Thursday, 25 October 2018

அந்தகக்கவிப் பேரவையின் 26ஆம் கூட்டம் 28/10/2018

தவிர்க்க முடியாத  காரணத்தால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்தகக்கவிப் பேரவையின் 26ஆம் கூட்டம் 28/10/2018


 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஆறாம் மாத நிகழ்வு 28/10/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“வள்ளலாரின் பண்முக ஆளுமை” திரு. சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

நூல் அறிமுகம்

“அண்டநூர் சுறா எழுதிய கொங்கை” திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை:

“திருக்குறளும் பொருளியளும்” திரு. மதன், இந்திய ஆட்சி பணி நாடுநர் (IAS aspirant),  சென்னை.

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 26/10/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஐப்பசி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சிவக்குமார்

9952987705

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

Tuesday, 25 September 2018

அந்தகக்கவிப் பேரவையின் 25ஆம் கூட்டம் 30/09/2018


அந்தகக்கவிப் பேரவையின் 25ஆம் கூட்டம் 30/09/2018


 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஐந்தாம் மாத நிகழ்வு 30/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, தமிழ்ச்சுவை,  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“பேதமை நீக்கிய பெரியார்” திரு. கி. சக்திவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

மாணவர் கட்டுரை:

“தொட்டனைத்தூறும் மணற்கேணி” செல்வி. பெ. மோ. பூஜா, முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

 

நூல் அறிமுகம்

“நகுலனின் நிழல்கள்” புதினம் திரு. ச. ரவிக்குமார், நிறுவனர்,வாசிப்போம் வலைப்பக்கம்.

ஆய்வுக்கட்டுரை:

“பசுமைப் போரும் நவீன தொழில்நுட்பமும்” திரு. சாமுவேல் முனைவர் பட்ட ஆய்வாளர், ஆங்கில துறை,   கிறித்தவக் கல்லூரி சென்னை.

 

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 28/09/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

புரட்டாசி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. கி. லட்சுமிநாராயணன்

9092961787

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

Monday, 24 September 2018

தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் வெளியீடு


தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் வெளியீடு


நெஞ்சார்ந்த நன்றி!

அந்தகக்கவிப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா 16/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  பேரவையின் செயலாளரும், மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியருமான மு. ராமன் அவர்கள் வரவேற்புரை வழங்க, பேரவையின் தலைவரும், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளருமான செ. பிரதீப் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

தெற்கு இரயில்வேவில் துணை முதன்மை பணியாளர் அலுவலராக பதவி வகிக்கும்  திருமிகு. தி.தே. தினகர் அவர்கள் தமிழ் வனம் (இரண்டாம் பகுதி) நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில் அந்தகக்கவி என்ற பெயர் தன் உள்ளத்தில் உரைந்து, நினைவில் வின்ற நிகழ்வை சிறப்பாக பகிர்ந்துக்கொண்டார். மேலும், பார்வையற்றோர் தம் துறைசார்ந்து மட்டும் நின்றுவிடாமல் தங்கள் ஆய்வு பரப்பை பல்துறையிலும் விரிவு செய்ய வேண்டும் என்று எடுத்துறைத்தார்.

சிறப்புமிக்க இருபெரும் கல்லூரிகளின் தமிழ்த்துறைத் தலைவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினர். சென்னைமாதனாங்குப்பத்தில் உள்ள சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சே. கண்மணி அவர்கள் தம் உரையில் தமிழ் ஆர்வத்தைத் தம்முள் விதைத்து தமிழைக் கற்கச் செய்த தன் தந்தையை நினைவுக்கூர்ந்து, தமிழால் தாம் பெற்றப் பேற்றினையும், தமிழ்ப் படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்றும் அரங்கிற்கு அறிவுருத்தி இடம் அமர்ந்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.முருகன் அவர்கள் பேசுகயில் தமிழ் படித்ததால் தான் இப்பொழுது இருக்கும் நிலையையும், தன்னோடு படித்த சக நண்பர்களின் தற்போதய நிலையையும் விளக்கி தமிழின் பெருமையை அரங்கிற்கு உணர்த்தினார். தமிழை விரும்பிப் படித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவது உறுதி என்பதை பல உதாரணங்கள் வழி விளக்கினார். தமிழ் வனம் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றிருக்கும்  கட்டுரைகளின் தலைப்பு  குறித்தும், ஆய்வாளர்களின் உழைப்பு, தேடல் குறித்தும் வியந்து பாராட்டினார். விழாவில் கலை நிகழ்ச்சி வழங்க இருந்த மாணவர்களுக்கு இராமானுஜர் குறித்த புத்தகத்தை நினைவாக வழங்கி ஊக்கப்படுத்தினார். பேரவையின் செயல்பாடுகளை எண்ணி மகிழ்ந்து பேரவையினருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராக பணிப் புரியும் முனைவர் இரா. பசுபதி அவர்கள் தம் வாழ்த்துரையில், தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் குறித்தும், அதன் பெயர் பொருத்தம் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார். சவால் நிறைந்த இன்றைய உலகில் பார்வையற்றோர் கணினி, ஆண்டிராய்டு செல்பேசி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கற்பதன் அவசியத்தையும், அதன் தேவைகளையும் எடுத்துரைத்தார்.

ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷனின் தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர் திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள் நூல் குறித்து வியந்து மகிழ்ந்து பேசினார். பார்வையற்றோர் முன்னேற்றத்திற்காக தன் இறுதி மூச்சு உள்ளவரைப் பணியாற்றுவேன் என்று சொல்லி, பேரவைக்கு வாழ்த்துத் தெரிவித்து விடைப்பெற்றார்.

நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து சோகா இகெதா கலைமற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்வியைப் பயிலும் பார்வையுள்ள மாணாக்கியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழைப் போற்றும் பாடல், நாட்டுப்புற பாடலுக்கு நாட்டியம், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம் என அரங்கம் கலைக்கட்டியது. இயல் இசை நாடகம் என தங்கள் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்திய மாணாக்கியருக்கு, தமிழ் ஆர்வலரும், இந்தியன் வங்கி அம்பத்தூர் கிளையின் முதன்மை மேலாளருமான  திரு. அமீருல்லா ஜவஹிர் அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

பிற்பகல் 02:30 மணி அளவில் சமுதாயக் கருத்துகளை அதிகம் வலியுறுத்திய கவிஞர் மகாகவியே! புரட்சிக்கவியே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் (பணி நிறைவு) முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் நடுவராக பங்கேற்று சிறப்பித்தார்.

மகாகவியே என்ற அணியில், செல்வி. கு. பாரதி, (முதுகலைத் தமிழ், இரண்டாம் ஆண்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.) திரு. சு. செல்வமணி, (நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.) திரு. கு. ராமலிங்கம், (பட்டதாரி தமிழ் ஆசிரியர், பதிப்பகச் செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி,  கோடம்பாக்கம், சென்னை.) திரு. தி. மாரிச்செல்வம், (முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர், சி.ச.சுப்பைய்யா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.).

புரட்சிக்கவியே என்ற அணியில், செல்வி. பெ. மோ. பூஜா, (முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.) திரு. கி. லட்சுமிநாராயணன், (நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.) திரு. இரா. பாரதிராஜா, (பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  காட்டுமன்னார்கோயில், கடலூர்.) திரு. இரா. சின்னதுரை, (பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,  க.பரமத்தி, கரூர்.).

இரு அணியினரும் கவிஞர் வழி நின்று தங்கள் கருத்துக்களை பாக்களால் வாதிட்டு வலியுறுத்தி அணிக்கு வலு சேர்த்தனர். பேச்சாளர்களின் கருத்துக்களை நன்கு ஆராய்ந்த நடுவர் அவர்கள் செய்திகளைத் தொகுத்து கூறி, மகாகவி சொன்னான், புரட்சிக்கவி செய்தான்! என்று சொல்லி தம் தீர்ப்பினை வழங்கினார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற கூட்டங்களில் கட்டுரை வாசித்த கட்டுரையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் திருமிகு. தி.தே. தினகர் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். ஒலி ஒளி கலைஞர், புகைப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் அன்பளிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  பேரவையின் நிறுவன உறுப்பினர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுமான திரு. கி. சக்திவேல், திரு. க. சிவக்குமார், திருமதி. சி. வத்சலா நிகழ்ச்சியினை சிறப்பாக தொகுத்து வழங்கினர். விழாவினை தங்கள் சேவையால் சிறப்பித்த KRM சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கும், சோகா இகெதா கல்லூரி மாணாக்கியருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பேரவை நிறுவன உறுப்பினரும், இந்தியன் வங்கிப் பணியாளருமான திரு. சே. பாண்டியராஜ் நன்றியுரை நவில்ந்தார். நாட்டுவாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

விழா சிறப்பாக நடைபெற சலுகை விலையில் அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முருகன்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பேரவையின் தமிழ் வனம் என்ற நூலின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பான முறையில் பதிப்பித்து வரும் AKS Books World மற்றும் ஜீவா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. கந்தசாமி அவர்களுக்கு பேரவை சார்பாக மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம். நூலினை மெய்ப்பு பார்த்திட்ட சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் முனைவர். அபிராமி அவர்களுக்கு நன்றி நவில்வதில் உவகைக்கொள்கிறோம்.  அனைத்து கூட்டங்களிலும் உற்றத் துணையாக இருந்து உதவிவரும் வாசிப்போம் வலைப்பக்கத்தின் நிறுவனர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு எங்கள் நன்றியினை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம். சலுகை விலையில் சிறுதானிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய திரு சிவக்குமார்  அவர்களுக்கும்  எங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். விழா சிறப்பாக நடைபெற உதவிய கொடையாளர்கள், பங்கேற்று சிறப்பித்த விருந்தினர்கள், பேச்சாளர்கள், பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், வாசிப்பாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வனம் செய்வோம்

தமிழ் வனம் செய்வோம்!

நன்றி.

விழா புகைப்படங்களைக் காண தொடுப்பைச் சொடுக்கவும்

https://photos.app.goo.gl/FfsNpJo7kG3KkY5J9

 

Saturday, 1 September 2018

அந்தகக்கவிப் பேரவை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


அந்தகக்கவிப் பேரவை
இரண்டாம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
நாள்: 16/09/2018 ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 09.45 மணி முதல் மாலை 05.00 மணி வரை.
இடம்: துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி, அரும்பாக்கம், சென்னை - 600 106.


நிகழ்ச்சி நிரல்
09.45 மணி: பேரவையின் இரண்டாம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: திரு. மு. ராமன், செயலாளர், அந்தகக்கவிப் பேரவை. தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
தலைமையுரை: திரு. செ. பிரதீப், தலைவர், அந்தகக்கவிப் பேரவை. விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி, செய்யாறு.

10.15 மணி
நூல் வெளியீடு
தமிழ் வனம் – பகுதி 2
திருமிகு. தி.தே. தினகர் அவர்கள்
துணை முதன்மை பணியாளர் அலுவலர் (Deputy Chief Personnel Officer), தெற்கு இரயில்வே.
தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் அறிமுக உரை:
பேராசிரியர் கு. பத்மநாபன் அவர்கள்,  உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி மற்றும் மொழிப்பெயர்ப்புத் துறை, திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திரா.
சிறப்பு விருந்தினர் உரை:
திருமிகு. தி.தே. தினகர் அவர்கள், துணை முதன்மை பணியாளர் அலுவலர், தெற்கு இரயில்வே.
பேராசிரியர். சே. கண்மணி அவர்கள், தலைவர், தமிழ்த்துறை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.
முனைவர் ப.முருகன் அவர்கள், தமிழ்த்துறைத் தலைவர், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி, சென்னை.
வாழ்த்துரை
முனைவர் இரா. பசுபதி அவர்கள்,  இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
முனைவர் ந. பழனியப்பன் அவர்கள்,  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
பதிப்பாளர் A. கந்தசாமி அவர்கள்,  பதிப்பாளர், ஜீவா பதிப்பகம், ASK Books World, சென்னை.
திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள்,  தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர், ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், சென்னை.
12.30 மணி: கலை நிகழ்ச்சி:
பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்வி மாணாக்கியர்
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, மாதனாங்குப்பம், சென்னை.
1.15 மணி: உணவு இடைவேளை
02.00 மணி                     பட்டிமன்றம்
சமுதாயக் கருத்துகளை அதிகம் வலியுறுத்திய கவிஞர்
மகாகவியே! புரட்சிக்கவியே!
நடுவர்: முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள்,
பதிவாளர் (பணி நிறைவு), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
மகாகவியே!
செல்வி. கு. பாரதி, முதுகலைத் தமிழ், இரண்டாம் ஆண்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.
திரு. சு. செல்வமணி, நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
திரு. தி. மாரிச்செல்வம், முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர், சி.ச.சுப்பைய்யா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
திரு. கு. ராமலிங்கம், பட்டதாரி தமிழ் ஆசிரியர், பதிப்பகச் செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி,  கோடம்பாக்கம், சென்னை.
புரட்சிக்கவியே!
செல்வி. பெ. மோ. பூஜா, முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
திரு. கி. லட்சுமிநாராயணன், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
திரு. இரா. பாரதிராஜா, பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  காட்டுமன்னார்கோயில், கடலூர்.
திரு. இரா. சின்னதுரை, பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,  க.பரமத்தி, கரூர்.
நன்றியுரை: திரு. சே. பாண்டியராஜ், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.
நிகழ்ச்சி தொகுப்பு & வரவேற்பு
திரு. கி. சக்திவேல், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
திரு. க. சிவக்குமார், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
திருமதி. சி. வத்சலா, பொருளாளர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்: D.G. வைணவக் கல்லூரி அல்லது NSK நகர்.
தொடர்புக்கு:
தலைவர் திரு. செ. பிரதீப் 94 45 74 96 89. 93 83 39 93 83.
செயலாளர் திரு. மு. ராமன் 94 44 36 78 50.
anthakakkavi@gmail.com
அனைவரும் வருக!
நன்றி.

Friday, 31 August 2018

மானுடம் போற்றிய பாரதி


                                                                                                                                                மானுடம் போற்றிய பாரதி

 
17/12/17
ஜெ. முத்தம்மாள்
இளங்கலைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு

       எட்டயபுரத்தில் பிறந்து திருவல்லிக்கேணியில் செத்துப்போனார் என்பது அவரது வாழ்க்கை . மனிதனாய் பிறந்து – கவிஞனாய் வளர்ந்து - மானுடத்தை உயர்த்தும் பணியில் மரித்துப்போனார் என்பது அவரது வரலாறு.
       விஞ்ஞான வெளிச்சத்தில் உலகம் விடிந்து கொண்டிருந்த வேளையில் அவர் பெற்றெடுக்கப்பட்டார் . விஞ்ஞானம் மனிதனைச் சிங்காரித்துக் கொண்டிருந்தது .  மானுடத்தைப் பற்றிக் கவலைப்பட விஞ்ஞானிகள் மறுத்தப் போது ஞானிகள் கவலைப்பட்டார்கள் . உலகந்தழுவிய மானுடத்திற்காய்த் தமிழ் மண்ணிலிருந்து கவலைப்பட்ட கவி - பாரதி .
       இந்திய அரசியல் விடுதலை என்பது வரலாறு உச்சரித்துத் தீர வேண்டிய ஒரு விஷயம் . மானுட விடுதலை என்பதே மனித குலம் எய்த வேண்டிய இலட்சியம் .
       பாரதியின் எழுத்தெல்லாம் இந்த லட்சியத்தை நோக்கியே பயணப்படுகிறது . ஆதலின் , பாரதி எனும் நெருப்பு பழையதாகி விடுவதில்லை .
       " தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
              இமைதிற வாமல் இருந்த நிலையில்
        தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
              தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
        இலகு பாரதிப் புலவர் தோன்றினார் " .
அற்புதமிக்க தன் கவிதைகளால் உலக மக்களை ஒன்று திரட்டி இந்த ஜகத்திணையினையே திரும்பிப் பார்க்க வைத்தார் .
       " பாரதி உலகமே போற்றும் மகாகவி
        அகத்தில் அன்பும்
        பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் " .
என்று பாரதியின் சிறப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறார் .
       மண்ணுண்ட வாய்திறந்து கண்ணன் யசோதைக்கு அகிலம் காட்டியது போல இந்த பாரதியின் வாய்த்திறப்பில் தமிழன்னை இன்றளவும் கவிமுகந்து கொண்டிருக்கிறாள் . தென்றலாய் வீசி மனிதனை இதப்படுத்தி நயப்படுத்த முடியாத போது பாரதியின் படைப்புகள் புயலாக வீசி பழமையை விரட்டி புதுமையை நாட்டின .
       " எல்லோரும் ஓர் குலம்
        எல்லோரும் ஓர் நிலை
        எல்லோரும் இந்நாட்டு மன்னார் "
என்ற பாரதியின் சிந்தனை பொதுவான நிலைப்பாட்டில் மானுடர் அனைவரும் சமம் . அரசனையும் ஆண்டியையும் ஒரே தராசில் நிற்க! அது ஒரே மதிப்பில் இருவரையும் நிறுத்துகிறது .
       ஆதிக்கச் சமுதாயத்தில் கூட ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிற பாரதியின் ஆன்மீக சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கும் புதிய தகுதியை உணர்த்திக் காட்டுகிறது . பாரதி காட்டுகிற மானுட நெறி புதியது , திடமானது  என்பதில் சந்தேகமில்லை . இறுகிய தரையில் நடப்படுகிற செடி ஆழமாக வேறூன்றச் செய்ய தரையை நன்கு தோண்டி வைப்பது போல பாரதியின் நெறி  வாழ்வில் ஆழமான பிடிப்புக் கொண்டது .
       அதனால் தான், அச்சம் தவிர் , ஆண்மை தவறேல் , ஏறு போல் நட , கொடுமையை எதிர்த்து நில் , புதியன விரும்பு என்று வீரமாகப் பேசுகிறார் பாரதி .
       பாரதியின் மானுட சிந்தனைகள் 20ம் நூற்றாண்டில் மட்டுமல்ல அதற்கடுத்த நூற்றாண்டிலும் விழிப்புணர்ச்சி தந்து கொண்டு இருக்கிற ஆக்கப்பூர்வமான அம்சங்கள் தாங்கியவை .
       புழுப்பூச்சிகளாய்க்  காலங்காலமாக அழுத்தப்பட்டுக் கிடந்தவர்கள் தங்களுக்கும் சுதந்திரமாக மூச்சி விடும் உரிமை உண்டு என்பதனையும் , அது பெரு மூச்சாய் இல்லாமல் திருப்தி தருகின்ற சுத்த இதய சுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும் ஜனநாயகத்தை உணரச் செய்தார் .
       சுதந்திரப் போராட்டம் அன்னிய ஆட்சிக்கு எதிரானது மட்டுமன்றி , ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்புக்கு எதிரானதுமாகும் என்று காந்திஜியைப் போல் பாரதியும் கருதினார் . பெண்கள் உரிமைக்காக  போராடினார் . பெண்களிடம் காட்டப்படும் பாராபச்சத்திற்கு எதிராகப் போராடினார் .
       " இதுவரை  கத்தியும் , துப்பாக்கியும் ,
        சிறைச்சாலையும் , தூக்கு மேடையும்
        பயன்படுத்தி மனிதர் ஒருவரை ஒருவர்
        நெறிப்படுத்த முயன்றதெல்லாம் வீண் முயற்சியே .
        வீட்டுப் பெண்டிர்களே தமது தாலாட்டுப் பாடல்களாலும்
        செவிவழி கதைகளாலும் மனித குலத்தை
        மேம்படுத்தியதைப் போல்
        வேறெந்த ஆயுதமும் செயல்பட்டதில்லை ".
என உணர்ச்சியுடன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .
       ஒரு நாட்டில் ஆண்மக்களைப் போலவே பெண் மக்களும் உரிமைப் பெற்று வாழ்தல் வேண்டும் . பெண்ணடிமை கொண்ட நாடு அடிமைக் குடில் என்றும் வீழ்ந்தே கிடக்கும் என்கிறார் பாரதி . 
        தேசபக்தி, பெண்ணுரிமையைப் பற்றி பாடிய பாக்கள் பெரிதும் எமது உள்ளத்தில் இன்பமூட்டிக் கொண்டிருக்கும் . தமிழ் நாட்டில் தோன்றிய புலவருள் பெண்ணுரிமைக்குப் போராடிய வீரருள் தலை சிறந்து விளங்கியவர் பாரதியாராவார் .
       " ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
        அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம் " .
எனப் பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் எனப் பெண்ணுரிமையை ஏத்தினார் .
       " போற்றிப் போற்றி ஓராயிரம் போற்றி நின்
        பொன்னடிக்கேப் பல்லாயிரம் போற்றிகாண் ".
பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றும். பெண்களின் கல்விஅறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்டார் பாரதி .
       " ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
        றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
        வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
        விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் "
       " பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
        பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
        எட்டு மாறிவிநிலாணுக் கிங்கே பெண்
        இளைப்பிள்ளை காணென்று கும்மியடி "
       " வேதம் படைக்கவும் நிதிகள் செய்யவும்
        வேண்டி வந்தோமென்று கும்மியடி
        சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
        சாதி படைக்கவும் செய்திடுவோம் "
       " சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
        தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
        நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
        நித்தமும் சண்டைகள் செய்வார் "
என்று 20ஆம் நூற்றாண்டின் நிலையைக் கூறினார் பாரதி .
       இப்போது இருக்கும் நிலை என்ன ? அந்தச் சாதிப் பிரிவுகளும் நீதி என்ற பெயரில் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் . அந்த நிலை மாறுவதற்காகத் தான் மீண்டும் பாரதி ,
       " சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
        தன்னிற் செழித்திடும் வையம் !
என வலியுறுத்துகிறார் .
       " மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
        வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
        வானுலகு நீர்த் தருமேல் மண்மீது மரங்கள்
        வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றோ  "
அதனால் எதற்கும் அஞ்சாமல் , உடலை வறுத்தாமல் மானுடர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என பாரதி கூறுகிறார் . இந்த உலகம் உயர்ந்திட வேண்டுமென்றால் மனிதர்களெல்லாம் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் . இதனையே
       " வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
        வாழும் மனிதர்க்கெல்லாம்
        பயிற்றி பலகல்வி தந்து - இந்த
        பாறை உயர்த்திட வேண்டும் "
என்கிறார்.
       " இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்து
        கெடுக்க உலகயியற்றி யான் " என்று வள்ளுவர் கூறிய கோப - சாப நிலையை மாற்றி அதனை ,
       " இனியொரு விதி செய்வோம் - அதை
        எந்நாளும் காப்போம் !
        தனியொருவனுக்குக் குணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் ! "
என்று ஆவேசத்துடன் பாடினார் .
       ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுத் திட்டங்களும் , அரசியல் கட்சிகள் நடத்தும் கொள்கைப் போராட்டங்களும் பாரதி காண விரும்பிய நவபாரதத்தை - புதிய தமிழகத்தை - உருவாக்கியாக வேண்டும் .
       அதுவே அமரகவி பாரதியாருக்கு நாம் அளிக்கும் காணிக்கையாகும் .
       " தனியொருவனுக்கு உணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் "
என்று பாரதி சொன்னது ஒட்டுமொத்தமான இந்த உலகினை அல்ல . தனியொருவனுக்கு உணவு இல்லாமல் இறந்திடும் நிலையை தான் காரணமாகக் காட்டுகிறார்.
       அதற்காகத் தான் " இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் " என மனிதர்களின் வாழ்க்கை நடைமுறைக்குச் சாத்தியமான திட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார் .
       மானுடர்களாகிய நமக்கு எல்லாரும் ஓரினம், சுதந்திரம், புதுமைப் பெண், பெண்கல்வி , சாதிப் பிரிவு , மனித வாழ்வு நெறி , தனி மனித  உரிமை என இத்தகைய பல கோணங்களில் மானுடத்தை போற்றிய பாரதியை நாமும் போற்றுவோம் .
      
                          நன்றி