Sunday, 30 June 2019

தமிழ் இலக்கியத்தில் தத்துவ சிந்ந்தனைகள்


தமிழ் இலக்கியத்தில் தத்துவ சிந்ந்தனைகள்

24/02/2019
 திரு. ஜெயசங்கர்,
பட்டதாரி தமிழ் ஆசிரியர்,
ஜெயகோபால்கரோடியா அரசுப் பள்ளி,
திருவற்றியூர், சென்னை.

முன்னுரை
            உலகத்தோற்றத்தைப் பற்றி அவரவர் மதத்தைச் சார்ந்து பல்வேறு கருத்துகள் அறியப்படுகின்றன. உலகத்தோற்றம், உயிர்தோற்றம், இனத்தோற்றம் என்ற படிநிலைகளைக் கடந்து அவை தோன்றிய முறையை ஆராய்ந்தால் நிலையான முடிவை அறிந்துகொள்ள முடியாது. எனினும், உலகத்தையும் உயிர்களையும் படைத்தவன் இறைவனே என்னும் தத்துவத்தை ஆராய்ந்தால் உலகத் தோற்றத்தையும் உயிர்தோற்றத்தையும் பற்றிய சிந்தனைகள் நம் மனதில் விசாலமாய் தோன்றலாம்.
             உலகம் தோன்றியது முதல் இன்னால் வரையிலும் பல்வேறு மாற்றங்கள் வளர்ச்சி பாதையை நோக்கியுள்ளது. தோன்றிய பொருட்கள் ஒரு காலக்கட்டத்தில் அழிந்துவிடும் என்பது உலக நியதி. இதை சற்றே விரிவாகக் கூறினால் உலகில் தோன்றிய உயிர்கள் தனது சக்தி முடியும் காலத்தில் வேறொரு மாற்றத்தை நோக்கிச் செல்லுமே தவிர நிரந்தரமாக அழிந்துவிடுவதில்லை.
            நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வினைக்கும் மறுவினை உண்டு என்பதை தமிழ் இலக்கியம் தோன்றிய காலம் முதல் அறிவுறுத்தி வருகிறது. இன்னிலைக்கு முதன்மைக் காரணம் உலகில் தோன்றிய மனித இனம் அறச்செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனையோடு இலக்கியப் படைப்புகள் படைக்கப்படுகின்றன. ஐம்புலன்களையும் பெற்று பகுத்தறிவோடு வாழும் மனித இனம் தலைச்சிறந்த இனமாக உலகத்தில் கருதப்பட்டபோதிலும் அந்த இனத்தாரது நெறிகளை வரையறைப்படுத்தும் பண்பினை இலக்கியங்கள் ஆற்றுகின்றன. இலக்கியம் சார்ந்த படைப்புகளில் காணப்படும் தத்துவங்கள் மனித இனத்தை எவ்வாறு நெறிப்படுத்துகின்றன என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
தத்துவக்கோட்பாடுகள்
              வடமொழி இலக்கியம், தத்துவங்கள் 96 உள்ளன என்றும் அதில் முதன்மையானவை 36 தத்துவங்கள் என்றும் கூறுகிறது. ஆன்ம தத்துவங்கள் - 24, உடலின் வாசல்கள் – 9, தாதுக்கள் – 7, மண்டலங்கள் – 3, குணங்கள் – 3, மலங்கள் – 3, வியாதிகள் – 3, விகாரங்கள் – 8, ஆதாரங்கள் – 6, வாயுக்கள் – 10, நாடிகள் – 10, அவத்தைகள் – 5, ஐவுடம்புகள் – 5 என வரையறுக்கப்பட்ட போதிலும் சிவ தத்துவங்களான நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை என
ஐந்தும்
; வித்யா தத்துவமான மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்ற ஏழும்; ஆன்ம தத்துவங்களான பஞ்சபூதம் -5, ஞானேந்திரியங்கள் -5, கர்மேந்திரியங்கள் -5, பிராணாதி வாயுக்கள் – 5, அந்தகரணங்கள் – 4, என இருபத்து நான்கும் முதன்மைத் தத்துவங்களாகக் கருதப்பட்டு மாந்தர் வாழ்வில் அறச்செயல்களை மேற்கொள்ள உதவுகின்றன. ஒரு ஆன்மாவை இறைவனிடத்தே கொண்டுசேர்க்கும் பணியை நாம் எடுக்கும் பிறவிகளும் பிறவிகளில் நாம் மேற்கொள்ளும் வினைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
வினைக்கோட்பாடு
            உயிருள்ள ஒரு பொருள் தான் மேற்கொள்ளும் வினைக்கான மறுவினையை அதே பிறவியிலும் அடைந்து விடலாம் அல்லது அடுத்துவரும் பிறவிகளிலும் அடைந்துவிடலாம் என தத்துவங்கள் நமக்கு விளக்குகின்றன. விரிவாக ஆராய்ந்தால் நானேந்திரியங்கள் செய்யும் செயலுக்கான வினை அதே பிறவியில் மறுவினையை அடைந்து விடுகின்றன. ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்னும் வரியின் மூலம் அறிவது யாதெனில், ஒவ்வொரு வினைக்கும் மறு வினை உண்டு என்பது ஆகும். ஆனால், இப்பாடலில் வாழ்க்க்கைத் தத்துவச் சிந்தனை உரைக்கப்பட்டுள்ளதே தவிர இறைத் தத்துவத்தை விளக்கவில்லை. மேற்குறித்த தத்துவச் சிந்தனையை தத்துவ நெறியில் எடுத்து ஆராய்ந்தால் நெருப்பை மெய் தீண்டும் போது நெருப்பால் ஏற்படக்கூடிய அனுபவத்தை உடனடியாகப் பெற்றுவிடும். ஆனால், நெருப்பை மெய் தீண்டுவதற்கு காரணமாக இருந்தவர் அதற்கான மறுவினையை சற்று தாமதமாக அடையக்கூடும். எனவே, நாம் செய்யும் வினை யாவும் ஊழ்வினை என்னும் பெயரிலும் விதி என்னும் பெயரிலும் நம்மை பின்தோடர்ந்து வருகின்றன என்பதில் ஐயமில்லை.
            நாம் செய்யும் வினைகள் பக்குவம் அடைந்ததும் உரிய காலத்தில் நம்மை வந்து அடையும் என்பது உலகநியதி. “தர்மம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது திரையிலக்கியத்தில் படைக்கப்பட்ட வினைக்கோட்பாட்டின் தத்துவமாகும்.
             பண்பட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள் யாவும் பருவ காலத்திற்கேற்ப பலன் தருவது போல நாம் மேற்கொண்ட வினைகளும் நமக்கு பயன் அளிக்கும். விளக்கமாகக் கூறின் “கீரை விதைகளை ஒருவன் விதைத்தால் ஓரிரு வாரங்களில் அருவடைச் செய்து விடலாம். மாறாக வாழை, தென்னை போன்றவற்றை விதைத்தால் மரமாகி, காயாகி, கனியாகும் வரை (காலத்திற்கேற்ப) காத்திருக்க வேண்டியுள்ளது.” இதுப் போன்று நாம் செய்யும் வினைகள் நம்மை அனுகாமல் இருக்க இயலாது. சான்றாக, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்பதை கோவலனின் வாழ்க்கை மூலமாக விளக்கியுள்ளார்.
            பிறவியை விரும்பாது இறையுணர்வையே உயிரெனக் கருதும் பட்டினத்தாரடிகள் “இருவினை வேண்டேன்” எனப்பாடியிருப்பதன் நோக்கம் யாதெனில், நல்வினைகளைச் செய்தால் அடுத்த பிறவியில் அந்த நன்மைகள் வந்து சேரும் என்றும் அதேப் போன்று தீ வினை செய்தால் அதற்கான தண்டனையும் வந்து சேரும் என்பதையும் பட்டினத்தார் அறிந்திருந்தார். எனவேதான் பட்டினத்தார் இருவினையும் வேண்டாம் என்கின்றார். இருவினைகளும் இறைவனை அடைவதற்கு தடையாக இருப்பதை உணர்ந்தே இவ்வாறு கூறுகின்றார். இறைவனிடத்தே மன்றாடி வேண்டினாலும், கண்ணீர் சிந்தினாலும், அவரவர் செய்த வினைப் பலனை அடைந்தே ஆகவேண்டும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்னும் குறளில் தொழில் எனச் சொல்லியிருப்பது வினையைக் குறிக்கும் எனக் கருதலாம். தீவினைப் புரியும் மாந்தருக்கு தாம் செய்த வினை தமக்கே வந்து சேரும் என்பதை வள்ளுவர் வழி விளக்க முற்பட்டால்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
என்றக் குறளைச் சான்று காட்டலாம். இக்குறளில் பிற்பகல் எனச் சொல்லிருப்பது உரியக் காலம் அல்லது மறுபிறவியைச் சுட்டும்.
தோற்றமும் அழிவும்
             இந்த உலகம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களினால் ஆனது. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு தொடர்பு உண்டு. ஒன்றில்லாமல் ஒன்று தனித்து இயங்கவோ, இருக்கவோ முடியாது..
            அணுக்களின் கூட்டுக் கலவையான சேர்மங்கள் யாவும் அழியக் கூடியன. சூரியன், சந்திரன் மற்றப் பிற கோள்களும் அணுக்களின் சேர்மங்கள் ஆகும். எனவே இவற்றிற்கு கட்டாயம் அழிவு உண்டு. பூமியில் தோன்றியக் கடைசி உயிரினம் மனிதன் என்று கூறுவோரும் உளர். உலகில் தோன்றிய உயிர்கள் யாவும் அழிவு என்னும் முடிவுக்கு உட்பட்டதாகும். “பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்” என்ற வரி மேற்குறித்த கருத்திற்குச் சான்றாய் அமைகின்றன. ஒரு பிறவியில் விலங்காகப் பிறந்த உயிர் அது செய்யும் வினைக்கேற்ப மறுபிறவியை அடைவது அனைவரும் அறிந்ததே. சுருங்கக்கூறின் உலகில் அனைத்தும் இரண்டெனப் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
              பதி, பசு, பாசம் என்னும் இம்மூன்றும் தோற்றம் இல்லாத நிலையான பொருட்களாகும். பதி என்பது இறைவனையும் பசு என்பது உயிரையும், பாசம் என்பது மும்மலங்களையும் (மாயை, ஆனவம், கன்மம்) குறிக்கும். இதில் பதி என்பவர் அருநிலை, அருவுருவ நிலை, உருவ நிலை, ஒளி நிலை என்னும் நான்கு நிலைகளில் ஒவ்வொரு மனிதனின் பக்திக்கேற்ப மாறுபட்டு காணப்படுகின்றது. எனவே, இறைவனுக்கு தோற்றமும் அழிவும் இல்லை என்பதை தெளிவாக உணரமுடிகின்றது. உருவ நிலையை ஒரு சமயத்தாரும், அருவுருவ நிலையை ஒரு சமயத்தாரும், உருவ நிலையை ஒரு சமயத்தாரும் பின்பற்றி வருகின்றனர். மனிதர்கள் தனக்கு தீங்கு நேராதிருக்கவும், இன்பம் நிலைத்திருக்கவும் இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
              பசு என்று அழைக்கப்படும் உயிரானது பாசம் என்னும் கயிற்றால் (மும்மலங்களால் வழி நடத்தப்பட்டு) கட்டப்பட்டு இறைவனை அடையமுடியாத நிலைக்கு உட்படுத்தப்படுகிறது. இம்மூன்றில் மாயை என்னும் குணத்தை, உயிர் அளவிற்கு அதிகமாக விரும்புவதால் பின்வரும் பிறவிகளில் வெவ்வேறு வடிவங்களை பெற வேண்டியுள்ளது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்னும் புத்தரது கோட்பாட்டை இங்கு ஆராய்ந்தால் மனதால் செய்யக்கூடிய ஆசை, அழுக்காறு என்னும் இரு பாவங்களை தவிர்த்து வாழும் மனித இனம் இறைவனை எளிதில் அடையமுடியும். ஆனவம், கன்மம் போன்ற மலங்கள் ஆசை என்னும் குணத்திற்கு மாறானவை அல்ல. ஆசை அதிகரிக்கும்போது ஆனவமும், கன்மமும் நெறிபிழந்து மனித இனத்தை சிதைத்து விடுகின்றன. ஆசை இல்லாத உயிர்கள் இல்லை என்ற போதிலும் தமிழ் இலக்கியம் கூறும் தத்துவச் செய்திகளைக் கற்று பற்றற்ற வாழ்க்கையை மேற்கொள்வது இக்காலத்திற்கு ஏற்றதல்ல.
              சாத்வீகம், இராட்சசம், தாமசம்(மயக்கம்) ஆகிய மூன்று குணங்களும் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நிலைக்கலன்களாக அமைகின்றன. இத்தகைய குணங்கள் எல்லோருக்கும் பொதுவானதாய் இருந்தபோதிலும் எந்த குணம் அதீத ஆற்றலைப் பெற்றுள்ளதோ அதன் வழியே மனித வாழ்க்கையும் அமையும். சாத்வீக குணம் அதிகமாயிருப்பின்  நற்குணமும், இராட்சச குணம் அதிகமாயிருப்பின் விடாமுயற்சியும், தாமச குணம் அதிகமாயிருப்பின் காம உணர்வும் ஒருவருக்குள் நிறைந்திருக்கும். எனவேதான் ஒவ்வொரு மனிதனும் வேறுபட்ட நெறியில் வாழ்கின்ற நிலையைக் காணமுடிகின்றது.
சமய நெறியில் தத்துவச் செய்திகள்
         சமயம் மதம் என்னும் பெயரால் அழைக்கப்படுவதை நாம் அறிவோம். இந்திய மெய்ஞானத்தில் மதம் என்பது கொள்கையைக் குறிக்கின்றது. ஆனால் அது தற்போது வழிபாடு சார்ந்த நிலையாக மாறிவிட்டது. உலகில் உள்ள சமயங்களில் அதிக அளவு மக்களால் பின்பற்றப்படும் இந்து சமயம் தத்துவ நெறியையும், இசுலாமிய சமயம் மாற்க நெறியையும், கிறிஸ்த்துவ சமயம் கொள்கை நெறியையும் பின்பற்றுகின்றன. மற்ற மதங்களான சீக்கியம், பௌத்தம், சமணம் ஆகியன குறைந்த அளவு மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. சமயங்களின் பெயர் வேறுபட்டிருந்தபோதிலும் எல்லா சமயங்களும் அறக்கோட்பாட்டையே மையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பிரிவுகளும் உண்டு. சமய வழக்கத்திற்கேற்ப சடங்குகள் மாறுபடுமே தவிர நம்பிக்கை மாறுபடுவதில்லை.
            மணிமேகையில் சமயகணக்கர் தன் திறன் கேட்ட காதையில் தத்துவச்செய்திகள் இடம் பெற்றுள்ளன. இக்காதையில் சாத்தனார் பத்து வகையான அளவையைப் பற்றிக் கூறுகின்றார். அவை, காட்சி, கருத்து, உவமை, ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சி, உள்ள நெறி.
      மணிமேகலையில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் தர்க்கவியல் பேசப்படுகிறது. உலகாயதவாதிகள் காட்சி அளவை மட்டுமே ஏற்பர். சௌத்ராந்திகர் என்னும் தேராவாதப் பிரிவினரும் காட்சி அளவையை மட்டுமே பின்பற்றினர். சௌத்ராந்திக யோகசாரர்களோ காட்சி அளவையோடு அனுமானம் எனப்படும் கருத்தளவையும் ஏற்று வாழ்ந்தனர்.
“கண்கூடு அல்லது கருத்துஅளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயணும்இப் பிறப்பே
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல்”
கண்கூடாகப் பார்க்கப்படும் கட்சியளவை மட்டுமே உண்மை, கருத்தால் அறிந்துக்கொள்வதாக கூறப்படும் அளவை என்பது நிரூபிக்கமுடியாமல் அழிந்துவிடக்கூடியதாக இருக்கும். இம்மை எனப்படும் தற்போது எடுத்துள்ள பிறவி மட்டுமே உண்மை. இப்பிறவியில் செய்கின்ற செயல்களுக்கான பயனும் இந்தப் பிறவியிலேயே கிடைத்து விடும் என்று லோகாயதம் கூறுவதாக மணிமேகலை கூறுகிறது. உயிர் எவ்வாறு தோன்றுகின்றது மறைகிறது என்பதை மணிமேகலை கீழ்வருமாறு கூறுகின்றது.
“தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மறரும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடு பூதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வுஅவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்”
தாதகிப் பூ என்பது அத்திபூவாகும். சுட்டி என்பது கருப்பட்டி. இவை இரண்டுடன் வேறு சில பொருட்களையும் சேர்ப்பதால் மது உருவாகி அதனைக் குடிப்பதால் களிப்பு பிறப்பதைப் போல பூதங்களின் சேர்க்கையால் உடலும் அதுசார்ந்த உயிர் என்ற உணர்வும் தோன்றுகின்றன. இந்த உயிர் என்ற உணர்வானது அது சார்ந்துள்ள பூதங்களின் அழிவால் அதாவது, அந்த உடலில் இந்த பூதங்களால் தோன்றிய சேர்க்கைப் பொருட்களின் அழிவால் அந்ததந்த பூதங்கள் பிரிந்து அவை அவை அந்த இனத்தோடு சேரும். இதனால் உயிர் என்ற உணர்வும் பறையில்(மேளத்தில்) எழுந்த ஓர் ஓசையானது படிப்படியாக அடங்குவதைப் போல மறைந்து போய்விடும் என்று கூறப்படுகிறது. மணிமேகலையில் கூறியுள்ளதைப் போன்று நீலகேசியிலும் உயிர் தோன்றல் மற்றும் அழிவது பற்றி கூறப்பட்டுள்ளது.
“திண்ணென் தீநில நீர்வளி ஆகாயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றம் சுவையினொடு ஊறுஒலி
யெண்ணுங் காலை இயைந்துழி எய்துமே”
நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் இணைந்ததால் கண், மூக்கு, நா, உடல், செவி ஆகிய ஐம்பூதங்களும் , பார்வைத் திறன், முகர்வுத் திறன், ருசியறியும் திறன், தொடு உணர்வுத் திறன், கேட்கும் திறன் ஆகியவை உடையதாய் இணைந்து உயிருள்ள உடலாய் தோன்றுகின்ரது. மேலும்,
“ஐந்துங் கூடி அறிவுஇன்பம் ஆதியாய்
வந்து தோன்றி மதுமயக் குஆற்றலின்
சிந்தி னால்அவை சென்றினஞ் சேருமே”
இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையே அறிவாகவும், இன்பம் முதலியனவாகவும் வந்து தோன்றி மது எவ்வாறு அறிவை மயக்கும் ஆற்றலைப் பெறுகிறதோ அதுபோல ஆன்மா உயிர் என்ற மயக்கத்தை உருவாக்கி, இறுதி நாள் வரும்போது ஐம்பூதங்களும் கெட்டு அழிகையில் அந்ததந்த பூதங்கள் அவற்றின் இனத்தைப் போய் சேருகின்றன என்று நீலகேசியில் பிசாசகன் என்ற பூதவாதி நீலகேசியிடம் தனது மத கேட்பாட்டை விளக்குகிறான். இதனைக் கேட்ட நீலகேசி ஆன்மா, நன்னெறி, நல்வினை, நற்பயன் இவை அனைத்துமே இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று என்று கூறி சமண சமயத்தின் அடிப்படையிலான அறக்கோட்பாட்பாடுகளை வாதிடுகிறாள் என்பதை கீழ்க்காணும் வரிகள் காட்டுகின்றன. 
“பூத மல்லது பொய்பிற நூலென்று
வாதஞ் செய்து வருந்தி முடிப்பதுஎன்
நாதன் நன்னெறி நல்வினை நற்பயன்
யாது மில்லை எனில்அஃது அவத்தமே”
இங்கு அனைத்து சமயங்களும் கூறும் கருத்துகள் ஒன்றாகவே இருக்கின்றது. எனினும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அறனெறிக்கோட்பாடுகளை மக்களுக்கு கூறுவதில் கற்பனைகள் மாறுபட்டு இருந்தனவே தவிர கருத்துகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆன்மாவின் அவஸ்தைகள்
            உலகில் பிறப்பெடுத்த அனைத்து ஆன்மாக்களும் பதினெட்டு வகையான அவஸ்தைகளைப் பெற்றாக வேண்டும் என்பது தத்துவ நெறியில் வாழும் மனிதர்களால் உணர்த்தப்பட்ட செய்தியாகும். குறிப்பாக மனித ஆன்மா மேலவஸ்தை, கீழ் அவஸ்தை, ஆதார அவஸ்தை என்னும் படிநிலைகளில் பதினெட்டு வகையான துன்பங்களைப் பெற வேண்டியுள்ளது. பாடான(கல்) நிலையில் இருக்கும் ஆன்மா மாயையை விரும்பி ஏற்கும்போது கேவல நிலையை அடைந்து விடுகிறது.
1. கேவல நிலை – ஆணவத்தோடு மட்டும் ஆன்மா இருக்கும். இதில் ஆன்மா சிறிதும் அறிவின்றிப் பருப்பொருள் போல் இருக்கும்,
2. சகல நிலை – மும்மலங்களும் சேர்ந்திருக்கும் நிலை. இதில் ஆன்மா அறிவைச் சிறிது பெற்று உலகியலில் ஈடுபடும். இந்நிலையில்தான் வினைகளை அது ஈட்டுதலும் அவற்றின் பயனை நுகர்தலும் நசைபெறுகிறது. இந்நிலையில் ஆன்மா ஒன்றையறிதலும் அறிந்ததை மறத்தலும் ஆகிய இரண்டினையும் உடையது. அப்படிப்பட்ட நினைப்பு மறத்தலை நூல்களில் சகலம், கேவலம் என்பர். இந்நிலையில் ஆன்மாவிற்கு வரும் உறக்கம், விழிப்பு ஆகிய இரண்டும் முறையே கேவலம், சகலம் எனப்படும். இவற்றுள் விழிப்பு நிலையை மகாசகலம் என்பர். காரிய அவத்தை ஐந்தனுள் சாக்கிரம் எனப்படும் ஆன்மா, தூய்மைபெறும் நிலையை சுத்த நிலை என அழைப்பர். இதுவே ஆன்மாவின் இறுதிநிலை ஆகும். இந்நிலை, இறுதியில் இறைவனை அடையக்கூடிய வழியைக்காட்டும்.
சாக்கிரநிலை
               வடமொழியில் சாக்கிரநிலை என அழைக்கப்படுவதை தமிழில் நனவு நிலை, விழிப்பு நிலை என்னும் பெயர்களில் சுட்டலாம். இந்நிலையில்தான் நானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், தசவாயுக்கள், கர்ணசுத்திகள், சப்த நாதி, வச நாதி, புருடன் ஆகிய முப்பத்தைந்தும் செயல்படுகின்றன.
சொப்பனநிலை
               இந்நிலையை கனவுநிலை எனவும் அழைக்கலாம். உறக்கத்தின் போது பொறிகள் ஐந்தும் தனக்குரிய செயலை தவிர்த்து இயங்கும். கனவு நிலையைப் பற்றி திருக்குறளில் இன்பத்துப்பாலில் செய்திகள் உள்ளன. எனினும் கனவுநிலை தத்துவங்களை ஆராய்ந்தால் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களே கனவாக வரும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். வாழ்வில் நடக்கப்போகின்ற செயல்களை கனவு நமக்கு உணர்த்துகின்றது என்ற கருத்தும் உண்டு. கனவு நிலையின்போது புலன்களும் பொறிகளும் இயங்கும். மேலும், உறக்கத்தின்போது சுழுத்தி நிலையில் (மயக்கநிலை) இதயம் மட்டுமே இயங்கும். துரியநிலையில் (வாசிநிலை) புருடனும், சுவாசமும் தொப்பூழ் கமலத்தில் அமைந்திருக்கும். துரியாதீதம் நிலை இதனை பற்றற்ற நிலை, உணர்வற்ற நிலை எனவும் அழைப்பர். இந்நிலையில் புருடன் மட்டும் இயங்குமே தவிர மற்ற உறுப்புகளின் இயக்கம் இல்லாதிருக்கும்.
சித்தர்கள் கூறும் தத்துவச் செய்திகள்
               இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிராத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோகங்களைப் பெற்றவர்கள் சித்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். மேலும் சித்தர்கள் உடற்கூறு தத்துவங்களை உணர்ந்து பற்றற்ற வாழ்க்கையை மேற்கொள்ள எல்லா தத்துவங்களையும் ஒரே நிலையில் கையாளுவர். சில  பொறிகளை குறைத்து செயல்படுத்தினாலும் பல  பொறிகளை அதிகமாக செயல்படுத்தினாலும் சித்தி நிலையை அடைய இயலாது. உடற்கூறுகள் அனைத்தையும் சரிவர செயல்படுத்தினால்தான் பற்றற்ற வாழ்வை மேற்கொள்ள முடியும். எனவே, தத்துவ நெறியில் ஒரு மனிதன் செயல்பட வேண்டுமானால் அனுபவம் வாய்ந்த சித்தர்கள் வழியைப் பின்பற்றுதல் அவசியம். சித்தர்கள் வாழ்விற்குத் தேவையான நெறிமுறைகளை அதிகப் பாடல்களில் கூறியுள்ளபோதிலும் தத்துவம் நிறைந்தக் கருத்துக்களைத் திருமந்திரத்திலும், பட்டினத்தார், சிவவாக்கியார் பாடல்களிலும் காணலாம். சித்தர்களின் தத்துவத் கோட்பாடுகள் பெரும்பாலும் ஆயுளை நீட்டிக்கும் வாழ்வியல் நெறிகளையும், அறக்கோட்பாடுகளையும் உரைக்கின்றனவே தவிர தத்துவ மார்கத்தை அதிக அளவில் எடுத்துக் கூறவில்லை.
             மனித மாண்புகளை மிக அழகாகவும், துல்லியமாகவும் உலகிற்கு உணர்த்தியவர்கள் சித்தர்கள். மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மானுட வாழ்வியல் நெறிகளில் ஊறித்திளைத்தனர். மனித உரிமைகளையும், மக்கள் பிரச்சனைகளையும் நன்றாக அறிந்திருந்தனர். அன்பையும், அருளையும் போற்றினர். அத்துடன் யோகம், ஞானம் ஆகியவற்றின் வழி இறைவனுடன் இரண்டறக்கலக்கும் தவ வலிமை பெற்றிருந்தனர். சித்தர்கள் மனித உணர்வுகளும் ஆற்றலும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒருமித்த சிந்தனைகள் வளர வேண்டுமென எண்ணியவர்கள். தமது சிந்தனைகளை சமயம் மற்றும் சமுதாய கோட்பாடுகளாக வடிவமைத்து நெறிமுறைகளை அறிவுறுத்தினர்.  சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் விட்டொழித்து சிற்றின்ப ஆசைகளைத் துறந்து, நிலையாமையை வலியுறுத்தினர்.
“சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே”
என்று தாயுமானவர் கூறுகின்றார். மேற்குறித்த வரியில் அறிவு நிரம்பப்பெற்று, கோபத்தை அடக்கும் ஆற்றலையும் பெற்று வாழும் மனிதர்களில் மனதை அடக்க தெரியாதோர்க்கு இறையருள் கிட்டாது என்னும் உண்மை வெளிப்படுகிறது.
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
அன்பும் சிவமும் வெவ்வேறானவை என்று அறிவில்லாதவர்களே கூறுவர். அன்பே சிவம் என்பதை யாரும் அறியவில்லை. அன்பும் சிவமும் ஒன்று என்பதை  உணர்ந்த ஞானிகள் அன்பே வடிவமாகி, சிவகதியில் மூழ்கியிருப்பர் என்று திருமூலர் கூறுகின்றார். அன்புடையவர் தம் பொருளை மட்டுமின்றி  இயன்றால் தம் உடலையும் உயிரையும் கூட பிறருக்காக கொடுத்துவிடுவர் என்று திருவள்ளுவரும் கூறுகின்றார்.
                  “யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே”
எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்றும் பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் கூறுவது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்று திரூமூலர் கூறுகின்றார்.
             கடவுளின் பெயரால் ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்க சிவவாக்கியார் கீழ்வருமாறு கூறுகின்றார்.
“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”
சமூக அமைதிக்கும், சமத்துவத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் தடையாக இருப்பவை சாதி மத பேதங்களே. சாதீயச் சிந்தனைகள் அகற்றப்பட்டால்தான் சமூகம் முன்னேற இயலும் என்பதை உணர்ந்த சித்தர்கள் சாதியால், மதத்தால் மனித இனம் பிரிக்கப்படுவதை வெறுத்தனர். பார்த்தால் பாவம், பட்டால் தீட்டு என்கிற அவல நிலைகண்டு உள்ளம் கொதித்தனர். மனிதனை அடிமைப்படுத்தும் சாத்திரச் சடங்குகள் யாவும் மனித உரிமையைப் பறிக்கும் உத்தியே தவிர வேறில்லை என்பதை,
“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து தவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது? சத்தி முத்தி சித்தியே”
சித்தர்கள் மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்கள். பக்தி, மாயம், மந்திரம் என்கிற பெயரில் அவர்களை ஏமாற்றமுடியாது. திருமூலர்,
“பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
 மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
 மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால
 பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே”
மேற்குறித்த பாடலில் பசு என்பது உயிரையும், மேய்ப்பார் என்பது மனதையும் ஐந்து என்பது ஐம்புலன்களையும் சுட்டுகின்றன. ஐம்புலன்களை மனதால் அடக்கி வாழத்தெரிந்தவனே இறைவன் அருளை இன்னதென்று உணர முடியும் என திருமூலர் கூறுகின்றார்.
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுச்
 சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
 நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே”
ஒருவன் இறந்தப்பின் ஊரிலுள்ளவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து அழுது அவனுடைய பழைய பெயரை நீக்கிவிட்டு பிணம் என்னும் புதிய பெயரிட்டு, சுடுகாட்டில் கொண்டு எரித்து/புதைத்து குளத்திலே நீராடியப்பின் இறந்தவரை மறந்து வாழ்கின்றனர் என்னும் நிலையாமை செய்தியை திருமூலர் கூறுகின்றார்.
              மதவாதிகளும், ஆத்திகர்களும் அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ள மக்கள் நூறாண்டுகள் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை. கற்பக மூலிகைகளை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும்.
வீடுபேறு அடைதல் பற்றிய கருத்துகள்
            வீடுபேறு அல்லது மோட்சம் என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் கூறுகிறது. அவையாதெனில், தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம், மற்றும் இறுதியாக வீடுபேறு என்னும் மோட்சம். இதில் இறுதியாக கூறப்பட்ட மோட்சமடைதலை விதேக முக்தி என்றும் அழைப்பர். இந்த இறுதி இலக்கான வீடுபேற்றுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான இல்லறம் அவசியமானது. ஏனெனில் இல்லறத்தில் கர்ம யோக வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்குத் தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு இறுதி இலக்கான வீடுபேறு என்னும் மறுபிறவி இல்லாத நிலையான விதேக முக்தியை அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே, விடுப்பட்ட நிலையினை அடைய இயலுமென்பதும் நம்பிக்கை.
             வீடு அல்லது வீடுபேறு என்பது இந்துக் கருத்துருவில் சொர்கம் புகுதல் என்று கூறுவர். பொதுப்பயன்பாட்டில் வீடுதல் என்பது மரணித்தல் அல்லது அழித்தல் எனப்பொருள்படும். சான்றாக, “கம்பராமாயணத்தில் சீதையைத் தேடி இலங்காபுரி வந்த அனுமன் தேடி இவ்வழி கண்பனேன் தீருமென் சிறுமை மற்றிவ் வீடுவேன் இவ்விலங்கண் மேல் இலங்கையை வீட்டு என்கிறான்.”
             வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம் பற்றிய செய்திகளை அளித்திருப்பதன் மூலம் இல்லறம் மேற்கொள்பவர் துறவறம் பூண்டு வீடுபேறு அடையலாம் என்ற கருத்து தெரியவருகின்றது. தமிழ் இலக்கியத்தில் பிரம்மச்சரியம் முதலாக சந்நியாசம் வரை நான்கு நிலையைப் பகுத்துள்ளனர். அந்நிலையிலும் இல்லறம் வீடுபேறு அடைவதற்கான வழிமுறையைக் காட்டுகின்றது என்ற கருத்தை அறியமுடிகின்றது.
             வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளை நீதிநூல்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. இம்மையில் செய்த செயல்கள் அனைத்தும் மறுமையில் தொடரும் என்ற வினைக்கோட்பாட்டை அறியாதோர் இலர். எனினும், அறச்செயல்களை அதிகம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நீதிநூல்கள் எழுதப்பட்டன. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாரதே’ எனக்கூறும் பகவத்கீதை கடமையை அறச்செயல் என உணர்த்துகிறது.
             இயற்கையோடு இணைந்த தமிழரது வாழ்வுமுறை பழி, பாவம், பகை, அச்சம் ஆகியவற்றிற்கு அஞ்சியும் பக்தி இலக்கியம் வாயிலாக இறை தத்துவங்களை உணர்ந்தும் செயல்பட வேண்டியது அவசியம்.
முடிவுரை
             ஆன்மா அனுபவிக்கும் அவத்தைகளையும் அவத்தைகள் நேர்வதற்கான வினைக்கோட்பாடு பற்றியும் பல்வேறு நூல்கள் செய்திகளைப் பகர்கின்றன. ஒருவருக்கு தெய்வீக அனுகூலம் இருப்பினும் அவர் செய்த வினையே பின்தொடரும் என்ற உண்மையை அறியமுடிகின்றது. ஏனெனில் விருப்பு வெறுப்பு அற்றவனாக இறைவன் இருப்பதால் ஒருவருக்கு நன்மையும், மற்றவருக்கு தீமையும் இறைவன் அளிப்பதில்லை. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்னும் வரியை உணர்ந்தால் மேற்குறித்த உண்மை நமக்கு புலப்படும். அதே சமயம் நற்செயல்களும், தீயசெயல்களும் உலகில் இரண்டறக் கலந்திருப்பதால் இறைவனை பண்பில்லாதவன் என புறநானூறு விளக்குகின்றது. ஆனால், நற்செயலையும், தீயசெயலையும் ஒருவன் தன் வினையால் அனுபவிக்கின்றான் என்பது உண்மை. இதனை, “தன் வினைத் தன்னைச் சுடும்”என்னும் தொடர் வழி அறியலாம். எனவே, இறைவனை அடைய பக்தி என்னும் நெறியில் செல்வதற்கு தத்துவங்கள் உணர்த்தும் அறக்கோட்பாட்டு வழியே சென்றால் இறைவனை அடையலாம். பக்தி நெறியில் இறைவனை அடைதல் என்பது “மரம் விட்டு மரம் தாவும் தாய்க் குரங்கை அதன் குட்டி வயிற்றைப் பிடித்துக் கொண்டு தாவுதல் போன்றது” என்றும், தத்துவ நெறியில் இறைவனை அடைதல் என்பது “பூனைக் குட்டியைத் தாய்பூனை கவ்விக் கொண்டு செல்லுதல் போன்றது” என்றும் உவமைக் கூறுவர் தமிழரிஞர்கள். விரிவாகக் கூறின், தத்துவ நெறியைப் பின்பற்றும் மாந்தரை இறைவனே தன்பால் ஈர்த்துக் கொள்வான் என்பது உண்மை. இத்தகைய மாந்தரின் இறப்பைச் சமாதி அடைதல் என்னும் பொருளில் சுட்டலாம். மேற்குறித்த தத்துவங்கள் தொண்ணூற்றாரும் இறைவனை விடுத்து ஆனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். மேலும், ஆன்மாவின் அவத்தைகள் யாவும் சுத்த நிலையை அடைய தத்துவம் என்னும் ஒருவழி பாதையைத் தேர்ந்தெடுத்து செல்வது சாலச்சிறந்தது. சிற்பத்தை செதுக்கும் உளி போல தத்துவங்களை  பயன்படுத்தினால் ஆன்மா சுத்தநிலையை அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
            ஆன்மா துன்பங்களை அனுபவிக்கிறது என்றெண்ணி தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ள மனிதர்கள் எண்ணினாலும் உடலைவிட்டுப் பிரியும் உயிர் தனக்குரியத் துன்பங்களை அனுபவிக்க வேறு உடலைத் தேடிக்கொள்ளுமேத் தவிர இறைவனடி சேராது என்றக் கருத்தும் உண்டு. சான்றாக,
“பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார்
இறைவனடிச் சேரா தார்”
என்றக் குறளைக் காட்டலாம். எனவே எடுத்தப் பிறவியில் நல்வினைகளைப் புரிந்து அடுத்தப் பிறவிக்குரிய பலனை அடைய தத்துவங்கள் கூறும் வழியில் வாழ முயல்வோமாக.

பழம் பாக்களில் மண் குறித்த அறிவியல் சிந்தனை


பழம் பாக்களில் மண் குறித்த அறிவியல் சிந்தனை

24.03.2019


                                சி. வத்சலா லட்சுமிநாராயணன்
                                முனைவர் பட்ட ஆய்வாளர்
                                ராணி மேரி கல்லூரி
                                சென்னை   600004
முன்னுரை:
            அறிவியல் வளர்ச்சி இல்லாதிருந்த காலத்திலேயே மண்ணின் வகைகளையும் எந்தெந்த மண்ணில் என்னென்ன பயிரிடலாம் என்ற அறிவு மிக்கவர்களாக நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்.  எந்த விதக் கருவிகளும் இல்லாமல் , பரிசோதனை செய்யும் வசதி இல்லாத காலத்திலும் தங்களது அனுபவத்தினாலேயே மண்ணின் தரம் அறிந்து எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைத்துள்ள அறிவியல் சிந்தனையை பழம் பாக்களின் வழி உணர்ந்து எடுத்துரைக்கப் பட்டுள்ளதை பின் வருமாறு காணலாம்..
நிலத்தின் தோற்றம்:
            புவியோட்டின் மேற்புறம் பல வகையான பாறை அடுக்குகளைக் கொண்டுள்ளது. புவிமேலோடு புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள நெருப்புக் குழம்பின் மேல் மிதந்து கொண்டிருக்கிறது.  இம்மேலோட்டின் மீதே பலவகையான பாறைகளும் மண்வகைகளும் அமைந்திருக்கின்றன.  இவ்வமைப்பே நிலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுண்மையை மதுரைக் காஞ்சி ,
            ‘பு நிலம் அமர் வையம் (மதுரைக்காஞ்சி அடி 470)
என்று சுட்டுகிறது.  புவியின் நிலா அமைப்பு விரிந்து பரந்துள்ளது.  விரிந்து பறந்து விளங்கும் நிலத்தின் சுழற்சியை சங்க இலக்கியப் பாடல்கள் கீழ் வருமாறு குறிக்கின்றன.
            ‘இருநிலம் (ஐங்குறுநூறு பா. 320:3)
            ‘உருகெழு மாநிலம் ( கலித்தொகை  பா. 106:18)
            ‘நனந்தலைப் பைந்நிலம் (பதிற்றுப் பத்து பா. 17:10)
            ‘பெருநிலம் ( அகநானூறு பா. 233:3)
            ‘பெருங்கண்மாநிலம் (புறநானூறு பா  363:1).
அகன்று கிடக்கும் நிலப் பரப்பு கடற்கரையோடு முடிந்து விடவில்லை.  கடலுக்கு அடியிலும் தொடர்கிறது. பரந்து விளங்கும் கடல் நீரை நிலம் தாங்கி நிற்கிறது என்பதைப் பரிபாடல்,
            ‘நீர் நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்து ‘ (பா. 18:3)என்று குறிப்பிடுகிறது.

மண்
            உலகில் வாழும் தாவர இனங்களும் உயிரினங்களும் பல்கிப் பெருக மண் முக்கிய காரணமாகும். மண்ணைச் சார்ந்து தாவரங்கள் வளர்கின்றன.  உயிரினங்களுள் ஒரு வகையான தாவர உண்ணிகள் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.  ஊன் உண்ணிகள் இறுதியில் மண்ணோடு மண்ணாகின்றன. இவ்வாறு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் உணவுச் சங்கிலி அமைப்பில் மண் முதல் இடத்தை வகிக்கிறது.  மண், புவியின் மேற்பரப்பில் செறிவுடன் இறுகிக் காணப்படுகிறது. அவ்வுண்மையை அகநானூறு ‘மண்திணி கிடக்கை ( அகநானூறு பக். 379:6)என்று சுட்டுகிறது.  இக்கருத்தைப் பதிற்றுப்பத்து ‘மண்கெழுஞாலம்’ (பதிற்றுப்பத்து பா.69:12 ) என்று குறிப்பிடுகிறது.  மண்ணின் இத்தகைய நிலையை புறநானூற்றின் 2 ம் பாடல் ‘மண்திணிந்த நிலம் ‘ என்று குறிப்பிடுகிறது.
மண் விளக்கம்:
            மண் என்பது இரண்டு நிலைகளில் விளக்கம் பெறுகிறது.  “புவியின் புறப்பரப்பில், பாறை அடுக்கின் மேல் காணப்படும் சிதைவுற்ற படலம் முழுமையும் மண் என பொறியியல் கருத்தும், வேளாண் துறையில் தாவர வளர்ச்சிக்கு ஆதரவாய் விளங்கும் மேல் மண் பகுதியையே இச்சொல் சுட்டுகிறது.  (சுற்றுச் சூழல் களஞ்சிய அகராதி , தொகுதி  2 ,ப.1165).

மண் வகைகள்:
            மண், அதனுடைய நிறம் மற்றும் தன்மை அடிப்படையில் இடத்திற்கு இடம் வேறு படுகிறது.  தமிழகத்தில் வண்டல் மண், செம்மண், கரிசல் மண், உவர் மண் போன்ற மண் வகைகள் காணப்படுகின்றன.  மனிதன் வேளாண்மை செய்யத் தொடங்கிய காலந்தொட்டு மண், மண்வளம் (மண்வகைகள் பற்றிய ) அடிப்படை அறிவைப் பெற்றிருந்தான்.
            சங்க இலக்கியப் பாடல்கள் நிலத்தை அதன் தன்மை அடிப்படையில் வண்நிலம் என்றும் மெந்நிலம் என்றும் இரண்டு நிலைகளில் கூறுகின்றன.  கடினத் தன்மையுடைய குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் வன்னிலம் எனப்படுகிறது.  மருதமும், நெய்தலும் சேறு நிரம்பிய வயல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியாதளால் மென்னிலம் எனப்படுகிறது.  இந்நிலப் பகுதிகளில் காணப்படும் செம்மண், வண்டல் மண், களர் மண், வெண்மணல், உவர்மண் ஆகியவற்றை சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.


செம்மண்:
            சிவந்த நிறமுடைய மண் செம்மண் எனப்படுகிறது.  உருமாறிய பாறைகளில் உள்ள இரும்பு ஆக்சைடு ,மண்ணிற்குச் செந்நிறம் அளிக்கிறது.  இம்மண் வண்டல் மண்ணிற்கும் மணலுக்கும் இடைப்பட்ட அளவிலான துகள்களால் ஆனது.  துகள்களுக்கிடையே ஓரளவு இடைவெளி உண்டு.  ஓரளவு நீரை உறிஞ்சும் தன்மை உடையது.  இதில் இரும்புச் சத்து மிகுதி. இம்மண்ணில் பாஸ்பரஸ், நைட்ரஜன் , சுண்ணாம்பு குறைந்தும் அமிலத்தன்மை மிகுந்தும் காணப்படும்.  இவ்வகை மண்ணில் வறட்சியைத் தாங்கும் மரங்கள் வளர்கின்றன.
            சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் செம்மண் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  சிவந்த மண் படர்ந்த செம்மண் நிலப்பரப்பை அகநானூறு,
            ‘அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி’ (அகநானூறு பா. 14:1 ) என்றும்,
            ‘ஓவத்தன்ன கோபச் செந்நிலம் ( அக. பா. 54:4 )
            ‘செய்து விட் டன்ன செந்நில மருங்கின் (அக.பா.304:6 )
என்றும் குறிப்பிடுகிறது.  செம்மண் நிலம், வண்டல் மண்ணிற்கும், மணலுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள நுண்துகள்களைக் கொண்டிருக்கும் என்னும் உண்மையை,
            ‘குறும்புதற் பிடலின் நெடுங்கால் அலரி
            செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப (  அக.பாடல் 154-4-5 )
என்ற அடிகள் சுட்டுகின்றன.  இதில் உள்ள ‘நுண் அயிர்’ என்பதே நுண்துகள்களைக் குறிக்கிறது. வேனிற் காலத்தில் நீரின்றி வரட்சிக்குள்ளாகும் போது செம்மண் துகள்கள் புழுதிகளாக மேற் பரப்பில் படிந்து விடும். இதனை,
            ‘செந்நிலப் படுநீறு (பா. 227:10 ) என்கிறது அகநானூறு.
செம்மண் படர்ந்த நிலப்பரப்பே தமிழர் வகுத்த முல்லை நிலம் என்பதை,
            ‘செந்நிலப் புறவின் ( நற் பா. 321:1)    
            செம் புலப் புறவில் (நற்.பா.221:53) என்றும் நற்றிணை அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
            செம்மை மிக்க செம்மண் படர்ந்த மெட்டு நிலத்தில் மழை பொழிந்த்ததால் ஏற்பட்ட ஈரமுடைய நிலத்தை உழவர்கள் தம் ஏர் கலப்பையைக் கொண்டு உழுதனர்.  இதனை,
            ‘வெப்புள் விளைந்த வேங்கை செஞ்சுவற்
             கார்ப்பெயற் கழிந்த பெரும்பாட்டீரத்துப்
            பூழி மயங்கப் பலவுழுது வித்தி ( புறநானூறு 120:1-3)    
என்ற அடிகள் விளக்குகின்றன.    
            செம்மண் நிலத்தில் வறட்சியைத் தாங்கக் கூடிய மரங்கள்,  கொடிகள் வளர்கின்றன.  அதனாலேயே செம்மண் படர்ந்த முல்லை நிலம் , மரங்கள் அடர்ந்த காடுகளாகக் காணப்படுகின்றன.  காடுகள் நிறைந்த இப்பகுதியில் உள்ள நிலப்பரப்புகள் மழையை எதிர்பார்த்து விளையும் புன்செய் நிலங்களாக உள்ளன.  இந்நிலையினை,
            ‘முதை படு  பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
            பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்   (அகநானூறு பா. 262:1-2) என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.
            மழை பொழிந்த வைகறை வேளையில் உழவர்கள் ஏர் கொண்டு உழுத செம்மண் நிலத்தில் வரகை விதைக்கின்றனர்.  விதைக்கப்பட்ட இவ்விதைகள் பலவும் முளைத்து வளர்ந்து நன்றாக விளைந்திருக்கின்ற சூழலை,
            ‘பேருறை தலை இய பெரும் புலர் வைகறை
              ஏரிடம் படுத்த இருமறுப் பூழிப்
             புறமாறு பெற்ற பூவல் ஈரத்து
            ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
            வித்திய மருங்கின் விதை பல நாரி
            இரலை நன் மானினம்பரந் தவை போல்
            கோடுடைத் தலைக் குடை சூடிய வினைஞர்
            கறங்கு பறை சீரின் இறங்க வாங்கிக்
            களைகால் கழிஇய பெரும்புன வரகின்
            கலைக்கதிர் இரும்புறங் கதூஉ  உண்ட ( அகநானூறு பா. 194-1:10)
என்னும் பாடல் விளக்குகிறது. இவ்வகை நிலத்தில் நல்ல மழைப் பொழிவு உள்ள காலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படும்.
            முல்லை சார்ந்த நிலங்கள் புன்செய் நிலங்களாகும். நீர்வளம் குறைந்து இறுகிக் காணப் படுவதால் இம்மண்ணில் நெல் விளையாது.  வரகு, தினை போன்றவையே வளரும்.  இத்தன்மையினை
            ‘புலால னடைமுதற் புரவு சேர்ந் திருந்த
            புன்புலச் சீறூர் நெல் விளையாதே
            வரகுந் தினையு முள்ளவைஎல்லாம்    ‘ ( புறநானூறு 328-1:3)
என்ற அடிகள் விளம்புகின்றன.
            காடுகள் நிறைந்த சிவந்த முல்லை நிலத்தில் உரிய மழை பொழிந்ததால் வரகு நன்றாக விளைந்திருந்ததை முல்லைப் பாட்டு குறிக்கின்றது.
            ‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி
            வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின் ( முல்லைப்பாட்டு 97-98)
இவ்வாறு மேற்கண்ட பாடல்களில் செம்மண் நிறத்தின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.



வண்டல் மண்:
            ஆற்றுச் சமவெளியான மருத நிலம், நிலவளமும் நீர் வளமும் ஒருங்கே பெற்றுள்ளது.  இந்நிலத்தில் காணப்படும் வளம் மிக்க மண்ணே வண்டல் மண் என்றழைக்கப்படுகிறது. இவ்வண்டல் மண்மிகச் சிறிய மண்துகள்களைக் கொண்டுள்ளது.  இம்மண் துகள்களுக்கிடையே இடைவெளி அதிகம் இருப்பதால்
அதிக அளவு ஈரப்பதம் உடையதாக விளங்குகிறது.
            வண்டல் மண் பதிவு உள்ள இடங்களில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் செழித்து வளரும். தமிழ் இலக்கியங்கள் மருத நிலத்தின் சிறப்புப் பயிராக நெல்லையும், கரும்பையும் சுட்டி, அவை செழித்து விளைந்திருப்பதையும் புகழ்ந்துரைக்கின்றன.  சங்க இலக்கியங்களில் வண்டல் என்ற சொல்லாட்சி கையாளப் பட்டுள்ளது.  ஆனால் அது மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பாவையைக் குறிக்கின்றது.
            ‘வளைபவர் வண்டல் போல் வார் மணல் வடுக்கொள (கலித்தொகை 29:5)
            ‘வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ (அகநா. பா. 370:1)
            ‘மணல் காண்தோறும் வண்டல் தை இ   (நற் .பா. 9:8)
            ‘தண்புனல் வண்டல் உய்த்தென (ஐங்குறுநூறு பா.    69:3)
மேற்குறிப்பிட்டவற்றில் உள்ள ‘வண்டல்’ என்பது விளையாட்டுப் பாவையைக் குறிக்கிறது.
            மலை]ப் பகுதியிலிருந்து வேகமாக ஓடிவரும் ஆற்று நீர் சமவெளிப் பகுதியில் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறது.  இதனால் ஆற்று நீரோடு கலந்து வந்த மண் துகள்கள் சமவெளிப் பகுதிகளில் படிந்து விடுகின்றன.  இப்பதிவு கடற்கரைப் பகுதி வரையுள்ள நிலப்பரப்புகளில் படிகின்றன.  இத்தகைய மண் படிவே வண்டல் மண் எனப்படுகிறது.  இவ்வண்டல் மண்துகள்கள் வளமுடையதாக உள்ளன.  இவ்வண்டல் மண்துகள்கள் கருநிற்த்தைக் கொண்டிருக்கும். இதனை நெடுநல்வாடை,
            ‘இருங்களி பரந்த ஈரவெண்மணல் ( நெ. அடி. 16) என்று குறிப்பிடுகிறது.  இதில் கூறப்பட்டுள்ள ‘களி’ என்பது வண்டல் மண்ணைக் குறிக்கிறது.  ஆற்று நீரோட்டத்தின் காரணமாக கருமை நிறங்கொண்ட இம் மண் வரிவரியாகப் படர்ந்து காணப்படுவதை இலக்கியங்கள் மகளிரின் கூந்தல் நிறத்துக்கு உவமைப் படுத்தியுள்ளன.
            ‘சாயறல் கடுக்கும் தாழிருங் கூந்தல் ‘( பதிற்றுப்பத்து பா. 74.3)
            ‘அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் ‘( மலைபடுகடாம் அடி  304)
            ‘அறல் போற்கூந்தல்’ (பொருநராற்றுப்படை, அடி 25)
            ‘இளைபவரைம்பால் போல் எக்கரபோழ்ந்தறல் வார (கலித்தொகை பா29-6)
            ‘அறல் மருள் கூந்தலின்’(அகநானூறு பா. 299)   
கடற்கரையின் கழி முகத்தின் அருகில் உள்ள கானளின்கண் உள்ள வளமிக்க மண்ணை அகநானூறு,
            ‘இழுமென் கானல் விழுமணல் ( அகம்., பா. 190:15)
என்று குறிக்கிறது.  வண்டல் மண் அதிக அளவு நீரைத்தேக்கி வைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் நெல்லை விதைத்து அறுவடை செய்த பின்னரும் மீண்டும் ஒரு முறை விதை விதைக்கத் தேவையான நீரைக் கொண்டிருக்கும் இத்தன்மையை,
            “அரிகால் மாறிய அங்கண் அகல் வயல்
            மறு கால் உழுத ஈரச் செறுவின்
            வித்தொடு சென்ற வட்டி பற்பல
            மீனோடு பெயரும் யாணர் ஊர’ (நற் – பா 210 – 1 – 4)
என்னும் பாடல் அடிகள் விளக்குகின்றன. 
கான்யாற்றின் அருகில் இருக்கும் இம்மண்ணைப்பற்றி
குறுந்தொகை
                        ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
                        செய்ததும் அன்றே சிறுகான் யாறே
                        இறைத் தேர் வெண்குருகல்லதுதியாவதும்
                        துன்னல் போகின்றால் பொழிலே யாமெம்
            கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும் ( குறுந்தொகை பா. 113:1-5)
என்று குறிப்பிடுகிறது.
வயல்களிடத்து ஈரம் நிறைந்த மண் துகள்கள் சேறாகியிருந்ததை,
                        குறுந்தொடி மகளிர் குறுஉ ப்புனல் முயை யின்
                        பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்
கரந்தையஞ்செருவின் வெண் குருகு ஒப்பும் (அகநானூறு 226:4-5)                                 
என்ற அடிகள் சுட்டுகின்றன.  நீரை அதிகமாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மண் துகள்கள் சேறாகிவிடும் என்னும் கருத்தை,
            நீர் பெயர்ந்து மாறிய செறி  சேற்று அள்ளல் (நற் – பா 291:1)
என்று நற்றிணை சுட்டுகிறது. 

பனை மரத்தின் பழம் ஒன்று விசையுடன் விழுந்து சேற்றினுள் புதைந்ததை
            ...................     கழி சேர்ப்பு
            கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம்
            வன்னிதழ் நெய்தல் வருந்த மூக்கிறுபு
            அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென  ( நற் – பா 372 :1-4)  
என்னும் அடிகள் விளக்குகின்றன.  இவ்வாறு சங்க இலக்கியங்கள் மேற்கண்ட பாடல்களில் வண்டல் மண்ணையும் அதன் வளமையையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

களர் மண்
சங்க இலக்கியதினுள் குறிக்கப் பெரும் மண் வகைகளுள் களர் மண்ணும் ஒன்று “கரையும் உப்புகள் மிகுதியில்லாத 15% அளவுக்கு மேல் சோடியம் அயனிகள் கொண்ட மண் களர் மண் எனப்படும் . இம்மண் 8.5  முதல் 10 வரை ph மதிப்பு ( அமிலத்தன்மை) கொண்டிருக்கும்.  இவை மழை குறைவான பகுதிகளில் காணப்படும்.  இதிலுள்ள சோடியம் நேரடியாகவும் அதன் கார்பனேட், பைகார்பனேட் சேர்மங்கள் வடிவிலும் தாவர வளர்ச்சியைப் பாதிக்கும். இது மண்ணின் பொசிமையை ( இலகுத்தன்மையை) மிகவும் குறைத்து விடுவதால் தாவரங்களுக்கு நீரும் அதன் வழி ஊட்டங்களும் செல்லல் மிக மட்டுப்படுகிறது.  மண்ணிலுள்ள கரிமப் பொருள் நன்கு விரவப் பட்டுத் துகள்கள் மீது படர்ந்து மண்ணுக்கு கருநிறம் தருகிறது.  இந்நிலம் உழுவதற்கும் மிகக் கடினமானது ஆகும்.  ( சுற்றுச்  சூழல் களஞ்சிய அகராதி. தொடு 2 ம 1164). இத்தகைய களர் நிலத்தைப் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப் படுகின்றன. 
புறநானூறு
            “கள்ளி போகிய களரியம் பறந்தவை  ( புறநானூறு பா. 245:3)
என்னும் அடியில் களர் நிலத்தைப் பாழ்பட்ட நிலம் என்று குறிக்கிறது.  கழிந்து பெயர்கின்ற களர் நிலத்தில் மான் சென்றதை
            “கழிப் பெயர் களரில் போகிய மட மான் “ (நற்றிணை பா. 242:7)
என்னும் அடி குறிப்பிடுகிறது.  களர் உள்ள மண் படிவுகளில் கரையாத உப்புகள் உள்ளதால் அவை மண்ணின் மேற்பரப்பில் வெண்ணிறரமாகப் படிந்திருக்கும்.  இத்தன்மையினை,
                        பைங்காய் நிள்ளிடம் ஓரி இய செங்காய்க்
                        கருங்களி ஈந்தின் வெண்புறக் களரிட
                        இடுநீறு ( நற். பா. 126) எனும் அடிகள்    
குறிப்பிடுகின்றன.  களர் நிலத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவை
                        ‘ சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
                        பிரவா வெண்ணெய் உருப்பு கிடந்தன்ன
                        உளர் ஏழு களரி ஓமை அம் காட்சி (நற். பா. 84:3)  
என நற்றிணை குறிப்பிடுகிறது.  இந்த உப்புப் படிவுகள் தயிர் உள்ள தாழியில் மத்திட்டுக் கடையும் போது திரண்டு வரும் வெண்ணெய் சிதரைப் போல் உள்ளதாக காட்சிப் படுத்துகிறது.
            களர்நிலம் உப்புப்படிவுகளின் காரணமாக வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது.  இத்தகைய தோற்றம் விலங்கின் தோலையுரித்து அதன் உள்பகுதி வெளியில் தெரியும்படி விரிந்து வைத்துள்ளதைப் போல் தோன்றுவதாக,
            ‘அதளெறிந் தன்ன நெடு வெண் களர் ( புறநானூறு பா. 193)
என்று புறநானூறு உவமித்துள்ளது.
            ஆடைகளை வெளுக்கும் வண்ணார் ஆடைகளை வெளுப்பதற்கு உவர்மண் என்னும் மண்ணைப் பயன்படுத்துவர்.  இந்த உவர் மண்ணை அவர்கள் களர் நிலத்திலிருந்து எடுப்பர்.
                                    ‘சிறியிலை வேலத்து
            ஊழுறு விளை நெற்றுதிரக், காழியர்
            கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்
            களரி பரந்த கல் நெடு மருங்கின் (அகநானூறு பா. 89:6-9)
என்னும் பாடலடிகள் இதனை விளக்குகின்றன.  களர் நிலத்தில் தோண்டப்பட்ட கூவலில்  நாளும் புலத்தி துணிகளை வெளுத்ததை,
            ‘களர்ப்படு கூவற் தோண்டி நாளும்
            புலைத்தி சுழீ இய தூவெள் அறுவை ( புறநானூறு பா. 311:1-2)
எனும் அடிகள் சுட்டுகின்றன.  களர்நிலம் வேளாண்மை மேற்கொள்வதற்கு தகுதியற்றது.  ஆயினும் சில வகை தாவர இனங்கள் இம்மண்ணில் வளருகின்றன.  வெள்ளிய நிறத்தையுடைய களர்நிலத்தில் மழை பொழிந்ததால் பிடலமரம் துளிர்த்து அரும்புகள் அரும்பியது.  இதனை,
            ‘வளமழை பொழிந்த வால் நிறக் களரி
            உளர்தரு தண்வெளி உறதொறும்  நிலவேனத்
            தொகுமுகை விரிந்த முடக்காற் விடவின் ‘  (அகநானூறு பா.344:1-3)
என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.  களர் நிலத்தில் ஈந்தமரம் வளருவதைப் பெரும்பாணாற்றுப்படை,
            ‘கலர் வளர் ஈந்தின் ‘ (பெரும்பாணாற்றுப்படைஅடி 130) என்று குறிக்கிறது.
களர் நிலத்தில் விளைந்த புளியங்கனியை உப்பு வணிகம் செய்யும் உமணர் சுவைத்து உண்ட செயலை நற்றிணை,
            ‘முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
             ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
             களரி புளியிற் காய்பசி பெயர்ப்ப ( பதிற்றுப்பத்து. பா. 374:1-3)
            எனும் அடி சுட்டுகிறது.  இவ்வாறு சங்கப் புலவர்கள் களர் நிலத்தின் இயல்புகளை தம் பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

வெண்மணல் :
            மணல் என்பது மண்ணினின்று சிறிது வேறுபடுகிறது.  மண் என்பது மிகவும் செறிவுடையதாக இருக்கும். மணல் என்பது மண் துகள்களுக்கிடையே செறிவுத் தன்மையற்று நெருக்கம் இல்லாமல் இருப்பது ஆகும்.  செறிவுற்ற மண் துகள்களைக் கொண்டிருக்கும் மணற்பரப்புகள், ஆறுகள் உள்ள பகுதிகளில், கடற்கரையோர நிலப் பரப்பிலும் காணப்படுகின்றன.
ஆற்றங்கரைப் பகுதிகளில் உள்ள மணலைக் காட்டிலும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மணற்துகள்கள் மிக நுண்ணியதாக இருக்கும்.  இவ்வகையான மணற்பரப்பு நீரைத் தேக்கி வைக்காது உறிஞ்சும் தன்மையுடையது.  இத்தகைய மணல் வெளியை தமிழ் இலக்கியங்கள் நெய்தல் நிலமாகச் சுட்டுகின்றன.  தமிழகக் கடற்கரைப் பகுதிகள் வளைவு நெளிவுகள் குறைந்து நேராக அமைந்துள்ளன.  நாலாங்காற்பேரூழிக் (பிலைச்டோசன் ஊழியாகிய ) காலத்தால்தான் கண்டங்களும் கடல்களும் தற்போதுள்ள எல்லைகளுக்கு உட்பட்டன.  கடற்கரைகள் உயர்ந்து மணர் பரப்பாயின.  தமிழ் நாட்டின் தென் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் காணப்படும் மணல் மேடுகளும் நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.  தேரி என வழங்கப்படும் செம்மண் பரப்புகளும் இக்காலத்தில் அமைந்தவை என நம்பப்படுகின்றன.  (தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவின் தமிழ் நாட்டு வரலாறு – தொல் பழங்காலம் ப. 21) வெண்மை நிறங்கொண்ட இம்மணற் பரப்பைப் பற்றி சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் பதிவு செய்துள்ளன.  கடற்கரைப் பகுதிகளில் மலையைப் போன்று மணல் குவிந்திருப்பதை,
            ‘குன்றத் தன்ன குலவு மணல் ‘(குறுந்தொகை 236)
என்ற அடி சுட்டுகிறது.  கடலின் அலைகள் மணலை அளிப்பதை நற்றிணை,
            ‘முழங்கு திரைப் புதுமணல் அழுந்தக் கொடகும்
            வால் உளைப் பொலிந்த புரவித்
            தேர்     ( மேற்படி பா 135:7-8)
                                    ‘பெருங்கடல்
            ஏறிதிரை கொழீ இய எக்கர்    ( நற்றிணை பா. 106:1-2)
            ‘பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரை’ (நற் .பா. 35:1) என்று குறிப்பிடுகிறது.     
            கடற்கரைப் பகுதியில் உள்ள மனற்பரப்புகளின் மீது சில வகைத் தாவரங்கள், மரங்கள் வளர்கின்றன.  மணல் நிறைந்த பகுதிகளில் ஞாழல் மரங்கள் வளர்ந்திருந்தன.
            ‘எக்கர் ஞாழல் செருந்தியொரு கமழ ‘ (ஐங்குறுநூறு பா. 141:1) என்று ஐங்குறுநூறு இதனைக் குறிக்கிறது. ஐங்குறுநூற்றின் 141-1 முதல் 15  வரையுள்ள பாடல்கள் மணற்பரப்பில் வளர்ந்திருந்த ஞாழல் மரங்களைப் பற்றிகே குறிப்பிடுகின்றன.
            நுண்மையான மணல் துகள்கள் காற்றின் மூலம் இடம் பெயர்ந்து ஓரிடத்தில் இருந்து வேறு ஓர் இடத்தில் சென்று குவியும்.  இவ்வாறு குவியும் மனற்பறப்பே மனற்குன்றுகளாகின்றன. சிறு தாவரங்கள் இல்லாத மணல் வெளிகளில் இத்தகைய நிகழ்வுகள் எளிதில் நடை பெறுகின்றன.
            ‘அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையோடு
            எல்லியும் இரவும் எள்ளாது கல்லெனக்
            கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப
            நிலவுத் தவழ் மணற்கோடு ஏறிச் செலவர (நற்றிணை பா.163:2-5)
என்னும் அடிகள் தாழை மரங்கள் சூழ்ந்தத சோலையின் கண் உள்ள வெண்மணலை ஊதைக்காற்று இடம் பெயர செய்தமையும் மணற்குன்றுகள் நிறைந்து இருந்ததையும் குறிக்கின்றன.
            கடற்கரை அடுத்திருந்த மணல் நிறைந்த கொல்லைகளில் பனை மரங்கள் உயர்ந்து வளர்ந்து இருந்தன.
            ‘பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
            கானல் ( நற் பா. 123:4-5) எனும் அடிகள் இதனைக் குறிப்பிடுகின்றன.
ஆற்றின் முகத்துவாரமாகிய கழி சூழ்ந்த “காண்டவாயில்” என்னும் ஊரில் உள்ள மணல் மேடுகளில் பனை மரங்கள் வளர்ந்திருந்தன. இதனை,
            ‘கழிசூழ் படைப்பைக் காண்டவாயில்
            ஒலிகா வோலை முன்மிடை வேலிப்
            பெண்ணை இவரும் ஆங்கண்
            வென்மணற் படப்பை யெம் அழுந்கலூரே’ (நற் பா. 38:6-10)  எனும் அடிகள் சுட்டுகின்றன.  செறிய மனற்பரப்புகளில் ஞாழல் மரமும் புன்னைமரமும் பூத்துக் குலுங்கின.
            ‘நறுவீ ஞாழல் மாமலர் தா அய்ப்
            புன்னை ததைந்த வெண்மணல்   (நற். பா. 96:1-2)
கடற்கரையின் அருகில் மணல் குன்று போல குவிந்திருந்தது.  
‘குன்றத்தின்ன குவவு  மணல் அடைகரை (குறுந் பா. 263:3) 
‘குறுங்கால் அன்னம் குவவு மணற் சேர்க்கும்nee
            கடல் சூழ் மண்புலம்’ ( குறுந்தொகை பா. 300:6-7)    
எனும் குறுந்தொகைப் பாடல்கள் இதனை விளக்குகின்றன.
            பரந்து விரிந்து கிடக்கும் மணல், பால் போல் வெண்ணிரமாகக் காட்சியளிக்கிறது.
            ‘படுதிரை  கொழீ இய பால்நிற எக்கர்’ (நற். பா. 49:1)
கடற்துறையில் காணப்படும் வெள்ளிய மணலுக்கு சங்க இலக்கியங்களின் பல பாடல்கள் நிலவொளியை உவமையாகக் கூறியுள்ளன.
            ‘நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
            எக்கர் தொறும் பறக்கும் துறை  (குறுந்தொகை பா. 320:3-4).
உவர்மண்:
            ஆறு கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதியில் உள்ள உவர் நிலத்தில் பரதவ மக்கள் உப்பு விளைவிப்பர்.  இதனை,
            ‘உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
            ஓசை உமணர் வருபதம் நோக்கிக்
            கானலிட்ட கரவற் குப்பை ( நற் பா. 331:1-3) என்னும் நெய்தல் பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
            மழை பொழியாது வறட்சி ஏற்படுகின்ற காலத்தில் கழிமுகத்தில் உள்ள சேற்று நிலம் காய்ந்து உப்பு விளையும் தன்மையை,
            ‘வறப்பின் மாநீர் முண்டகந் தாஅய்ச் சேறுபுலர்ந்து
            இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும் ( நற். பா. 311:3-4) என்னும் அடிகள் குறிக்கின்றன.  சங்க இலக்கியங்களில் உவர் மண் பற்றிய குறிப்பு குறைவாக உள்ளன.
            இறுகிய பாறைகளும் செறிந்த மண்ணும் நிறைந்த நிலத்தைப் பற்றிய அறிவைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர்.  பழந்தமிழரின் நிலப்பாகுபாடு அவர்களின் நிலவியல் அறிவிற்குச் சான்றாக அமைகிறது.  நான்கு வகையான நிலப்பாகுபாடு மட்டுமின்றி மண்வகைகள் மற்றும் அதன் வளம் ஆகியவற்றைப் பற்றியும் தெளிவாக அறிந்திருந்தனர்.  இதன் வழி பழந்தமிழர் பன்நெடுங்காலத்திற்கு முன்பே நிலத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி விட்டனர் என்பது புலனாகிறது.
            அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் பல பயிர்களின் விளைச்சல் மற்றும் புதுவகைப் பயிர்கள், புதுரகநெல், வெளிநாட்டுப் பயிர்வகைகள் ஆகியவற்றைப் பயிரிடத் தொடங்கியதால் விளைச்சல் அதிகமானதே தவிர, அது சில வருடங்களுக்கு மட்டுமே, மேலும் மண்ணுக்கும் , விவசாயிகளுக்கும் நிறையவே கேடுகளும் நிகழ்ந்தன.  இராசாயன உரங்கள், நீன உழவுக் கருவிகள், பூச்சிக் கொல்லிகள், ஆகியவற்றின் பயன்பட்டால் மண் வளம் சீர் குலைந்துள்ளது.  நெகிழி மற்றும் மக்காத பொருட்களை மண்ணில் போட்டு காற்று, நீர் ஆகியவை மண்ணுக்குள் புகாதவண்ணம் தடுத்து விடுகிறோம்.  மேலும், இராசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் காற்று, மண், நீர், ஆகியவை நச்சுத்தன்மையின் காரணமாக மாசடைந்துள்ளது.  சுற்றுச் சூழல் சீர் குலைந்துள்ளது.  இரசாயனம் கலந்த விளைபொருட்களால் மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டுள்ளது.

முடிவுரை:
            அறிவியல் வளர்ச்சி உச்ச எச்சத்தைக் கடந்த இந்த உலகத்தில் வேளாண்மையை (உழவு)  வீட்சி என்று சொல்வதில் நிரடல் ஏற்பட்டாலும் விரைவில் பெற்று விட வேண்டும் என்று எண்ணம்  மக்களை முப்போகம் விளையும் விளைச்சல் நிலங்களை, இயற்கை மறுசுழற்சியிளிருந்து மறுதலிப்பதன் விளைவு, விதவிதமான பூச்சிக் கொல்லி மருந்துகளும், இரசாயன உரங்களும் பயன்படுத்தியதால் மண்ணின் தன்மையைக் கெடுத்து விட்டது.
            முன்னோர்கள் நமக்கு அளித்த இயற்கையின் செழிப்பை நவயுக இந்தியா என்று மார் தட்டிக் கொள்ளுய்ம் கணினிமயமான இவ்வுலகில் நாம், இயற்கை  அன்னையை, காடுமலைகளை அழித்து கட்டடங்களாக உயர்த்தியது மட்டுமின்றி, நம் அன்றாட அத்தியாவசியமான உணவுப் பொருட்களில் ( தானியங்கள், காய்கறிகள்), இரசாயன மருந்துகள் கலந்திருப்பதால், எது தரமானது என்று அறிய முடியாமல் உண்டு வாழும் சூழல் உருவாகி இருக்கிறது.
            நம் பழமையான செழிப்பை மறுபடி பெற வேண்டுவது மிகவும் அவசியம் ஆகும்.  இத்தகைய பாரம்பரிய மண் வளத்தை மீட்டெடுக்க இளைய தலைமுறை செய்ய வேண்டியவவை,
            நீர்நிலைகளைப் பராமரித்தல் வேண்டும்,
            இரசாயன உரங்களைப் பயன் படுத்தக் கூடாது,
            நெகிழித் தன்மையுள்ள அனைத்துப் பொருட்களையும் மண்ணில்   
                      போடாதிருத்தல்,
கல்விப பாடத்திட்டங்களில் மண்வளம் பற்றியும், விவசாயம், தொடர்பான                                 
              அறிவையும் ஊட்டுதல்,
            இயற்கையான முறையில் மரம், செடி, கோடி, இவகைளை வளர்த்திடுதல்.
இவற்றையெல்லாம் மேற்கொண்டால்,
மோடி கூறும் பசுமை இந்தியா மட்டுமல்லாது, நம் பாரம்பரியமான வேளாண்மை இந்தியாவையும், மண் வளத்தையும் மீட்டெடுக்கலாம்.
                                                ------------------------------