுரைப்படி
நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பெரும்பாலான
சிக்கல்களை எளிதில் தீர்த்துக்கொள்ளலாம். பழந்தமிழரின் வாழ்வில் குடும்ப
ஆலோசகர்கள் இருந்தார்கள். அவர்கள் ‘அறிவர்’ எனப்பட்டனர்.
அறிவர்
சொல்படி தலைவனும் தலைவியும் கேட்டு நடந்தார்கள். எனவே அறிவர்கள் அவர்களைத்
தக்கவாறு இடித்துரைத்து அவரவர் நெறியிலிருந்து பிறழாமல் காத்தார்கள். தலைவனை,
இறந்த காலப் பெருமை கெடாதவாறும் நிகழ்காலத்தில் பழி நேராதவாறும் எதிர்காலத்தில்
புகழ் நிறையுமாறும் நடக்க வேண்டுமென அறிவுறுத்தினர். மேலும் தலைவனின் நற்பண்புகளைப் போற்றியும்
தீப்பண்புகளைக் கடிந்துரைத்தும் அவனுக்குக் கடிவாளமிட்டனர்.
‘இடித்து
வரை நிறுத்தலும் அவரது ஆகும்
கிழவனும்
கிழத்தியும் அவர் வரை நிற்றலின்.’ தொல்-கற்பியல் 14
‘கழிவினும்
நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள
நல்லவை
உரைத்தலும் அல்லவை கடிதலும்’ தொல்-கற்பியல் – 12.
பிற துறை வழிகாட்டல்கள்
மனிதன் காதல் வாழ்க்கையையும்
இல்லற வாழ்க்கையையும் கடந்து வேறு பல செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறான். சமூக உறவுகளை
வளர்த்தல். பொதுப் பணிகளை மேற்கொள்ளுதல். தொழிலில் தேர்ந்து திகழ்தல். கல்வி
கற்பித்தல். ஆட்சிஇயலில் பங்கேற்றல். கலைகளில் ஆர்வம் கொள்ளுதல். அறிவியல் துறைகளில்
சாதனை செய்தல் என்று பலவற்றைச் சுட்டலாம்.தமிழ் அக மரபுக் கூறுகளில் பலவற்றை
இத்துறைகளுக்கும் பயன்படுவனவாக விரிவுபடுத்திப் படிக்க முடியும்.
தவறுகளைத் திருத்துதல்
ஒருவர் இன்னொருவரின் தவறுகளைத்
திருத்துதல் என்பது மனித வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் நிகழும் செயலாகும்.
அவ்வாறு திருத்துவோர் பெரும்பாலும் வெகுளி மொழியிலேயே பிறரின் தவற்றைச் சுட்டிக்
காட்டுகிறார்கள். தவற்றைத் திருத்த வேண்டியவர்கள் தங்கள் மீது காட்டப்பட்ட
சினத்தைப் பொறுத்துக்கொள்வதில்லை . எனவே, அவர்கள் திருத்திக்கொள்வதற்கு மாறாக
தவற்றைச் சுட்டிக்காட்டியவர் மீது வெறுப்பையே வளர்க்கிறார்கள். இந்த முரண்பாடுகள்
கலையப்பட்டால்மட்டுமே தவறுகளைத் திருத்த முடியும். இதற்கு தொல்காப்பிய அக
மாந்தர்கள் ஒரு நெறியைக் கடைபிடித்துள்ளனர். தலைவனும் தலைவியும் நெறி
தவறும்போதெல்லாம் அவர்களுக்குச் சரியான நெறியைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும்
பொறுப்பை வாயில்கள் ஏற்றிருந்தனர். அவர்கள் தலைமக்களிடத்தில் பேசும்போது
எச்சூழலிலும் வெகுளியான சொற்களைப் பயன்படுத்த கூடாது. எப்போதும் மகிழ்ச்சி தரும்
சொற்களையே பேசவேண்டும். ஒருகால் அவர்கள் அன்பற்ற சொற்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால்
அதைச் சிறைப்புறமாகவே கூற வேண்டும். அதாவது மறைமுகமாக பிறரைச்சொல்வது போன்று சொல்ல
வேண்டும் என்ற நடைமுறையைக் கடைபிடித்தனர்.
‘எல்லா
வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய
மகிழ்ச்சிப் பொருள என்ப.’ தொல் கற் 37
‘அன்பு
தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறம்
குறித்தன்று என்மனார் புலவர்.’ தொல் கற் 38
நட்பின் கடமை
மனித குல வரலாற்றின் எல்லா
காலங்களிலும் நட்பிற்கு ஒரு தனி இடம் உண்டு. தற்போது அதிலும் ஒரு பெரும் சரிவு
ஏற்படுவதை அவதானிக்கலாம். தொல்காப்பியர்
பாங்கி, பாங்கன் ஆகிய அகமாந்தர்கள் வாயிலாக நண்பர்களுக்குரிய கடமை என்னவென்பதைத்
தெளிவாக உணர்த்துகிறார். தன்னுடன் பழகுபவர்கள் வாழ்க்கையில் எங்காவது திசை மாறும்
கட்டத்தில் அவர்களுடன் உரிமையுடன் எதிர் மொழியாடி அவர்களை நேர்வழிப்படுத்துவதுதான்
நண்பர்களின் முதன்மையான கடமை. தொல்காப்பியம், திருக்குறள் முதலிய பனுவல்கள் வழி இன்றைய இளைஞர்களுக்கு
நட்பின் இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும்.
எடுத்த செயலை முடித்தல்
இன்றைய இளைஞர்கள் பல்வேறு
செயல்களை முனைப்புடன் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களால் இறுதிவரை முயன்று அவற்றை
முடிக்க இயல்வதில்லை. அதற்கு ஆர்வம் குன்றல், பயிற்சி இன்மை, பொழுதுபோக்கு
சாதனங்களின் பெருக்கம், மனம் வேறு செயல்களுக்குத் தாவுதல், காதல் என்று பல
விடையங்கள் உள்ளன. தொல்காப்பியர் ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் இறுதிவரை நின்று
வெற்றி கண்ட பின்னரே வேறு செயலை மனம் நாட வேண்டும் என்கிறார். வினைமேல் செல்லும்
தலைவன் அவ்வினை முடியும்வரை தலைவி குறித்த நினைவைக்கூட வளர விடுவதில்லை. செயலை
வெற்றிகரமாக முடித்த பின்னரே தலைவியை மனம் நாட வேண்டும்.
‘கிழவி
நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக்
காலத்து விளங்கித் தோன்றும்’ தொல் கற் 45
இன்பம் என்பதன் பொருள்
துன்பத்திலிருந்து விடுபடுவதும்
இன்பத்தை நாடுவதுமே மனித வாழ்க்கையின் குறிக்கோளாக உள்ளது. ஆனால் எது இன்பம்? எது
துன்பம்? என்பதில் எல்லோருக்கும் போதிய தெளிவு இல்லை. அதனால்தான் இன்பத்தைப்
பெறமுயல்வோர் அதற்கான நெறிகளில் நிற்பதில்லை. ஒருவருடன் இணைந்து இன்பம் கொள்ள
நினைப்பவர்கள் அவரின் மன நிலையை அறியாமல் அவரை வலிதில் கொண்டு இன்பம் காண
முற்படுகின்றனர். இதனால் எந்தப் பயனும் கிடைப்பதில்லை. தொல்காப்பியர் எந்தச்
செயலிலும் மனம் பொருந்தி ஈடுபடுவோர் மட்டுமே இன்பம் காண முடியும் என்கிறார்.
‘இன்பம்
என்பது எல்லா உயிர்க்கும்
தான்அமர்ந்து
வரூஉம் மேவற்றாகும்.’ தொல் பொருள் 27.
தொகுப்புரை
இன்றைய
சமூகத்தின் இயற்கைக்கு மாறான போக்குகளுக்குக் காரணம் மனவளம் இன்மையே.
பள்ளிக்
குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைக் கற்பிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
பாலியல்
கல்விக்கு மாற்றாக மனவளக் கல்வி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட
வேண்டும்.
நம்
செவ்வியல் பனுவல்கள் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வு தேடும் நோக்கில்
பன்முகப்பார்வையில் படிக்கப்பட வேண்டும்.
ஒரு
இனத்தின் பண்பாட்டு வளமே அந்த இனத்தின் மனவளம் என்ற அடிப்படையில்
மனவளக்
கல்விக்கான பாடப்பொருளை நம் செவ்வியல் மரபிலிருந்து தொகுக்க முடியும்.
தொல்காப்பியர்
காட்டும் காதல் வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் இன்றைய இளைஞர்களுக்குக்
கற்பித்தால் அவர்கள் ஒரு செம்மாந்த வாழ்க்கையை வாழ்வதற்கான மனவளத்தைப்
பெறுவார்கள்.
இன்றைய
சமுதாயம் ஒவ்வொரு குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் இணைந்து ஒரு கூட்டுணர்வை
வளர்க்க வேண்டும்.
தொழில்
துறைகளில் ஈடுபடுவோருக்குத் துறை சார்ந்த கற்றல் அறிவைத் தாண்டி அறம் சார்ந்த ஒரு
செயலறிவுத் தேவைப்படுகிறது. ஏனென்றால் இவை அனைத்துமே ‘மனிதம்’ என்ற பண்பிற்குள்
அடங்குபவை.
வாழ்க்கையின்
அனைத்துக் கூறுகளிலும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் உள்ளன. அதற்கு வேண்டிய மனப்பயிற்சியை அளிப்பதற்கான கூறுகளை நம் அக
மரபிலிருந்து பெற முடியும்.
No comments:
Post a Comment