Friday, 19 May 2017

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள் - ஆய்வுக்கட்டுரை

(அந்தகக்கவிப் பேரவையின் எட்டாவது கூட்டத்தில்  (16/04/2017) படிக்கப்பட்டது)

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள்

முன்னுரை

மக்கள் கவிஞர் என்று தமிழறிந்த அனைவராலும் போற்றப்படுகின்ற தகுதியும், அருங்குணங்களும் நிரம்பப் செய்தவர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஓரிரு சொற்களில், சொற்றொடர்களில் மிகப்பெரிய உண்மைகளை, போதனைகளை அனைவர் மனதிலும் ஆழப்பதியும் வண்ணம் இக்கவிஞரின் திரை இசைப்பாடல்கள் அமைந்துள்ளன. இசையோடு கேட்டு மகிழ்வதற்கும் ஆழ்ந்து படித்து உணரும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.

வெல்லப்பிள்ளையாரில் எல்லாப்பகுதியுமே இனிப்பு என்பது போல் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் அவர்களின் அனைத்துப் பாடல்களுமே ஆழ்ந்த கருத்துகளையும் மிகுந்த எழுச்சியையும் கொண்டவையாக உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் அருணாசலம்பிள்ளை, விசாலாட்சியம்மாள் தம்பதியருக்கு 1930, ஏப்ரல் 13ஆம் நாள் நான்காவது செல்வமாகப் பிறந்தவர்.

கவிஞர் திரையுலகில் ஐந்து ஆண்டுகளே எழுதியிருப்பினும் மொத்தமாக 208 பாடல்களைப் பாடியவர். தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளும், பொதுவுடைமைக் கருத்துகளிலும் கவனம் செலுத்தியவர், தன் குருவாகப் பாரதிதாசனை ஏற்றுக்கொண்டவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சூழலில் மக்கள் நலனையே பெரிதும் போற்றிப் பாடல்கள் எழுதியமையால் மக்கள் கவிஞர் என்றழைக்கப்பட்டார்.

திரையுலகில் புகழ் பெற்றிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் இவருடைய பாடல்கள் இடம்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப் பெற்றது. கவிஞரின் சிந்தனைகள் வாழ்வியலை அடிப்படையகக் கொண்டிருப்பதனை இக்கட்டுரை விரித்துரைக்கிறது.

அறிவுரை

சிறு குழந்தைகளைப் பிறவிலேயே துணிச்சலோடு வளர்க்க வேண்டும்; சிந்திக்கும் திறனையும் வளர்க்கவேண்டும். தன்மான மிக்கவர்களாய் வாழவேண்டும் என்ற அறிவுரையைக் குழந்தையிலேயே வெளிப்படுத்த விழைகிறார்.


சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா நான்
சொல்லப்போகும் வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா!
என்று தொடங்கி தன்மான உணர்ச்சியுடைய மானமுள்ள தமிழனாக, மறத்தமிழனாக விளங்க வேண்டுமென்கிறார். இதனை,

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
(நீ மனதில் வையடா )
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலதுகையடா
(நீ வலது கையடா )
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
(நீ தொண்டு செய்யடா )
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழையபொய்யடா"
என்று தனியுடைமை நீங்கி
பொதுவுடைமைச் சிந்தனை பரவ வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார்.

பொதுவுடைமை நாட்டம் கொண்டது போல் பகுத்தறிவுச் சிந்தனையையும் தன்னுடைய ஒருபாடலிலேயே குறிப்பிடுகிறார்.

'வேப்பமரம் உச்சியில் நின்னு பேயெண்ணு ஆடுதுன்னு
விளையாடப்போகும் போது சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே

பகுத்தறிவுத் தாக்கத்தினால் வீர மிக்க தமிழனம், தமிழ் இன இளைஞர்கள் சோர்ந்து
விடக்கூடாது என்பதனை" வேலையற்ற வீணர்கள் என்ற செற்றொடரால் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ச்சிக்குப் பாதையமைக்கிறார். அரசிளங்குமரியில் இடம் பெற்ற இப்பாடல் 1961ஆம் ஆண்டு திரைப்படத்தில் இடம் பெற்றாலும் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பது மக்கள் கவிஞரின் பகுத்தறிவுச் சிந்தனையால் விளைந்த அறவுரையும் அறிவுரையுமாகும்.

குற்றம் நீக்குதல்

எதனையும் ஈர்க்கும் பருவம் இளமைப்பருவம். இப்பருவத்தில் நல்ல கருத்துகளைப் பதியமிட்டால் அது மனிதன் வாழ்வில் உயரே உயரே சென்றாலும் குற்றம் செய்வதிலிருந்து விலகிச் செல்ல வழியமைக்கும்.

திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
திறமை இருக்குது மறந்து விடாதே
சிந்தித்துப்பார்த்து செய்கையை மாத்து
சிறிசாயிருக்கையில் திருத்திக்கோ - தவறு
சிறிசாயிருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியம நடந்திருந்தா - அது
திரும்பவும் வராமல் பார்த்துக்கோ –

அடுத்தவர் பொருள்மீது ஆசை கொள்வது பாவம். வறுமை நிலையை நீக்கிக் கொள்ளவே அடுத்தவர் பொருள்மீது ஆசைப்படுதல் கூடாது; தவறுகள் செய்யலாம் சந்தர்ப்பச் சூழலால் அது தவறு என்றால் உடனே திருத்திக்கொள்வதே அறிவுடைமை என 1961 ஆம் ஆண்டு வெளிவந்த திருடாதே என்ற திரைப்படத்தின் பாடல் வழியே மக்கள் கவிஞர் குறிப்பிடுகிறார்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றும்
புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா" என்ற பாரதியின் பாடலையும், 'மெய் சொல்லல் நல்லதப்பா என்ற புரட்சிக்கவிஞரின் பாடலையும் உள்கட்டமைப்பாகவும் பட்டுக் கோட்டையார் பாடல் கொண்டுள்ளது.

முயற்சியே ஆக்கம்

ஆக்கமானது ஊக்கமுடையவனின் வீடு நோக்கிச் செல்லும். இதனையே கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டும் என்ற பழமொழியும் தெளிவுறுத்துகிறது. முயற்சியே வெற்றிக்கு வழியமைக்கும் . வெற்றியென்பது எளிதில் கிடைத்துவிடும் கடைச்சரக்கல்ல. உழைப்பே அதற்கு மூலதனமாகும் என்பதனை துங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் வழியே காட்டுகின்றார்.

தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே" என்று தம்பிகளுக்கு அறிவுரை வழங்கியவர், தூங்குவதால், சோம்பல் கொண்டு திரிவதால் எத்தகைய இடர்ப்பாடுகளை அடைவர் என்பதனையும் குறிப்பிடுகிறார்.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்" என்கிறார்.

வெற்றியடைய வேண்டுமெனில் உழைப்பு வேண்டுமென்கிறார். இதனை,

போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா என்று 1958 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடி மன்னனில் இவருடைய பாடல் இடம் பெற்று தமிழகப்பட்டிதொட்டியெல்லாம் எதிரொலித்து மக்கள் கவிஞர் என்ற பட்டத்தைக் கொடுத்தது.

விவசாயம் தழைத்திடல்

இந்தியாவில் எண்பது சதவீதம் பேர் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் விவசாயமாகிய பயிர்த்தொழிலையே நம்பி இருக்கிறார்கள். விவசாய நிலங்களில் தன்னுடைய இரத்ததை வியர்வையாக்கி பயிர் செய்பவர்கள தொழிலாளர்கள். அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுவது சிறுதொகை. அவர்களின் முழு உழைப்பும் உண்டு கொழுத்திடும் செல்வந்தர்களிடமே சேர்வது கண்டு மனம் கொதிக்கின்ற நிலையை நாடேடி மன்னன் திரைப்படத்திலேயே ஆண், பெண்கூற்றாக அமைத்துப் பாடலமைக்கிறார்.

விவசாயியின் செயல்,

சும்மா கிடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர்நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக்கட்டி
சம்பாப்பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
நெல்லுவெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு“ –

உழவர்களின் செயல்பாடு இவ்வகையில் உள்ள நிலையில் விளைச்சல் பெருகுகிறது. இதனைக் கண்ட பெண் எவ்வளவு விளைந்தும் நமக்குப் பயனில்லை என்கிறார்.

காடுவெளைஞ்சென்ன மச்சான் -நமக்கு
கையும் காலும்தான் மிச்சம் என்கிறார்"

காரணம் உழைப்பு முழுதும் செல்வந்தரால் உறிஞ்சப்படுவதுதான் என்ற அவலநிலையைக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

பெண்ணின் உள்ளத்தைப் புரிந்த ஆண்மகன் நம் உழைப்பு வீணாகாது, என்றாவது ஒருநாள் நமது எண்ணம் நிறைவேறும் என்கிறார்.

மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சி
பொன்னை எடுக்க கனிகள் செட்டி
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்டதுயரிது மாறும் - ரொம்ப
கிட்டநெருங்குது நேரம்

என்கிற வகையில் ஆணின் பாடல் அமைகிறது. பசியின் கொடுமை எத்தகையது என்பதனையும் அடுத்தப் பாடலில் சுட்டிக்காட்டுகின்றார்.

வாழை செழிக்குது சோலை தழைக்குது
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது
கூழைக்குடிக்குது நாளைக்கழிக்குது
ஓலைக் குடிசையில் ஒண்டிக்கிடக்குது"

என்று ஏழைகளின் வறுமைநிலையையும் எடுத்துரைப்பவர், இதற்கெல்லாம் விரைவில் விடைகிடைக்கும் என்னும் வகையில்,

நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம்பெறும் திட்டம்

என்னும் வகுத்துக் காட்டுகிறார்

உலகைத்திருத்துதல்

கள்ளம், கபடு, திருட்டு, புரட்டுகள் நிறைந்த இவ்வுலகம் திருந்திட வேண்டும் மென்றே கனவைக் கவிஞர் காணுகிறார்.

“குறுக்குவழியில் வாழ்வுதேடிடும்
குருட்டுஉலகமடா -இது
கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும்
திருட்டு உலகமடா -தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வின்
ஏந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமாடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா

என்று வாழும் வழிக்கு ஏற்ற வழி எது என்று எடுத்துரைக்கிறார்.

மனித வாழ்க்கை

மனித வாழ்க்கை நிலையற்றது. நிலையானது என எண்ணும் நெஞ்சம் திருந்திட தங்கப்பதுமை படத்தில் தத்துவக் கருத்துகளை உள்ளடக்கி மனிதன் மனிதனாக வாழ வழி வகை காணுகிறார்.

“மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்துபார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே"

ஆத்திரம் அறிவை மட்டுப்படுத்தி
சீரழிக்கும் என்ற வாழ்வியல் உண்மையை விளக்குகிறார்.

வெட்டிப்பேச்சு தவிர்த்தல்

வெறும் வார்த்தைகள் மட்டும் சோறு போடாது. வீண்பேச்சு தவிர்த்தல் வேண்டும். இதனை 1958ல் வெளிவந்த பதிபக்கதி பாடல் வழியே பொதுவுடைமைச் சிந்தனையை வளர்த்து தனிமனிதன் மேம்பட வழியமைக்கிறார்.

“இந்த...
திண்ணைப்பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நம்ம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்" என்கிறார்.

நிலையற்ற வாழ்க்கை

இவ்வுலகம் நிலையற்றது. நிலையானது என்று இருமாப்புடன் வாழ்வது
வீண்மடமை என்பதனை கற்புக்கரசி (1957) யில் வெளிப்படுத்துகிறார்.
“காயமே யிதுபொய்யடா - இதில்
கண்ணும் கருத்தும் வையடா
நோயும் நொடியும் வராமல்காத்து
நுட்பமாக உய்யடா!
ஆயுள் காலம் மனிதருக்கு
அமைப்பிலே ஒரு நூறடா!
அரையும் குறையும் போகாதவன்
அறிவும் செயலும் ஆமடா" என்கிறார்.

படிப்பின் அவசியம்

உலக இன்பதுன்பங்கள் ஆராய்ந்து செயல்பட அடிப்படையமைப்பது படிப்பாகும் என்பதனை 1960 ஆண்டு வெளியான சங்கிலித் தேவன் திரைப்படப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.

படிப்புத் தேவை அதோடு உழைப்பும் தேவை - முன்னேற
படிப்புத்தேவை அதோடு உழைப்பும் தேவை
உண்மைதெரியும் உலகம் தெரியும் படிப்பாலே - நம்
உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே"

என்று கல்வி ஒருவனை அனைத்து நிலையிலும் உயர்த்தும் என்பதனை வலியுறுத்துகிறார்.

நீதியின் குரல்

சாதிகள் சமுதாயத்தில் நீக்கப்பட வேண்டிய ஒன்று. சமுதாய வாழ்க்கையை, கூட்டு வாழ்க்கையும் சீர்குலைப்பது. எனவே, சாதியொழிய வேண்டும்மென்கிறார்.
இதனை 1959ஆம் ஆண்ட வெளிவந்த புதுமைப் பெண் படப்பாடல் மூலம் வழிக்காட்டுகிறார்.

நீதியின் வெற்றியடா சேரியின் வெற்றி - அதை
நிரந்தரமாக்குது பார் பொது ஜனசக்தி
ஜாதிகள் பேசி நம்மை தள்ளி வச்சி வாழ்ந்தவங்க
சாக்கடைப் பூச்சிகளாய் ஏழைகளை நினைச்சாங்க
தனக்கே ஊர்முழுதும் சொந்தமென்று வளைச்சவங்க
சட்டங்கள் மாறிவரும் நேரம் என்ன ஆனாங்க
எல்லாம் சரிசமமாப் போனாங்க" என்கிறார்.

மேலும்,
கும்பல் சேர்த்து வம்புவளர்த்து
குடும்பத்தைக் குலைக்குதுங்க - பெருங்
குழப்பமாகியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க" என்று மட்டமான பேச்சுகள் வாயைக் கெடுக்கும் என்பதனை 1985ல் வெளிவந்த மகனே கேள் திரைப்படப்பாடல் வழியே குறிப்பிடுகின்றனார்.

செய்யும் தொழிலே தெய்வம்

உழைக்காமல் ஊர்சுற்றித்திரியும் கோயில் மாடுகள் போல வாழ்வதால் பயனில்லை. ஒருவர் எத்தொழிலைச் செய்தாலும் கேவலம் இல்லை. உழைப்பே மனிதனை உயர்விக்கும். இதனை வலியுறுத்தும் வகையில் ஆளுக்கொரு வீடு படத்தில் (1960) ஒரு அற்புதமான தொழில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறார்.

செய்யுந்தொழிலே தெய்வம் - அந்த
திறமைதான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி!
பயிரை வளர்த்தல் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகளெல்லாம் விதையாகும் - தினம்
வேலையுண்டு குலமானமுண்டு - வரும்
காலமுண்டு அதை நம்பிடுவோம்" என்று வருங்கால வாழ்க்கை வளமான
வாழ்க்கையாக அமையும் என்று நம்பிக்கையூட்டுகிறார்.

உண்மை வெல்லும்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றார் பாரதியார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றொரு திரைப்படம் 1960 ஆம் ஆண்டு வெளியானது. அத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்,

உண்மையைச் சொன்னவனை உலகம் வெறுக்குமடா
உதவி செய்ய நினைத்தால் உள்ளதையும் பறிக்குமடா
உள்ளத்தைக் கல்லாக்கி ஊமைபோல் வாழ்ந்து விட்டால்
நல்லவனென்றுன்னை நடுவில் வைத்துபோற்றுமடா"

குன்றிலிட்ட விளக்காக விளங்காது ஆமைதன் கூட்டுக்குள் ஒடுங்குவது போல் வாழந்தால் நாடே போற்றும். இதனையே உலகம் விரும்புகிறது. நல்லவற்றிற்கும் நல்லவர்க்கும் இது காலமில்லை என்பதனை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.

காதல்

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தம் பாடல் வழி வெளிப்படுத்திய பட்டுக்கோட்டையார் காதல் பாடல்களின் ஊடாகவும் ஒரு நாகரீகத்தையும், கண்ணியத்தையம் கடைபிடித்தே வந்துள்ளார்.

வாடிக்கை மறந்ததும் ஏனோ என்ற கல்யாணப் பரிசு எனும் படத்தில் இடம் பெற்ற பாடலில் இந்த நாயகி நாயகனிடம் நான் கருங்கல்லு சிலையோ காய்மலர் கொடியோ வரம்பு மீறுதல் முறையோ” என்ற வரிகள் தமிழ்பண்பாட்டின் நாகரீகத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடைக் கட்டி ஆகும் எழிலோ என்ற பாடல் பட்டுக் கோட்டையாரின் கற்பனை திறத்திற்கு ஒரு சிறந்த சான்று.

ஆன்மீகம்

பகுத்தறிவு கொள்கை கொண்ட பட்டுக்கோட்டையார் ஆன்மீக பாடல்களை எழுதும் போது கூட சமூக பிரச்சனைகளையும், ஏழைகளின் அவலத்தையும் சேர்த்தே எழுதியுள்ளார்.

அம்பிகையே மாரியம்மா
உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா
இன்பம் இன்பம் என்ற சொல்லை எங்கள் காது கேட்டதுண்டு
எங்கள் வீட்டுப்பக்கம் எப்போதாவது வந்தது உண்டா சொல்லு




நிலையாமை

இந்த உலக வாழ்வு நிலை இல்லாதது இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் பணத்தின் பின்னாலும், பகட்டின் பின்னாலும் ஒடுகிறார்கள் என்பதனை

பொறக்கும் போது பொறந்த குணம் போக போக மாறுது என்ற பாடலில்

“வாழ்வின் கணக்கு புரியாம ஒன்னு காசைத் தேடி ஒடுது
ஆனா காதோரம் நரச்சமுடி கதை முடிவை காட்டுவது”
என்ற வரிகள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் உணர்ந்து கடைபிடிக்க வேண்டிய வரிகள்.

தொகுப்புரை

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல்கள் வழி வெளிப்படும் வாழ்வியல் சிந்தனைகளை தகுந்த ஆதாரங்களுடன் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. சமூக வாழ்வு, அக வாழ்வு, குழந்தைகள் பின்பற்ற வேண்டியவ வாழ்வியல் நெறிகள் வர்க்க ரீதியிலான முரண்பாடு ஆகியவற்றை பட்டுக்கோட்டையாரின் திரைப்பட பாடல்கள் வாயிலாக கொண்டு சேர்ப்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

ஆய்வுக்கு பயன்பட்ட நூல்கள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடல் தொகுப்பு
ஆசிரியர் பொன் செல்லமுத்து
மணிவாசகர் பதிப்பகம்.

வைரமுத்து வரை
முனைவர் பேராசிரியர் சண்முக சுந்தரம்
காவியா பதிப்பகம்.


     
க. சங்கர் எம் . ஏ .
பகுதி நேர ஆய்வாளர்
தமிழ்த்துறை
அரசினர் ஆடவர் கல்லுரி தன்னாட்சி

நந்தனம், சென்னை -35.

வானம் வசப்படும் - மாணவர் கட்டுரை

(அந்தகக்கவிப் பேரவையின் எட்டாவது கூட்டத்தில்  (16/04/2017) படிக்கப்பட்டது)

கு.பாரதி,
தமிழ்த்துறையில் இளங்கலை மூன்றாமாண்டு,
சோகா இகெதா  கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி. 

முன்னுரை:
நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள், முயற்சிகள், நேர்மையான உழைப்பு  மனோதிடம் இவை யாவும் வானத்தையே எட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படவேண்டும். இதனை பாரதியார்,

மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்படவேண்டும்’’ 

எனப் பாடியுள்ளார். இத்தகைய  வானகத்தையே தனது இலட்சியப் பாதையால் வசமாக்கிக்கொள்ளுதல்  பற்றி இக்கட்டுரையில்  காண்போம்.

வானம் வசப்படுவதற்கான வழிகள்:
நம் மனதில்  தோன்றும்  எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் என்றுமே புதுமைகளைப் படைத்துக்கொண்டே இருக்கவேண்டும். மனிதனின் மனதினை  மாற்றி சரியான  முறையில் கொண்டுச்செல்ல மதியாகிய  வெள்ளம் உள்ளத்தில் பெருக்கெடுக்க வேண்டும். கண்களில் எப்போதும் நேர்மையான  சிந்தையே  பிரகாசிக்க வேண்டும்.  பிறரிடம்  கருத்துக்களைப்  பகிர்ந்திட  கனிவான  சொற்களையே  பயன்படுத்திட  வேண்டும். இதையே  வள்ளுவர்,

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப்  பெறின்’’ .

என, முக மலர்ந்து இன்சொற்கள் கூறுதல் ஈகையைவிட நல்லதாகும் என  வள்ளுவர் கூறியுள்ளார். ஒரு செயலில் முழுமையான  வெற்றி  கிட்டுவதற்கு  தொடர்ந்து முயன்று அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால்  வானத்தையேவசப்படுத்தலாம். நம்மை  நாமே நெறிபடுத்தி   சரியான   பாதையில்  வழிநடத்திடும் பக்குவங்கள் நம்மிடையே தோன்றிட வேண்டும். நம்மால்  பிறருக்கு  முயன்றிடும் வகையில் பயனுள்ள செயல்பாடுகளை அளித்திட வேண்டும். அவ்வாறு  செய்யும்   செயல்கள் மேலாக  உயர்ந்து  செல்வதற்கு  நாம் துணிச்சலாக  எழுந்து   சரியான  வாய்ப்பினை  பயன்படுத்தி முன்வரல்   வேண்டும். 

இதனை வள்ளுவர்,

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்’’

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப்   பயன்படுத்திக்கொண்டு செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும் என வள்ளுவர்  குறிப்பிடுகிறார். நம்முடைய சிந்தனைகள் அனைவருக்கும்  பொருந்தும் வகையில்  மேலோங்கி சிந்திக்க  வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு  எண்ணங்களும்   உயர்வாக   சிந்திக்க நம்மிடையே  உந்துதல்கள் பிறக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால்  வானத்தை  வசப்படுத்தும்  அளவுக்கு  நம்மால்  உயர்ந்திட  முடியும்.

தனிமனிதபண்புகள்:
இந்த  உலகில்  அன்பு,   அறிவு, துணிவுபணிவுகனிவு, உண்மைதருமம்முயற்சி, உழைப்புஇலக்கு என இவை யாவையும்  சரியான  முறையில்   செலுத்தினால்  ஞாலம்  நம்   கையில். எனவே நம் எண்ணம் சிறந்த முறையில் தோன்றி அதனால் பிறக்கின்ற சொற்கள் பயனுள்ளதாய் வெளிப்பட்டுசெயல்பாடுகளாய்  அவை   உயர்ந்த நிலையில்   காணப்படவேண்டும்.

      விண்ணை நோக்கி பாய்ந்திட 
       விண்ணுலக  மனிதனாக மாறி
       வேண்டிய வானத்தை வசப்படுத்திட வேண்டும்

அதற்காக உலகத்தோடு போராட தயக்கத்தை முற்றிலுமாய் தகர்த்துவிட்டு   தைரியமாய் முன்வந்தால் வானளவு உயர்ந்துமுன்னேறி  செல்லலாம். தாய்மையின்   வடிவாக   உலகத்தை  மதித்து  அன்பான  உள்ளத்தோடு  அனைவரிடம்  பழகிட உலகத்தால்  போற்றப்படுகிற  புகழினை   அடையலாம்.  இதனை வள்ளுவர்,

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

என வலுயுறுத்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு தனிமனிதனும் சிறந்த பண்புகளைக்  கடைப்பிடிக்க  வேண்டும் .வாய்மையால் வளர்ந்து உலகத்தில் வான்மழையாக  வாய்மையினைப் பொழியவேண்டும். இந்த உலகில் வாழும் நாம் துணிவாக   எழுந்து சிகரத்தை அடைய ஓய்வில்லாமல் பயணித்துககொண்டே இருக்கவேண்டும்.

வானத்தை  வசப்படுத்தும்  இளையத் தலைமுறைக்குரியத்   தலைமைப்  பண்புகள்:
இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். எனவே இளைஞர்கள்   நினைத்தால் வானத்தையே வசப்படுத்தி விடலாம். இளைஞர்கள் தங்கள்   எதிர்காலத்தைக் குறித்துத் திட்டம் தீட்டிக்கொள்ளவேண்டும். அவர்கள் எதிர்காலம்   அவர்கள் நிர்ணயிப்பதே என்பதை சரியான முறையில் அதை தீர்மானிக்கவேண்டும். இளைஞர்கள் கல்வி, அறிவு, விடாமுயற்சி, துணிச்சல், சாதிக்க வேண்டும் என்கிற  இலட்சியக் குறிக்கோள், காலந்தாழ்த்தாமை, திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் தன்மை  போன்ற பல்வேறு குணங்களைப் பெற்றிருத்தல் அவசியமாகும். சாதிக்கும்  மனப்பான்மை  கொண்ட  இளைஞனுக்கு    எடுத்துக்கொண்ட   எச்செயலும்  வெற்றியை  ஈட்டித்தரும் .  இதனையே  நாலடியார்,

எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை

சாதனையாளர்கள் துன்பத்தால் வருந்திய காலத்திலும் செய்யத்தக்கனவற்றை  செய்து கொண்டே இருப்பர் என்பதனை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. .தலைமைப் பண்பினைக் கொண்டிருப்பவனிடம்  அறிவுத்திறனை  உள்ளுக்குள்ளேயே  அடக்கி  வைத்திருக்கும்  மனோதிடம்  காணப்படும்.
ஆற்றும் துணையும் அரிவினை உள்ளடக்கி
ஊக்கம்  உரையார்  உணர்வுடையார்  ஊக்கம் 
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு

என நாலடியார் மனோதிடம் கொண்டவர்கள் தங்களையும் தங்களைச்  சார்ந்தவர்களையும் வழிநடத்தும் இயல்புடையவர்கள் என்கிறது. இவையனைத்தையும் கொண்டு செயலாற்றும் திறன் பெற்றவன் வானத்தையே  வசப்படுத்தும் நிலையை  எய்திவிடுவான். மேலும் இளைஞர்களுக்கு   முன்மாதிரியாக  திகழும் வானத்தை  வசப்படுத்தியவர்களான  அப்துல்கலாம்நீல் ஆம்ஸ்ட்ராங், ஹெலன் கெல்லர், சுதந்திரப் போராட்ட வீரர்கள்  என இளைஞர்கள் இவர்களை நினைவில் கொள்ளவேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும்    சாதிப்பதற்கு  பல தடைகளைக் கடந்து, முன்னேறி வந்துள்ளனர். உதாரணமாக  முப்புலன் இழந்த ஹெலன் கெல்லர் தன்னிடம் இருந்த குறைகளை எண்ணாது   தன்னால் சாதிக்க முடியும் என்னும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், மனோதிடத்துடனும் பல வெற்றிகளை அடைந்து உயர்ந்த இடத்தைப்  பிடித்துள்ளார்.  அதுப்போல பல தடைகள் நம் முன்னால் வந்தாலும் அதை எதிர்த்து   சாதிக்கமுடியும் என்னும் தன்னம்பிக்கையுடன்  மனோதிடம் கொண்டுத்  தொடர்ந்து   செயல்பட்டு  உயர்ந்திட  வேண்டும். எனவே இத்தகையவரின் சாதிக்கவேண்டும்   என்ற தலைமைப் பண்பினையும் அவர்கள் அடைந்த உயர்ந்த நிலையினையும்    எண்ணி இளைஞர்கள் தங்கள் தலைமைப் பண்பையும் மனோதிடத்தையும்   வளர்த்து எதிர்காலத்தை நோக்கி துணிவுடன் செயல்பட்டால் அவர்கள் உயர்ந்த நிலையை அடைந்து வானத்தை வசப்படுத்த முடியும்.

புதுமைப்பெண்கள்:
பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் ஒவ்வொரு பெண்களும் வெகுண்டெழுந்தால்  நிச்சயமாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் வானம் வசப்படும்.

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கு பெண்
இளைப்பில்லைக் காண் என்று  கும்மியடி

என பெண்ணின் சிறப்பை பாரதி பாடியுள்ளார். அடுப்பூதும் பெண்களுக்கு   படிப்பெதற்கு  என்ற நிலைமாறி பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி    உயர்ந்து வருகின்றனர். சங்க காலம் தொட்டு இன்று வரை வானத்தை வசப்படுத்திய  சாதனைப் பெண்கள் பலருண்டு. சங்க காலத்தில்  பெண்கள் சுதந்திரத்துடன் செயல் பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு பல இலக்கியச்சான்றுகள் உள்ளன. பெண்கள்  போர்களப் பாசறையிலும் இருந்துள்ளனர் என்பதை,

குறுந்தொடி முன்கைக் கூந்தல் அம்சிறப்புயத்து
இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் 
விரவு வரிக்கச்சின் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ்சரையர் நெடுந்திரி கொளீஇக்
கையமை விளக்கும் நந்துதொறு மாட்ட

என முல்லைப்பாட்டு காட்டுவதிலிருந்து சங்ககாலப் பெண்கள் குடும்பப் பொறுப்போடு தொழிலறிவினைப்  பெற்று  குடும்பத்தைப் பேணியதோடு  போர்களம்  புகுந்து வாள் கொண்டு போரிடவும் செய்திருக்கின்றனர் என்பது  தெளிவடைகிறது. பெண்களுக்கு  மனஉறுதியும் சாதிக்கவேண்டும்  என்ற  எழுச்சியும், தைரியமும் மிக  அவசியம்.  அந்தப்படி ஜான்சிராணி இலக்குமிபாய், முத்துலட்சுமிரெட்டி, பிரதமர் இந்திரா, கல்பனா சாவ்லா, பி.டி.உஸா, சானியாமிர்ஸா, பி.வி.சிந்து என இவர்கள்    தன்னம்பிக்கையுடன் அறிவினை வளர்த்துக்கொண்டு சாதிக்கவேண்டும் என தனது இலட்சியங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இவ்வாறு  வானம் வசப்படவைத்த வீராங்கனைகளை முன் உதாரணமாக  வைத்து  ஒவ்வொரு  பெண்ணும் சாதிக்க வேண்டும் என்ற துணிவுடன் முன்வந்து  கல்வி, விளையாட்டு, அறிவியல் என பலதுறைகளில் தனது இலட்சியக்குறிக்கோளினை உறுதியாய்   பற்றிக்கொண்டுவிடாமுயற்சியுடன் செயல்பட்டால் ஒவ்வொரு பெண்களும் புதுமைப்பெண்களாய்  வானத்தை  வசப்படுத்தமுடியும் .

உந்துதலால் நல்லதையே சிந்திக்க வேண்டும்
       உண்மையாக செயல்தனையே  நடத்திடவும் வேண்டும்
அந்நியத்தை  அழித்திடவே அருமையாக உழைப்போம்
       அனுதினமும் சுறுசுறுப்பாய் அனுபவத்தைப் பெறுவோம்
கந்தகமாய் அறிவினையே ஈர்த்திடவும் செய்வோம்
       கடினமாகசெயல்களிலே ஈடுபாடு கொள்வோம்
சிந்தியவை வேர்வைதான் சிகரத்தை  அடைவோம்
       சீக்கிரமாய் பயணித்து வானத்தையே தொடுவோம்’.


வானம்  வசப்படாததற்கான  சமூகத்தடையும்  நீக்கும் வழிமுறைகளும்:
இன்றையச் சூழலில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு  வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இதனால் குழந்தைகளை கவனிக்கமுடியாத  நிலை, வாழ்வியல் விழுமியங்களை குழந்தைகளுக்குப் போதிக்க வீட்டில் யாரும் இல்லை, நண்பர்கள் உற்றார் உறவினருடன் கூடி வாழும் நிலை இல்லை ,இளைஞர்கள் நவீனத் தொழில்நுட்ப வசதிகளை தவறாகப் பயன்படுத்தி தங்கள் திறமையை வீணடித்தல். எ.கா mobile, internet போன்றவை. வீட்டிலும் வேலைச்செய்யும் இடத்திலும் பெண்களின்  உள்ளார்ந்த  திறமைகள் முடக்கப்படுதல் இவ்வாறு  பல  தடைகள்  உள்ளன .

நீக்கும்  வழிமுறைகள்:
குழந்தைகள், தாத்தா, பாட்டி என கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பயக்கும். வயதானவர் துணையுடன் இருந்தால் குழந்தைகள் ஒழுக்க நெறியுடன் கல்வி  பெறுவர். இளைஞர்கள் நேர மேலாண்மையைக் கருத்தில் கொள்ள ஆக்கப் பணிகளில் ஈடுபடவேண்டும். பெண்களின் சுமைகளை எல்லாவிடங்களிலும் பகிர்ந்துக்கொள்ளுதல் வேண்டும்.ஆண்  பெண் சரிநிகர் சமானம் என வலியுறுத்தி  இருவரும் விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை கொண்டிருத்தல் வேண்டும்.  நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு சரியான முறையில் பயன்படுத்தி சாதித்தல்  வேண்டும்.இவையே பல தடைகள்  வந்தாலும் வானம் வசப்பட  வழிவகுக்கும்.  

முடிவுரை:
பாரதியின்  வாக்குப்படி,
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்

என்ற கூற்றிற்கிணங்க ஒவ்வொருவரும் சிறந்த எண்ணம், துணிச்சல், மனோதிடம், சாதனை குணம், விடாமுயற்சி என்பவைகளைக் கைக்கொண்டால் வானம் அளவு உயர்ந்து  மண்ணுலகத்திலே விண்ணகத்தை வசப்படுத்தலாம்.

ஞானத்தைப் பெருக்கிடவே ஞாலத்தில் பிறந்தோம்
       ஞாயிற்றின்  ஒளியாக உலகெங்கும் சுடர்வோம்
ஈனத்தை ஒழித்திடவே இனமாக எழுவோம்
       இன்மையினை வெறுத்திடவே வன்மையினை விதைப்போம்
ஊனத்தை உடைத்திடவே ஊன்றுகோலாய் இருப்போம்
       உற்சாகஉள்ளத்தை உரிமையுடன்  பகிர்வோம்
வானவர்கள் வாழ்கின்ற உயரத்தை அடைவோம்

       வாழ்க்கையிலே வானத்தை  வசப்படுத்தி விடுவோம்’’ 

சக்திவேலும் பக்ருதீனும் - நூல் அறிமுகம்

(அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தில்  (18/12/2016) அறிமுகப்படுத்தப்பட்டது)

ஆசிரியர் குறிப்பு
இது சினிமாவிற்காக எழுதப்பட்ட கதையாகும்; உலகப்படங்களின் தோரணையில் இந்தக்கதையில் காட்சி நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த செலவில் இதை ஒரு தரமானத் திரைப்படமாக உருவாக்கிவிடலாம்.
ஆர்வமுள்ளவர்கள்
சிவசேகர்,
நாவலாசிரியர்,
9962416606

முகநூலிலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு:
தன் கண்களில் வெளிச்சம் இல்லாத பல பேரை உறுப்பினராகக் கொண்ட அந்தகக்கவி பேரவை இலக்கிய அமைப்பு என் மீது வெளிச்சத்தைப் பரப்பி என்னையும், என் படைப்பையும் அறிமுகப்படுத்தியதற்காக தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.


நூல் அறிமுகம்:
இந்தியா, பாகிஸ்தான் எல்லைச் சண்டையில், குண்டுக்காயம் அடைந்த மேஜரை கேம்பில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு, இராணுவ வீரன் சக்திவேல் தலையில் விடிகிறது.

சக்திவேல் மேஜரை தோளில் சுமந்து கொண்டு கேம்பை நோக்கி வேகநடை போடுகிறான். பயணம் நீள்கிறது. பாதை மாறுகிறது. பகைவர்களின் குண்டுகள் வேறு துரத்துகிறது.

களைப்படைகிறான் சக்திவேல். மேஜரை தனியேவிட்டு தான்மட்டும் தப்பிச் செல்ல எண்ணுகிறான். பிறகு அதுவும் தவறென்று நினைத்து, அவரை சுட்டுக் கொன்றுவிட தீர்மானிக்கிறான்.

அதை உணர்ந்துகொண்ட மேஜர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார்.

சக்திவேல் மேஜரின் முடிவால், அதிக வேதனை அடைகிறான். பின் மனதைத் தேற்றிக்கொண்டு கேம்பை நோக்கி நடக்கும்போது, வழியில் புதைந்திருந்த கண்ணி வெடியை மிதித்துவிட்டு, காலை எடுக்க முடியாமல் பயந்து நிற்கிறான்.

வெகுநேரம் வெடியின் மீது நின்று தாக்குப்பிடிக்கிறான். பின் இதில் எந்த பலனும் இல்லை என்று உணர்ந்து வெடியிலிருந்து காலை எடுத்து சாக முனைகிறான்.

அந்தக்கணம் பாகிஸ்தான் சிப்பாய் பக்ரூதீன் Hands-up என்று கூவி சக்திவேலை விட தன் துப்பாக்கியால் குறிவைக்கிறான்.

அப்போது சக்திவேல் பக்ரூதீனிடம் தான் கண்ணிவெடிமீது நிற்பதை கூறுகிறான். சக்தியின் நிலையைப் பார்த்து பக்ரூவிற்கு இரக்கம் பிறக்கிறது.

பக்ரூ தனது சாமர்த்தியத்தால் சக்திவேலை கண்ணிவெடியிலிருந்து காப்பாற்றுகிறான். அதனால் இருவரும் நண்பர்களாகின்றனர். காடுகளில் சுற்றி வருகின்றனர். அப்போது தனது இராணுவக்குழுவால் சக்திவேலும், பக்ரூதினும் கைது செய்யப்படுகின்றனர்.

எல்லைப்போர் முடிவுக்கு வருகிறது. அப்போது சக்திவேலின் இராணுவக்குழுவின் தலைவன் சர்மா சக்திவேலின் கையால் பக்ரூதீன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று ஆர்டர் போடுகிறான்.

சக்திவேல் சுடமறுக்கவே, பக்ரூதீனை சர்மா சுட்டுக்கொல்கிறான். பின் சக்திவேலையும் கொல்ல முயல்கிறான்.

அப்போது இடைப்புகுந்து தடுத்த அதிகாரியான இல்தாரை, சர்மாவை நிராயுதபாணியாக்குகிறான்.

சக்திவேல் அவன் முன் ஆயுதத்தை நீட்டி, பக்ரூவை கொலை செய்ததற்காக பயங்கரமாகத் திட்டுகிறான். சக்திவேல் சர்மாவை சுட்டுக்கொல்லட்டும் என்று அந்தக்குழு நினைக்கிறது.


ஆனால் சக்திவேல், தனக்கு உயிர்க்கொடுத்த பக்ரூ இல்லாத உலகத்தில், அவன் கொடுத்த உயிரோடு தான் வாழ மாட்டேன் என்று, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறான்.

முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும் - நூல் அறிமுகம்

(அந்தகக்கவிப் பேரவையின் நான்காம் கூட்டத்தில்  (27/11/2016) திருமதி. சரோஜா சகாதேவன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது)

நூல் அறிமுகம்:
அனைவருக்கும் வணக்கம்

அந்தகக்கவி பேரவையின் நோக்கம் இதன் செயல்பாடு ஆகியவற்றுக்காக முதலில் என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய புத்தக மதிப்புரையில் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போவது முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும்என்னும் வரலாற்று நாவல். இது குழந்தைகள் இலக்கியத்துக்கானது. இந்நூல் இரண்டு மையக்கருத்துகளைக் கொண்டது.

ஐந்து வயதில் தாயை இழந்து எட்டு வயதில் ஊருக்குள் ஏற்பட்ட தீ  விபத்தால் தன்னுடைய வீட்டையும் இழந்து உறவினர்களின் உதாசீனமும், வறுமையும் துரத்த தன் குடும்பத்தாரோடு ஊரைவிட்டு வெளியேறுகிறான். அடுத்த இருப்பிடம் தேடிப்புறப்படும் நேரத்தில் மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் சிறுவனின் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றுகிறது.

இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. அப்படி வர நேர்ந்தால் நான் ஓரு இன்ஜீனியர் துரையாக  கோட்டும் சூட்டும் அணிந்து தலையில் தொப்பி காலில் ஷீவுடன் ஜீப்பில்தான் ஊருக்குள் நுழைவேன்என்று உறுதி கொள்கிறான். பல்வேறு இடர்பாடுகளைக் களைந்து அந்த சிறுவனின் வைராக்கியம் நிறைவேறுகிறது.

அடுத்து, அச்சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அவனது ஆசிரியர் முட்டையை செக்குத்தாக வைத்து யானையே மிதித்தாலும் உடையாதுஎன்று கூறினார்.

ஆசிரியர் கூறியச் செய்தி  சிறுவனின் மூளையை முடுக்கி விடுகிறது. முட்டையின் பலத்துக்கான காரணம் எதுவாக இருக்க முடியும்?

தீவிரமாக யோசிக்கிறான். முட்டையின் ஓடா? இல்லை. காற்றறையா? இல்லை. உள் இருக்கும் திரவத்தின்  சக்தியா? அதுவும் இருக்காது.  அப்படியானால் முட்டையின் பலத்துக்கான காரணம் என்ன? தீவிரமாக நீண்ட நாட்கள் யோசித்துக்கொண்டே இருந்தான்.

தினம்  தினம் வீட்டில் உள்ள முட்டைகளை ஆசிரியர் கூறிய படி உள்ளங்கையில் செக்குத்தாக நிறுத்தி, உடைத்து உடைத்துப் பார்க்கிறான். கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான்.
முட்டையின் பலத்துக்கான காரணம் அதனுடைய வடிவ அமைப்புதான் என்று முடிவு செய்கிறான்.

முட்டையின் வடிவத்தைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காததால் முட்டையின் வடிவத்தை அதன்  வளைக்கோட்டைத்தானே கண்டுபிடிக்கிறான்.

பல  வருட உழைப்பின் பயனாக முட்டையின் வளைகோட்டைக் கணித ரீதியில் கண்டறிந்து அதற்கு எக்லிப்ஸ் (Egglipse) என்று பெயரிடுகிறான். மேலும் மேலும் ஆராய்ச்சி தொடர்ந்து முட்டையின் வளைகோடு குறித்த அவனது கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டைப் பெறுகிறது.

இவ்விரண்டு மையக்கருத்துகளையும் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் சிறுவன் ஊரைவிட்டு மாட்டு வண்டியில் வெளியேறுவதில் தொடங்கி அவனது வைராக்கியம் நிறைவேறும் விதமாக ஒரு இன்ஜீனியராக ஜீப்பில் அந்த ஊருக்குள் நுழைவதாக முடிகிறது.

                இந்நூல் சிறுவர்களுக்குத் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத உத்வேகத்தையும், உழைப்பின் மேன்மையையும் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் விதத்தையும் புதிய கண்டுபிடிப்புக்கானத் தேடலையும் உருவாக்கும் என்பதையும்  சந்தேகம் இல்லை.


                பெரியவர்கள்  இந்நூலை வாங்கிப் படிப்பதுடன் சிறுவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்தகக்கவிப் பேரவையின் ஒன்பதாவது கூட்டம் 28/05/2017

      அந்தகக்கவிப் பேரவையின் ஒன்பதாவது கூட்டம் 28/05/2017

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் ஒன்பதாம் மாத நிகழ்வு 28/05/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகர் இரண்டாம் தெருவில், பழைய எண் 19, புதிய எண் 44 உள்ள சத்ய சாயி கமிட்டி அரங்கில் நடைபெறும். ராயபேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். நிகழ்ச்சி மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: இராணிமேரிக் கல்லூரி வரலாற்றுத்துறையில் இளங்கலை மாணவி எம்.செல்வி அவர்கள் “ஊமைப்பெண்ணா உவமைப்பெண்ணா” என்ற தலைப்பில் கட்டுரை வழங்குகிறார்.

நூல் அறிமுகம்: உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில்  முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ந.தியாகு அவர்கள் மாக்ஸிம் கார்க்கி  எழுதிய “யான் பயின்ற பல்கலைக்கழகம்” என்ற நாவலினை அறிமுகம் செய்கிறார்.

ஆய்வுக்கட்டுரை: “தமிழ்மொழி வளர்ச்சியில் தொல்காப்பியத்தின் பங்கு (எழுத்து, சொல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு)” என்ற தலைப்பில் R.G.வில்வநாதன் அவர்கள் (முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக் கல்லூரி) தனது ஆய்வுக் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 25/05/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.
செயலாளர்
மு. ராமன்
9444367850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in/